மேட்டுக் குடியினருக்கான தேசிய கல்விக் கொள்கை

 பிரேம் சிங்

தில்லி பல்கலைக்கழக ஹிந்தி பேராசிரியர்


தி இந்தியன் எக்ஸ்பிரஸ்


புதிய காலனித்துவ பொருளாதார அடுக்கிற்குச் சாதகமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வசதியான பின்னணி கொண்டிருப்பவர்களுக்குச் சாதகமாகவும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் இருக்கின்றது. 



 

தனியார்மயமாக்கல், பெருநிறுவனமயமாக்கல் மூலம் புதிய காலனித்துவத்தை நோக்கி இந்திய கல்வியின் பாய்ச்சலைக் குறிப்பதாகவே புதிய தேசிய கல்வி கொள்கை - 2020 இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் இந்தப் பரிமாணம் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, உயர்கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதிக்கின்றது. ஏற்கனவே தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களால் நமது நாடு நிறைந்துள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய நிறுவனங்களை நிறுவிட நகரங்கள் அல்லது அவற்றின் சுற்றுப்புறங்களில் நிலத்தைத் தேடுகிறார்கள். ‘பொதுநலனை’ முன்னிட்டு மலிவான விலையில் விவசாய நிலங்களை அரசாங்கங்கள் அவர்களுக்கு வழங்குகின்றன. கல்விக்கான வளாகங்கள்/குழுக்களை உருவாக்கித் தருவதன் மூலம் தனியார்களுக்கு இந்த வசதி சில இடங்களில் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2012ஆம் ஆண்டில் சோனேபட்டில் ஒன்பது கிராமங்களில் இருந்த 2,006 ஏக்கர் வளமான விளைநிலத்தைக் கையகப்படுத்தி, தனியார் கல்வி நிறுவனங்களுக்கென்று ராஜீவ்காந்தி கல்வி நகரத்திற்கான (ஆர்ஜிஇசி) அடித்தளத்தை ஹரியானா அரசு அமைத்துக் கொடுத்தது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ஏக்கருக்கு ரூ.1 கோடி என்ற அளவிலே இருந்த அந்த நேரத்தில், வெறுமனே ஏக்கருக்கு ரூ.12.6 லட்சம் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்தது. அந்த திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து, ஆர்ஜிஇசி கட்டுமானம் வரை அனைத்து வேலைகளும் வெளிநாட்டு நிறுவனங்கள்/கம்பெனிகளாலேயே செய்து முடிக்கப்பட்டன. அந்த நிலங்கள் இப்போது மேல்தட்டு, பணக்கார தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமானவையாகி இருக்கின்றன.  



வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இனிமேல் அங்கே பயனாளிகளாக இருக்க வாய்ப்புள்ளது. தனியார்மயமாக்கல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை இந்தியக் கல்வி முறைக்கு கிடைத்திருக்கின்ற மாமருந்து என்று கருதுகின்ற தலைவர்கள், அறிவாளிகளுக்கு இங்கே பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. உலக வங்கி, யுனெஸ்கோ (டாஸ்க் ஃபோர்ஸ் 2000) இணைந்து வழங்கிய கூட்டு ஆவணத்தில் ‘வளர்ந்த நாடுகளில் உள்ள மிகச் சிறந்த  பல்கலைக்கழகங்கள் தங்களுக்கென்றிருக்கின்ற பெயர்களைப் பயன்படுத்தி, சமமான தரத்தை உறுதிப்படுத்தாமல் ஏழ்மை நிறைந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் மிகவும் மோசமான படிப்புகளையே வழங்குகின்றன’ என்று எச்சரித்துள்ளன. இந்தியாவிற்கு வருகின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் கடல்கடந்த வளாகங்களாகக் கருதப்படுகின்றன. காலனித்துவக் கொள்ளை மூலமாக உருவானவையாக இருந்தாலும், கடந்த 150-200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான நிலையான அறிவுசார் ஈடுபாட்டைக் கொண்டிருந்ததன் விளைவாகவே அந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான நற்பெயரைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றன.   



மாணவர்களின் சேர்க்கை/உதவித்தொகை, ஆசிரியர்களை நியமனம் செய்வது போன்றவற்றில், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சமூகநீதி அல்லது இடஒதுக்கீட்டுச் சட்டங்கள் பொருந்தாது என்றிருப்பதைப் போலவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் அவை பொருந்துவதாக இருக்கப் போவதில்லை. தனியார் கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை  கடுமையான அரசாங்க ஒழுங்குமுறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஆர்வமே இந்த தேசிய கல்விக் கொள்கையிலும் வெளிப்படுகின்றது. மிகவும் இலகுவான ஒழுங்குமுறையே இருக்க வேண்டும் என்று தனியார்களுக்கு ஆதரவாக இருக்கின்ற இந்த அரசாங்கம் கண்டிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்கும் என்றே தெரிகிறது. தேசிய கல்விக் கொள்கையின் முழு ஆவணத்திலும் அரசியலமைப்பு சார்ந்த இடஒதுக்கீடு என்ற வார்த்தை ஒருமுறை கூட குறிப்பிடப்படவே இல்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக வாதங்களில், அந்த கல்விக் கொள்கை ஆவணம் பொதுக்கல்வி முறையை அழிப்பதற்கான ஆவணம் என்று மிகச் சரியாகவே கூறப்படுகிறது. இப்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இங்கே வரப் போகின்றன. கல்விக்கான இந்த மிகப் பெரிய சந்தையில் சமூகநீதிக்கான அரசியலமைப்புக் கொள்கை என்று எதுவும் இருக்கப் போவதில்லை. 

ஆனால் இங்கே அது மட்டுமே பிரச்சனையாக இருக்கவில்லை. இந்த தேசிய கல்விக் கொள்கைக்குள் கல்விக்கான பாடத்திட்டம் (கல்வியறிவு / திறனை மையமாகக் கொண்ட), வகுப்பு அடுக்குகள் (5+3+3+4-பணக்கார பின்னணி கொண்ட மாணவர்கள் முன்னிலையில் இருக்க, அதே சமயம் பின்தங்கிய பின்னணியில் இருந்து வருகின்றவர்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்விக்கான போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்) ஆகியவை இருக்கின்றன. பெருநிறுவன முதலாளித்துவத்தின் தேவைகள், லாபங்களை மனதில் கொண்டே இந்த ஆவணத்தில் கற்பிக்கும் முறை (டிஜிட்டல் முறைகள்) தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது.



இந்திய சமுதாயத்தில் ஏற்கனவே ஆழமாக வேரூன்றியுள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் புதிய தாராளமயக் கொள்கைகளால் கடந்த முப்பதாண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. அனில் சத்கோபால் கூறியிருப்பதைப் போல, இந்தக் கல்வி-கொள்கையானது பெருநிறுவனத் துறைகளுக்குத் தேவையான 10 சதவீத அளவிற்கு விலையுயர்ந்த உலகளாவிய தொழிலாளர் சக்தியை உருவாக்கித் தரப் போகின்றது. விலக்கி வைக்கப்படுகின்ற மாணவர்கள், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் தொழில்நுட்பப் பணியாளர்களாகவும், தொழிலாளர்களாகவுமே பணியாற்றுவார்கள். அதன் மூலம், இப்போது இருப்பதைப் போலவே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கப் போகிறது. அறிவு என்பது தனிநபர், சமூகம் அல்லது உலகம் குறித்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருல்லாமல், பெருநிறுவன-முதலாளித்துவத்திற்குச் சேவை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிவை வழங்குவதற்கான வழியால், அறிவு/அறிவாய்வு ஆகியவற்றின் தன்மையும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பாடங்களை தனியார் பள்ளிகள்/பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களே சிறப்பாக கற்பிக்க முடியும். அவற்றைக் கற்பிக்க முடியாத அரசு பள்ளிகள்/ பல்கலைக்கழகங்கள் வெளியேறி விடத் தயாராக இருக்க வேண்டும்.



கற்பவர்களின் சிந்தனைகளை பெருநிறுவன முதலாளித்துவ அமைப்பிடம்  அடிமைப்படுத்தித் தருகின்ற முழுமையான திட்டமாகவே தேசிய கல்விக் கொள்கை இருக்கின்றது. இவ்வாறாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனைக்குள் அறிவியல் அணுகுமுறை, விமர்சனரீதியான சிந்தனை, படைப்பாற்றல், அறிவாற்றல், உணர்திறன், பன்முகத்தன்மை, பன்மை போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. சமூகத்தில் நிலவுகின்ற சமூக-பொருளாதார ரீதியிலான இயங்காமை, சமத்துவமின்மை ஆகியவற்றை இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட சிந்தனை ஏற்றுக் கொள்ளாது. தேசிய கல்விக் கொள்கையில் ‘அறிமுகம்’ என்ற தலைப்பின்கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தகைய வார்த்தைகள் வெற்றுத்தனம் கொண்டவையாகவே இருப்பது நன்கு தெரிகிறது. கொள்கை வகுப்பாளர்கள், 10 சதவீத உலகளாவிய தொழிலாளர்கள் முதுகிலே தட்டிக் கொடுப்பதாக, அந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்ளாமல் இருக்கும் வகையிலே, ‘உலகளாவிய அறிவின் சூப்பர்பவர்’, ‘உலகளாவிய கல்வித் தரங்கள்’, ‘பண்டைய, நிலைபேறுடைய இந்தியாவின் வளமான பாரம்பரியம்’ என்பது போன்ற சொற்றொடர்கள் எழுதப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர், அவரது சகாக்களின் வெற்றுப் பேச்சுக்கள் ஆச்சரியம் அளிப்பவையாக இருக்கவில்லை. அடிப்படையிலேயே அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, சுதந்திர உணர்வை - அது தேசிய சுதந்திர உணர்வு அல்லது மனிதகுலத்துடன் தொடர்புடைய சுதந்திர உணர்வு என்று எதுவாக இருந்தாலும் - வளர்ப்பதற்கான  திறமையற்றது. சோசலிச தலைவர் கிஷன் பட்நாயக் கூறியது போல், இந்தியாவின் மிகப் பெரிய அறிவுஜீவிகளின் சிந்தனைகளுக்குள் அடிமைத்தனம் துளைத்துச் சென்றுள்ளது. அவர்களில் பலரும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது அரசு கொண்டிருக்கின்ற விதிமுறைகளை தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக அகற்றவில்லை என்று விமர்சனம் செய்திருக்கின்றனர். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள ‘இலகுவான ஆனால் இறுக்கமான’ கட்டுப்பாட்டு முறையை விரும்பவில்லை. சிலர் தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கின்ற குறுகிய, வகுப்புவாத அணுகுமுறையால் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள இதுபோன்ற நல்ல விஷயங்கள் பலனற்றவையாகி விடும் என்று கூறுகின்றனர். ஹிந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்பட்டிருப்பதைத் தவிர, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், அந்நிய நேரடி முதலீடு ஆகியவை தேசிய கல்விக் கொள்கையின் மிகமுக்கிய சாதனைகளாக இருக்கின்றன. மேலும்  இதுபோன்றவை மிகவும் நன்றாகவே இருக்கின்றன என்றும் சிலர் கூறுகிறார்கள்.



‘இதுவரையிலும் உருவாக்கியுள்ள அனைத்து கல்வி கொள்கைகளுக்கும் முரணாக, தவறாக வழிநடத்துவதாகவே இந்த தேசிய கல்விக் கொள்கையின் மொழியும், விளக்கமும் இருக்கின்றன’ என்று அனில் சத்கோபால் கூறியிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியவர்களின் இந்த தந்திரம் பொதுமக்களிடம் மட்டுமே செல்லுபடியாகும்; அறிவுஜீவிகளிடம் அல்ல. உண்மையாகப் பார்த்தோம் என்றால், பெருநிறுவன-இந்தியாவில் வாழ்கின்ற அறிவுஜீவிகள், அவர்களுடைய குழந்தைகளாலேயே இந்த தேசிய கல்விக் கொள்கை உயிருடன் வாழ்கின்றது. எனவே, ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறது என்று வெறுமனே கூறி அதைச் செய்ய முடியாது. காலனித்துவ அதிகாரத்தின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தததைப் பற்றிக் கவலைப்படாததைப் போன்றே, புதிதாக காலனித்துவப்படுத்தி இருக்கின்ற பெருநிறுவன-இந்தியாவிடம் அடிபணிந்து செல்வதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிந்து ராஷ்டிரத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. இங்கே எழுகின்ற உண்மையான கேள்வி என்னவாக இருக்கிறதென்றால், இந்திய தேசத்தின் (பாரதிய ராஷ்டிரா) அரசியலமைப்பைக் கடைப்பிடிப்பவர்கள் உண்மையில் எதை நம்புகிறார்கள்/விரும்புகிறார்கள்? இந்திய நாடு பெருநிறுவன-இந்தியாவிற்கு அடிபணிய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? நமது நாட்டின் மீதான புதிய காலனித்துவத்தின் பிடியை அங்கீகரித்திருக்கின்ற அரசியல்-அறிவுசார் தலைமை, இந்த தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக தற்போதைய, எதிர்காலத் தலைமுறையினரை புதிய காலனித்துவ அமைப்புகளுக்கான இயல்பான அடிமைகளாக மாற்றவே விரும்புகின்றது.  

கல்வி விஷயங்களில் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டிருக்கின்ற ஆதிவாசிகள், தலித்துகள், பின்தங்கிய சமூகங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் இந்த தேசிய கல்விக் கொள்கையால் இன்னும் அதிகமாக ஓரங்கட்டப்படுவார்கள். அரசாங்கமும், தேசிய கல்விக் கொள்கையும் கொண்டிருக்கின்ற இந்த டிஜிட்டல் மீதான அடங்காக் காதல் அவர்கள் அனைவரும் உயர்கல்வியைப் பெறுவதை அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுடைய தரப்பிலிருந்து மிகவும் இயல்பான, கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சார்ந்த அமைப்புகளோ அல்லது  தனிநபர்களோ இதுவரையிலும் எதிர்ப்புக் குரலை எழுப்பவில்லை. பொதுக்கல்விக்கான செலவில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுவது மிக நீண்ட காலமாகவே தெளிவாகத் தெரிகின்றது. பொதுக்கல்வி இல்லாது போகின்ற நிலையில், சமூகநீதிக்கென்று இருக்கின்ற விதிகள் நிச்சயமாகச் சமரசம் செய்து கொள்ளப்படும்.



நவீன இந்தியாவை உருவாக்கிடும் வகையில், இந்திய மக்கள்தொகையில் - பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், பின்தங்கியவர்கள், ஏழை முஸ்லீம்கள் – என்று ஐந்து குழுக்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தை ராம் மனோகர் லோஹியா உருவாக்கித் தந்தார். அந்த குழுக்களின் தலைவர்கள் தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்கு மட்டுமே அந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். பழமையான பிராமண மற்றும் நவீன காலனித்துவ ஒழுங்குமுறைகளால், அதாவது விழுமியங்கள், நம்பிக்கைகளால் இந்திய பகுஜன் சமாஜ் மற்ற பிற சமூகங்களிடமிருந்து தனித்து இயங்கியது என்று லோஹியா கொண்டிருந்த நம்பிக்கையே, அவருடைய அந்த திட்டத்திற்கான காரணமாக இருந்தது. நவீன இந்தியாவை உருவாக்குவதில் இத்தகைய தனித்த சிந்தனை முக்கிய பங்கு வகிக்கும் என்றால், பிராமண மற்றும் காலனித்துவ ஒழுங்கு என்ற கலவையை நீக்கி விடும். ஆனால் நேரு, இந்திராவின் ஆட்சியில் தலைமையில் இருந்த, அப்போது லோஹியாவை மறுத்து, கண்டனம் செய்த அறிவுஜீவிகள் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பள்ளி முதல் உயர்கல்வி வரையிலான பாடங்களில் இருந்து லோஹியா விலக்கியே வைக்கப்பட்டார்.



உண்மை என்னவென்றால், நவீன இந்திய அரசைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை நாம் வீணடித்து விட்டோம். அதிகரித்து வருகின்ற பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு சார்ந்த  உரிமைகளைப் போராடி பாதுகாப்பது என்பது கடின உழைப்பாளிகளான பகுஜன் மக்களுக்கானதாகும். அதற்கு அரசியல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது; மிகவும் தேவையான இந்த அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அடிப்படையாக தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புகள் இருக்கலாம்.

https://indianexpress.com/article/opinion/national-education-policy-for-the-elites-6841211/

Comments