1947 குருநானக் ஜெயந்தி அன்று காந்தி ஆற்றிய உரை

1947 நவம்பர் 28 குருநானக் ஜெயந்தி அன்று தில்லியில் உள்ள பிர்லா பவனில் நடந்த  பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆற்றிய உரை


சகோதர சகோதரிகளே,

இன்று குருநானக்கின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரோ ஒருவர் உரையாற்ற வருமாறு என்னை அழைத்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் ‘மன்னிக்க வேண்டும், என்னால் வர இயலாது’ என்று நான் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு இன்றைக்கு பாபா பச்சிட்டர் சிங் நேரிலே வந்து நான் அவசியம் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்து மணியளவில் அவர் என்னைச் சந்தித்தார். ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. போகலாம் என்று நான் முடிவு செய்தேன். என் தரப்பில் எந்தப் பிரச்சனையையும் நான் செய்திருக்கவில்லை என்றாலும், இன்றைக்கு சீக்கிய நண்பர்கள் என் மீது கோபத்துடன் இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களுக்கு கசப்பு மாத்திரையைத் தர முயற்சித்தவனாகவே நான் இருந்தேன். சிலசமயம் அப்படித்தான் நடந்து விடுகிறது. நான் அங்கே வரவேண்டும் என்பதை பாபா வலியுறுத்தினார். ஆயிரக்கணக்கான சீக்கிய ஆண்களும் பெண்களும் அங்கே இருக்கிறார்கள் - அவர்களில் சிலர் உண்மையிலேயே துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் -   அவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். நான் ஒப்புக் கொண்டேன். 11 மணிக்கு என்னை அங்கே அழைத்துச் செல்லலாம் என்று அவரிடம் கூறினேன்.    

காலை 11 மணிக்கு அவர் சேக் அப்துல்லாவுடன் வந்து சேர்ந்தார். அவரையும் அங்கே அழைத்துச் செல்லவிருந்தனர். ஒருவரையொருவர் எதிர்கொள்வதைத் தாங்க முடியாதவர்களாக சீக்கியர்களும், முஸ்லீம்களும் இருந்து வருகின்ற போது, சேக் அப்துல்லாவால் அங்கே எப்படி வர முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன். சேக் அப்துல்லா பெரிய காரியம் ஒன்றைச் செய்திருப்பதாக அவர் கூறினார். ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரையும் அவர் ஒற்றுமையுடன் காஷ்மீரில் வைத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒன்றாக வாழவோ அல்லது சாகவோ விரும்புகின்ற சூழலை அவர் அங்கே உருவாக்கியிருப்பதாகவும் கூறினார். எனவே சேக் அப்துல்லாவும் எங்களுடன் வர வேண்டும் என்று நான் நினைத்தேன். நாங்கள் அவரையும் எங்களுடன் அங்கே அழைத்துச் சென்றோம். அது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தவனாகவே நான் இருந்தேன். ஆயிரக்கணக்கான சீக்கிய ஆண்களும் பெண்களும் அங்கே கூடியிருந்தனர். அவர்களிடம் மிகவும் கொஞ்சமாகவே பேசினேன். ஆனாலும் சேக் அப்துல்லா மிக நீண்ட நேரம் பேசினார். அவருடைய பேச்சை மிகுந்த கவனத்துடன் மக்கள் கேட்டார்கள். அவர்களுடைய கண்களில் அவரை மறுப்பதற்கான எந்தவொரு தடயமும் தெரியவில்லை எனும் போது, அவர்களிடமிருந்து எதிர்க்குரல் எழுவதற்கான கேள்விக்கு எங்கே இடம் இருந்தது? நாங்கள் அங்கே அழைக்கப்பட்டிருந்தோம். சீக்கியர்கள் மிகவும் துணிச்சலான சமூகம் என்பதால், அனைத்தும் நன்றாகவே முடிந்தது. அதைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும் என்று  நான் உணர்ந்தேன்.   



வங்கத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது முஸ்லீம் வர்த்தக சபையிடமிருந்து வந்திருந்தது. அந்தக் கடிதத்திற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்றாலும், நான் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். கன்சியாம் தாஸிடம் அது குறித்து அவருக்கு ஏதாவது தெரியுமா என்று விசாரித்தேன். முஸ்லீம் வர்த்தக சபை அரசாங்கத்துடன் பரிவர்த்தனை செய்வதற்கு விரும்புவதாகவும், அரசாங்கத்துடன் ஒத்துப் போக விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆனால் அரசாங்கம் என்பது ஹிந்து, முஸ்லீம், பார்சி என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் சொந்தமானது. அப்படியிருக்கும் போது முஸ்லீம்கள், ஹிந்துக்கள், பார்சிகள், ஆங்கிலேயர்கள் என்று ஒவ்வொரும் தங்களுக்கென்று தனித்தனியாக வர்த்தக சபைகளை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்? அதனால் அதை அங்கீகரிக்க அரசு மறுத்து விட்டது.  

மார்வாரி, ஐரோப்பிய வர்த்தக சபைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கையில், முஸ்லீம் வர்த்தக சபைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாதது உண்மையில் பாரபட்சரமானது என்று அந்த கடிதத்தை எழுதியவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அது எனக்கு வேதனை அளிப்பதாகவே இருந்தது. முஸ்லீம் வர்த்தக சபையுடன் எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்றால், மார்வாரி வர்த்தக சபை, ஐரோப்பிய வர்த்தக சபையுடனும் அதற்கு எந்தவொரு தொடர்பும் இருக்க முடியாது. ஆனால் அந்த சபைகள் இப்போது வரையிலும் இருந்தே வருகின்றன. ஐரோப்பியர்கள் அதிகாரத்தில் இருந்ததால் ஐரோப்பிய வர்த்தக சபை உருவானது. நாம் அவர்களால் ஆளப்பட்டு வந்ததால், வைஸ்ராய் அதனுடைய தலைவராக இருந்தார். கிறிஸ்துமஸின் போது கல்கத்தா செல்லும் அவர், அங்கே நீண்ட உரைகளை நிகழ்த்தி வந்தார். ஆனால் அதே நடைமுறையை இப்போது தொடர முடியாது.

ஐரோப்பியர்கள், முஸ்லீம்கள், மார்வாரிகள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனித்தனி வர்த்தக சபைகளை எவ்வாறு வைத்திருக்க முடியும்? ஒரேயொரு இந்திய வர்த்தக சபை மட்டுமே இங்கே இருக்க முடியும். ஹிந்துக்கள், முஸ்லீம்கள், பார்சிகள் தனித்தனியாக வர்த்தக சபைகளை வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள் என்றால், இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தால் என்ன பயன் இருக்கப் போகிறது? குறிப்பாக ஐரோப்பியர்கள் இப்போது பணிந்தே செல்ல வேண்டும். அவர்கள் தனித்து எதையும் செய்யக் கூடாது. தங்களுக்கென்று எந்தவொரு சிறப்பு சலுகைகளையும் பெற்றுக் கொள்ள அவர்கள் மறுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உள்ள அதே உரிமைகளையே தாங்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்த வேண்டும். அதுவே இந்தியா பெற்றிருக்கும் சுதந்திரத்திற்கான சிறந்ததொரு அடையாளமாக மாறும்.

ஐரோப்பிய வர்த்தக சபை ஒவ்வொரு ஆண்டும் வைஸ்ராயை அழைப்பது வழக்கம். என்னுடைய பார்வையில், நம்முடைய பிரதமரை, துணைப் பிரதமரை அல்லது மவுண்ட்பேட்டன் பிரபுவை அவர்களால் அழைக்க முடியாது.  ஓர் ஐரோப்பியராக மவுண்ட்பேட்டன் பிரபுவால் அங்கே சென்று நிச்சயமாக அவர்களைச் சந்திக்க முடியும். ஆனால் வர்த்தக சபை அவரை அழைக்க முடியாது. நான் ஓர் எளிய மனிதன். ஆனாலும் என்னுடைய இந்தக் கருத்து குறித்து எந்தவொரு சந்தேகமும் எனக்கு இருக்கவில்லை. அதேபோலவே, மார்வாரி வர்த்தக சபையால் அரசாங்கத்திலிருந்து யாரையும் அழைக்க முடியாது. மார்வாரி என்பதால், யாரையும் அது அங்கே அழைக்க முடியும் என்றாலும் வர்த்தக சபை சார்பாக அழைக்க முடியாது. இந்தியா என்ற ஒன்று இருப்பதாலேயே இவை அனைத்தும் இருக்கின்றன. முஸ்லீம்களும்கூட இங்கே தனித்து ஒரு சமூகமாக வாழ முடியாது. இந்தியர்களாக மட்டுமே அவர்கள் இங்கே வாழ வேண்டும். அதேபோல், சீக்கியர்கள், ஹிந்துக்கள், ஐரோப்பியர்கள் என்று அனைவருமே இந்தியர்களாக மட்டுமே இங்கே வாழ முடியும். அவர்கள் அனைவரும் இந்தியாவின் விசுவாசமான குடிமக்களாகவே இங்கே வசிக்க முடியுமே தவிர, வேறு வகையாக அல்ல. ஆகவே நான் இந்த முக்கியமான விஷயத்தை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் இங்கிருந்து எழுதுகின்ற கடிதத்தைப் பெறுவதற்கு முன்பாக, என்னுடைய குரலை அவர்கள் கேட்பது நல்லது என்றே நான் நினைத்தேன். அரசியல்ரீதியாக அல்லது வேறுவிதமாக தனித்த இருப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை முஸ்லீம்கள் வற்புறுத்துவார்கள் என்றால், அவர்களுடைய அந்த விருப்பத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. ஐரோப்பியர்கள் இங்கே கிறிஸ்துவர்களாக வாழலாம், கிறிஸ்துவ மதத்தில் உள்ள அற்புதமான விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கலாம். அது அவர்களுடைய சமூகம் அல்லது மதரீதியான சூழலாகும். ஆனால் நிர்வாகத்தையும், அரசியலையும் பொறுத்தவரை, அனைவருமே சமமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று வர்த்தகமும் அனைவருக்கும் சொந்தமானது. மார்வாரிகள், குஜராத்திகள், பஞ்சாபிகள் தங்களுக்கென்று தனித்தனியான பங்குகளை வைத்துக் கொள்ள விரும்பினால், அப்புறம் இந்தியாவிற்கு என்று என்ன இருக்கும்? நமது வேலைகளை நாம் இதுபோன்று முன்னெடுக்க முடியாது.    



ஒரு விஷயத்தைக் குறிப்பிட நான் மறந்துவிட்டேன், அதை நான் மறந்திருக்கக்கூடாது. சீக்கியர்களின் கூட்டத்தில் நான் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இங்கே சீக்கியர்களும், ஹிந்துக்களும் உள்ளனர். ஒருவருக்கு எது பொருந்துமோ அது மற்றொருவருக்கும் பொருந்தும். இன்றைய தினத்தை  சீக்கியர்களின் புத்தாண்டு தினமாக நாம் கருத வேண்டும் என்றே நான் கூறுவேன். இன்று முதல் சீக்கியர்களுக்கு மீதமிருக்கின்ற அனைவரையும் தங்கள் சகோதரர்களாகக் கருத வேண்டிய கடமை இருக்கிறது. இதைத் தவிர வேறெந்த விஷயத்தையும் குருநானக் கற்பிக்கவில்லை. மெக்காவுக்கும் கூட சென்று [வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பற்றி] அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இதுபோன்ற பல குறிப்புகள் குரு கிரந்தசாகிப்பில் உள்ளன. குருகோவிந்த் என்ன செய்தார்? அவருடைய சீடர்களாக முஸ்லீம்கள் பலரும் இருந்தனர். முஸ்லீம்களை அரவணைத்து, பாதுகாப்பதற்காக அவர் சிலரைக் கொன்ற போதிலும், சீக்கியர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் யாரையும் கொன்றதில்லை. தன்னுடைய வாளைப் பயன்படுத்தினார் என்றாலும், அதன் பயன்பாட்டிற்கென்று சில கட்டுப்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.  

முஸ்லீம்களும் இதைப் போன்று எதையாவது செய்திருக்கலாம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. நாம் அனைவரும் நல்லவர்களாக இருந்து நமது கடமையை நிறைவேற்றுவோம். இன்று சீக்கியர்களின் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்த போது, சாலைகளில் ஒரு முஸ்லீமைக்கூட என்னால் காண முடியவில்லை என்பது எனக்கு வேதனை அளிப்பதாகவே இருந்தது. சாந்தினி சௌக்கில் ஒரு முஸ்லீமைக் கூட காண முடியவில்லை என்பதை விட நமக்கு வெட்கக்கேடானது வேறு என்ன இருக்கப் போகிறது? ஆண்களாலும், ஏராளமான கார்களாலும் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருப்பதைக் கண்ட என்னால், அவர்களில் ஒரு முஸ்லீமைக்கூட காண முடியவில்லை. எனக்கு அருகே ஒரேயொரு முஸ்லீம், ஷேக் அப்துல்லா அமர்ந்திருந்தார். இவ்வாறான சூழலில் நம்மால் எவ்வாறு வெற்றியை அடைய முடியும்?      



சோம்நாத் கோவிலின் (கி.பி 1025ல் இந்தியா மீது படையெடுத்த முகமது கஜினியால் தாக்கப்பட்டு சேதமடைந்த) புனரமைப்பு குறித்து ஒருவர் எனக்கு எழுதியிருக்கிறார். அதற்குப் பணம் தேவைப்படுகிறது. ஜுனாகத்தில் ஷமல்தாஸ் காந்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்ற தற்காலிக அரசு ரூ.50,000 தருவதற்கான உறுதியை அளித்திருக்கிறது. ஜாம்நகரில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தில் இருந்த போதிலும், ஹிந்து மதத்திற்காக அரசின் கருவூலத்தில் இருந்து அவர்கள் விரும்பிய அளவிற்கு இவ்வாறு பணம் கொடுப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று சர்தார் இங்கே வந்தபோது நான் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவருக்குமான அரசாங்கத்தை அமைத்திருக்கிறோம். இது ஒரு ‘மதச்சார்பற்ற’ அரசாங்கம், அதாவது இது கடவுள் ஆளுகை சார்ந்த அரசாங்கம் அல்ல. எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானது அல்ல. எனவே இந்த அரசு சமூகங்களின் அடிப்படையில் பணத்தைச் செலவிட முடியாது. நமது நாட்டைப் பொறுத்தவரை, இங்கிருக்கின்ற அனைவரும் இந்தியர்களே. தனிநபர்கள் தங்கள் சொந்த மதங்களைப் பின்பற்றிக் கொள்ளலாம். எனக்கென்று என்னுடைய மதம் இருக்கின்றது. நீங்கள் பின்பற்றுவதற்கு உங்களுடைய மதம் இருக்கின்றது.   

இன்னுமொருவர்  ஒரு கடிதத்தை நன்றாக எழுதியுள்ளார். சோம்நாத் கோவிலின் புனரமைப்புக்கு ஜுனாகத் அரசாங்கமோ அல்லது மத்திய அரசோ பணம் கொடுத்தால் அது நிச்சயம் அதர்மமாகவே இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். அவர் சரியான கருத்தைக் கூறியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது உண்மையா என்று சர்தாரிடம் கேட்டேன். தான் உயிருடன் இருக்கும்வரை அது சாத்தியமே இல்லை என்று அவர் கூறினார். சோம்நாத் கோவிலைப் புனரமைப்பதற்காக ஜுனாகத்தின் கருவூலத்திலிருந்து ஒரு பைசா கூட எடுக்க முடியாது என்றார். அவர் அதைச் செய்யப் போவதில்லை என்றால், பாவம் ஷமல்தாஸால் தனியாக என்ன செய்து விட முடியும்? சோம்நாத் கோவிலுக்கு நன்கொடையாகப் பணத்தை வழங்கக்கூடிய ஹிந்துக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். கஞ்சத்தனம் கொண்டவர்களாக, தங்களுடைய பணத்தைத் தருவதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றால், அந்தக் கோவில் தற்போதைய நிலையிலேயே இருக்கட்டும். ஏற்கனவே ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தது; ஜாம் சாகேப் ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேலாக கூடுதல் பணத்தை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.



நான் இன்னுமொரு விஷயத்தையும் அறிந்து கொண்டேன். பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்கள் நம்முடைய  இளம்பெண்களைக் கடத்திச் சென்றது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கே உயிருடன் இருக்கின்ற கடத்தப்பட்ட ஒவ்வொரு சிறுமியையும் நாம் திரும்பக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அந்தச் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அனைத்தையும் இழந்தவர்களாகி விடுவார்களா? நான் ஒன்றும் அப்படி நினைக்கவில்லை.

நேற்று கூட நான் இது குறித்து பேசினேன். மற்றவர்களின் வற்புறுத்தலால் மட்டுமே தன்னுடைய மதத்தை ஒருவரால் மாற்றிக் கொள்ள முடியாது. அந்தச் சிறுமிகளை மீட்டெடுப்பதற்காக பணம் செலுத்துவது பற்றி சில பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒரு பெண்ணுக்கு ரூ.1,000 ரூபாய் தந்தால் அவர்களை மீட்டு வருவதற்கு சில போக்கிரிகள் முன்வந்திருப்பதாகவும் நான் கேள்விப்படுகிறேன். அப்படியென்றால் இந்த விஷயம் வணிகமாக மாறி விட்டதா? என்னுடன் இருக்கின்ற இந்த மூன்று சிறுமிகளில் யாராவது ஒருவரைக் கடத்திச் சென்று, பின்னர் ஆயிரம் ரூபாய் இல்லை, குறைந்தது நூறு ரூபாயாவது தருமாறு என்னிடம் கேட்பார்கள் என்றால், அந்தப் பெண்ணை அவர்கள் கொன்று விடுவதே நல்லது என்று நான் அவர்களிடம் கூறுவேன். கடவுள் அவளைக் காப்பாற்றுவதற்கு விரும்பினால், என் மகள் நிச்சயம் திரும்பி என்னிடம் வருவாள். அவர்கள் ஏன் என்னிடம் அவளுக்காகப் பேரம் பேச வேண்டும்? சிறுமியைக் கடத்தியது மட்டுமல்லாமல், அவளைக் கொடுமைப்படுத்துவதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தனது சொந்த மதத்தையே கைவிட்டுவிட்ட அவர்கள், அவள் என் மகள் என்பதாலேயே என்னைக் கொடுமைப்படுத்த வந்தவர்களாக இருக்கின்றனர். நான் ஒரு சிப்பிக் காசைக் கூட அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன்.    

எந்தவொரு பெற்றோரும் தங்களுடைய மகள்களுக்காக இதுபோன்றதொரு பேரத்தைப் பேசக் கூடாது. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதால், கடவுளுடனே தங்கள் மகள்கள் இருப்பதாக அவர்கள் நினைக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய கணவனை இழந்தால், அவள் எங்கே போவாள்? அந்தப் பெண் அங்கிருந்து வர விரும்பி, அதற்கான பணம் அவளிடம் இல்லாவிட்டால் நாம் அவளுக்கு அதைத் தருவது வேறு விஷயம். ஆனால் போக்கிரி ஒருவன் நம்மிடம் வந்து அவளை மீட்டு வருவதற்கான பணத்தைக் கேட்டால், அவனுடைய கோரிக்கையை நாம் ஏற்க கூடாது.

அங்கிருந்து மட்டுமல்லாது இந்தப் பக்கமிருந்தும் அதுபோன்ற நிகழ்வுகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும். நம்முடைய பக்கத்திலும் அதைப் போன்ற செயல்களைச் செய்து முஸ்லீம் சிறுமிகளைக் கடத்தி வந்திருக்கிறோம். அவ்வாறான நேர்மையற்ற நடவடிக்கையில் நமது அரசாங்கம் ஈடுபடுமா? தங்களுடைய காவலில் உள்ள முஸ்லீம் சிறுமிகளைத் திருப்பி அனுப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்துமாறு கிழக்கு பஞ்சாப் அரசோ அல்லது மத்திய அரசோ ஜின்னா சாகேபைக் கேட்டுக் கொள்ளுமா? ஒரு சிப்பிக் காசைக்கூட நான் அரசாங்கத்திற்குக் கொடுக்க மாட்டேன். இதுபோன்ற அருவருப்பான செயல்களுக்கான வெகுமதியாக அது எவ்வாறு பணத்தைக் கேட்டுப் பெற முடியும்? அரசாங்கம் தனது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்து, சிறுமியை இழப்பீட்டுத் தொகையுடன் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். தூய்மையானவர்களாக, தைரியமானவர்களாக மாறாவிட்டால், எதையும் நாம் சாதிக்கப் போவதே இல்லை.      

கத்தியவார் பற்றி நேற்று நான் விவாதித்தேன். பாகிஸ்தான் செய்தித்தாள்களில் படித்ததையும், பின்னர் சில ஹிந்துக்களிடமிருந்து கேட்டதையுமே நான் சொன்னேன். இன்று சர்தார் என்னைச் சந்திக்க வந்தபோது அவரிடம் கலந்தாலோசித்தேன். அங்கே செல்லும் போது, முஸ்லீம் பையனையோ அல்லது பெண்ணையோ யாரும் தொடக்கூட மாட்டோம் என்று உறுதியை அளிக்குமாறு நீண்ட உரையாற்ற வேண்டும் என்று அவரிடம் நான் சொன்னேன். முஸ்லீம்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், அடித்துத் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்படுவதாகவும், அவர்களுடைய இளம்பெண்கள் கடத்தப்படுவதாகவும் நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் சர்தார் என்னிடம் தான் அறிந்த வரையிலும், நிச்சயமாக ஒரு முஸ்லீம் கூட கொல்லப்படவில்லை, ஒரு முஸ்லீம் வீடு கூட கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது எரிக்கப்படவில்லை என்று கூறினார். அந்த விஷயங்கள் அனைத்தும் அவர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு நிலவிய குழப்பத்திலேயே நடந்திருந்தன. கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருந்தன. ஒரு வீடு எரிக்கப்பட்டிருந்தது. கொலை, கடத்தல் போன்ற விஷயங்கள் அப்போது அங்கே நடந்திருக்கவில்லை. மத்திய அரசின் முகவர் அல்லது சில ஆணையாளர்கள் எப்போதும் அங்கே இருந்தனர். அதுபோன்ற செயல்கள் நடப்பதற்கு அனுமதிக்கப்படாது பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. முஸ்லீம்களைக் கொள்ளையடிக்கவோ கொலை செய்யவோ கூடாது என்பதைவிட, யாருமே அவர்களில் ஒருவரையும் தொடக்கூட முடியாது என்ற அளவிலே சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.        

அதைத் தொடர்ந்து, அப்படியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மாலையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அந்த விஷயத்தைக் குறிப்பிட்டு நான் பேசலாமா என்று சர்தாரிடம் கேட்டேன். நிச்சயமாக நான் அதுகுறித்து பேசலாம் என்று அவர் சொன்னார். அங்கே ஏதேனும் நடந்திருந்தால், அந்த விஷயத்தை தான் சரியாகக் கையாண்டிருப்பேன் என்று அவர் விளக்கினார். முஸ்லீம்கள், அவர்களுடைய சொத்துக்களைப் போலவே, அங்கே இருக்கின்ற ஹிந்து காங்கிரஸ்காரர்களும் தங்கள் உயிருக்கான பேராபத்தில் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். எந்தவொரு கொடூர நிகழ்வும் அங்கே நீடிக்க முடியாது. உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் தான் இருக்கும் வரை, அங்கே அதுபோன்றதொரு காரியத்தை நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று சர்தார் கூறினார். அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவற்றை பொதுவில் குறிப்பிட்டு பேசுவதற்கு அவருடைய அனுமதியைக் கேட்டேன். மகிழ்ச்சியுடன் நான் அவ்வாறு செய்யலாம் என்றும், தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டும் நான் பேசலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நேற்று நான் அதைப் பற்றி பேசினேன், இன்றே எனக்கு அந்த தகவல் கிடைத்து விட்டது.   

 

https://archive.org/details/Swaraj-Gandhi-1947-11-28/prayer_speech_106.mp3


Comments