நான் ஒரு பத்திரிகையாளர், அதனாலேயே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை

 அர்ஃபா கனும் ஷெர்வானி

தி வயர் இணைய இதழ்  



ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளர்/தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட செய்தி வந்தவுடன், எல்லா இடங்களிலிருந்தும் அவருக்கான ஆதரவு வெளியானது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும், கட்சியின் மூத்த பொறுப்பாளர்களும் 1975இல் இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையுடன் அர்னாபின் கைதை ஒப்பிட்டு, தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்தினர். பாஜக செயற்பாட்டாளர்கள் பலரும் பாஜக கொடிகள், சின்னங்களை ஏந்தி தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்தினர்.



கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தாராளவாத ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் அர்னாபின் ‘கருத்துச் சுதந்திரத்தை’ பாதுகாப்பதை தங்களுடைய பணியாக ஏற்றுக் கொண்டனர். பத்திரிகைத்துறையில் அர்னாபின் நடவடிக்கைகள் தொடர்பாக தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படுவதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இன்று இந்திய அரசியலில் மிகவும் அதிகாரம் மிக்க மனிதர்களில் ஒருவராக அர்னாப் இருக்கிறார். இதற்கு முன்னர் இதுபோன்று ஒட்டுமொத்த நரேந்திர மோடி அமைச்சரவையும் பகிரங்கமாக வெளியே வந்து, ஒருவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாக என்னுடைய நினைவில் இல்லை. சிறையில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்காக இந்திய அரசு தனது ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி, தன்னுடைய அதிகாரத்தின் கீழ் உள்ள எதையும் செய்யும் என்பதை நாம் அறிவோம். அவரது அரசியல் செல்வாக்கைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவர் அனுபவித்து வருவது வெறுமனே அரசாங்கத்தின் ஆதரவு மட்டுமல்ல என்பதைக் கூற வேண்டியுள்ளது. நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்ற குணால் கம்ரா விமானத்தில் பயணித்த அர்னாபிடம் கேள்விகளை எழுப்பியதால், தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணிக்க அவருக்குத் தடை விதிக்க முடிவெடுத்ததை சில மாதங்களுக்கு முன்பு நாம் கண்டோம். தனக்குப் பிடிக்காத அல்லது தன்னுடைய அரசியல் எஜமானர்களுக்குப் பிடிக்காத எவரையும் தன்னுடைய ஸ்டூடியோவில் நடத்துவதைப் போலவே குணால் கம்ரா விஷயத்திலும் அர்னாப் நடந்து கொண்டார்.  



அவரால் பாதிக்கப்பட்டவர்களான உமர் காலித், டாக்டர் கபீல் கான், சஃபூரா சர்கார், ஆனந்த் டெல்டும்ப்டே, சுதா பரத்வாஜ் மற்றும் பலருக்கும் தேவைப்பட்டதைப் போன்ற ‘ட்விட்டர் புயல்’, தனக்கு ஆதரவான பொதுமக்களின் உணர்வுகளைக் கேட்பதற்கோ அல்லது உருவாக்கவோ அவருக்குத் தேவைப்படவில்லை. மிகவும் பிரபலமான அறிவுஜீவிகள் மற்றும் குறைந்த பட்சம் தங்கள் வளாகங்களுக்குள் அல்லது சமூக ஊடகங்களில் குரலை எழுப்பக் கூடிய திறனைக் கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாது, அதிகாரம், செல்வாக்கு அல்லது சமூக ஊடக இருப்பு என்று எதுவுமே இல்லாது எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் அளவிற்கு அவர் அதிகாரம் செலுத்தி வருகிறார்.



கொரோனா வைரஸ் குறித்து கொரோனா ஜிஹாத், கொரோனா பயங்கரவாதம், கொரோனா குண்டுகள் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி நாட்டில் வைரஸ் பரவுவதற்கு முஸ்லீம்களை ஒரு சில ஊடகங்கள்  நேரடியாகக் குற்றம் சாட்டியதையும், அவ்வாறான வகுப்புவாதம் நிறைந்த தகவல்களை அளித்து அர்னாபின் சேனல் முன்னின்று மக்களைத் தவறாக வழிநடத்தியதையும் நாம் அறிவோம். தப்லிகி ஜமாத்துக்கு எதிரான கூச்சலும், வெறித்தனமான செய்திகளும் பொதுவாக முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே இருந்தன. அவை சாதாரண ஹிந்துக்களின் மனதில் மிகுந்த அதிருப்தியையும், அச்சத்தையும் உருவாக்கின. தேசிய தலைநகர் உட்பட குறைந்தது நான்கு மாநிலங்களில், பல குடியிருப்பு பகுதிகளில் பழம், காய்கறி விற்பனை செய்யும் முஸ்லீம்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்ற பலகைகள் தொங்கின. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கிராமவாசிகள் அவமதித்ததை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் பால் விற்பனையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.



மற்ற செய்தி சேனல்களுடன் சேர்ந்து அர்னாபும், அவரது செய்தி நெட்வொர்க்கின் செய்திகளும் இந்தியாவில் குறைந்தபட்சம் சில பகுதிகளிலாவது முஸ்லீம்களுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் திறம்பட ஏற்படுத்திச் செயல்படுத்தின. அவர்களுடைய அந்தப் பிரச்சாரம் ஏழை எளிய இந்தியர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.



அர்னாபை பாதுகாப்பதற்காக அணிவகுத்து நிற்பதற்கு நான் மறுப்பது, என்னுடைய தாராளவாதத்திற்கான சான்றுகளை எதிர்மறையாகப் பாதிக்காது அல்லது எனது பத்திரிகைத்துறை சகோதரத்துவத்திற்கான கடமைகளுக்கு இடையூறாக இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். காணொலி பத்திரிக்கைத் துறையில் இருபதாண்டுகள் கழித்திருப்பவள் என்ற வகையில், இதுவரையிலும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி விவாதங்களை நடத்தியுள்ளேன். தொலைக்காட்சி விவாதங்களில் அர்னாப் செய்வது இதழியல் அல்ல, அது அவர் அந்த தொழிலுக்குச் செய்கின்ற அவமானம் என்று என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். இப்போது அவருக்கு ஆதரவாக நிற்க நான் மறுக்கிறேன், அவருக்கு ஆதரவாக இருப்பதுதான் இப்போது இந்தியாவில் பத்திரிகை தர்மம் என்ற தகுதியைப் பெறுமேயானால், நான் இந்த துறையிலிருந்து வெளியேறவும் தயாராகவே இருக்கிறேன்.  



கருத்துச் சுதந்திரத்திற்கான தனது உரிமையைத் துஷ்பிரயோகம் செய்து, இந்தியாவில் இதழியல் துறையை தனியொருவராக நின்று அழித்திருக்கும் ஒரு மனிதரால், அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டு பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்லது சலுகையைக் கோர முடியாது. காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டது அல்லது ‘அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது’ குறித்து எழுகின்ற எந்தவொரு விமர்சனமும் உறுதியாக சுதந்திரமான பேச்சு, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் எல்லைக்கு வெளியிலேயே இருக்க வேண்டும்.

அவருக்கு எதிரான காவல்துறை நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று நாம் நம்பினாலும், அது மற்றவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை ஊக்குவித்து அவர் நடத்திய விளையாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது என்பதை அர்னாப் புரிந்து கொள்ள வேண்டும்,. உண்மையாகப் பார்த்தால், நடுநிலை பத்திரிகையாளராக தன்னுடைய வேலையைச் செய்யாமல், அவர் அரசியலில் பங்கேற்பவராகவே செயல்பட்டு வந்திருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள பாஜக அரசாங்கங்கள் இடதுசாரி ஆர்வலர்கள், மாணவர்கள், நேர்மையான ஊடகவியலாளர்கள் என்று பலரையும் துன்புறுத்துவதற்கும், சிறைகளில் அடைப்பதற்கும் அரசு நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருப்பதை கையறு நிலையில் நின்று நாம் கண்டு வந்திருக்கிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அர்னாப், அரசாங்கத்தின் நிலைபாட்டிற்கு மக்கள் ஆதரவை உருவாக்கி, தனது ஸ்டுடியோவில் கங்காரு நீதிமன்றங்களை நடத்தி அவற்றில் நீதிபதியாக, நடுவராக, தண்டனைகளை நிறைவேற்றுபவராக இருந்திருக்கிறார். அவர் ஒரு முறைகூட பாஜகவால், அதன் அரசாங்கங்களால் குறிவைக்கப்பட்ட பத்திரிகையாளர் அல்லது ஆர்வலரின் பாதுகாப்பிற்காக தன் குரலை உயர்த்தியதே இல்லை.

முக்கியமான அரசு நிறுவனங்கள் அவர்களை எல்லாம் மீட்பதற்கு வராத நிலையில், சட்டத்தின் புனிதமான கொள்கைகள் காகிதத்தில் மட்டுமே உள்ள நிலையில் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எந்தவொரு அரசியல் எதிரியையும் வேட்டையாடுகின்ற சூழலை உருவாக்குவதில் அர்னாப்  தீவிரமாகப் பங்கேற்று வந்துள்ளார். இப்போதுள்ள இந்த புதிய ‘கட்டமைப்பு’ குறித்து கடைசியாகத்தான் அவர் புகார் அளிக்க வேண்டும், ஏனென்றால் அவர் 2020ஆம் ஆண்டில் இருக்கின்ற புதிய ஒழுக்கக்கேடான இந்தியா என்ற ‘தேசத்தைக் கட்டமைத்தவர்களில்’ ஒருவராக அவர் இருக்கிறார். ஜார்ஜ் ஆர்வெல் ஒருமுறை ‘ஒன்று நாம் அனைவரும் ஒழுக்கமான உலகில் வாழ வேண்டும், இல்லாவிடில்  யாருமே அவ்வாறு வாழக் கூடாது’ என்று கூறியுள்ளார்.



அர்னாபின் சூனிய வேட்டை இதழியலால் பாதிக்கப்பட்டவர்கள் - அவரும் அவரைப் போன்றவர்களும் குறிவைத்திருந்த அதிகாரமற்ற நூற்றுக்கணக்கான குடிமக்கள் - அவதூறு பிரச்சாரங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது உள்ளனர். தங்களையும், தங்களுடைய வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசு மற்றும் நீதிமன்றங்களைச் சார்ந்து அவர்கள் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அரசியலமைப்பிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், அதிகாரமற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே நமது குரலையும், சமூக ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் ஆட்சியாளர்களின் பிரச்சாரகர் ஒருவரின் காப்பதற்காக தங்கள் நேரத்தையும், சீற்றத்தையும் வீணடிப்பதற்குப் பதிலாக, இன நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, கடினமாக நாம் பெற்றிருக்கும் சமூக அமைதியை அழிக்கின்ற வகையில் இருக்கின்ற வெறுக்கத்தக்க, மக்கள் விரோத, ஜனநாயக விரோத பிரச்சாரங்களைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

 

https://thewire.in/media/arnab-goswami-arrest-free-speech

Comments