பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்று நம்ப முடியும்
சரத் பிரதான்
தி வயர் இணைய இதழ்
லக்னோவைச் சார்ந்த பத்திரிக்கையாளரான சரத் பிரதான்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரடிச் சாட்சியாக இருந்தவர்

அயோத்தியில் 1980களின் முற்பகுதியில் இருந்தே நடந்து வந்த நிகழ்வுகளைக் கண்காணித்து வந்தது மட்டுமல்லாமல், 1992 டிசம்பர் 6 - அந்த இருண்ட ஞாயிற்றுக்கிழமையன்று அயோத்தியில் நடந்த மோசமான நிகழ்வுகளின் மத்தியில் இருந்தவன் என்ற முறையில் மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்னைப் பொறுத்தவரை இயலாததாகவே இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்கு கிரிமினல் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முப்பத்தியிரண்டு பேருக்கும் குற்றமற்றவர்கள் என்ற சான்றிதழை அந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மசூதி இடிக்கப்பட்டதில் எந்தவொரு சதித்திட்டமும் இல்லை, அந்தப் பண்டைய கோவில் நகரத்திற்குள் கரசேவகர்கள் என்ற பெயரில் பதுங்கியிருந்ததாக நம்பப்படுகின்ற சமூக விரோதிகளைக் கொண்ட ஆவேசமான, கோபமான கும்பலாலேயே மசூதி இடிக்கப்பட்டது என்று கூறப்படுவதை வேண்டுமென்றே பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும். துரதிர்ஷ்டமான அந்த நாளில், அந்த இடத்தில் இருந்த உயர்மட்ட பாரதிய ஜனதா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் யாரையும் தூண்டிவிடாமல் மசூதியைக் காப்பாற்றவே உண்மையில் முயன்றனர் என்ற நீதிமன்றத்தின் கருத்தை வேண்டுமென்றே காது கேளாதவராக நடிப்பவராலேயே ஏற்றுக்கொள்ள முடியும்.
அன்றைய நிகழ்வுகளை மிக நெருக்கமான இடங்களிலிருந்து பார்த்த என்னைப் போன்றவர்களுக்கு - சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் முக்கிய சாட்சிகளில் ஒருவராக இருந்தவர்களுக்கு குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களின் தரப்பில் வைக்கப்படுகின்ற இதுபோன்ற திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொய்களை நிச்சயமாக சகித்துக் கொள்ள இயலாது. இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது ரேபரேலி, லக்னோ ஆகிய இரு இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தனி நீதிமன்றங்களின் முன்பாக நான் அளித்த வாக்குமூலம், பதினான்கு நாட்களுக்கு நடந்த குறுக்கு விசாரணைகள் போன்றவை பயனற்ற நடைமுறையாகவே இருந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது. இதுபோன்றே என்னைப் போன்ற பல சாட்சிகளும் உணர்கின்றனர்.

முதல் நாள் வழங்கப்பட்ட
மசூதி இடிப்பு பயிற்சி
பாபர் மசூதி சதுக்கத்திற்குள் என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணும் வகையில் பாஜக மற்றும் விஎச்பி தலைவர்கள் அமர்ந்திருந்த
இடத்திலிருந்து ஒலிபெருக்கி அமைப்பின் மூலம் செய்யப்பட்ட அறிவிப்புகள் இன்னும் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த இடத்திலிருந்து உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு
வார்த்தைகளும் அங்கே நடக்கவிருந்த இடிப்பு வேலையின் மீது பெருத்த தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன
என்பது முற்றிலும் தெளிவாகவே இருந்தது.
மசூதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அமைப்பிலிருந்து ‘அந்த அமைப்பு இடிந்து கீழே விழப் போகிறது; குவிமாடங்களுக்கு மேலே உள்ளவர்கள் கீழே வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்ற அறிவிப்பு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. அங்கே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் அவர்களைப் போன்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
மசூதிக்கு எதிரான ஆவேசத்தைத் தூண்டும் வகையில் ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்புவதற்காக அங்கிருந்த ஒலிபெருக்கி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. குவிமாடங்களிலிருந்து கீழே இறங்குமாறு மக்களை வேண்டுகின்ற அந்தக் குறிப்பிட்ட அறிவிப்பு மட்டும் வெவ்வேறு இந்திய மொழிகளில் சொல்லப்பட்டது. ஒருவேளை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கரசேவகர்களின் நன்மை கருதி அவ்வாறு சொல்லப்பட்டு இருந்திருக்கலாம். இடிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களிடமிருந்து மட்டுமே அவ்வாறான அறிவிப்பு வர முடியும் என்பது வெளிப்படையானது. அந்த அறிவிப்பை மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியாகக் காண்பதற்கான சாத்தியமே இருக்கவில்லை என்ற போதிலும், சிறப்பு நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பு அவ்வாறு சாத்தியமற்ற ஒன்றையே நிறைவேற்றித் தந்திருப்பதாகத் தெரிகிறது.

திட்டமிடப்பட்ட முறையில் தங்கள் பணியை மேற்கொண்ட பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே அந்தக் கட்டிடம் வீழ்த்தப்பட்டது என்பது அங்கே நேரடியாக இருந்து நடக்கின்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு சாட்சியாக இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். அங்கிருந்த ஒரு குழுவினர் கூர்மையான இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தி மசூதியைத் தாங்கிக் கொண்டிருந்த பிரதான சுவர்களின் இருபுறமும் தரைத்தளம் வரைக்கும் தோண்டி, இரண்டரை அடி தடிமனான சுவர்களை கிட்டத்தட்ட ஓரடிக்குக் குறைவாக குறுக்கிவிடுவதில் வெற்றி பெறும் வகையில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதை நான் நேரடியாகக் கண்டிருந்தேன். அதையே நீதிமன்றத்தில் நான் வாக்குமூலமாகவும் அளித்திருந்தேன். அவ்வாறு செய்த பிறகு அந்தச் சுவரில் இரண்டு துளைகளைத் தோண்டி, அவற்றின் வழியாக தடிமனான கயிறுகளை அவர்கள் நுழைத்தனர். கயிற்றின் இரு முனைகளையும் பிடித்து இழுக்குமாறு ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏற்கனவே குறுகலாக்கப்பட்டு பலவீனமாக இருந்த அந்தச் சுவர்கள் தகர்ந்து, மேலிருந்த குவிமாடத்தை தடாரென்று கீழே சாய்த்தன.
நீதிமன்றம் நாட்டின் முதன்மை விசாரணை நிறுவனமான சிபிஐ சேகரித்த அனைத்து ஆதாரங்களும் போதுமானதாக இல்லை அல்லது பலவீனமாக இருப்பதாக கருதியுள்ளது. அதுவே இந்த நீதிமன்றம் யாரையும் குற்றவாளியாக்காததற்குப் போதுமான காரணமாகவும் இருந்திருக்கிறது. அவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த வீடியோ, ஆடியோ துணுக்குகள் திருத்தப்பட்டவையாக அல்லது இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தன என்று கூறி, அவையனைத்தையும் மிக மோசமான ஆதாரம் என்று கருதியதால் பா.ஜ.க தலைவர்கள், வி.எச்.பி மற்றும் பிற ஹிந்துத்துவ அமைப்புகளில் இருந்த அவர்களுடைய தொண்டர்கள் அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மகிழ்ச்சியுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இந்த இருபத்தியெட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பதினேழு பேர் இறந்து விட்டனர். மிகநீண்ட கால விசாரணையின் முடிவில் குற்றமற்றவர்கள் என்ற சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முப்பத்தியிரண்டு பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி இடத் தகராறு வழக்கில், ராமர் கோவிலுக்கு ஆதரவாக 2019 நவம்பரில் இறுதித் தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் குறிப்பிடப்பட்டிருந்த குறிப்புகளைக்கூட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கவனத்தில் கொள்ளவில்லை என்பது மிகவும் விசித்திரமானது. உச்சநீதிமன்றம் ஒருவித சதித்திட்டம் இருந்ததைத் தெளிவாகக் குறிக்கின்ற வகையில் - மசூதியை இடித்தது திட்டமிடப்பட்ட செயல் என்றே கூறியிருந்தது.

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ‘பொது வழிபாட்டுத்தலத்தை அழிக்கின்ற திட்டமிடப்பட்ட செயலாலேயே மசூதியின் கட்டமைப்பு முழுமையாக வீழ்த்தப்பட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் அந்த அமர்வு ‘ 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மசூதியை முஸ்லீம்கள் தவறுதலாக இழந்திருக்கின்றனர்’ என்றும் கூறியிருந்தது.

இதேபோன்றதொரு உணர்வே அப்போதைய பி.வி.நரசிம்மராவ் அரசால்
அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த இடிப்பு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்று தனது கண்டுபிடிப்புகளைச் சொல்வதற்கு பதினேழு நீண்ட ஆண்டுகளை நீதிபதி எம்.எஸ்.லிபரான் எடுத்துக் கொண்டார்.
ஆனால் இவை எதுவுமே நீதிபதி யாதவ் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த வழக்கில் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக - 2019 செப்டம்பரில் ஓய்வு பெற்ற யாதவ் இரண்டு பணிநீட்டிப்புகளைப் பெற்று மேலதிகமாகப் பணியாற்றி இருப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். 2019 நவம்பரில் வழங்கப்பட்ட கோவில் தீர்ப்பிற்குப் பின்னர் இந்திய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றார் என்பது இங்கே தற்செயலான நிகழ்வாகவே இருக்க வேண்டும்.

இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், வேறு எந்தக் குற்றத்தையும் போலல்லாமல், மசூதி இடிப்பு எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை என்று கூறப்படுவதையே நம்ப வேண்டும்.
ஆனாலும் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பது உண்மைதான்!!!
https://thewire.in/communalism/babri-masjid-demolition-conspiracy-eyewitness
2020 அக்டோபர் முதல் நாளன்று வெளியான கட்டுரை
Comments