பெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும்?

 மீனா கந்தசாமி

தி வயர் இணைய இதழ்


ஹிந்துத்துவக் குழுக்கள் மிகவும் மதிக்கின்ற மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்ததை வசதியாக மறந்து விட்டு, மகளிருக்கு விரோதமான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது பாரதிய ஜனதா கட்சி குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.



பெண்களை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற நூலான மனுஸ்மிருதியைத் தடை செய்ய வேண்டுமென்று கோரி சனிக்கிழமையன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.



வெகுஜன மக்களுடைய எதிர்ப்பை இப்போது திரட்டுவதன் மூலம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனுஸ்மிருதி மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த மகாத்மா பூலே, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சாதிய-எதிர்ப்பு, பெண்ணிய புரட்சியாளர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார்.

ஹிந்துத்துவா, சாதிய கருத்தியலைக் கொண்ட சனாதன சித்தாந்தத்திற்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயல்பாடு முப்பதாண்டு கால வரலாற்றைக் கொண்டது. ஹிந்துப் பெண்களுக்கு எதிராகத் திருமாவளவன் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக பாஜகவினரின் வெட்கக்கேடான பிரச்சாரத்திற்கிடையில், #BanManu என்ற போராட்டத்தை நடத்துவதற்கான முடிவு வந்திருக்கின்றது.



2020 செப்டம்பர் 27 அன்று, ஐரோப்பிய ஒன்றிய பெரியார், அம்பேத்கர் தோழர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இணையவழி வெபினாரில் பெரியார், பெண்ணியம் குறித்து திருமாவளவன் பேசினார். அந்த உரையின் ஒவ்வொரு வார்த்தையையும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவள் என்ற முறையில், யாரையும் அவர் புண்படுத்திப் பேசவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். திருமாவளவன் அந்த உரையில் பெரியாரையும், வேதங்களை, குறிப்பாக மனுஸ்மிருதியை பெரியார் தாக்கியதற்கான காரணங்களையும் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். 

அவர் கூறியதை அப்படியே கூறுவதானால், ‘ஹிந்து தர்மத்தின்படி, கடவுளால் எல்லா பெண்களும் விபச்சாரிகளாக உருவாக்கப்படுகிறார்கள். ஹிந்து தர்மம்… மனுதர்மத்தின் படி அவர்கள் விபச்சாரிகள்… ஓர் ஆணின் நிலையை விட குறைந்த நிலையிலேயே எல்லா பெண்களின் நிலையும் உள்ளது’.   

அவரது உரையில் இருந்த மோசமான பகுதிகள் உண்மையில் மனுவால் எழுதப்பட்டவை. ஆனால் அதை அவர் சொன்னதாக வலதுசாரிகள் எடுத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிவைப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டது. பாஜக பொறுப்பாளர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது காவல்துறை சைபர் கிரைம் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றது. 



சாதியமைப்பு மற்றும் இந்திய சமுதாயத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவது போன்றவற்றிற்கு அடிப்படையாக விளங்குகின்ற மனுஸ்மிருதியைத் தாக்குவதற்காக சாதி எதிர்ப்புத் தலைவர்கள் மேற்கொள்ளும் நிகழ்வாகவே இது இருக்கின்றது. பெண்கள் அதிகாரம் பெற்று, சுதந்திரமாக இல்லாவிடில் சாதியை ஒழிக்க முடியாது என்பதும், பிராமண ஆணாதிக்கத்தின் பிடியில் பெண்களால் அதிகாரம் உள்ளவர்களாக, சுதந்திரமாக இருக்க முடியாது என்பதும் மிகத் தெளிவான உண்மை. எனவேதான் ஜோதிராவ் பூலே மனுஸ்மிருதி மற்றும் குலம்கிரியில் உள்ள பிற புராணக் கதைகளை விமர்சித்தார். 1927 டிசம்பரில் நடைபெற்ற மஹத் சத்தியாக்கிரகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் முன்னிலையில் மனுஸ்மிருதியை, அப்போது தன்னுடைய 36 வயதில் இருந்த டாக்டர் அம்பேத்கர் எரித்தார். மனுஸ்மிருதியை எரிப்பேன் என்று 1922ஆம் ஆண்டு பெரியார் இடிமுழக்கம் செய்தார். அது பின்னர் சுயமரியாதை இயக்கம், அதைத் தொடர்ந்து வந்த திராவிடர் கழகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட அடையாள ஆர்ப்பாட்டமாக மாறியது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, தீவிரமான போராட்ட வடிவமாக மனுஸ்மிருதிக்கு தீ வைத்த டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இப்போது திருமாவளவன் அந்த நூலின் மீதான தடையைக் கோரியிருக்கின்றார்.  



2004இல் மும்பையில் நடைபெற்ற உலக சமூக மாமன்றத்தில் உரையாற்றிய திருமாவளவன், ‘ஹிந்து மதத்தில் பெண்களின் நிலைப்பாடு மிகவும் இழிவானது. அதனால்தான் சாதியை ஒழிப்பது ஆண்களை விட பெண்களுக்கான பிரச்சனையாகவே இருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அடுத்து, எந்தவொரு மதத்தின் அடிப்படைவாதமும் மற்ற மதங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கும் என்றாலும், ஹிந்துத்துவத்தின் மத அடிப்படைவாதம் மற்ற மதங்களுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், சாதி அமைப்பு, பிராமண ஆணாதிக்கத்தையும் வலியுறுத்துவதாக இருக்கின்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஹிந்துத்துவாவின் வாழ்வும், ஆன்மாவுமாக சமத்துவமின்மையே இருக்கிறது’ என்றார்.  

சனாதன சித்தாந்தத்திற்கு எதிராகச் சவால் விடுத்து அதனை வேரறுப்பதற்காக சாதியை அழித்தொழிக்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சித்தாந்தத்தில் ஒருபடி மேலாக, பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மனுவை நிராகரிப்பதற்கான திருமாவளவனின் இந்த வேண்டுகோள் அமைந்திருக்கின்றது.

மனுஸ்மிருதியால் முன்வைக்கப்படுகின்ற விஷம் தோய்ந்த சமத்துவமின்மை குறித்து நன்கு அறிந்திருக்காதவர்கள், அந்த நூலில் உள்ள சாதி குறித்த மேற்கோள்களின் தொகுப்பை இங்கே (https://velivada.com/2017/05/31/casteist-quotes-verses-manusmriti-law-book-hindus/) காணலாம். ‘சூத்திரர் ஒருவர் கல்வி பெறத் தகுதியற்றவர். உயர்வர்ணத்தவர்கள் சூத்திரருக்கு கல்வியை வழங்கவோ அல்லது அறிவுரை வழங்கவோ கூடாது. சட்டங்களையும், ஒழுங்குமுறை விதிகளையும் சூத்திரர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால், அவர்களுக்கு அதைக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை’ (மனு IV-78 to 81) என்ற மிக மோசமான ஆணையும் அதில் அடங்கும். சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், மனுஸ்மிருதியின் ஒன்பதாம் அத்தியாயம், 18ஆவது வசனம் ‘பெண்களைப் பொறுத்தவரை, வேதங்களின் உரையுடன் எந்த தொடர்பும் அவர்களுக்கு இருக்கவில்லை’ என்று அறிவிக்கிறது. பெண்களைப் பற்றி மனுஸ்மிருதியில் பின்வருமாறு இருக்கின்ற சில மிகவும் மோசமான தகவல்களை இங்கே (http://nirmukta.com/2011/08/27/the-status-of-women-as-depicted-by-manu-in-the-manusmriti/) மேலும் படிக்கலாம்:

1. ‘ஸ்வபவ் எவ் நாரினம்…’ - 2/213. இந்த உலகில் ஆண்களைக் கவர்ந்திழுப்பதே பெண்களின் இயல்பு; அந்தக் காரணத்தினால், பெண்களுடன் இருக்கின்ற புத்திசாலிகள் ஒருபோதும் பாதுகாப்பாக இருப்பதில்லை.

2. ‘அவிவம் சம்லம்…’ - 2/214. பெண்கள், தங்களுடைய தன்மையினால், இந்த உலகில் ஆண்களை - முட்டாள்களை மட்டுமல்லாமல், கற்றறிந்த, புத்திசாலி ஆண்களையும் கூட - வழிதவறி அலைபவர்களாக வழிநடத்தும் திறன் கொண்டவர்கள். இந்த ஆண்கள் ஆசையின் அடிமைகளாக மாறுகிறார்கள்.

3. ‘மெத்ரா ஸ்வஸ்த்ரா…’ - 2/215. அறிவுள்ளவர்கள் தங்களுடைய தாய், மகள் அல்லது சகோதரியுடன் தனியாக உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். சரீர ஆசை எப்போதுமே வலுவாக இருப்பதால், அது அவர்களுக்கு சோதனையை ஏற்படுத்துவதாக இருக்கும்.



சங் பரிவாரின் ஆதரவாளர்களும், சாதி அமைப்பின் தீமை குறித்து அறிந்திராதவர்களும், அறியாமையில் உள்ளவர்களும் ‘நான் மனு நூலை ஒருபோதும் பார்த்ததில்லை. ஹிந்து குடும்பங்களிலும் நான் அதைப் பார்த்ததில்லை. அப்படியிருக்கும்போது, அது இன்றைக்கு எந்த பொருத்தத்தைக்  கொண்டுள்ளது?’ என்று அடிக்கடி கேட்கிறார்கள். இந்த இடத்தில், ‘பழக்கவழக்கம் என்பது சட்டத்தை விட மிகுந்த ஆற்றல் மிக்கது; அது காவலர்கள் இல்லாத வன்முறையாக, குறுக்கீடுகள் அற்ற ஆதிக்கமாக இருக்கின்றது. பழக்கவழக்கங்கள் அரசால் அமல்படுத்தப்படுகின்ற சட்டத்தை விட, மக்களால் மிகத் திறமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட மக்களிடம் இருக்கின்ற வலிந்து திணிக்கின்ற ஆற்றல், அரசிடம் இருக்கின்ற ஆற்றலை விட மிக அதிகம்’ என்று கூறிய டாக்டர் அம்பேத்கரை அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதிக்கு சவால் விடுத்திருக்கிறது, ஏனெனில் அந்த நூல் எழுதப்படாத அரசியலமைப்பாக சாதி-வெறியர்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கின்றது. தலித்துகள், பெண்கள் எதிர்கொள்கின்ற  வன்முறைகளுக்கு அடித்தளமாக, வன்முறையால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக தலித் பெண்களை ஆக்கியிருக்கின்ற எழுதப்படாத, படிக்கப்படாத, ஆனாலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப்பட்ட நூலாக அது இருக்கின்றது. அந்த நூல் சாதி ஒழுங்கை மீறுவதாக இருக்கின்ற ஒவ்வொரு அத்துமீறலுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளைத் தருவதாக இருக்கின்றது. சாதியை மீறி திருமணம் செய்ததற்காக பெண்களும், ஆண்களும் கொல்லப்படும்போது, உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான, தேர்தலில் போட்டியிடுவதற்கான தைரியம் அவர்களிடம் வருகின்ற போது, நடைமுறையில் தன்னைப் பிரதிபலித்துக் கொள்வதாக அந்த நூல் இருக்கிறது. பெண்கள் தனித்து சுதந்திரமாக இருக்க முடியாது என்று யோகி ஆதித்யநாத் கூறும் போது அவரது மனதில் இருப்பது இந்த மனுஸ்மிருதி தான். ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவரின் இயல்பு குறித்து மிகமோசமாக கருத்தை வெளியிட்டு விட்டு, அவ்வாறான வழிதவறிய பெண் வயலில் இறந்து கிடப்பதாக பாஜக தலைவரான ரஞ்சீத் பகதூர் ஸ்ரீவஸ்தவா கூறியபோது அவரது மனதில் மனுஸ்மிருதிதான் நிறைந்திருந்தது. இத்தகைய அடக்குமுறை சமூகஒழுங்கின் மனோபாவங்களை நம் வீடுகளுக்குள்ளும் பிரதிபலிக்கின்ற மனுக்களாக, நம் சொந்த தந்தையரே இருக்கின்றனர்.



மனுவை நிராகரிக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றபோது, ​​அல்லது #ManuMustFall  போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துகின்ற போது, நம் மனங்களில் அழியாமல் பொறித்து வைக்கப்பட்டுள்ள, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிற்கும் மனுவின் சிலை மீது ஏறி கறுப்பு சாயம் பூசிய இரு துணிச்சலான தலித் பெண்களான காந்தாபாய் ஆயரி, ஷீலா பாவர் ஆகியோரின் புகைப்படங்களே​​ நமக்குத் தோன்றுகின்றன. 2020 ஜூன் மாதம் தி வயர் இணைய இதழுடன் பேசிய ஆயரி, ‘ஹிந்து புராணங்கள் மனுதான் மனுஸ்மிருதியை எழுதியவர் என்று நம்புகின்றன. சாதி, பாலின அடிப்படையில் மனிதகுலத்தின் சீரழிவைச் சட்டப்பூர்வமாக அவர் அனுமதித்தார். சூத்திரர்களுக்கும், ஆதி-சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் என்று பிற்போக்குத்தனமான சட்டங்களை அவர் வகுத்திருக்கிறார். அந்தக் கற்பனை உருவம் சமகால இந்தியாவில் சட்டபூர்வமான தன்மையைப் பெற்றிருக்கிறது. [அவரது சிலை] உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார். ஆயரியும், பாவரும் நாம் அனைவரும் பின்பற்றுவதற்கான எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர்.

தமிழ்ப் பெண்ணாக இதை எழுதுகையில், மனுவைத் தடை செய்ய வேண்டுமென்ற திருமாவளவனின் அழைப்பிற்கு அரசியல் கட்சிகள், திராவிட இயக்கங்கள், தமிழ் தேசியவாத குழுக்களிடமிருந்து எழுந்திருக்கின்ற பரவலான ஆதரவைக் காண்பதில் என்னிடம் ஊக்கம் பிறக்கிறது. இதை ஆதரித்து பெண்கள் தங்கள் பலத்தைக் காட்டுகின்ற போது, சனாதனத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் தீர்க்கமாக மாறும். நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒழுங்குபடுத்துகின்ற மனுஸ்மிருதி, சாதிய ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான தடைகளுக்கு எதிராக நாம் பகிரங்கமாக எழுந்து நிற்போம் என்றால், இந்தியப் பெண்களாகிய நாம் பல மட்டங்களிலும் இருந்து வருகின்ற இந்த அடக்குமுறைக்கான கட்டமைப்பை அகற்ற முடியும்.


 

பெண்கள் ஏன் தங்களையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும்?

முதலாவதாக, இவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற முறையில் செயல்படுவதன் மூலம், நம்முடைய இயல்பான, கட்டுப்பாடுகளற்ற, கட்டுப்படுத்த முடியாத தனிப்பட்ட ஆளுமையை நாம் உள்ளடக்கிக் கொள்வோம். அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற மனுவை (யோகி ஆதித்யநாத் போன்று மனுவைப் பின்பற்றுபவர்களை) மீறுவதன் மூலம், அத்தகைய நூல் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத உலகை நாம் உருவாக்குவோம். அவர்களுடைய கொடுங்கனவாக மாறுவதன் மூலம், நாம் அவர்களைத் தூங்க விடமாட்டோம். எல்லா பெண்களும் சாதிக்கு எதிரானவர்களாக இருந்தால், தங்கள் கருப்பைகளுக்குள் ராணுவ ஒழுங்காகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் சாதி ஒருங்கிணைப்புகளை அனைத்துப் பெண்களும் மீறிவிட்டால், சமூகரீதியாக சாதியை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்று அனைத்து பெண்களும் போர்க்குணத்துடன் முடிவு செய்து விட்டால், மனுவும் அவரது சங் பரிவார் வம்சாவளியினரும் தாங்கள் கட்டுப்படுத்த நினைக்கின்றவர்களில் பாதிப் பேரை இழந்திருப்பார்கள்.

இரண்டாவதாக, நம் மீதான ஒடுக்குமுறைக்கான அடிப்படையை உருவாக்குகின்ற மனு மற்றும் சனாதன தத்துவங்களைக் கண்டிக்கின்ற வகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்களுக்கு (மற்றும் தலித்துகள், சூத்திரர்களுக்கு) மறுக்கப்பட்டுள்ள பங்கிற்கான உரிமையை, சிந்தனையாளர்களாகவும் அறிவாளிகளாகவும் இருப்பதற்கான உரிமையை நம் தீவிரமாகக் கோர வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், சமுதாயத்தில் பிராமணருக்கான இடத்தைப் பெறுவதற்கான உரிமையை - அறிவுப் பொருளாதாரத்தில் புலமை, அரசியல், பொதுவெளிக்கான இடத்தைப் பெறுவதற்கான உரிமையை - நாம் பெற வேண்டும். 

மூன்றாவதாக, நமக்கான பெண்ணியத்தை நாம் வடிவமைக்க வேண்டும். இந்தியாவில் பெண்ணியம் என்பது சாதியை அழிப்பதாக உள்ளது. சாதியை அழிப்பதே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான முன்நிபந்தனையாக இருக்கும் கசப்பான உண்மையை அங்கீகரிப்பது மட்டுமே, இந்தியாவில் கம்யூனிசத்திற்கே பொருத்தமானதாக இருக்கும் யதார்த்தத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இறுதியாக, பெண்ணிற்கான சரியான இடத்தை, இந்த எதிர்ப்பின் முன்னணியில் ஓரிடத்தை நாம் மீட்டெடுத்துக் கொள்வதற்கு அது அனுமதிக்கும். பகுஜன் சமுதாயத்தின் பெரும் ஆதரவுடன் சாதிய-ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து பின்னணியிலிருந்தும் பெண்கள் வந்து பங்கேற்கும்போது அம்பேத்கரிய தலித் தலைமையின் கீழ் சாதி ஒழிப்பிற்கான திட்டம் நிறைவேறும். சனாதனம் மற்றும் மனு தர்மத்திற்கெதிரான போராட்டம் தலித்துகள், சூத்திரர்கள், ஆதிவாசிகள், பெண்கள் என்று ஒடுக்கப்பட்டிருக்கும் நம் அனைவரையும் பலப்படுத்தும். 

 



வரலாற்றை மறுபரிசீலனை செய்த தலித் பெண்ணிய அமைப்புகள், டாக்டர் அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்த 1927 டிசம்பர் 25ஆம் நாள், இந்திய மகளிர் விடுதலை தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தன. இன்று, தொல்.திருமாவளவனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அந்த நூலைத் தடை செய்யக் கோருகிறார்கள். மனுவை நிராகரிப்பதாகவும், சாதியை ஒழிக்கும் நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதாகவும், பெண் விடுதலையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றதாகவும் இருக்கின்ற இந்தப் போராட்டத்தில் பெண்ணியவாதிகளாக நாம் நம்மை ஒன்றிணைத்துக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து போர்க்குரலை எழுப்ப வேண்டும்.

https://thewire.in/caste/why-feminists-must-join-the-movement-against-the-manusmriti

Comments

Anonymous said…
ஒன்றிணைவோம்...