நம்மில் உறைந்துள்ள மனுவைக் கொல்ல சாதி எனும் பேயை ஓட்டுவோம்

சௌஜன்ய தமலபாகுலா


ஹைதராபாத் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ்


டெக்கான் க்ரோனிக்கிள்



மனுஸ்மிருதியை எரித்ததன் மூலம், பாலினம், சாதி ஆகியவை தங்களுக்கிடையே ஊடாடுவது குறித்து பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பேசுவதே தெரிய  வருகிறது. மனுஸ்மிருதி இந்திய சமுதாயத்தின் மீது இன்னமும் தன்னுடைய மகத்தான ஆற்றலைப் பயன்படுத்தி வருகின்ற ஆவணமாக இருக்கின்றது. ஆணாதிக்கத்தையும், சாதியையும் முறைப்படுத்தி நியாயப்படுத்துகின்ற மிகமுக்கியமான நூலாக அது இருக்கின்றது. அது பெண்களின் செயல்பாடுகள், சந்ததிகளை உருவாக்குவது மீது கட்டுப்பாட்டுகளை உருவாக்கி, பெண்வெறுப்பை மிகவும் ‘இயல்பானதாக்குகிறது’. கோபம், அற்பத்தனம், துரோகம், ஈவிரக்கமற்ற தன்மை, இயல்பான விசுவாசமின்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பாலினம் பெண்ணினம் என்றும், கத்தியின் முனை, விஷம், பாம்பு, நெருப்பு என்று அனைத்தின் கலவையாக பெண்கள் இருக்கிறார்கள் என்றும் மனுநூல் கூறுகிறது. சூத்திரனை மனிதனுக்கும் கீழானவனாக்கி, தீண்டத்தகாதவர்களுக்கு ​​எதிரான வன்முறையை மனுவின் சட்டம் நியாயப்படுத்துகிறது (மனு, IX 17).



இந்திய சமுதாயத்தில், சாதியும் பாலினமும் பரஸ்பரம் தங்களை விலக்கிக் கொள்கின்ற கட்டுமானங்கள் அல்ல. அவை பின்னிப்பிணைந்தவையாக, பிரிக்க முடியாதவையாக, தனித்து சுயாதீனமாக இருக்க முடியாதவையாகவே உள்ளன. இந்திய சமுதாயத்தில் ஒருவருக்கு அவரின் சாதி அடையாளம் எப்படித் தெரிய வருகிறது? தந்தையிடமிருந்தோ அல்லது தந்தையாக இருப்பவரிடமிருந்தோ அவர் அதைப் பெறுகிறார். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தன் குழந்தைகளை ஒருவனால் அடையாளம் காண முடிவதாலும், தன்னுடைய சொத்துக்களை அவர்களுக்கு அளிப்பதற்கு தன்னால்தான் அவள் கருத்தரித்தாள் என்பதை உறுதி செய்து கொள்ள முடிவதாலுமே அவளுடைய  செயல்பாடுகளை, பாலுணர்வுகளை அவன் கட்டுப்படுத்துவதாக ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸின் குடும்பம், தனிச் சொத்து, அரசின் தோற்றம் குறித்த கோட்பாடு கூறுகிறது. அதேபோன்று சாதியின் தூய்மையையும், தொடர்ச்சியையும் உறுதி செய்கின்ற வகையில், வேறு எந்தவொரு ஆணும் தனது விதைகளை தங்கள் மனைவி / பெண்களிடம் நட்டு விடக்கூடாது என்பதற்காக, தங்கள் பெண்களை நெருக்கமாகப் பாதுகாக்குமாறு உயர்சாதி ஆண்களை மனு அறிவுறுத்துகிறார். பெண்கள் மீதான இந்த கட்டுப்பாடு தகர்த்தெறியப்படுமென்றால், விரைவிலேயே சாதி மரணம் எய்தி விடும்.  



சாதி முறையைத் தொடர்வதற்காக, திருமணத்திற்கு முன்னும் பின்னும் அதை நிலைநிறுத்துவதற்காக, பாலியல் தூய்மை, பதிபக்தி அல்லது பதிவிரத தர்மம் என்ற பெயரில் பெண்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அதனை அடைவதற்கான மற்றொரு வழியாக தாய்மையைப் பெருமைப்படுத்துவது என்கின்ற சாதிக்குள்ளான திருமணத்துடன் வரையறுக்கப்பட்ட கருத்து இருக்கின்றது. ஆனால் திருமணத்தின் மூலம் தாயாக மாறுகின்ற சாதி ஹிந்துப் பெண் பெருமைப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவள் ஒதுக்கி வைக்கப்படுகிறாள், கொல்லப்படுகிறாள். 

ஹிந்து சமூகவியலின் மையக் கொள்கையாக இருக்கின்ற சாதிக்குள்ளான திருமணங்களில் - சாதி, பாலினங்கள் தங்களுக்கிடையே ஊடாடுவது என்ற இந்தக் கோட்பாடு அம்பேத்கரின் மாபெரும் பங்களிப்பாக இருக்கின்றது. இந்தக் கோட்பாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்ளாமல் இந்தியாவில் பெண்ணியம் முழுமையடைய முடியாது.



இந்திய சமுதாயத்தில் பெரும் செல்வாக்கையும் மரியாதையையும் மனு இன்றும் அனுபவித்து வருகிறார். மனுஸ்மிருதியிலிருந்தே, பெண்களின் பாலுணர்வைக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட பாலியல் தூய்மை, திருமணத்தை மையமாகக் கொண்ட சமூகமயமாக்கல், ஒருதாரமணம், அகமணம் போன்ற கருத்துக்கள் உருவாகியுள்ளன. திருமணமான பெண்களைத் திருமணமாகாதவர்களிடமிருந்தும், பதிவிரதைகளை (அர்ப்பணிப்புள்ள மனைவி) விபச்சாரிகளிடமிருந்தும், பிராமணப் பெண்களிடமிருந்து  தலித் பெண்களையும் பிரித்து வைத்துப் பார்ப்பது மனுவின் சட்டத்திலிருந்தே தோன்றியுள்ளது. மனைவி மீதான கணவனின் உரிமையின் அடையாளமாக திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் சடங்கு, கால்நடைகள் மீது மனிதனுக்குள்ள உரிமையை ஒத்ததாகவே இருக்கின்றது. அந்த சடங்கைப் பின்பற்றாத நடுத்தர வர்க்கப் பெண்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். 

இங்கே ஒரு பெண்ணின் மதிப்பு அவளுடைய சாதித் தூய்மையாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பிராமணப் பெண்களுக்கு இணையான மதிப்பு தலித் பெண்களுக்கு இருப்பதில்லை, சாதி ஹிந்துக்களால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். பிராமண ஆணாதிக்கம் என்ற கோட்பாடு தலித் ஆணாதிக்கமே இல்லை என்பதாக அர்த்தமாகாது. தலித் ஆணாதிக்கம் என்பது பிராமண ஆணாதிக்கத்தின் விரிவாக்கத்தைத் தவிர வேறாக இருக்கவில்லை. ‘உயர்சாதியினரிடமிருந்தே தலித் பெண்கள் வன்முறையை எதிர்கொள்கிறார்கள், தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து அல்ல’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தலித் இயக்கங்களின் அறிவுரைகள் அம்பேத்கரின் சாதிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கவில்லை. பாரம்பரிய சமுதாயத்தில் தலித்துகளுக்குள் அல்லது அவர்கள் மத்தியில் தீவிர மாற்று சிந்தனை இருந்ததாக அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.



சாதிக்கு எதிரான மருந்தாக, சாதிகளுக்கு இடையிலான திருமணங்களையும், வெவ்வேறு சாதியினர் ஒன்றிணைந்து உணவு அருந்துவதையும் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவரது கோட்பாட்டில் இருந்த இந்த குறிப்பிட்ட அம்சம் அம்பேத்கரியர்களுக்குப் பிந்தைய தலித் இயக்கத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகி இருக்கின்றது. ஏராளமான திருமணங்கள் சாதிகளுக்கு இடையிலான திருமணங்களாக நடைபெறும்போதே, சமூக நினைவாற்றலில் நீடித்திருக்கும் சாதி அடையாளத்தை துடைத்தழித்து சாதியை அழிப்பது சாத்தியமாகும். ‘காதல்’ என்ற கட்டமைப்பின் மூலம் நடைபெறுகின்ற சாதிகளுக்கு இடையிலான திருமணங்களின் மிகச்சிறிய எண்ணிக்கையால், சாதி குறித்த பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்பது அனுபவ உண்மையாகும். இதுபோன்று சிறிய எண்ணிக்கையிலான திருமணங்களிலிருந்து பிறக்கின்ற  குழந்தைகள், எந்தவொரு விமர்சனமும் இல்லாமல் தங்களுடைய தந்தையின் சாதி அடையாளத்தையே பெற்று வருகின்றனர். இவ்வாறான திருமணங்கள் சாதிக்குள்ளான திருமணத்தைத் தகர்த்திருக்கின்றன என்றாலும், திருமணம் என்ற நிறுவனத்தில் உள்ள ஆணாதிக்க இயல்பை அவற்றால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதாலேயே இவ்வாறு நடக்கிறது.



இதற்கிடையில், அம்பேத்கரைப் போன்ற அறிவுசார் பிரமாண்டத்தை சாதிகளுக்கு இடையிலான திருமணத்திற்கான மந்திரமாக தலித் இயக்கங்கள் குறைத்து வைத்து விட்டன. அம்பேத்கரின் சிந்தனைகளை அறிவுசார் விவாதமாகப் பயன்படுத்தாமல், வெறுமனே சூத்திரங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக  பாலினவாதம், ஆணாதிக்கம், பரம்பரைத்தன்மை ஆகியவற்றிற்கான ஒழுங்குபடுத்தலை அவை விலக்கி வைத்துள்ளன. அதனால் தலித் பெண்கள், தலித் ஓரின சேர்க்கையாளர்கள், பெண் தன்பாலினச் சேர்க்கையாளர்கள், இருபாலினர், திருநங்கைகள், தலித் மாற்றுத்திறனாளிகள் அந்த இயக்கங்களிலிருந்து விலக்கப்படுகிறார்கள். அம்பேத்கரின் நோக்கத்தை தனித்திருப்பதன் மூலமே சாதியை எதிர்த்துப் போராட முடியும் என்பதாக ச் சித்தரிப்பதன் மூலம்,  தலித் சித்தாந்தவாதிகள் அம்பேத்கரைச் சிதைத்துள்ளனர். உண்மையில்,  சாதியை எதிர்த்து தனித்துப் போராடுவது சாத்தியமில்லை என்றே அம்பேத்கர் கூறியுள்ளார். சாதியும், ஆணாதிக்கமும் ஒன்றாக அழிக்கப்பட வேண்டிய தீமைகள் ஆகும்.

பிராமணப் பெண்ணின் பாலுணர்வை (சாதிகளுக்கு இடையிலான திருமணம்) தலித் ஆண் பெறுவது பிராமணர்களின் தோல்வியாகக் கட்டமைப்பது  ஆணாதிக்க சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றது. சவர்ணப் பெண்களிடம் தலித் மனிதனுக்குள்ள உறவு வன்முறையை விளைவிக்கின்ற வேளையில், சவர்ணப் பெண்ணின் உடல் மீதான உரிமையின் வடிவமாக அதை தலித் இயக்கங்கள் கட்டமைத்தால், பெண்களுக்கான சுதந்திரம் என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கும். அதேபோல், உயர்சாதி ஆண்களிடம் பாலியல் வன்முறைக்குப் பலியாவதாக தலித் பெண்ணைக் கட்டமைப்பது அவளுடைய அகநிலை, அரசியலை மறுப்பதைத் தவிர வேறாக இருக்கப் போவதில்லை.

சாதிகளுக்கு இடையிலான திருமணங்களில் தலித் பெண்களின் நிலை குறித்து தலித் இயக்கங்கள் விவாதங்களில்  ஈடுபடுவதில்லை. அதற்குப் பதிலாக, தலித் இயக்கத்தின் துரோகிகள் என்று சவர்ண ஆண்களைத் திருமணம் செய்கின்ற தலித் பெண்கள் மீது குற்றம் சுமத்துவதைக் கட்டமைத்திருக்கின்றன. தாய்மை, பிராமணிய பெண்மை, ஆடைக் கட்டுப்பாடு, தார்மீகக் கட்டுப்பாடுகள் (பாலியல் தூய்மை), உடல் உருவமைப்பு என்று பிராமணியக் கொள்கைகளைப் பெருமைப்படுத்தி அவற்றை தலித் பெண்களுக்கான விதிமுறைகளாக அமைத்துத் தருவதன் மூலம், எந்தவொரு வருத்தமுமின்றி தலித் இயக்கங்கள் மனுவை ஆதரித்து வருகின்றன. சமூகத்தின் உள்ளார்ந்தவர்களாகப் பெண்களைக் கருதுவது அம்பேத்கரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக மனுவின் பிராமணக் கட்டமைப்பையே அது அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. பிராமண ஆணாதிக்க குடும்பத்தில், தங்களுடைய கணவன், குழந்தைகளின் நலனுக்காக பெண்கள் தங்கள் உரிமைகளைத் தியாகம் செய்ய வைக்கப்படுகிறார்கள். சாதியை எதிர்த்துப் போராடுவது என்ற மிகப் பெரிய நோக்கத்திற்காக தலித் பெண்கள் தங்களுடைய உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்று தலித் இயக்கமும் கோருகிறது.  



அம்பேத்கரை முற்றிலும் தழுவுவதற்காக, தனிநபர்களும் முற்போக்கு இயக்கங்களும் தங்களுக்குள் மறைந்திருக்கும் மனுவைக் கண்டறிந்து எரிக்க வேண்டிய நேரம் இது.

https://www.deccanchronicle.com/opinion/columnists/120120/the-manu-in-us-kill-him-to-exorcise-caste.html


Comments