அருந்ததி ராய்
பாரிஸ் ரிவ்யூ
அருந்ததி ராய் எழுதி ஹேமார்க்கெட் புக்ஸ்
வெளியிட்டுள்ள ஆசாதி: சுதந்திரம், பாசிசம். புனைவு என்ற புத்தகம் குறித்த
அறிமுகம்.
என்னுடைய சமீபத்திய புத்தகத்தின் தலைப்பு குறித்து ஐக்கியப்
பேரரசில் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது, ஆசாதியைப் பற்றி நினைக்கும் போது
நான் என்ன நினைக்கிறேன் என்று புத்தகத்தின் வெளியீட்டாளரான சைமன் ப்ரோஸர் என்னிடம்
கேட்டார். நானே வியந்து போகின்ற வகையில் ஒரு கணமும் தயங்காமல் ‘நாவல்’ என்று நான் பதிலளித்தேன்.
ஏனெனில், பல்வேறு உலகங்கள், மொழிகள், காலம் வழியாக, சமூகங்கள், சமுதாயங்கள்,
அரசியல் ஊடாகப் பயணிப்பதற்கு, தான் விரும்புகின்ற அளவிற்குச் சிக்கலானதாக
இருக்கின்ற சுதந்திரத்தை எழுத்தாளருக்கு நாவல் அளிக்கிறது. முடிவற்ற சிக்கல் மற்றும்
பல்வேறு அடுக்கு கொண்டதாக இருக்கின்றதொரு நாவல் தளர்வாக, தொளதொளவென்று, சீரற்றதாக
இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நாவல் என்பது, பொறுப்புடன் கூடிய
சுதந்திரத்தைப் பற்றியது. உண்மையான, தடையற்ற ஆசாதி - சுதந்திரம் குறித்தது.
ஆசாதி: சுதந்திரம். பாசிசம். புனைவு என்ற இந்த நூலில் உள்ள சில கட்டுரைகள், நாவலாசிரியர்
மற்றும் அவருடைய நாவல்களின் உலகப் பார்வையின் வழியாக எழுதப்பட்டவை. உலகை புனைவுகள்
எவ்வாறு இணைக்கின்றன, அவை எவ்வாறு உலகமாகின்றன என்பது குறித்தவையாக அந்தக்
கட்டுரைகளில் சில இருக்கின்றன. இவையனைத்தும் 2018 முதல் 2020 வரை இரண்டு
ஆண்டுகளில், இருநூறு ஆண்டுகளாக இந்தியாவில் உணரப்பட்டிருக்கும் காலத்தில்,
எழுதப்பட்ட கட்டுரைகள். நம்மிடையே கொரோனா வைரஸ் தொற்று பெருகியிருக்கும் இந்தக்
காலத்தில் நம்முடைய
உலகம் இணையவாசல் வழி சென்று கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் சமூகம், அரசியல்,
பொருளாதாரம், கருத்தியல்ரீதியாக இருந்தவற்றிற்கு தீவிரமான சிதைவுகள் எதுவுமில்லாமல்
திரும்பி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றுகின்ற இடத்திற்கு நாம் இப்போது பயணித்திருக்கிறோம்.
ஆசாதி குறித்து மற்றுமொரு தீவிரமான புரிதலை கொரோனா வைரஸ்
தன்னுடன் கொண்டு வந்துள்ளது. இலவசமாக வந்த இந்த வைரஸ் சர்வதேச எல்லைகளை
முட்டாளாக்கி, ஒட்டுமொத்த மக்களையும் அடைத்து வைத்து, வேறு எதுவும் இதுவரையிலும்
செய்யமுடியாத அளவிற்கு நவீன உலகத்தை அடியோடு நிறுத்தி வைத்திருக்கிறது. இதுவரை
நாம் வாழ்ந்த வாழ்க்கையின் மீது, அது வேறுபட்ட ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. நவீன
சமுதாயங்களில் போற்றத்தக்கவை அல்லது ஒதுக்கி வைக்க வேண்டியவை என்று நாம்
தேர்ந்தெடுத்து கட்டியெழுப்பி வைத்திருக்கும் விழுமியங்களை அது கேள்விகளுக்குள்ளாக்க
நம்மைத் தூண்டியுள்ளது. அந்த இணையவாசலின்வழி வேறு வகையான உலகத்திற்குச்
செல்லும்போது, நம்முடன்
எதை எடுத்துச் செல்ல விரும்புகிறோம், எதை விட்டுவிட்டுச் செல்ல விழைகிறோம் என்று
நாமே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. அதுகுறித்து நமக்கான தேர்வு எப்போதும் நம்மிடம்
இருக்கப் போவதில்லை என்றாலும், அதைப் பற்றி சிந்திக்காதிருப்பது நிச்சயம் நமக்கான
தேர்வாக இருக்கப் போவதில்லை. அது குறித்து சிந்திப்பதற்கு, நாம் கடந்து வந்து விட்ட
உலகம், நம்முடைய கிரகத்திற்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு, நாம் ஏற்றுக்
கொண்டிருக்கும் சகமனிதர்களுக்கிடையிலான அநீதி ஆகியவை குறித்த ஆழமான புரிதல்
நமக்குத் தேவைப்படும்.
இந்த தொற்றுநோய் நம்மிடையே வருவதற்கு முன்பாக எழுதப்பட்ட
சில கட்டுரைகள். இந்தச் சீரழிவுகளைப் பற்றி உரையாடுவதற்கான வழிகளில் நம்மைக்
கொண்டு செல்லும் என்று நம்பலாம். அவ்வாறில்லை என்றாலும், எழுத்தாளர் ஒருவரால்
ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வரலாற்றில் உள்ள அந்தக் கணம், இதுவரையிலும் அறிந்திராத
இடத்திற்கு விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக நாம் அனைவரும் கற்பனையான
ஓடுபாதையில் இருப்பதைப் போன்றதாகவே இருக்கும். அது எதிர்கால வரலாற்றாசிரியர்களின் கல்விக்கான
பாடமாகவும் இருக்கலாம்.
ஆசாதியின் முதல் கட்டுரை 2018 ஜூனில் லண்டனில் உள்ள
பிரிட்டிஷ் நூலகத்தில் இலக்கிய மொழிபெயர்ப்பு குறித்து நான் ஆற்றிய W.G.செபால்ட்
சொற்பொழிவைப் பற்றியது. அது தற்போதைய ஹிந்து தேசியவாதம் குறித்த திட்டத்தை ஏற்கனவே
ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாக முன்வைத்த திட்டமாக இருந்த, ஓரளவு மேலோட்டமாக
இப்போது ஹிந்தி, உருது (ஹிந்தி ஹிந்துக்களுடனும், உருது முஸ்லீம்களுடனும்
தொடர்புடையதாக இருக்கின்றன) என்று அறியப்படுகின்ற இரண்டு தனித்தனி
எழுத்துருக்களால், ஹிந்துஸ்தானி என்று நாம் அறிந்த மொழியின் குழப்பமான பிரிவினை
பற்றியது.
நரேந்திர மோடி மற்றும் அவரது ஹிந்து தேசியவாத கட்சியின்
கடைசி ஆண்டாக 2018 இருக்கப் போகிறது என்று நம்மில் பலரிடமும் நம்பிக்கை இருந்தது.
2019 பொதுத்தேர்தல் நெருங்கிய போது, மோடியும் அவரது கட்சிக்கான பிரபலமும் வியத்தகு முறையில்
வீழ்ச்சியடையப் போவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. அது ஒரு ஆபத்தான தருணம்
என்பது நமக்கு நன்றாகத் தெரியும். போலியான ராணுவத் தாக்குதல் அல்லது போரைக்கூட,
அவை நிச்சயமாக நாட்டின் மனநிலையை மாற்றிவிடும் என்பதால் பலரும் எதிர்பார்த்தோம்.
இந்த தொகுப்பில் இருக்கின்ற ‘ஆபத்தான ஜனநாயகத்தில் தேர்தல் காலம்’ என்ற கட்டுரை
அந்த அச்சத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. நாம் அனைவரும் காத்திருந்தோம். 2019
பிப்ரவரியில், பொதுத்தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு, மிகச் சரியாக அந்த
தாக்குதல் வந்து சேர்ந்தது. தற்கொலைப்படையைச் சார்ந்த ஒருவர் காஷ்மீரில் தன்னைத்தானே
வெடிக்கச் செய்து, நாற்பது பாதுகாப்புப் படையினரைக் கொன்றார். அது போலியான
தாக்குதலா, இல்லையா என்பது தெரியாது. ஆனாலும் அந்த தாக்குதல் மிகச் சரியான நேரத்திலே
நடத்தப்பட்டது. மோடியும், பாரதிய ஜனதாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.
இப்போது தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஓராண்டை முடித்திருக்கும்
நிலையில், தொடர்ச்சியான திகிலூட்டும் நகர்வுகளை மேற்கொண்டிருக்கும் மோடி,
இந்தியாவை முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாற்றியிருக்கிறார். பாசிசத்தின்
உள்கட்டமைப்பு நம்மை நேருக்குநேராக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கற்பனைக்கு
எட்டாத வழிகளில், இந்த தொற்றுநோய் அதை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும்
நாம் அதை அவ்வாறு ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்.
கடந்த 2020 பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அவருடைய குடும்பத்தினரும் இந்தியாவிற்கு
அதிகாரப்பூர்வமான வருகையை மேற்கொண்டிருந்த போது, நான் இதை எழுதத் தொடங்கினேன். ஆக
அதுவும் இந்த தொற்றுநோய் ஏற்படுத்தித் தந்திருக்கும் சீரழிவு வாயில் வழியாகவே
செல்ல வேண்டியிருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு ஜனவரி 30 அன்று
அறிவிக்கப்பட்டது. எந்தவொரு அரசாங்கத்திலிருந்தும் யாரும் அதுகுறித்து கவனம்
செலுத்தி இருக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முற்றுகையிடப்பட்டு அதற்கான
சிறப்பு அந்தஸ்தும், தகவல் தொடர்பும் பறிக்கப்பட்டு, அப்போது இருநூறு நாட்களுக்கு
மேலாகி இருந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்ட முஸ்லீம்-விரோத,
அரசியலமைப்பிற்கு உட்படாத குடியுரிமைச் சட்டத் திருத்தம், லட்சக்கணக்கான மக்களை இந்திய
வீதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் திரள
வைத்திருந்தது.
மோடி மற்றும் ட்ரம்ப் முகமூடி அணிந்தவர்கள் இருந்த
கூட்டத்தில் இருந்த இந்தியர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் கிரிக்கெட்
விளையாடுவதாகவும், தீபாவளி கொண்டாடுவதாகவும்,
பாலிவுட் படங்களை உருவாக்குவதாகவும் தெரிவித்தார். நம்மைப் பற்றி அறிந்து
கொள்ள வைத்த அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தோம். அந்த வரிகளுக்கு இடையில்,
அவர் நம்மிடம் முந்நூறு கோடி டாலர் மதிப்புள்ள எம்.எச்-60 ஹெலிகாப்டர்களை
விற்றார். இந்தியா ஒருபோதும் தன்னை இதுபோன்று பகிரங்கமாக அவமானப்படுத்திக் கொண்டதே
இல்லை.
ட்ரம்ப் அந்த இரவைக் கழித்த டெல்லியின் கிராண்ட் பிரசிடென்ஷியல் சூட், மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திய ஹைதராபாத் ஹவுஸ் போன்ற இடங்களுக்கு மிக அருகமையிலேயே தில்லி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. வடகிழக்கு தில்லியில் தொழிலாள வர்க்கத்தினர் நிரம்பிய பகுதிகளுக்கு அருகமையில் இருந்த முஸ்லீம்கள் மீது ஆயுதமேந்திய ஹிந்து கும்பல்கள், காவல்துறையினரின் ஆதரவுடன் தாக்குதலை நடத்தின. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதியான உள்ளிருப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த முஸ்லீம் பெண்களுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்ததால், வன்முறை தொடங்கியிருந்தது. தாக்குதல் தொடங்கிய வேளையில், காவல்துறையினர் ஒதுங்கி நின்றதை அல்லது தாக்கிய கும்பலுக்கு அவர்கள் ஆதரவு அளித்ததை காண முடிந்தது. முஸ்லீம்கள் திரும்பத் தாக்கினர். வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. காவல்துறையைச் சார்ந்த ஒருவர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டனர். அச்சுறுத்தும் வீடியோக்கள் இணையம் முழுவதும் பறந்தன. அந்த வீடியோக்கள் ஒன்றின் மூலம், கடுமையாக காயமடைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் தெருவில் கிடப்பதும், சீருடை அணிந்த காவல்துறையினர் சிலர் ஒருவருக்கொருவர் மீது கிடந்த அந்த இளைஞர்களை தேசிய கீதம் பாடுமாறு கட்டாயப்படுத்துவதும் தெரிய வந்தது (காவல்துறையைச் சார்ந்த ஒருவரால் தன்னுடைய தொண்டையில் தாக்கப்பட்டு கீழே தள்ளப்பட்ட அந்த இளைஞர்களில் ஒருவரான பைசான் பின்னர் உயிரிழந்தார்).
தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்வுகள் குறித்து, ட்ரம்ப் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, நவீன இந்தியாவில் மக்களை பிளவுபடுத்துகின்ற, மிகவும் வெறுக்கத்தக்க அரசியல் பிரமுகராக உள்ள நரேந்திர மோடிக்கு ‘தேசத்தின் தந்தை’ என்ற பட்டத்தை அவர் வழங்கினார். சமீப காலம் வரையிலும், அந்த மரியாதை காந்திக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. நான் காந்தியின் ரசிகை அல்ல என்றாலும், நிச்சயமாக மோடி அதற்குத் தகுதியற்றவர்.
ட்ரம்ப் வெளியேறிய பிறகு, வன்முறை பல நாட்களுக்கு நீடித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் முன்னூறு பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகள் முகாம்களுக்குச் சென்றனர். நாடாளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் தன்னையும் காவல்துறையையும் பாராட்டிக் கொண்டார். முஸ்லீம்கள் தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்டதாகவும், சொந்தக் கடைகளையும் வீடுகளையும் எரித்துக் கொண்டதாகவும், தங்கள் உடல்களைத் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்களில் வீசி எறிந்ததாகவும் கூறி தங்களுடைய ஆதரவாளர்களுக்கான உரைகளை வழங்கிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம்கள் மீதே குற்றம் சாட்டினர். ‘ஹிந்து - முஸ்லீம்’ கலவரம் என்று அதைக் காட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சியும், அதன் ஆதரவில் இயங்குகின்ற சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் மேற்கொண்டன. உண்மையில் அது கலவரம் அல்ல. ஆயுதமேந்திய, பாசிச கும்பலின் தலைமையில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை.
இறந்த உடல்கள் மேலும் மேலும் சாக்கடையில் இருந்து
வெளிவந்து கொண்டிருக்கையில், இந்திய அரசு
அதிகாரிகள் வைரஸ் குறித்து தங்களுடைய முதல் சந்திப்பை நடத்தினர். மார்ச் 24
அன்று நாடு தழுவிய பொதுமுடக்கத்தை மோடி அறிவித்தபோது, உலகம் முழுக்க காணும்
வகையில் தனது ரகசியங்களை இந்தியா வெளிப்படுத்தியது.
இனி என்ன நடக்கப் போகிறது?
உலகை மாற்றியமைத்தல் நடக்கப் போகிறது. அது மட்டுமே.
Comments