1916 பிப்ரவரி 6 அன்று பனாரஸ் ஹிந்து
பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவில் உரையாற்றிய காந்தி, பனாரஸில் இருக்கின்ற காசி விஸ்வநாதர்
ஆலயத்தின் மோசமான நிலைமை குறித்துப் பேசியிருந்தார்.
‘நமது புனிதமான கோவிலின் சந்துகள் இவ்வளவு மோசமாக குப்பைகள் நிறைந்ததாக
இருக்கலாமா? கோவிலுக்கு அருகில் உள்ள வீடுகள் அவரவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு
எந்தவித ஒழுங்குமின்றி கட்டப்பட்டுள்ளன. அங்கே இருக்கின்ற சந்துகள் மிகவும்
குறுகலாக, கடினமான பாதைகளுடன் நடந்து செல்ல முடியாதவையாக இருக்கின்றன. நமது
கோவில்களை அசுத்தம் நிறைந்தவையாக இவ்வாறு வைத்திருக்கும் நிலையில், நாம் அமைக்க
விரும்புகின்ற அரசாங்கம் எந்த நிலையில் இருக்கும்? தாங்களாகவோ… இல்லை நமது
கட்டாயத்தின் பேரிலோ ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, நமது கோவில்கள்
தாமாகவே புனிதமான, சுத்தமான, அமைதி தவழும் இடங்களாக மாறி விடுமா?’ என்று பல்வேறு
கேள்விகளை அப்போது காந்தி எழுப்பியிருந்தார். அவர் சுத்தத்தையே பேண முடியாத நம்மால்
நாம் அடைய விரும்புகின்ற சுயாட்சியையும் பேணிக் காத்துக் கொள்ள முடியாது என்றே
கருதினார்.
அந்தக்
கருத்துக்களின் அடிப்படையிலேயே, தன்னுடைய இந்திய ரயில் பயண அனுபவங்களைப் பற்றியும்
அந்த பல்கலைக்கழகத் துவக்க விழாவில் காந்தி பேசியிருந்தார். ‘நகரப் பகுதிகளில் வாழ விரும்புகின்ற
நாம், மிக எளிய குக்கிராம வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முடியாது. மாடியில்
வசிப்பவர்கள் நம்மீது எச்சிலைத் துப்பி விடுவார்களோ என்ற பயத்துடனேயே பம்பாய்த்
தெருக்களில் நடந்து செல்ல முடியாது. ஏராளமான ரயில் பயணங்களை மேற்கொண்டிருப்பதால், மூன்றாம்
வகுப்பு பயணிகள் ரயில்களில் படுகின்ற அவஸ்தைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அதற்காக ரயில்வேத்துறை நிர்வாகத்தின் மீது நாம் குற்றம் சுமத்த முடியாது. சுத்தம்
குறித்த அரிச்சுவடி கூட நமக்குத் தெரியவில்லை. படுத்து உறங்குவதற்கான இடம் என்ற
சிந்தனையே இல்லாமல், வண்டியின் தரைத்தளங்களில் எச்சிலைத் துப்புகிறோம். எவ்வாறு
உபயோகப்படுத்துவது என்பது குறித்து நாம் எந்தவிதக் கவலையுமின்றி இருப்பதன்
விளைவாக, அந்த வண்டி முழுவதுமே விவரிக்க முடியாத அளவிற்குப் பாழ்படுத்தப்படுகிறது’
என்று ரயில் பயணங்களில் பயணிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற அவலநிலை குறித்து
பனாரஸ் கூட்டத்தில் பேசும் போது அவர் வருந்தினார்.
ரயில் பயணங்களில் எதிர்கொள்ளும் இன்னல்களை எவ்வாறு
சமாளிப்பது என்பது குறித்து காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய துண்டறிக்கை,
1916-17 காலகட்டத்தில் குஜராத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அந்த துண்டறிக்கையில்
ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், காவல்துறையினர், படித்தவர்கள்,
பணக்காரப் பயணிகள், மிகவும் சாதாரண பயணிகள் என்று அனைவருக்குமான ஆலோசனைகளும், வேண்டுகோள்களும்
வழங்கப்பட்டிருந்தன. அந்த துண்டறிக்கை குறித்து கத்தியவார் டைம்ஸ் பத்திரிக்கையில்
26-7-1916 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
காந்தி
எழுதிய துண்டறிக்கை
ரயில்
பயணிகள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் குறித்து எவரொருவருக்கும் சந்தேகம் வரப் போவதில்லை.
அவற்றில் பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன. இந்தியாவெங்கும்
பரவியிருக்கின்ற ஒற்றுமை உணர்வைப் பயன்படுத்தி, நம்மால் சில குறைகளைக் களைந்து விட
முடியும். இந்தக் கட்டுரை அது பற்றிய சில ஆலோசனைகளை முன்வைக்கிறது. இந்த துண்டறிக்கை
கிடைக்கப் பெற்றவர்கள் இதைக் கவனத்துடன் படிக்குமாறும், வாசிக்க முடியாதவர்களுக்கு
வாசித்துக் காட்டுமாறும் வேண்டுகிறோம். சமூக உணர்வு கொண்ட ஒருவரின் ஆதரவோடு காகிதம்,
அச்சடித்தல் ஆகியவற்றிற்கான செலவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை அறிந்து கொள்கின்ற
வாசகரால், இந்த அறிக்கை இலவசமாகத் தரப்படுவதால் இந்தக் கட்டுரையை மிக எளிதாக எடுத்துக்
கொள்ளலாகாது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
அதிகாரிகளுக்கு நான் இதைச் சொல்லுகிறேன்:
நீங்கள்
ரயில் நிலையத்தின் அதிகாரி என்றால், உங்களால் பயணிகளின் பல இன்னல்களைக் களைய முடியும்.
உங்களுடைய நடத்தைகளால் ஏழைப் பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வதன் மூலம், உங்களுக்கு
கீழே பணிபுரிந்து வருபவர்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாகத் திகழ முடியும்.
நீங்கள்
பயணச்சீட்டு பரிசோதகர் என்றால், சற்றே சிந்திப்பதன் மூலம், முதலாம், இரண்டாம் வகுப்பு
பயணிகளிடம் நீங்கள் செலவழிக்கின்ற நேரத்தை, அவர்களிடம் செலுத்தி வருகின்ற கவனத்தை,
ஏழைகளிடமும் உங்களால் காட்ட முடியும். ரயில்வேத்துறை தனது இருப்பிற்காக இந்த ஏழைகளையே
நம்பி இருக்கிறது. அந்த ஏழைகளிடம் இருந்து பெறப்படும் பணத்திலிருந்தே, உங்களுக்கு ஊதியம்
அளிக்கப்படுகின்றது. ஏழைகளைத் திட்டுவது, மரியாதைக் குறைவாகப் பேசுவது, முடிந்தவரையிலும்
பயணச்சீட்டை வேண்டுமென்றே மிகத் தாமதமாக வழங்குவது என்று சில முன்பதிவு எழுத்தர்கள்
இருக்கின்றார்கள். பயணிகளின் நேரம் வீணடிக்கப்படாமல்,
பயணச்சீட்டைத் தாமதமில்லாமல் வழங்குவதால்,
நீங்கள் எதையும் இழந்து விடப் போவதில்லை.
நீங்கள்
காவல்துறையைச் சார்ந்தவர் என்றால், ஏழைகளிடம் வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்து
அவர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள்
அவர்களுடைய எஜமானர்கள் அல்ல, சேவகர்கள் என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய இன்னல்கள் அனைத்திற்கும் காரணமானவர்களாக நீங்கள்
இருப்பது நெறிபிறழ்ந்த முறையற்ற செயலாகும்.
கற்றறிந்த பயணிகளுக்கு நான் சொல்வது:
நீங்கள்
கல்வியறிவு கொண்டவர் என்பதை, நாட்டுப்பற்று கொண்டவர் என்பதை வெளிக்காட்டிக் கொள்வதில்
விருப்பமுள்ளவராகவே உங்களில் பலரும் இருக்கின்றீர்கள். உங்களிடமுள்ள அந்த நாட்டுப்பற்றைப்
பயன்படுத்தி, நீங்கள் சந்திக்கின்ற கல்வியறிவு அற்றவர்களுக்கும், ஏழைப் பயணிகளுக்கும்
நல்ல விஷயங்களைச் செய்வதன் மூலம், எவ்விதத் தேடுதலும் இல்லாமல் உங்களால் தேசிய சேவை
செய்வதற்கான வாய்ப்பைப் பெற முடியும். பயணிகள் தரக்குறைவாக நடத்தப்படுகின்ற போது, அவர்களுக்கு
பலவகைகளிலும் நீங்கள் உதவிகளைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, பொதுவாக மூன்றாம்
வகுப்பில் பயணம் செய்வதற்கான தேவை உங்களுக்கு இல்லாவிட்டாலும் கூட, அந்த அனுபவத்தைப்
பெறுவதால் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நன்மை செய்ய முடியும் என்பதால்,
எப்போதாவது ஒரு முறை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
உங்களுடைய
அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலே, பயணச்சீட்டு பெறுவதிலிருந்து தொடங்கி அவர்களுடன்
சேர்ந்து உங்களால் இருக்க முடிந்தால், அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கான தீர்வுகளைக்
கண்டு கொள்ளவும், உங்களுக்கு அளிக்கப்படுகின்ற வசதிகள் அனைத்தும் அவர்களுக்கும் கிடைப்பதற்கு
ஏதுவாகவும் இருக்கும்.
சிலநேரங்களில்
படித்தவர்களே மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு காரணமானவர்களாக
இருக்கின்றனர். பயணச்சீட்டைப் பெறுவதில் பொறுமையின்றி நடந்து கொள்வது, ரயிலில் அளிக்கப்படும்
சிறப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்வது, தேவையான அளவிற்கும் மேலாக இடத்தை ஆக்கிரமித்துக்
கொள்ளுவது என்று ஏழைகளைச் சிரமத்துக்குள்ளாக்கும் வகையிலேயே படித்தவர்கள் நடந்து கொள்கின்றனர்.
வேறொன்றும்
செய்ய முடியவில்லை எனில் குறைந்தபட்சம் இவ்வாறான அநீதிகளை இழைப்பதிலிருந்தாவது படித்தவர்கள்
விலகிக் கொள்ள வேண்டும். ரயில் நிலையங்கள் அல்லது ரயில்களில் ஏதாவது குறைபாடுகள் இருப்பது
தென்பட்டால், அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பது உங்களுடைய கடமையாகும்.
பயணிகளுக்கு பொதுவாக நான் சொல்வது:
படித்தவர்
அல்லது படிக்காதவர், பணக்காரர் அல்லது ஏழை என்று நீங்கள் எந்தவகையான பயணியாக இருந்தாலும்,
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டால், பயணிகளுக்கு இப்போது ஏற்பட்டு
வருகின்ற 75சதவீதப் பிரச்சனைகள் உடனடியாக காணாமல் போய் விடும்.
ஆலோசனைகள்
1. நடைமேடைக்குச்
செல்லும் போதோ அல்லது ரயிலில் ஏறும் போதோ பிறரைத் தள்ளி விட்டு முண்டியடித்துக் கொண்டு
செல்லாமல், ரயிலில் கடைசியாக ஏறுவதற்குத் தயாராக இருந்து, அவ்விதம் நடந்து கொள்வதற்கு
நீங்கள் கடைப்பிடிக்கின்ற கட்டுப்பாடு பிறருக்கு உதவி செய்வதாக இருக்கும். அதன் மூலமாக
எதையும் நீங்கள் இழக்கப் போவதில்லை.
2. ரயிலில்
ஏறி அமர்ந்ததும், குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்கான அந்தப் பெட்டியில் பயணம்
செய்வதற்கு உரிமை உள்ள பிற பயணிகளும் உங்களைப் போலவே அமர்ந்து பயணிப்பதற்கான அனைத்து
உரிமைகளையும் பெற்றவர்கள் என்பதை முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே பிறர்
பெட்டிக்குள் நுழைவதை நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களேயானால், தார்மீகச்சட்டம், ரயில்வே
கட்டுப்பாட்டுகள் ஆகியவற்றை மீறியவராவீர்கள்.
3. மூன்றாம்
வகுப்பில் பயணம் செய்பவர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவிலேயே உங்களுடைய
பயணச்சுமை இருக்குமாறு பார்த்துக் கொண்டால், மற்றவர்களும் வசதியாக உட்கார முடியும்.
அளவிற்கு மீறிய சுமையை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால், சுமையை ஏற்றிச் செல்வதற்காகப்
பயன்படும் பெட்டியில் உரிய கட்டணத்தைச் செலுத்தி, உங்களிடம் அதிகமாக இருக்கின்ற சுமையை
அதில் ஏற்றி விடவும்.
4. உங்களுடைய
பயணச்சுமை பெஞ்சிற்கு அடியில் செருகி வைக்கின்ற அல்லது மேலே ஏற்றி வைக்கிற அளவில் மட்டுமே இருக்கட்டும்.
5. மனிதநேயமுள்ளவராக,
வசதி படைத்தவராக இருந்தால், வசதியான பயணத்தை நீங்கள் மேற்கொள்வதற்கு, மேல்வகுப்பு பயணச்
சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். கஞ்சத்தனமாக மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டை வாங்குவது,
ஏழைகளின் மீது உங்களையே நீங்கள் சுமையாக ஏற்றுவதாகவே இருக்கும். மேல்வகுப்பில் பயணம்
செய்ய விரும்பாவிட்டால், உங்களையும், உங்களுடைய பயணச் சுமையையும் சக பயணிகள் மீது திணிக்கின்ற
வகையில் உங்களுடைய பயணத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.
6. நீண்டதூரப்
பயணத்தை மேற்கொள்பவர்கள் தூங்குவதற்கான உரிமை உடையவர்களாக இருப்பதால், உங்களுடைய தூக்கத்தைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்யக் கூடாது.
7. நீங்கள்
புகைபிடிப்பவராக இருந்தால், அடுத்தவருடைய அனுமதியின்றி அவர்களைத் தொந்தரவு செய்யும்
வகையிலே ரயிலில் புகைபிடிக்க வேண்டாம்.
8. அடுத்தவர்
கால் வைக்கின்ற இடங்களில் எச்சில் துப்புவதன் மூலம், அந்த இடம் அழுக்கடைந்து பாழாவதுடன்
சில வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. உங்களுடைய இத்தகைய பழக்கம் குறித்து,
சுத்தத்தைப் பேணுவதற்கான சட்டங்களை மதிக்க விரும்புகின்ற பிற பயணிகள் மிகுந்த மனவேதனை
அடையக் கூடும்.
9. ரயில்வே
கழிப்பிடங்களை நீங்கள் மிகுந்த கவனத்துடன் உபயோகித்தால் அனைவரும் மகிழ்ச்சியடைவர்.
எவ்வித அக்கறையுமின்றி அவற்றை உபயோகிப்பீர்கள் என்றால், உங்களை மதிக்கின்ற பயணிகளை
நீங்கள் காண முடியாது.
10. பயணம்
செய்யும் போது, உங்களுக்குள் அவர் பிராமணர், வைஸ்யர், சூத்திரர் இல்லையென்றால் வேறொரு
சாதியைச் சேர்ந்தவர், நீங்கள் ஹிந்து, அவர் முஸ்லீம், நீங்கள் பம்பாய் மாகாணத்தைச்
சேர்ந்தவர், மற்றவர் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்கின்ற வகையில் பேசி மனஸ்தாபத்தை
வளர்த்துக் கொள்ளாமல், அனைவரும் ஒரே கூரையின்கீழ் கூடியிருக்கும் இந்தியக் குழந்தைகள்
என்ற வகையில் அனைவரிடமும் சகோதரத்துவ உணர்வைக் கொண்டிருந்தால் அந்தக் கணம் மிகவும்
மகிழ்ச்சியாக இருப்பதோடு, இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும்.
ஏறத்தாழ
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ராஞ்சியிலிருந்து 1917ஆம் ஆண்டு
செப்டம்பர் 25 அன்று ‘இந்தியன்
ரயில்வேக்களில் மூன்றாம் வகுப்பு’ என்ற தலைப்பில் தன்னுடைய மூன்றாம் வகுப்பு ரயில்
பயண அனுபவங்களைப் பற்றிய கட்டுரையொன்றை காந்தி எழுதினார்.
இந்தியன் ரயில்வேக்களில் மூன்றாம்
வகுப்பு
தென்னாப்பிரிக்காவில்
இருந்து திரும்பி வந்த பிறகு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்.
இதில் கால்வாசி நேரத்திற்கும் மேலாக நான் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்திருக்கிறேன்.
வடக்கே லாகூர், தெற்கே ட்ராங்குபார் (தரங்கம்பாடி), மேலும் கராச்சியிலிருந்து கல்கத்தா
வரையிலும் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். நான் மேற்கொண்ட இந்தப் பயணங்களின் மூலமாக,
மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளின் நிலைமை குறித்து அறிந்து கொள்ளும் வகையில்
சில விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
இந்தக்
காலகட்டத்தில் ரயில்வே அமைப்புகள் அனைத்தையும் நான் கடந்து வந்திருக்கிறேன். நான் கவனித்த
சில குறைபாடுகளைப் பற்றி ரயில்வே நிர்வாகத்திற்கு எழுத்து மூலமாகத் தெரிவித்திருக்கிறேன்.
பல குறைபாடுகள் மிகவும் எளிதில் தீர்த்து வைக்க கூடியவை என்றாலும், அவை நீண்ட காலமாக
தீர்த்து வைக்கப்படாமலே இருந்து வருகின்றன. அந்தக் குறைபாடுகளைக் களைவதற்காக பத்திரிக்கையாளர்களைச்
சந்திப்பதற்கும், பொதுமக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்துவதற்குமான காலம் இப்போது
வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.
12ஆம்
தேதி பம்பாயிலிருந்து மெட்ராஸ் செல்வதற்காக மெயில் ட்ரெயினில் பயணிப்பதற்காக 13 ரூபாய் 9 அணா செலுத்தி பதிவு செய்தேன். 22 பயணிகள்
ஏறிக் கொள்வதற்கான பெட்டி என்று அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது. உட்கார்ந்து செல்வதற்கான
வசதி மட்டுமே இருந்த அந்தப் பெட்டியில் பயணிகள் பாதுகாப்பாக, ஓய்வெடுத்துக் கொள்வதற்கான
வசதி செய்திருக்கப்படவில்லை. மெட்ராஸைச் சென்றடைவதற்கு முன்பாக இரண்டு இரவுகள் அதில்
பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பெட்டியில் ஏறியவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய
திறன் உள்ளவர்களாக, தைரியசாலிகளாக என்னுடன் பயணித்தவர்கள் இருந்ததால், பூனா வரையிலும்
அந்தப் பெட்டியில் 22 பேருக்கு மேல் இருக்கவில்லை. இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர
மற்ற அனைவரும் அந்தப் பயணத்தின் போது உட்கார்ந்தபடியே தூங்கினர். ரெய்ச்சூரை அடைந்த
போது, அங்கே கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், பெட்டியில் இருந்த போராளிகளால் அங்கே
ஏறியவர்களைத் தடுத்து நிறுத்த இயலாமல் போனது. ரயில்வே ஊழியர்களும், பாதுகாவலர்களும்
பெட்டிக்குள் மேலும் அதிகமான பயணிகளைத் திணித்தனர்.
அந்த
ரயிலில் ஐந்தாவது நாளாகப் பயணம் செய்வதாகக் கூறிய மேமன் வணிகர் ஒருவர், சார்டைன் மீன்களைப்
பெட்டிக்குள் திணிப்பதைப் போன்று பயணிகளை இவ்வாறு திணிக்கின்ற செயலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தார். அவரை அவமரியாதை செய்யும் வகையிலே, ரயில்வே பாதுகாவலர் ஒருவர் அவரிடம்
இறங்குமிடத்தில் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துக் கொள்ளுமாறு கூறினார்.
அன்றைய
இரவில் ஏறத்தாழ 35 பயணிகளுக்கு மேல் இருந்த அந்தப் பெட்டியில் சிலர் நின்று கொண்டும்,
மேலும் சிலர் தரையில் இருந்த அழுக்கைப் பொருட்படுத்தாது கீழே படுத்து உறங்கிக் கொண்டும்
பயணம் செய்தனர். மேலும் கூடுதலான சிரமத்தை யாருக்கும் ஏற்படுத்தாத வகையில், அங்கே ஏற்பட்ட
பெரிய தகராறு பெட்டியில் பயணம் செய்த சில முதியவர்களின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
பயணவழியில்
மோசமான சர்க்கரை கலக்கப்பட்ட டீத் தண்ணீர், பால் என்றழைக்கப்பட்ட சகதியாகத் தோற்றமளித்த
வெண்மையான திரவம் ஆகியவையே பயணிகளுக்கு கிடைத்தன. அவற்றின் தோற்றம் எவ்வாறிருந்தது
என்பது எனக்குத் தெரியும் என்றாலும், அவற்றின் சுவை குறித்து என்னுடன் பயணித்த பயணிகள்
சொன்னவற்றையே என்னால் குறிப்பிட முடியும். அந்தப் பயணம் முழுக்க அந்தப் பெட்டி ஒரு
முறை கூட சுத்தம் செய்யப்படவில்லை. விளைவாக ஒவ்வொரு முறை அந்தத் தரையில் நடந்து செல்லும்
போதும் அல்லது தரையில் உட்கார்ந்திருந்த பயணிகளின் மீது இடித்துக் கொண்டு செல்லும்
போதும், அழுக்கு கடலிற்குள் நீந்திச் செல்வதான உணர்வே மேலோங்கியிருந்தது.
தொட்டிகளில்
தண்ணீர் நிரப்பப்படாததால், தண்ணீர் வசதியின்றி கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாமலே இருந்தது.
பயணிகளிடம் விற்கப்பட்ட சிற்றுணவுகள் மிகவும் மோசமாக இருந்ததோடு, அந்த உணவு வகைகளைப்
பரிமாறிய கைகள், வைத்துக் கொடுக்கப்பட்ட கலங்கள், உபயோகப்படுத்தப்பட்ட தராசு என அனைத்தும்
அழுக்கடைந்து சுகாதாரமற்ற நிலையிலே இருந்தன. நம்மிடம் தருவதற்கு முன்பாகவே, அந்த உணவு
ஏராளமான ஈக்களால் சுவைக்கப்பட்டிருந்தது. அந்த அருஞ்சுவை உணவை ருசித்த சிலரிடம் தங்களது
கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டபோது, தங்களது அதிருப்தியையே பலரும் என்னிடம்
தெரிவித்தனர். வேறுவழியில்லாமல் கிடைப்பதைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கின்றது என்று
அவர்கள் தெரிவித்தனர்.
ரயில்நிலையத்தைச்
சென்றடைந்த போது, அங்கிருந்த வண்டிக்காரர் தான் கேட்ட பணத்திற்கு குறைவாக பெற்றுக்
கொண்டு என்னை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக இருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும்
பணத்தையே தர முடியும் என்று நான் அவரை எச்சரிக்க வேண்டியிருந்தது. வேண்டுமானால் என்னை
வண்டியிலிருந்து வெளியே தள்ளி விட்டுவிடுங்கள் அல்லது காவல்துறையினரை அழையுங்கள் என்று
நான் அவரிடம் கூறி என்னுடைய சாத்வீகமான எதிர்ப்பைத் தெரிவித்த பிறகுதான், நான் அழைத்துச்
செல்லப்பட்டேன்.
அங்கிருந்து
திரும்பும் போது மேற்கொள்ளப்பட்ட பயணமும் அதற்குச் சற்றும் சளைத்ததாக இருக்கவில்லை.
எனது நண்பர் ஒருவரின் துணையில்லா விட்டால், ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்த அந்தப்
பெட்டியில் பயணிப்பதற்கான அனுமதியை என்னால் பெற்றிருக்கவே முடியாது. பயணம் செய்ய எனக்கு
அனுமதி வழங்கப்பட்டிருந்த பெட்டியில், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேலும் ஆட்கள் கூடுதலாக
இருந்தனர். ஒன்பது பேர் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த அந்த பெட்டியில் எப்போதுமே
12 பேர் இருந்து வந்தனர். தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்த ஒருவரைத் தாக்கப் போவதாக
அச்சுறுத்திய ரயில்வே ஊழியர் ஒருவர், பயணிகளைத் தள்ளி விட்டு பெட்டிக்குள் பலவந்தமாக
நுழைந்து கதவை அடைத்தார்.
அந்தப்
பெட்டியில் கழிப்பிடம் என்று சொல்லப்பட்ட ஒன்று இருந்தது. ஐரோப்பிய முறையில் உபயோகிப்பதற்காக
வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அது அந்த முறையில் பயன்படுத்துவதற்குத் தக்கதாக
இருக்கவில்லை. தண்ணீர் வராத குழாயுடன், உயிருக்கே ஆபத்தை வரவழைக்கும் வகையில் மிகவும்
அசுத்தமாக அந்தக் கழிவறை இருந்தது.
நீண்ட
காலமாக தண்ணீரோ, சோப்போ காணாத மரப்பலகைகள் அழுக்கேறி, அந்தப் பெட்டி பார்ப்பதற்கே மிகவும்
மோசமாக இருந்தது. அந்தப் பெட்டிக்குள் மூன்று பஞ்சாபி முகமதியர்கள், இரண்டு தமிழர்கள்,
பின்னர் எங்களோடு சேர்ந்து கொண்ட இரண்டு முகமதிய வணிகர்கள் என்று பலதரப்பட்டவர்கள்
இருந்தனர். அந்த வணிகர்கள் பயணம் செய்வதற்கான வசதியைப் பெறுவதற்காக, தாங்கள் லஞ்சம்
கொடுக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்தனர். மூன்று இரவுகளாகத் தொடர்ந்த பயணத்தின்
விளைவாக, அந்த பஞ்சாபிகளில் ஒருவர் மிகவும் தளர்ந்து களைப்புடன் காணப்பட்டார். சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் அன்று முழுவதும் காத்துக் கிடந்த போது, பயணச்சீட்டைப் பெறுவதற்காக
பயணிகள் லஞ்சம் கொடுப்பதை தான் நேரில் கண்டதாக அவர் கூறினார். ஐந்து ரூபாய் லஞ்சம்
கொடுத்தே தனது பயணச்சீட்டையும், இருக்கையையும் பெற்றதாக அங்கிருந்த மற்றொருவர் கூறினார்.
லூதியானா செல்லவிருக்கும் அந்த மூவரின் முன்பாக இன்னும் சில இரவுப் பயணங்கள் காத்து
நின்றன.
நான்
இங்கு விவரித்திருப்பது அனைத்தும் விதிவிலக்கு இல்லாமல், பொதுவாகவே இருக்கின்றன. ரெய்ச்சூர்,
தோண்ட், சோனேபூர், சக்ரதார்பூர், புருலியா, அசன்சால் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள ரயில்
நிலையங்களில் இறங்கி, அங்கு ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள தர்மசாலாக்களுக்கு நான்
சென்றேன். அவையனைத்தும் எந்தவொரு ஒழுங்கும், சுத்தமுமில்லாமல் பேரிரைச்சலுடன் மக்களை
ஏமாற்றுகின்ற இடங்களாகவே இருந்தன. அந்த தர்மசாலாக்களில் பயணிகள் அமருவதற்கான வசதிகள் மிகக் குறைவாக அல்லது
முற்றிலும் இல்லாமலே இருந்தன. அழுக்கான தரையில் குந்த வைத்து அமர்ந்த பயணிகள் அங்கே
கிடைத்த மிகவும் மோசமான உணவைச் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்ட பிறகு மீந்தவற்றை தங்களுக்குப்
பிடித்த இடங்களில் தூக்கியெறியவும், கண்ட இடங்களில் எச்சிலைத் துப்பவும், விரும்பிய
இடத்தில் உட்காரவும், புகை பிடிக்கவும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். சட்டத்திற்குட்படாத,
வரம்பு மீறாத வார்த்தைகளின்றி என்னால் விவரிக்க இயலாத வகையிலேயே அங்கே இருந்த கழிப்பிடங்கள்
இருந்தன. கிருமி நீக்கும் தூள், திரவம், சாம்பல் என்பவற்றை அறியாதவையாகவே அவை இருந்தன.
அது குறித்து எதுவும் பேச முடியாதவர்களாக, எந்த உதவியுமற்றவர்களாகவே மூன்றாம் வகுப்பு
ரயில் பயணிகள் இருந்தனர். கழிப்பிடங்களை உபயோகப்படுத்த நினைத்தால், உங்களை அங்கிருந்து
வெளியேறுகின்ற ஈக்கள் பட்டாளம் எச்சரிக்கை செய்யும். அந்த அவலங்களை எல்லாம் எதிர்கொள்வதற்கு
அஞ்சி, பட்டினியுடன் பயணம் செய்யும் பயணிகளையும் நான் சந்தித்தேன். சோனேபூரில் பொதுமக்களையும்,
அதிகாரிகளையும், ஈக்களுக்குப் பதிலாக குளவிகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. பேரரசின்
தலைநகரம் ஒன்றில் இருக்கும் மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டை பெறுகின்ற இடம், இடித்து
தரைமட்டமாக்கப்பட வேண்டிய நிலையில் இருண்ட பொந்தைப் போன்று அமைந்துள்ளது.
இந்த
மாதிரியான நிலையில், இந்தியாவில் பிளேக் வியாதி பரவுவது குறித்து ஆச்சரியப்பட எதுவுமில்லை.
கண்ட இடத்தில் பயணிகள் குப்பைகளை விட்டுச் செல்வது அல்லது குப்பைகளை தங்களுடனே எடுத்துச்
செல்வது என்றிருக்கின்ற நிலையில் அதைத் தவிர வேறொன்றும் நடப்பதற்குச் சாத்தியப்படாது.
புகை பிடிக்காதவர்களின் எதிர்ப்பையும் மீறி, பெண்கள் இருப்பது குறித்து எந்தக் கவலையுமில்லாமல்
எல்லாப் பெட்டிகளிலும் பயணிகள் புகை பிடிப்பதற்கு இந்திய ரயில்களில் மட்டுமே அனுமதி
அளிக்கப்பட்டிருக்கிறது. புகை பிடிப்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத பெட்டியில் சக
பயணிகளின் அனுமதியின்றி புகை பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறியதாகவே அந்தச் செயல்
இருக்கின்றது.
போரைக்
காரணம் காட்டி இந்தக் கொடூரமான தீமையைக் களைவதிலிருந்து விலகி விடக் கூடாது. குப்பைகளைச்
சகித்துக் கொள்வதற்கும், அதிகப்படியான கூட்டத்திற்கும் போரை நாம் காரணமாக முன்னிறுத்தக்
கூடாது. ஆரோக்கியத்தையும், நன்னடத்தையையும் சீர்குலைக்கின்ற சுகாதாரக் கேடு தொடர்வதை
விட, இவ்வாறான போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுவதே மேலானது என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.
மூன்றாம்
வகுப்பில் பயணம் செய்பவர்களோடு முதலாம் வகுப்பில் பயணம் செய்பவர்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
மெட்ராஸில், முதலாம் வகுப்பு கட்டணம் மூன்றாம் வகுப்பு கட்டணத்தை விட ஐந்து மடங்கிற்கும்
மேல் அதிகமாக இருக்கிறது. முதலாம் வகுப்பில் பயணம் செய்பவர் பெறும் வசதிகளில் ஐந்தில்
ஒரு பங்கு என்ற அளவு என்றுகூட இல்லாமல், பத்தில் ஒரு பங்கு வசதியையாவது பெறுகின்றவராக
மூன்றாம் வகுப்பு பயணி ஒருவர் இருக்கிறாரா? செலுத்துகின்ற கட்டணத்திற்கும், அளிக்கப்படும்
வசதிக்கும் இடையே முறையான விகிதம் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகவே இருக்கும்.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து வசதிகளுக்கும்
தேவையான நிதி, மூன்றாம் வகுப்பு பயணங்களின் மூலமாகவே ஈட்டப்படுகிறது என்பதால், அடிப்படை
வசதிகளாவது அவசியம் மூன்றாம் வகுப்பு பயணிகளுக்குச் செய்து தரப்பட வேண்டும்.
மூன்றாம்
வகுப்பு பயணிகளை நிராகரிப்பதின் மூலமாக, ஒழுங்கு, சுத்தம், கண்ணியமான வாழ்க்கை, ஆரோக்கியமான
எளிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பது குறித்த கல்வியை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கற்றுத்
தருவதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இந்தப் பயண அனுபவங்களின் மூலமாகப் பாடங்களைப்
பெற்றுக் கொள்ளாமல், கண்ணியம், சுகாதாரம் குறித்த தங்களுடைய உணர்வுகளை மூன்றாம் வகுப்பு
பயணிகளால் மழுங்கடித்துக் கொள்ளவே முடிகிறது.
இங்கே
விளக்கப்பட்டுள்ள பல தீமைகளுக்கும் தீர்வாக முன்வைக்கப்படுகின்ற பல ஆலோசனைகளுடன் இதையும்
சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். உயர்ந்த பதவிகளில் உள்ள வைஸ்ராய்,
தளபதிகள், ராஜாக்கள், மகராஜாக்கள், பேரரசின் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு உயர்வகுப்புகளில் பயணம் செய்கின்ற அனைவரும் எந்தவித
முன்னெச்செரிக்கையும் தராமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து இதுபோன்ற அனுபவங்களைப்
பெற முன்வர வேண்டும். அதற்குப் பிறகாவது மிகச்சாதாரண வசதிகளுடன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு
போய்ச் சேர்வதற்கான எதிர்பார்ப்புடன் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்களின் நிலைமையில்
குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் தாங்கள் செலுத்துகின்ற
கட்டணத்திற்குரிய வசதிகளைப் பெறுவதை நம்மால் காண முடியும்.
Comments