
1896ஆம் ஆண்டு முதன்முதலாக கோபால கிருஷ்ண கோகலேயும், காந்தியும் சந்தித்த பிறகு, 1901ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸின் போது ஏறத்தாழ ஒரு மாத காலம் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து உரையாடி வந்தனர். காந்தியிடம் இந்தச் சந்திப்பின் போதுதான் இந்திய மக்களுக்குச் சேவை செய்வதற்காக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பி வரும்படி கோகலே அழைப்பு விடுத்தார். அவ்வாறு காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பும் போது, அவரை இளம் வழக்கறிஞராக தங்களுடன் வைத்துக் கொள்ளுமாறு பம்பாயில் இருந்த பல மூத்த வழக்கறிஞர்களுக்கு கோகலே கடிதம் எழுதினார். ஆனாலும் தென்னாப்பிரிக்கப் பிரச்சனைகளுக்குள் மூழ்கியிருந்த காந்தியால் உடனடியாக கோகலேயின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

1910ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் காந்தி
மேற்கொண்டு வந்த போராட்டங்களுக்கு சட்டவடிவம் கிடைப்பதற்கான நேட்டல் ஒப்பந்தத்
தொழிலாளர் சட்டத்தை முன்மொழிந்ததோடு, காந்தி நடத்தி வந்த போராட்டங்களுக்குத்
தேவையான நிதியாதாரத்தையும் கோகலே ஏற்படுத்திக் கொடுத்தார். 1912இல் கோகலே
ஆப்பிரிக்காவிற்குச் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்கத் தலைவர்களைச் சந்தித்தார். காந்தி
பின்னர் ஒருமுறை, கோகலேயின் இந்த முயற்சிகள் இல்லையென்றால், தென்னாப்பிரிக்கப்
பிரச்சனைகள் தீர்ந்திருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். கோகலேயை வழியனுப்புவதற்காக
டான்சானியாவில் உள்ள ஜஞ்ஜிபருக்கு காந்தி வந்தார். இந்தப் பயணத்தின் போதும்
இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்பதை கோகலே மீண்டும் காந்தியிடம் வலியுறுத்தினார்.

இந்தியாவிலிருந்து வெகுகாலமாக விலகி இருந்திருப்பதால்,
இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் காந்தி பயணம்
மேற்கொள்ள வேண்டுமென்றும் கோகலே கேட்டுக் கொண்டார். இந்தியாவைப் பற்றி முழுமையாக
அறிந்து கொள்ளாமல், ஓராண்டு காலத்திற்கு இந்தியப் பிரச்சனைகள் குறித்து எதுவும்
பேசக் கூடாது என்ற உறுதிமொழியையும் காந்தியிடம் இருந்து கோகலே பெற்றுக் கொண்டார்.
உண்மையும், தேசபக்தியும் நிறைந்த கோகலேயின் வார்த்தைகள் தன்னை இந்தியாவிற்காக
தயார் செய்பவையாக இருந்தன என்று தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்ற
புத்தகத்தில் காந்தி எழுதியுள்ளார்.
‘ஏப்ரல் மாதம் இந்தியா திரும்புவதாக இருக்கிறேன்.
என்னை முழுமையாக உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன். உங்கள் காலடியில் பணிபுரிந்து
அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் அருகிலேயே தாதியாக, சேவகனாக
இருப்பதையே எனது தற்போதைய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். நேசிக்கின்ற
ஒருவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒழுக்கத்தைக் கொண்டவனாக இருக்க நான்
விரும்புகிறேன். நீங்கள் அனுப்பிய பணத்தை நான் மேற்கொள்ளவிருக்கும் பயணங்களுக்குப்
பயன்படுத்த எண்ணியுள்ளேன்’ என்று 1914 பிப்ரவரி 14 அன்று கோகலேவிற்கு எழுதிய
கடிதத்தில் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் சுதந்திரம் அடைவதற்கான இயக்கங்களை
நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக, லண்டன் வழியாக இந்தியாவிற்குத் திரும்புமாறு
காந்தியை கோகலே கேட்டுக் கொண்டார். காந்தி 1914ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதியன்று
தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனிலிருந்து இங்கிலாந்து நோக்கி தனது இந்தியப்
பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின்போது ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் போது முதலாம்
உலகப் போர் வெடித்ததால், இங்கிலாந்திலேயே அவர் தங்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயத்தில்
கோகலே தனது உடல் நலக் குறைவிற்கான சிகிச்சையை பிரான்ஸிலுள்ள விச்சி நகரில்
மேற்கொண்டிருந்தார். இறுதியாக அவர்கள் இருவரும் செப்டம்பர் 18 அன்று சந்தித்துக்
கொண்டனர்.

டிசம்பர் 19 அன்று அராபியா என்ற கப்பலில் காந்தி
தனது இந்தியப் பயணத்தைத் தொடர்ந்தார். உடன் பயணித்தவர்கள் அப்போது அவர்
அணிந்திருந்த இந்திய உடைகளான வேஷ்டி, டர்பன் ஆகியவற்றை ஆவலுடன் பார்த்ததாக 1915
ஜனவரி மாதம் கல்லன்பாக்கிற்கு எழுதிய கடிதத்தில் காந்தி தெரிவிக்கிறார்.
புனேவிலிருந்து வந்திருந்த கோகலே 1915 ஜனவரி 9
அன்று பம்பாயிலுள்ள அப்போலோ துறைமுகத்தில் காலை 7.30 மணிக்கு வந்திறங்கிய காந்தியை
வரவேற்றார்.

காந்தி ‘இந்திய சமூக சேவகர்கள்’ என்ற அமைப்பில்
சேர வேண்டும் என்று கோகலே விரும்பிய போதும், அது நடக்கவில்லை. சபர்மதி ஆசிரமத்தை உருவாக்கிட
விரும்பிய காந்திக்குத் தேவையான நிதியை கோகலே அளித்தார். மேலும் இந்தியாவைக்
கண்டறிவதற்கான காந்தியின் ஓராண்டுப் பயணத்திற்கான செலவையும் தானே ஏற்றுக்
கொண்டார். 1915 பிப்ரவரி 19 அன்று கோகலே மறைந்த பிறகு, கோகலே என்ற அந்த சகாப்தம்
முடிவுற்று காந்தி என்ற புதிய தலைவர் பிறந்தார்.

ஓராண்டு
முடிந்தது
டால்ஸ்டாயின் ‘கலை என்றால் என்ன’ என்ற புத்தகத்தை
மொழி பெயர்க்கச் சொல்லி அகமதாபத்திலிருக்கும் வால்ஜி தேசாய் என்பவருக்கு 1916 ஜனவரி
24 அன்று எழுதிய கடிதத்தில் 31ஆம் தேதி தான் பனாரஸுக்குச் செல்ல இருப்பதாகவும், அங்கிருந்து
திரும்பிய பிறகு மெட்ராஸுக்குச் செல்ல இருப்பதாகவும், தேசாய்க்கு விருப்பமிருக்கும்
பட்சத்தில் தன்னுடன் அவரையும் அழைத்துச் செல்வதாகவும் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

பனாரஸ்
ஹிந்து பல்கலைக்கழகம் துவக்க விழா
பண்டிட் மதன் மோகன்
மாளவியா பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவின் போது உரையாற்ற வருமாறு காந்தியை
அழைத்திருந்தார். துவக்க விழா நிகழச்சிகள் 1916 பிப்ரவரி 4 முதல் 8 வரை ஐந்து நாட்களுக்கு
பல்வேறு நிகழச்சிகளுடன் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த விழாவில் சிறப்பு
அழைப்பாளராக வைஸ்ராய் ஹார்டிங் பிரபு கலந்து கொண்டார். 1902இல்
ஏற்கனவே பனாரஸ் நகருக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த காந்தி, பதினான்கு ஆண்டுகளுக்குப்
பிறகு மீண்டும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத் திறப்பு விழாவிற்காக அப்போது அங்கே வந்திருந்தார்.

பிப்ரவரி 4 அன்று நடைபெற்ற பல்கலைக்கழகத் திறப்பு
விழாவிற்காக, மிகப் பெரிய திறந்தவெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கிற்குள்
வைஸ்ராய் உள்ளே நுழைந்த போது ‘மன்னரை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று பேண்டு வாத்தியங்கள்
முழங்கின. வைஸ்ராயைச் சுற்றி பல்வேறு மகாராஜாக்கள், லெப்டினண்ட் கவர்னர்கள் என்று பல
முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்தனர். அன்றைய தினம் மதியம் விழா வைஸ்ராயின் உரையுடன்
ஆரம்பமானது. மாலையில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட, பல்கலைக்கழகத்திற்கு வைஸ்ராய்
அடிக்கல் நாட்டினார். விழாவின் முதல் நாள் மட்டுமே வைஸ்ராய் அங்கே இருந்தார். அங்கிருந்த நினைவுக் குறிப்பேட்டில் வைஸ்ராய்
‘மிகப் பெரிய வெற்றிகரமான விழா. பனாரஸ் தர்பார் கண்களைக் கவருகின்ற வகையில் இருந்தது.
அங்கிருந்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பளபளப்பான ஆடைகளுடன் இருந்தனர். ஆறாயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் அங்கே ஆர்வத்துடன் குழுமியிருந்தனர்’ என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
ஐந்தாம்
தேதியிலிருந்து எட்டாம் தேதி வரையிலும் நடனம், நாடகங்கள், கிரிக்கெட் போட்டிகள்,
சொற்பொழிவுகள் என்று விழாக்கள் தொடர்ந்து நடந்து வந்தன. விஞ்ஞானிகள் J.C.போஸ்,
C.V.ராமன், பொருளாதார அறிஞர் ஹரால்ட் மான், சமூகவியளாளர் பேட்ரிக் கெடெஸ்,
இசையறிஞர் பட்காந்த், சமஸ்கிருத அறிஞர் ஹரபிரசாத் சாஸ்திரி என்று பலரும் தங்களுடைய
சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில்
பயிற்றுவிக்கப்படப் போகின்ற பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
புரவலர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையிலேயே செய்யப்பட்டு இருந்தன.
இந்த
அறிஞர்களைத் தவிர்த்து பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த சிலரும் தங்களுடைய சொற்பொழிவை
ஆற்றுவதற்காக அங்கே அழைக்கப்பட்டிருந்தனர். தர்பங்கா மகராஜா தலைமையில் பிப்ரவரி 6 அன்று மாலையில் அன்னி
பெசன்ட் ‘நற்குணங்களைக் கட்டமைக்கும் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பிலே உரையாற்றினார்.
காந்தி அவருக்குப் பிறகு அங்கே உரையாற்றுவதாக இருந்தது. காந்தி எந்தத் தலைப்பில்
பேசப் போகிறார் என்பது விழாவின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை என்ற
போதிலும், கடந்த ஓராண்டாக இந்திய சுற்றுப் பயணத்தின் போது பல இடங்களிலும் அவர்
பேசி வந்த தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளைப்
பற்றியே இங்கும் பேசுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால்
காந்தியின் பனாரஸ் பேச்சு இந்திய அரசியலுக்கு அவரது வரவை அறிவிக்கும் வகையிலே அமைந்திருந்தது.
இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்த
பிறகு, கோகலே விதித்திருந்த ஓராண்டு மௌனம் என்பதை உடைத்து தனது பொதுவாழ்வில்
முதன்முதலாகப் பேசுவதற்கான இடமாக பனாரஸையும், பொதுமக்களுக்கான தனது முதல் செய்தியை
வெளியிடுவதற்கான தளமாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக துவக்க விழாவையும் காந்தி தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
பல்கலைக்கழகத் துவக்க
விழாவிற்கு வருகை தந்த வைஸ்ராயின் பாதுகாப்பைக் கருதி, நகரமெங்கும் திரும்பிய திசையெல்லாம்
காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டிருந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் பனாரஸ் நகரமே
சிறைப்பிடிக்கப்பட்ட சூழலில் இருந்தது. அது குறித்து மிகவும் வருத்தமடைந்திருந்த காந்தி,
எவ்விதத் தயக்கமுமின்றி தன்னுடைய உரத்த சிந்தனையை வெளிப்படுத்துகின்ற வகையில் தனது
உரையை ஆற்றினார். காந்தியின் சுயசரிதையில் இந்த பனாரஸ் பயணம் குறித்து
எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வேண்டுமென்றே விடப்பட்டதா என்பதும் தெரியவில்லை.
இருந்தாலும் பாதியிலேயே மேடையில் இருந்தவர்களால் இடைநிறுத்தப்பட்டு முடிந்து போன காந்தியின்
அன்றைய பேச்சு இன்றளவிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவே இருந்து வருகிறது.
1916 பிப்ரவரி 6 அன்று பனாரஸ் பல்கலைக்கழகத் துவக்க
விழாவில் காந்தி ஆற்றிய உரை, அன்னி பெசன்டால் அவரது உரை பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது,
அது தொடர்பாக பின்னர் ஏற்பட்ட தொடர் விவாதங்கள் ஆகியவை இங்கே தொகுத்து தரப்படுகின்றன.
பனாரஸ் பல்கலைக்கழகத் துவக்க விழாவில்
…
1916 பிப்ரவரி 6 அன்று பாதியில் தடுத்து நிறுத்தப்பட்ட
காந்தியின் முதல் உரை
இந்த
இடத்தை நான் வந்தடைவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு எனது பணிவான வருத்தங்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாமதத்திற்கு நானோ அல்லது வேறு யாருமோ காரணமில்லை
என்று நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம், எனது வருகை தாமதமானதற்காக
நான் தெரிவிக்கின்ற வருத்தங்களையும் தயங்காமல் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நான்
நம்புகிறேன். நான் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்ற விலங்கைப் போல இருப்பதால்,
எனது பாதுகாவலர்களின் அளவிற்கு மீறிய அன்பினால் என்னுடைய வாழ்வின் முக்கியமான
தருணங்களை இழப்பது முற்றிலும் தற்செயலாக நடப்பதாக இருக்கலாம். தொடர்ந்து நடந்து
வருகின்ற இத்தகைய தற்செயல் நிகழ்வுகள் இன்று நடப்பதற்கான சந்தர்ப்பங்களை நமக்கும்,
எனக்கும் மட்டுமல்லாது, என்னுடைய பாதுகாவலர்களுக்கும், என்னை அழைத்து
வந்தவர்களுக்கும் அவர்கள் ஏற்படுத்தித் தரவில்லை. அதனாலேயே இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்கிறது.
நண்பர்களே,
இந்தப் பல்கலைக்கழகம் முழுமையான அமைப்பாக உருவாகி விட்டதாகவும், இன்னும் மேலும்
செழுமைப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு
வருகின்ற இளைஞர்கள் தலைசிறந்த பேரரசின் முழுமையான குடிமக்களாக இங்கிருந்து திரும்பப்
போவதாகவும் சற்று முன்னே இங்கு பேசி விட்டு அமர்ந்திருக்கிற தன்னிகரற்ற சொல்வன்மை
மிக்க திருமதி பெசன்ட் அவர்கள் தெரிவித்ததை நீங்கள் நம்ப வேண்டாம். அத்தகைய
மாயையோடு யாரும் இங்கிருந்து செல்ல வேண்டாம். இன்றைய மாலைப் பொழுதில் மாணவ
சமூகத்திற்கு முன்பாக நான் வைக்கின்ற எனது கருத்துக்களைக் கேட்ட பிறகு ஒரு கணம்
சிந்தித்துப் பாருங்கள். தனக்கு நிகரான போட்டியாளர்களே இல்லாமல் புகழ் பெற்று
விளங்குவதற்குக் காரணமானதாக இந்த நாடு தன்னகத்தே கொண்டுள்ள ஆன்மீக வாழ்வை, வெறும்
பேச்சுக்கள் மூலமாக மட்டுமே மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள முடியும் என்று நீங்கள்
கூறினால், என்னை நம்புங்கள், நீங்கள் தவறு செய்தவர்கள் ஆகி விடுவீர்கள். இந்த உலகின்
துயரங்களை இந்தியா ஒரு நாள் களையும் என்கிற உயரிய கருத்தை வெறும் வார்த்தைகள் மூலமாக
மட்டுமே பிறரிடம் தெரிவிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன்.
பேச்சுக்களையும்,
உரைகளையும் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்து விட்ட போதிலும், கடந்த இரண்டு நாட்களாக
இங்கே வழங்கப்பட்டிருக்கும் உரைகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன என்றே நான்
கருதுகிறேன். கிட்டத்தட்ட இதற்கு மேல் இல்லை என்னும் அளவிற்கு, நமது
காதுகளுக்கும், கண்களுக்கும் போதுமான அளவிற்கும் மேலான பேச்சுக்களை நாம்
கேட்டிருக்கிறோம். இருந்தாலும், நம்மைச் செயல்பட வைக்கக் கூடிய அளவில் நமது
இதயத்தைத் தொட்டு எழுப்புகின்ற விதத்திலான பேச்சுக்களே இப்[போது நமக்குத்
தேவைப்படுவதாகக் கருதுகிறேன்.
மிகவும்
எளிமையான இந்தியத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக ஆத்மார்த்தமாக நம்மைச் செயல்பட
வைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி இந்த இரண்டு நாட்களாக நம்மிடையே
பேசப்பட்டுள்ள அனைத்துப் பேச்சுகளுமே அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கின்ற நிலையிலேயே
இருந்தன. புனிதமான இந்த நகரத்திலுள்ள தலைசிறந்த கல்லூரியின் நிழலில், இந்த மாலைப்
பொழுதில் எனக்கு அந்நியமான மொழியில் என் நாட்டு மக்களுடன் நான் பேசுமாறு
பணிக்கப்பட்டது என்பது மிகவும் அவமானமாகவும், என்னை வெட்கப்பட வைப்பதாகவும்
இருக்கிறது. இந்த உரைகள் எவையும் எவரது உள்ளத்தையும் தொடவில்லை என்கின்ற ஒரே
காரணத்தினாலேயே, தேர்வாளராக நான் நியமிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக இங்கு
ஆற்றப்பட்டுள்ள உரைகள் பற்றிய தேர்வை இங்கே கலந்து கொண்டவர்களிடம் நடத்தினால், அந்தத்
தேர்வில் அநேகமாகப் பல பேர் தேர்ச்சியடைய மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.
டிசம்பர்
மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டங்களின் அமர்வுகளில் நான் கலந்து கொண்டேன்.
பம்பாயில் கூடியிருந்த மிகப் பெரிய கூட்டத்தில் பலரது உள்ளத்தையும் தொடுமாறு
பேசப்பட்ட பேச்சுக்கள் அனைத்தும் ஹிந்துஸ்தானியில் பேசப்பட்டவையாகவே இருந்தன
என்பதை நீங்கள் அறிவீர்களா? பம்பாயில் பனாரஸைப் போல் இல்லாமல், அனைவரும்
ஹிந்தியிலேயே பேசுகின்றனர். பம்பாயில் பேசப்படுகின்ற வழக்கு மொழிக்கும், ஹிந்தி
மொழிக்கும் இடையிலான வேறுபாடு, ஆங்கிலத்திற்கும் நமது இந்திய மொழிகளுக்குமிடையே
உள்ள வேறுபாடுகளை விட மிகவும் குறைவானது என்பதால், காங்கிரஸ் பேச்சாளர்கள்
ஹிந்தியில் பேசினாலும் கூட, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் அதைப் புரிந்து
கொள்ள முடிந்தது. இங்கே படிக்க வருகின்ற
மாணவர்களுக்கு அவர்களது வழக்கு மொழியிலேயே பாடங்களைச் சொல்லித் தருவதற்கு இந்தப்
பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். நம்மைப் பிரதிபலிக்கின்ற
நமது மொழிகளைப் பயன்படுத்தி, சிறந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது
என்று நீங்கள் கூறுவீர்களேயானால், நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்றே நான்
சொல்ல வேண்டியிருக்கும். ஆங்கில மொழி இந்தியாவின் தேசிய மொழியாக ஆகிவிடும் என்பதை
யாராவது கனவு கண்டிருக்க முடியுமா? இத்தகைய நிலைமை நமது நாட்டில் எவ்வாறு
உண்டானது? இந்தப் பந்தயத்தில் ஆங்கிலேயக் குழந்தைகளுக்கு நிகராக நமது குழந்தைகளும்
கலந்து கொள்வதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை ஒரு கணம்
சிந்தித்துப் பாருங்கள்.
பூனாவில்
உள்ள சில பேராசிரியர்களிடம் பேசக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்த போது, ஆங்கிலம்
மூலமாகப் படித்து அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு இந்திய இளைஞனும் ஆறு
வருடங்களை வீணாக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். நமது
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு
இதைப் பெருக்கிப் பார்த்தீர்களேயானால், நமது நாடு எவ்வளவு ஆயிரம் வருடங்களை
இழந்திருக்கிறது என்பது தெரிய வரும். இதைச் சரி செய்வதற்கான முயற்சிகள் எவற்றையும்
துவங்காமல் இருப்பதாக நம் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்நிய மொழியில் புலமை பெறுவதற்காக நமது
பொன்னான நேரத்தை வீணடிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்ற நிலையில், இதனைச் சரி
செய்யும் முயற்சிகளை எடுப்பதற்கு நாம் எவ்வாறு
முன்வருவோம்? எனவே இந்த விஷயத்தில் நாம் தோற்றுப் போனவர்களாகவே
இருக்கிறோம்.
நேற்றைக்கும்,
இன்றைக்கும் இங்கே பேசிய பேச்சாளர்களில், எத்தனை பேரால் திரு.ஹிக்கின்பாதம் போன்று
பார்வையாளர்களைக் கவர முடிந்திருக்கிறது?
அவ்வாறு பார்வையாளர்களைக் கவர இயலாதது அந்தப் பேச்சாளர்களின் தவறு அல்ல.
நமது தேவைக்கும் அதிகமான கருத்துக்கள் அவர்களுடைய பேச்சில் இருந்த போதிலும்,
அவர்கள் பேசியது நம்மில் யாரையும் சென்றடையவில்லை. ஆங்கிலம் கற்றவர்களே நமது
நாட்டில் தலைமைப் பொறுப்பையேற்று, தேவையான அனைத்தையும் செய்து வருவதாகக்
கேள்விப்பட்டேன். அவ்வாறு அது இல்லையெனில், இன்னும் கொடூரமானதாகக்கூட
இருந்திருக்கலாம்.
ஆங்கிலம்
மூலம் கற்றுக் கொள்ளும் கல்வியாக மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய கல்வி இருப்பது
குறித்து நாம் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில்
வழக்கத்தில் உள்ள நமது மொழிகளின் மூலமாகக் கல்வியைப் பெற்றிருந்தால் இன்றைக்கு நாம்
எந்த நிலையில் இருந்திருப்போம்? நாட்டின் ஆன்மாவோடு பேசக் கூடிய, சொந்த மண்ணில்
அந்நியர்களைப் போல் வாழாத, ஏழை எளியவர்களுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு வேலை
செய்கின்ற, இந்த ஐம்பது ஆண்டுகளில் கற்றுக் கொண்டவை மூலமாக நாட்டின் பாரம்பரியப்
பெருமையை உயர்த்திய, நன்கு கற்றறிந்தவர்களைக் கொண்ட சுதந்திர இந்தியாவாக நாம் இருந்திருப்போம்.
இன்றைய நிலையில் நமது மனைவிகளிடம் கூட நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள
முடியவில்லை. பேராசிரியர் போஸ், பேராசிரியர் ரே ஆகியோரது திறமையான ஆய்வுகளைப்
பாருங்கள். அவர்களது ஆய்வுகள் மக்களின் சொத்தாக மாறாமல் இருப்பதற்காக நாம் உண்மையில்
வெட்கப்பட வேண்டாமா?
இப்போது
அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
சுயாட்சிக்கான
தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றியிருக்கிறது. தங்களுக்கான கடமையை
நிறைவேற்றுவதற்காக அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியும், முஸ்லீம்லீக்கும் உறுதியான
ஆலோசனைகளை முன்வைத்துச் செயல்படுவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனாலும்
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விட மாணவ சமூகம் என்ன செய்யப் போகிறது, பொதுமக்கள்
என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தே நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.
வெறும் காகிதங்களின் மூலமாக மட்டுமே நாம் சுதந்திரத்தை அடைந்து விட முடியாது.
எவ்வளவு பேசினாலும் அது சுயாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றி விடாது. நம்மை
சுயாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாக நமது நடத்தைகள் மட்டுமே மாற்றியமைக்கும். மேலும்
நம்மை நாமே ஆள்வதற்கான முயற்சிகளை எந்த வகையிலான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளப்
போகிறோம் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
இந்த
மாலை வேளையில் நான் இங்கே வெறுமனே உரையாற்ற விரும்பவில்லை. சற்றே உரக்கச்
சிந்திக்க விரும்புகிறேன்.
எவ்விதத்
தயக்கமுமின்றி நான் பேசுவதாக நீங்கள் கருதினால், உரத்த சிந்தனை கொண்ட ஒரு மனிதன்
உங்களிடம் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாக எண்ணிக் கொள்ளுங்கள். எனது
இந்தப் பேச்சின் மூலமாக, என் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையின் எல்லையை மீறியதாக
எனது பேச்சு இருப்பதாக கருதினால், நான் எடுத்துக் கொண்ட சுதந்திரத்திற்காக
தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
நேற்று
மாலையில் நான் விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த
சந்துகளுக்குள் நடந்து சென்ற போது பல்வேறு எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.
பெருமை மிகுந்த அந்தக் கோவிலுக்குள் அந்நியர் ஒருவரை அனுப்பி வைத்தால்,
ஹிந்துக்கள் என்ற முறையில் நமது செயல்பாடுகள் குறித்த தன்னுடைய கண்டனத்தை அவர் நம்
மீது பதிவு செய்வார் என்பது நிச்சயம். அவ்வாறு அவர் பதிவு செய்வதில் அனைத்து நியாயங்களும்
இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நமது நடத்தைகளின் வெளிப்பாடாகவே இந்தச்
சீர்மிகு கோவிலின் நிலைமை இருப்பது உங்களுக்குத் தோன்றவில்லையா? ஒரு ஹிந்து என்ற
முறையிலேயே நான் இதை உணர்ந்து பேசுகிறேன். நமது புனிதமான கோவிலின் சந்துகள்
இவ்வாளவு மோசமாக குப்பைகள் நிறைந்ததாக இருக்கலாமா? அவரவர்கள் விருப்பத்திற்கு கோவிலுக்கு
அருகே உள்ள வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சந்துகள் மிகவும் குறுகலாக, கரடுமுரடான
பாதைகளுடன் இருக்கின்றன. நமது கோவில்களே இப்படி அசுத்தம் நிறைந்தவைகளாக இருக்கின்ற
நிலையில் நாம் அமைக்க விரும்புகின்ற அரசாங்கம் எந்த நிலையில் இருக்கும்? தாங்களாக
அல்லது நமது கட்டாயத்தின் பேரில் ஆங்கிலேயர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளை
எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, நமது கோவில்கள் ஒருவேளை புனிதமான,
சுத்தமான, அமைதி தவழும் இடங்களாக மாறி விடுமா என்ன?
சுயாட்சி
பற்றிச் சிந்திப்பதற்கு முன்பாக, அதற்குத் தேவையான முன் நடவடிக்கைகளை நாம்
மேற்கொள்ள வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவரின் கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்
போகிறேன். ஒவ்வொரு நகரிலும் நகரப் பகுதி தவிர்த்து கண்டோன்மெண்ட் எனப்படும்
பகுதியும் அமைந்துள்ளது. நகரப்பகுதி பெரும்பாலும் துர்நாற்றம் வீசக்கூடிய
பகுதியாகவே இருக்கிறது. நகரப் பகுதிகளில் வாழ விரும்புகின்ற நாம், மிக எளிய
குக்கிராம வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க முடியாது. மாடியில் வசிப்பவர்கள்
நம்மீது எச்சிலைத் துப்பி விடுவார்களோ என்ற பயத்துடனேயே பம்பாய்த் தெருக்களில்
ஒருவரால் எப்போதும் நடந்து கொண்டிருக்க முடியாது. ஏராளமான ரயில் பிரயாணங்களைச்
செய்திருப்பதால், மூன்றாம் வகுப்பு பயணிகள் அனுபவிக்கும் கஷ்டங்களை நான் நேரடியாகக்
கண்டிருக்கிறேன். கடுமையாகப் பணி புரிந்து வரும் ரயில்வேத்துறை நிர்வாகத்தின் மீது
என்னால் குற்றம் சுமத்த முடியாது. சுத்தம் குறித்த அரிச்சுவடி பற்றி நமக்குச் சிறிதளவும் தெரியவில்லை. படுத்து
உறங்குவதற்கான இடம் என்று கூட யோசிக்காமல் வண்டியின் தரைத்தளங்களில் எச்சிலைத்
துப்புகிறோம். எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது குறித்து எவ்விதத்திலும்
கவலைப்படாமல் இருப்பதன் விளைவாக, வண்டி முழுவதும் விவரிக்க முடியாத அளவிற்குப்
பாழ்படுத்தப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வதில் மாணவர்களும் விதிவிலக்கல்ல.
நார்போக் ஜாக்கெட்டுகளை அணிந்து ஆங்கிலம் பேசியபடி வருகின்ற அவர்கள், மற்ற
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, வண்டியில் அமர்ந்து பயணிக்கின்ற வசதியை
தங்கள்வசமாகக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
நீங்கள்
உங்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதன் மூலம், எனது மனதைத் திறந்து
அனைத்து விஷயங்களையும் என்னால் பேச முடிந்திருக்கிறது. இந்த விஷயங்களை நாம் சுயாட்சியை
நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
நான்
இப்போது வேறு ஒரு விஷயம் பற்றி உங்களிடம் பேச இருக்கிறேன். நேற்றைய
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மேன்மை தாங்கிய மகாராஜா அவர்கள் இந்தியாவில்
நிலவும் ஏழ்மை குறித்துப் பேசினார். மற்றவர்களும் அது குறித்து மிகுந்த
அழுத்தத்துடன் பேசினார்கள். ஆனாலும் வைஸ்ராய் அவர்கள் கலந்து கொண்ட, அடித்தளம்
நாட்டும் விழாவிற்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் என்ன நடந்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?
பாரீஸிலிருந்து வந்திருந்த தலைசிறந்த நகைக்கடைக்காரரின் கண்களைப் பறிக்கின்ற
வகையிலே பகட்டான நகைகளின் கண்காட்சி அங்கே நடந்தது உண்மைதான். மிகவும்
விமரிசையாகத் தங்களை அலங்கரித்து வந்திருந்த அவர்களை லட்சக்கணக்கான ஏழை மக்களுடன்
நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். உங்களுடைய
அணிகலன்களைக் கழற்றி, நீங்கள் அவற்றை இந்தியாவில் உள்ள சகமனிதர்களுக்காக வைத்திராவிட்டால்
இந்த நாட்டிற்கு விடிவு வராது என்பதை நான் அவர்களிடம் சொல்ல நினைக்கிறேன். நம்மிடம்
உள்ள விசுவாசத்தைப் பேரரசருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக உச்சி முதல் பாதம்
வரையிலும் நகைகளை அணிந்து வர வேண்டும் என்பதைப் பேரரசரோ அல்லது ஹார்டிங் பிரபுவோ
கூட விரும்ப மாட்டார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறான விருப்பம்
எதுவும் அவரிடம் இருக்கிறதா என்பது குறித்த தகவலைப் பேரசரர் ஜார்ஜிடமிருந்து
பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்குமோ என்றுகூட நான் அஞ்ச
வேண்டியிருக்கிறது.
பிரிட்டிஷ்
இந்தியாவிலாகட்டும் அல்லது நமது தலைவர்களின் ஆளுகையில் உள்ள இந்தியாவிலாகட்டும்,
எங்கெல்லாம் பெரிய அரண்மனைகள் கட்டி எழுப்பப்படுகிறதாகக் கேள்விப்படுகிறோனோ,
அப்போதெல்லாம் இதற்கான பணம் விவசாயிகளிடமிருந்து வந்ததுதானே என்று எண்ணி எனது மனம்
சஞ்சலப்படுகிறது. நேற்று திரு.ஹிக்கின்பாதம் அவருக்கே உரித்தான தனித்த நடையில்
கூறியதைப் போல, ஒன்றுக்கு இரண்டாக அதிக அளவில் தானியங்களை உருவாக்கித் தருகிற
விவசாயிகள் நமது மக்கள் தொகையில் 75 சதத்திற்கும் மேலாக இருக்கிறார்கள்.
அவர்களுடைய உழைப்பில் கிடைத்த அனைத்தையும் அவர்களிடமிருந்து முழுமையாக நாம்
எடுத்துக் கொள்வதோ அல்லது பிறர் பிடுங்கிச் செல்லுவதற்கு அனுமதிப்பதோ, நாம் அடைய
விரும்புகின்ற நம்மை நாமே ஆளுகின்ற சுயாட்சியின் உள்ளார்ந்த ஆன்மாவாக இருக்க
முடியாது. நமக்கான விடிவு என்பது விவசாயிகளின் முலமே கிடைப்பதாக இருக்குமேயன்றி,
நமது வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பணக்கார நிலச்சுவான்தாரர்கள் ஆகியோர் பெற்றுத்
தருவதாக இருக்காது.
இறுதியாக
ஆனாலும் முக்கியத்துவம் வாய்ந்த எனது கடமையாக, கடந்த இரண்டு மூன்று நாட்களில் நமது
மனங்களில் கேள்விகளை எழுப்பிச் சென்றிருக்கும் சில விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட
வேண்டியுள்ளது. வைஸ்ராய் வந்த போது பனாரஸ் தெருக்களில் மிகவும் பதட்டமான சூழல்
நிலவியது என்பதை அனைவராலும் உணர முடிந்தது. பல இடங்களில் உளவாளிகள்
நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. நாம் அனைவரும் பீதியடைந்திருந்தோம். ஏன்
இந்த அவநம்பிக்கை என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. வாழ்ந்து கொண்டே
மரணித்திருப்பதை விட, உண்மையிலேயே மரணித்துப் போவது என்பது ஹார்டிங் பிரபுவுக்கே
கூட நல்லதில்லையா? ஆனால் மிக்க அதிகாரம் படைத்த இறையாண்மையின் பிரதிநிதியான ஒருவர்
இவ்வாறு நம்மைப் போல சிந்திப்பதற்கு வழியில்லை. உளவாளிகளை நம் மீது திணிப்பது
அவருக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இது குறித்து நாம் கவலைப்படலாம், கோபப்படலாம்.
ஆனாலும் இந்தியாவில் இன்று நிலவுகின்ற அமைதியின்மை ஆட்சியமைப்பிற்கு எதிரான கொள்கை
கொண்ட அனார்கிஸ்டுகளின் கூட்டத்தை உருவாக்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்
கூடாது. நானும் அத்தகையவன்தான் என்றாலும் நான் வேறுவகைப்பட்டவன். அனார்கிசக்
கொள்கை கொண்டவர்களைச் சந்திக்க நேர்ந்தால், இந்தியாவில் அவர்களுடைய கொள்கைகளுக்கு இடமில்லை என்பதை நான்
எடுத்துரைப்பேன். அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளை நான் பயத்தின் அடையாளம் என்றே கருதுகிறேன்.
கடவுளின் மீது பயம் கலந்த நம்பிக்கை வைத்தால், மகாராஜாவிற்கோ, வைஸ்ராய்க்கோ,
உளவாளிகளுக்கோ, பேரரசர் ஜார்ஜிற்கோ நாம் பயப்படத் தேவையில்லை.
இந்த
நாட்டிற்காகத் தன்னுடைய உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் தைரியத்திற்காக,
இந்த நாட்டின் மீது தீராக் காதல் கொண்டிருக்கும் ஒரு அனார்கிஸ்டை நான்
மதிக்கிறேன். ஆனாலும் கொலை செய்வது என்பது மதிப்பிற்குரிய செயல்தானா என்பதை நான் அவரிடம்
கேட்க விரும்புகிறேன். கௌரவமான மரணத்தைத் தருவதற்கான தகுதி கொலையாளியின்
கையிலிருக்கும் கத்திக்கு இருப்பதாக எந்த சாசனத்திலும் கூறப்படவில்லை.
இந்தியாவிற்கான விடிவைப் பெறுவதற்காக ஆங்கிலேயர்களுக்கு விடை கொடுத்து அவர்களை
இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவசியமென்றால், அவர்கள் இங்கிருந்து
வெளியேறி விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக, அந்த நம்பிக்கையின்பால் எந்தவிதத்
தயக்கமுமின்றி என்னுடைய உயிரையும் இழப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். அதுவே
எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய மரணமாக இருக்கும். சதித் திட்டங்களைத் தீட்டி
வெடிகுண்டுகளை வீசக் கூடியவர்கள் வெளியே பொதுத்தளத்தில் வருவதற்கு அஞ்சுவதோடு,
தாங்கள் பிடிபடும் போது அவ்வாறு தவறான வழியில் சென்றதற்கான தண்டனையையும் பெற
வேண்டியிருக்கிறது. அவர்கள் என்னிடம், நாங்கள் இத்தகைய செயல்களைச்
செய்திராவிட்டால், வெடிகுண்டுகளை வீசி எறியாதிருந்தால், பிரிவினை
இயக்கங்கள் இது வரையிலும் சாதித்திருப்பதை அடைந்திருக்கவே முடியாது என்று
கூறினார்கள்.
திருமதி பெசன்ட்: தயவு செய்து நிறுத்துங்கள்…
காந்தி
தொடர்கிறார்...
இந்த
கருத்தையே நான் வங்கத்தில் திரு.லியான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும்
தெரிவித்துப் பேசினேன். நான் கூறுபவை
மிகவும் முக்கியமானவை என்று எண்ணுகிறேன். ஆனாலும் பேசுவதை நிறுத்தச் சொன்னால்,
நான் அதற்குக் கட்டுப்படுவேன்.
(கூட்டத்தலைவரை நோக்கி) உங்கள் கட்டளைகளுக்காகக்
காத்திருக்கிறேன். இந்தப் பேச்சுக்களின் மூலம் இந்த நாட்டிற்கோ அல்லது பேரரசிற்கோ
எதிரானவன் என்று நீங்கள் என்னைக் கருதினால் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
கூட்டத்திலிருந்து பேச்சைத் தொடரச்
சொல்லி சப்தங்கள் எழுகின்றன.
கூட்டத்தலைவர்: நீங்கள் உங்கள் கருத்தை விளக்கலாம்.
காந்தி தொடர முயற்சிக்கிறார்...
நான்
வெறுமனே … (மற்றுமொரு குறுக்கீடு)
நண்பர்களே,
இந்தக் குறுக்கீடுகள் குறித்து ஆத்திரம் கொள்ளாதீர்கள். எனது பேச்சை நிறுத்த
வேண்டுமென்று திருமதி.பெசன்ட் சொல்கிறார் என்றால், அது அவர் இந்தியாவை மிகவும்
நேசிப்பதாலும், இங்கு கூடியிருக்கும் இளைஞர்கள் முன்பாக நான் வெளிப்படுத்துகின்ற
எனது உரத்த சிந்தனையில் தவறு இருப்பதாக அவர் கருதுவதாலும் மட்டுமே இருக்கக்
கூடும்.
நமது
இலக்கை எட்டுவதற்காக, இரண்டு பக்கங்களிலும் நிலவுகின்ற சந்தேகச் சூழலை அகற்றி தூய்மைப்படுத்த
வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் அன்பை
அடிப்படையாகக் கொண்ட பேரரசு நமக்கு வேண்டும். இங்கு இந்தக் கல்லூரி நிழலில் நாம்
பேசிக் கொண்டிருப்பது, நமது வீடுகளில் நாம் பொறுப்பற்றுப் பேசிக் கொண்டிருக்கும்
விஷயங்களை விடச் சிறந்ததல்லவா? வெளிப்படையாக இவ்வாறு பேசுவது உண்மையில் சிறந்தது
என்றே நான் கருதுகிறேன். இதற்கு முன்னரும் நான் இது மாதிரி பேசியிருக்கிறேன். மாணவர்களுக்குத்
தெரியாத விஷயங்கள் என்று எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனவே ஒரு
தேடுதலை நடத்துவதற்கான வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்காக வெளிச்சத்தை நம் மீதே
திருப்புகிறேன். உயிருக்குயிராக எனது நாட்டை மதித்து வருகின்ற நான் உங்களிடம் எனது
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த வேளையில், அனார்கிசத்திற்கான தேவை
இந்தியாவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆட்சியாளர்களிடம் என்ன
சொல்ல நினைக்கிறோமோ அதை வெளிப்படையாகச் சொல்வோம். அது அவர்களைத் திருப்திப்படுத்தாத
பட்சத்தில், அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்வோம். ஆனால் ஒருபோதும் அவதூறாகப் பேச
வேண்டாம்.
எல்லோராலும்
திட்டப்படுகின்ற பொதுத்துறையில் பணிபுரியும் ஒருவரிடம் முன்பொரு நாள் நான் பேசிக்
கொண்டிருந்தேன். அந்தப் பணியில் இருப்பவர்கள் மீது நான் மாறுபட்ட கருத்துக்களைக்
கொண்டிருந்த போதிலும், என்னிடம் அவர் பேசிய தோரணை என்னைக் கவருவதாகவே இருந்தது.
அவர் என்னிடம் ‘காந்தி, சேவை செய்யும் நோக்கில் மக்களை ஆளுகின்ற நாங்கள், அவர்களை
ஒடுக்குவதற்கு விரும்புவோமா?’ என்றார். ‘இல்லை’ என்று நான் சொன்னவுடன் அவர்,
பொதுத்துறையில் உள்ளவர்களுக்காக நீங்கள் பேச வேண்டும் என்றார். இங்கே நான் அது பற்றி சொல்கிறேன். இந்தியப்
பொதுத்துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் மிகவும் தீர்மானமாக ஆணவமாகவும்,
கொடுங்கோலர்களாகவும், சற்றும் யோசிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். இது தவிர
மேலும் சில வார்த்தைகளையும் என்னால் உபயோகிக்க முடியும். அவர் சொன்ன அனைத்தையும்
நான் ஒத்துக் கொண்டாலும், இந்தியாவிற்கு வந்து சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு
அவர்களில் சிலர் தரம் தாழ்ந்து போனவர்களாக மாறியுள்ளனர் என்பதையும் சேர்த்தே
சொல்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக கனவான்களாக இருந்த அவர்கள் இப்போது தார்மீக
நெறிகளை இழந்தவர்களாக மாறியிருப்பது, நம்மைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. நேற்று
வரையிலும் நல்லவனாக இருந்த ஒருவன் என்னைச் சந்தித்த பிறகு கெட்டவனாக மாறினால்,
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவன் கெட்டுப் போனதற்கு அவன் காரணமா? இல்லை நான்
காரணமா? நம்மில் பலரையும் பாதித்துள்ளது போன்றே இந்தியாவிற்கு வந்த பிறகு, இங்கு
நிலவுகின்ற முகஸ்துதி மற்றும் மோசடிகள் ஆகியவை சூழ்ந்து கொண்டு அவர்களை நெறிபிறழச்
செய்திருக்கிறது. குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வது சில சமயங்களில் சரியானதாகவே
இருக்கும் என்பதால், சுயாட்சியை எதிர்பார்க்கின்ற நாம் இதனை ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும்.
சுயாட்சி
என்பது வழங்கப்படுவதல்ல. பிரிட்டிஷ் பேரரசு மற்றும் பிரிட்டிஷ் நாட்டின்
வரலாற்றைப் பார்த்தோமேயானால், சுதந்திரத்தை நேசிக்கின்ற அவர்கள், தாங்களாகவே
சுதந்திரத்தை எடுத்துக் கொண்டவர்களைத் தவிர வேறு எவருக்குமே அவர்கள் சுதந்திரத்தை
வழங்கியதில்லை என்பது தெரிய வரும். இது குறித்த பாடத்தைக் கற்றுக் கொள்ள
விரும்பினால், போயர் போரைப் பற்றிய பாடத்தைப் படிக்க வேண்டும். சில வருடங்களுக்கு
முன்னர் பேரரசின் எதிரிகளாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாக ஆகியுள்ளனர்.
(அப்போது
மீண்டும் ஒரு குறுக்கீடு. அதற்குப் பின் மேடையிலிருந்தவர்கள் கிளம்பத்
தொடங்கியதால், பேச்சு அத்துடன் அரைகுறையாக முடிக்கப்பட்டது.)
பல்கலைக்கழகத்
துவக்க விழாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து தர்பங்கா மகராஜாவிற்கு காந்தி எழுதிய கடிதம்
பற்றி 1916 பிப்ரவரி 09 அன்று தி பயோனியர் பத்திரிக்கையில் வெளியான செய்தி
முந்தைய நாளிரவில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தனது வருத்தத்தை
தெரிவித்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தர்பங்கா மகராஜாவிற்கு விளக்கக் கடிதத்தை
காந்தி எழுதியிருக்கிறார். அதில், ‘வைஸ்ராயின் வருகை குறித்துப் பேசிய போது வன்முறை
மற்றும் அனார்கிசம் மீதான எனக்கிருக்கும் எதிர்க்கருத்துக்களை வெளிப்படுத்துவதே எனது
முதன்மையான நோக்கமாக இருந்தது. இந்தப் புனிதமான நகரில், நமது பெருமைமிகு விருந்தினராகக்
கலந்து கொண்ட மாட்சிமை தாங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு அளவிற்கு அதிகமான முன்னெச்சரிக்கைகளுடன்
வழங்கப்பட்ட பாதுகாப்பு தேவைப்பட்டது குறித்து மற்றவர்களைப் போல நானும் மிகவும் அவமானகரமாக
உணர்ந்தேன். ஆத்திரமூட்டல்கள் இருந்த போதிலும், எந்தவொரு மனிதரின் மீதும் நடத்தப்படும்
வன்முறைகள் எதுவுமின்றி எனது நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதையே எனது வாழ்க்கையின்
லட்சியமாக நான் கொண்டிருக்கிறேன்’ என்று காந்தி குறிப்பிட்டிருந்தார்.
பனாரஸிலிருந்த அனைத்து இளவரசர்களும் கலந்து கொண்டு இன்று
காலையில் நடந்த கூட்டத்தில் தர்பங்கா மகராஜா நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் குறித்து மிகவும்
சுருக்கமாகப் பேசினார். காந்தியின் பேச்சு மிகவும் வருத்தத்தையும், மனவலியையும் ஏற்படுத்துவதாக
இருந்ததாகவும், காந்தியின் இத்தகைய நடவடிக்கைகளை அனைவரும் நிச்சயமாக நிராகரிப்பார்கள்
என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். நாங்கள் அனைவரும் நிராகரிக்கிறோம் என்று கூட்டத்திலிருந்து
குரல்கள் எழுந்தன.
பம்பாயில் இருந்த மகன்பாய் பட்டேலுக்கு
1916 பிப்ரவரி 9 அன்று காந்தி எழுதிய கடிதம்
தற்போது நேரம் இல்லாததால், பனாரஸில் நடைபெற்ற குழப்பம்
குறித்து பின்னர் எழுதுகிறேன். அது மிகுந்த ஆர்வத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது.
பனாரஸ் நிகழ்வுகள் குறித்து காந்தி
அளித்த நேர்காணல் தொடர்பாக 1916 பிப்ரவரி 10 அன்று பாம்பே குரோனிக்கிள் பத்திரிக்கையில்
வெளியான செய்தி
பனாரஸிலிருந்து
நேற்று மாலையில் பம்பாய்க்கு வந்து சேர்ந்த காந்தியிடம் அவரது பேச்சு இடைமறித்து நிறுத்தப்பட்ட
நிகழ்வு பற்றி 09-02-1916 அன்று கேள்விகள் எழுப்பப்பட்ட போது, தன்னால் குறிப்பிடப்பட்ட
எந்தக் கருத்துக்களுக்கு அங்கே எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன என்பது பற்றித் தன்னால்
கூற முடியவில்லை என்று காந்தி பதிலளித்தார். கூட்டத் தலைவரிடம் என்னைத் தடுத்து நிறுத்துமாறு
திருமதி.பெசன்ட் கோரிக்கை விடுத்தது பற்றி தனக்குத் தெரியும் என்றாலும், தன்னுடைய பேச்சிலிருந்த
ஆட்சேபகரமான கருத்துக்களை பெசன்ட் சுட்டிக் காட்டியதாகத் தனக்குத் தெரியவில்லை என்று
காந்தி கூறினார்.
தன்னுடைய
அன்றைய பேச்சு 1915 மார்ச் 31 அன்று கல்கத்தாவில் திரு.லியான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
அனார்கிசத்திற்கெதிராக மாணவர்களிடம் கூறிய கருத்துக்களையே திரும்பவும் பேசியதொரு பேச்சாகவே
இருந்தது என்றார். ’பேச்சைத் தொடர வேண்டும் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் என்னை வற்புறுத்திய
போதிலும், கூட்டத்தலைவரின் அனுமதியின்றி என்னால் பேசைத் தொடர முடியாது என்று கூறியதோடு,
திருமதி.பெசன்டின் இடைமறித்தலால் பேச்சு நிறுத்தப்பட்டது குறித்து யாரும் ஆத்திரப்படக்
கூடாது என்றும், பேச்சாளரின் கருத்தை ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு கூட்டத்தலைவரின் முடிவைக்
கேட்டுப் பெறுவதற்கான உரிமை இருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம்
நான் தெரிவித்தேன். சிறிது நேரம் நடப்பவற்றைக் கவனித்த தர்பங்கா மகராஜா சுருக்காமகப்
பேசி முடிக்குமாறு அனுமதியளித்த பிறகே எனது பேச்சை மீண்டும் தொடர்ந்தேன். பேசிக் கொண்டிருக்கும்
போதே மேடையில் ஒரு சிறிய கலகம் உருவாவதைக் கவனித்தேன். எனது பேச்சை நிறுத்தாவிட்டால்,
இதற்கு மேலும் நாம் மேடையில் இருக்கக் கூடாது என்று தனக்கு அருகில் இருந்த இளவரசர்களிடம்
பெசன்ட் முணுமுணுத்ததையும் கேட்க முடிந்தது. பின்னர் மேடையிலிருந்த இளவரசர்கள் ஒருவர்
பின் ஒருவராக வெளியேற, அதனைத் தொடர்ந்து கூட்டத் தலைவரும் வெளியேறியதால் எனது பேச்சை
நான் முடிக்க இயலாமல் போனது’ என்று தெரிவித்தார்.
அந்தக்
கூட்டத்தில் பேசிய கருத்துக்களைத் திரும்பப் பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு,
அன்று நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் கவனத்துடன் அளந்து பேசப்பட்ட வார்த்தைகளாக
இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என்று காந்தி பதிலளித்தார். ‘வன்முறைக்கான வழிமுறைகளை
வழிமொழிவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கே பேசுவதற்கான ஆர்வம் உண்மையில்
என்னிடம் இருக்கவில்லை. இருந்த போதிலும் மாணவர்களிடம்
நான் மிகுந்த செல்வாக்கு கொண்டவனாக இருப்பதாகக் குறிப்பிட்டு, அங்கே நான் பேச வேண்டும்
என்று கூறிய சில நண்பர்களின் வேண்டுகோளை ஏற்றே நான் பேசினேன். மதிப்பிற்குரிய நமது
விருந்தாளிகளுக்கு நம்மிடமிருந்து வரவிருக்கின்ற
ஆபத்தை தவிர்ப்பதற்காகப் பலத்த பாதுகாப்பைத் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய
வேண்டிய சூழல், மனக்கிளர்ச்சியடைந்து வன்முறையைத் தங்கள் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளும்
நிலையை சில மாணவர்களிடம் ஏற்படுத்தியிருப்பதால், அவர்கள் என்னிடம் வன்முறை குறித்துப்
பேசுமாறு கேட்டுக் கொண்டார்கள். வன்முறை மீதான ஒப்புதல்களாக எனது பேச்சில் ஒரு வார்த்தையைக்
கூட காண முடியாது. நாட்டுப்பற்று குறித்த நோக்கங்களுக்காக வன்முறையாளர்களைப் பாராட்டினாலும்,
தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுடைய நடவடிக்கைகள் கண்டனம் செய்யப்படத் தகுதியுள்ளவைகளாக
இருப்பதைக் குறிப்பிட்டதோடு, அத்தகைய நடவடிக்கைகள் ஈடு செய்யவியலாத இழப்பை ஏற்படுத்துவதாகவும்
நான் கூறினேன். நமக்கு ஏற்பட்டிருக்கும் பல இன்னல்களுக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்ள
வேண்டும் என்பதை மையப்படுத்தியே எனது பேச்சு முழுவதும் அமைந்திருந்தது. எனது பேச்சைத்
தவறாகக் கருதி திருமதி.பெசன்ட் அவசரப்பட்டு இடையூறு செய்யாதிருந்திருந்தால், அன்றைக்கு
எதுவுமே நடந்திருக்கப் போவதில்லை என்பதோடு எனது பேச்சும் நிறைவுற்று எனது கருத்துக்களின்
மீதான எவ்வித ஐயங்களுக்கும் இடமில்லாமல் செய்திருக்கும்’ என்றார்.
அந்த நிகழ்விற்குப் பின் பண்டிட் மதன்மோகன் மாளவியா
அந்தக் கூட்டத்தில் பேசிய போது வருத்தம் தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, ‘மாளவியா அதற்குப்
பிறகு பேசினார். ஆனால் அவருடைய பேச்சில் அவர் வருத்தம் தெரிவித்ததாக என்னால் கண்டறிய
முடியவில்லை. தன்னுடைய வேண்டுகோளை ஏற்று, வன்முறைகள் தற்கொலைக்கு ஒப்பானவை என்று நான்
பேசியதாக மட்டுமே அவர் குறிப்பிட்டார்’ என்று காந்தி பதிலளித்தார்.
காந்தியின்
நேர்காணல் குறித்து அன்னி பெசன்ட் கூறியதாக 10-02-1916 அன்று நியூ இந்தியா பத்திரிக்கையில்
வெளியான செய்தி
அவர் சொல்வது அனைத்தும் குறித்துக் கொள்ளப்பட்டு ஆணையருக்கு
அனுப்பி வைக்கப்படும் என்று எனக்குப் பின்னால் இருந்த சிஐடி பிரிவைச் சார்ந்த ஆங்கிலேய
அதிகாரி ஒருவர் கூறியதன் விளைவாகவே, நான் காந்தியின் பேச்சின் போது குறுக்கீடு செய்ய
வேண்டியதாயிற்று என்று இது குறித்து காந்தி அளித்த அறிக்கை வெளியான பிறகு, அசோசியேட்
ப்ரஸ் இந்தியாவிடம் அன்னி பெசன்ட் தெரிவித்தார்.
‘காந்தி சொல்ல நினைக்காத விஷயங்கள் குறித்து கதைகள் கட்டப்படும்
என்பது எனக்குத் தெரியும் என்பதாலேயே, அந்தக் கூட்டத்தில் அரசியல் பேசுவதைத் தவிர்க்க
வேண்டும் என்ற கருத்தை கூட்டத் தலைவரிடம் நான் தெரிவித்தேன். மற்றபடி அந்தக் கூட்டத்திலிருந்து
இளவரசர்களை நான் வெளியேறச் சொல்லவில்லை என்பது மட்டுமல்லாது, அவ்வாறு சொன்னவர்கள் யார்
என்பதும் எனக்குத் தெரியாது. காந்தி யார் மீதும் குற்றம் சுமத்தாத போதிலும் கூட, அவர்
மீது குற்றம் சுமத்தப்படும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். பனாரஸில் நிலவிய சூழலில்,
காந்தியின் கருத்துக்கள் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமல் போகும் போது, அவரது தனிப்பட்ட
பாதுகாப்பு குறித்த அச்சம் என்னிடம் இருந்தது. கூட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ்
அரசாங்கத்தைச் சங்கடத்திற்குள்ளாக்கக் கூடாது என்று ஏற்கனவே சொல்லியிருந்த காந்தியின்
கருத்தின் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது என்பது அவரது நோக்கங்களிலிருந்து
எவ்வளவு மாறுபட்டது என்பது தெளிவாகப் புலப்படும்’ என்று அன்னி பெசன்ட் கூறினார்.
சென்னை
Y.M.C.A கலையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களிடம் பேசியது குறித்து 16-02-1916
அன்று நியூ இந்தியா பத்திரிக்கையில் வெளியான செய்தி
எனது உரையைக் கேட்பதற்கான ஆர்வம் என்னிடமே இருப்பதில்லை
என்று நான் அடிக்கடி கூறி வருகின்ற அதே நிலையில்தான் இன்று காலையிலும் இருந்தேன். நான்
மிகவும் நேசிக்கின்ற, மரியாதை செலுத்துகின்ற, இந்த தேசத்தின் வருங்கால நம்பிக்கையாக
கருதுகின்ற மாணவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு ஒன்றே உங்களிடம் இன்று காலையில்
பேசுவதற்கான அழைப்பை என்னை ஏற்றுக் கொள்ள வைத்தது. எந்தப் பொருளில் உங்களிடம் பேசுவது
என்று தெரியவில்லை. பனாரஸில் நடந்த விஷயங்களைப் பற்றிப் பேசச் சொல்லி நண்பர் ஒருவர்
குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அவரையும், அவரைப் போன்ற கருத்துக்களைக் கொண்டவர்களையும்
நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த நிகழ்வு குறித்து எவ்விதமான
மனஅழுத்தத்தையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியதில்லை. கடந்து செல்லும் அலைகளைப் போல
இம்மாதிரியான விஷயங்கள் வந்து செல்லும்.
அன்னி
பெசன்ட் கூறியதாக 17-02-1916 அன்று நியூ இந்தியா பத்திரிக்கையில் வெளியான செய்தி
கந்தியின் அந்த அறிக்கையின் முதல் பாராவை வாசித்த போது
நான் மிகவும் வருந்தினேன். திருமதி.பெசன்ட் எனக்குப் பின்னால் இருந்தார் என்று கூறிய
பிறகு தர்பங்கா மகராஜாவிற்கு வெகு தொலைவில் அமர்ந்திருந்த இளவரசர்களிடம் நான் முணுமுணுத்ததை
அவர் எவ்வாறு பார்த்திருக்க முடியும்? மேலும் மற்ற அனைவரும் அங்கிருந்து போன பிறகும்
எனக்கருகில் அமர்ந்திருந்த இளவரசர் அங்கிருந்து நகராமலேதான் இருந்தார். நான் இளவரசர்களோடு
வெளியேறாமல், இறுதி வரையிலும் எனது நண்பர்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தேன். நான்
நண்பர்களோடு விவாதித்துக் கொண்டிருந்ததைச் சொல்லும் காந்தி, அதே வேளையில் இளவரசர்களுடன்
நான் வெளியேறியதாகவும் கூறுகிறார். கூட்டம் முடிவுற்ற பிறகு சில நிமிடங்கள் வரையிலும்
நான் அங்கேதான் இருந்தேன். மேலும் அவர்கள் அனைவரும் வெளியேறிய வழியில் செல்லாமல், மேடையிலிருந்து
கீழிறங்கி எனது வீட்டிற்குச் செல்லும் பாதையிலேயே நான் சென்றேன்.
திரு.காந்தியின் பேச்சு குறித்த அறிக்கை என்னிடம் இல்லை.
அவர் சொன்ன எந்தக் கருத்துக்களுக்காக அவரது பேச்சை நான் இடைமறித்தேன் என்று அவர் என்னிடம்
கேட்க விரும்புகிறார். அரசாங்கத்துக்கு நாம் ஏற்படுத்துகின்ற அதிருப்தியால் பாதிக்கப்படப்
போகின்ற இளவரசர்களும், மற்றவர்களும் கலந்து
கொண்டுள்ள அரசியல் சாராத ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டுமெனவும்,
இந்திய மக்களிடம் இல்லாத, சுயாட்சி பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான
மக்களுடன் ஊர்வலம் சென்று, ஆங்கிலேயத் துப்பாக்கி முனைகளுக்கெதிராக அவர்களைக் கொண்டு
நிறுத்தி சாவதற்கும் கூடத் தயாராக இருப்பதாகவும், உரிய விளக்கம் சொல்லாமல் தன்னை அனார்கிஸ்ட்
என்று கூறியதும், வங்கப் பிரிவினையின் போது
வெடிகுண்டுகளை வீசியவர்களின் சாகசங்கள் குறித்தும் அவர் பேசியிருக்கக் கூடாது. பலமுறை
சிஐடி அறிக்கைகளால் நான் பாதிக்கப்பட்டிருப்பதாலும், இந்தப் பேச்சு சிஐடி அறிக்கைகளில்
எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை நான் நன்கு அறிவேன் என்பதாலுமே கூட்டத் தலைவரிடம்
நான் அவ்வாறு முறையிட வேண்டியதாயிற்று..
திரு.காந்தி அவர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கூட்டத்திலே
அவர் இவ்வாறு பேசியிருந்தால், அது அவரது சொந்த பிரச்சனையாக மட்டுமே இருக்கும். பிறரது
பிரச்சனையாக அது இருக்காது. ஆனால் அந்தக் கூட்டம்
நான் உறுப்பினராக இருக்கிற பல்கலைக்கழகக் கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதால்.
அவரைக் கூட்டத்திற்கு அழைத்தவர்களே அவரது பேச்சிற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டியிருக்கும்.
அங்கே எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை மீறி திரு.காந்தியை அவரது போக்கில் பேசுவதற்கு
அனுமதித்திருந்தால்... நான் அமைதியாக இருந்திருந்தால் இதை விட மோசமான குறுக்கீடுகள்
செய்யப்பட்டு இருக்கும் என்பதால், நான் அவருக்கு உதவியிருப்பதாகவே கருதுகிறேன். அவர்
கூற நினைத்த விஷயங்களை திரு.காந்தி விவரித்துள்ள போதிலும், என்னைப் பற்றி அவர் தெரிவித்துள்ள
தவறான கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன்.
அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும்
திரு.செட்லூர் அவர்களின் கடிதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.
பனாரஸ் நிகழ்வுகள் குறித்து தி ஹிந்து
பத்திரிக்கையில் 17-02-1916 அன்று வெளியான காந்தியின் அறிக்கை
பனாரஸ்
சம்பவம் குறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டியதற்கான காரணத்தை, அவ்வாறு செய்வதற்கு
எனக்கு மனமில்லாவிட்டாலும் கூட, நியூ இந்தியா பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் திருமதி.பெசன்டின்
கருத்துக்கள் மற்றும் பிற குறிப்புகள் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. நான் எனது அறிக்கையில்
இளவரசர்களிடம் அவர் முணுமுணுத்ததாக கூறியிருந்ததை திருமதி.பெசன்ட் மறுத்துள்ளார். எனது
கண்களையும், காதுகளையும் நம்பும்பட்சத்தில், நான் இன்னும் எனது முந்தைய அறிக்கையுடன்
முழுமையாக ஒத்துப் போகிறவனாகவே இருக்கிறேன். அரைவட்ட வடிவில் மேடையில் போடப்பட்டிருந்த
இருக்கைகளில், வலது புறமாக தர்பங்கா மகராஜாவிற்கு மறுபுறத்தில் இருந்த இருக்கையில்
அவர் அமர்ந்திருக்க, அவருக்கு அருகே குறைந்தது
ஒரு இளவரசர், அநேகமாக இரண்டு பேர் அமர்ந்திருந்தனர். நான் பேசிக் கொண்டிருக்கும் போது
எனக்குப் பின் திருமதி.பெசன்ட் இருந்தார். மகராஜா எழுந்த போது திருமதி.பெசன்டும் அவருடன்
சேர்ந்து எழுந்தார். ராஜாக்கள் மேடையிலிருந்து வெளியேறும் முன்பாகவே எனது பேச்சை நான்
நிறுத்தி விட்டேன். மேடையில் அவரைச் சூழ்ந்திருந்த ஒரு சிலருடன் அந்த நிகழ்வைப் பற்றி
அவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையே தடுத்து நிறுத்தாமல், பேச்சை முடித்த பிறகு
அதனிலிருந்து மாறுபடுவதாக, எனது உணர்வுகளிலிருந்து அவர் விலகியிருப்பதாக தெரிவித்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும் என்பதை அவரிடம் நான் அமைதியாகக் கூறினேன். அதற்கு அவர் சிறிது
கோபத்துடன், ‘மேடையிலிருந்த எங்கள் அனைவரையும் சங்கடத்துள்ளாக்குள்ளாக்கும் வகையில்
நீங்கள் நடந்து கொண்ட போது, நாங்கள் எவ்வாறு அங்கே அமர்ந்திருக்க முடியும்’ என்று கூறினார்.
அவரது
பார்வையில் நடந்த நிகழ்ச்சிகளை அவர் விவரித்து, எனது பேச்சை ஏன் அவர் இடைமறிக்க வேண்டியதாயிற்று
என்பதை விளக்கும் போது, நான் பேசியிருந்த கருத்துக்களைப் பேசாமல் இருந்திருக்கலாம்
என்று கூறுகின்ற திருமதி.பெசன்டிடம் என் மீதான உள்ளார்ந்த கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையிலேயே அவர் என்னைப் பாதுகாக்க நினைத்திருந்தால், அவரது அறிவுரையை ஒரு குறிப்பு
மூலமாக எழுதி அனுப்பியோ அல்லது என்னருகில் வந்து காதில் ரகசியமாகக் கூறியோ அதைச் செய்திருக்கலாம்.
என்னுடைய பாதுகாப்பிற்காகத்தான் அவ்வாறு செய்தார் எனில், நான் ஏற்கனவே கூறியதைப் போல,
இளவரசர்களுடன் சேர்ந்து எழுந்து அரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவை அவருக்கு ஏன்
ஏற்பட்டது?
என்னுடைய
பேச்சைப் பொறுத்த வரையில், இவ்வளவு வெளிப்படையாக அவர் இடைமறிக்க வேண்டிய அளவிற்கு அதில்
என்ன இருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வைஸ்ராயின் வருகை, அது குறித்து
மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிப் பேசிய பிறகு, ஒரு கொலையாளியின் மரணம்
எந்த விதத்திலும் கண்ணியமானதாக இருக்காது எனவும், அனார்கிசம் என்பது நமது சாஸ்திரங்களுக்கு
எதிரானதாக இருப்பதாகவும், இந்தியாவில் அதற்கான தேவை இருக்கவில்லை என்றும் நான் குறிப்பிட்டேன்.
மேலும் தங்களுடைய கொள்கைகளுக்காக உயிரிழப்பவர்களின் மரணம் கண்ணியமானதாக இருக்கும் போது,
அது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டேன். சதியாலோசனை செய்து வெடிகுண்டுகளை
வீசிய ஒருவர் மரணமடையும் போது, அதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கும்? வெடிகுண்டுகளை
வீசியவர்கள் அவ்வாறு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்காவிட்டால் பிரிவினை இயக்கங்கள் மூலமாக
சாதிக்க முடிந்திருக்காது என்று முன்வைக்கிற போலிவாதம் குறித்துப் பேசிய போதுதான் எனது
பேச்சை நிறுத்தச் சொல்லுமாறு கூட்டத் தலைவரிடம் திருமதி.பெசன்ட் கேட்டுக் கொண்டார்.
வன்முறைகளைச் செய்யுமாறு மாணவர்களைத் தூண்டி விடுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை
என்பதற்கான சான்றாவணமாக எனது முழு பேச்சும் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
உண்மையில் அது சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்.
ஆங்கிலத்தில்
பேசுவதென்பது எனக்கும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் அவமானமாக இருக்கிறது
என்பதைக் குறிப்பிட்டே நான் பேச ஆரம்பித்தேன். ஆங்கிலம் போதனா மொழியாக இருப்பது நாட்டிற்கு
பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், கடந்த ஐம்பது வருடங்களில் நமது மொழிகளின் மூலம்
கல்வி கற்றிருந்தால், இந்நேரம் நமது இலக்கிற்கு அருகாமையில் நாம் இருந்திருப்போம் என்றும்
தெரிவித்தேன். சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான
திட்டங்களைத் தயாரித்து அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியும், அனைத்திந்திய முஸ்லீம்லீகும்
சுயாட்சிக்கான தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்
என்று குறிப்பிட்டேன். நமது கடமைகளிலிருந்து எவ்வாறு விலகியிருக்கிறோம் என்பதை அறிந்து
கொள்வதற்காக, காசி விஸ்வநாதர் ஆலயத்தைச் சுற்றி பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள தெருக்களின்
அசுத்தமான நிலைமை, தெருக்களின் விஸ்தீரணத்திற்கு மீறிய அளவில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள
கட்டிடங்கள் பற்றி பேசினேன். அந்த அடித்தளம் நாட்டுகின்ற விழாவிற்கு இந்திய வாழ்க்கை
முறைகள் பற்றி எதுவும் அறியாத ஒருவரை அழைத்துச் சென்றிருந்தால், அன்று அங்கு வந்திருந்த
கனவான்கள் அணிந்திருந்த நகைகளைப் பார்த்து உலகிலேயே பணக்கார நாடாக இந்தியா இருப்பதாக
எண்ணி இருப்பார் என்றும் தெரிவித்தேன்.
நமது
லட்சியங்களை அடைவதற்கு முன்னராக தங்களுடைய செல்வங்களைப் பத்திரமாக நாட்டிற்காக வைத்திருப்பது
தேவையானதாக இருக்கிறது என்று ராஜாக்கள், மகாராஜாக்களிடம் நகைச்சுவையாகக் கூறினேன்.
யாரும் அவ்வாறு அவர்கள் வழங்குவதை அவர்களிடமிருந்து எதிர்பார்க்காத போதிலும், தங்களுக்குச்
சொந்தமாக பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்ற செல்வங்களையும், நிலங்களையும் பெருமை
வாய்ந்த சிறப்புரிமையாகக் கருதி நாட்டிற்கு வழங்குகின்ற ஜப்பானின் பெருந்தன்மை மிக்க
மனிதர்களை அதற்கு உதாரணமாகக் கூறினேன். நமது விருந்தாளியாக வந்திருந்த வைஸ்ராய் அவர்களுக்கு,
நம்மிடமிருந்தே பாதுகாப்பு தேவைப்படுவது குறித்து சிந்திக்க வேண்டுமென்று அங்கிருந்த
பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் நடைபெற்று வருகிற கட்டமைக்கப்பட்ட
கொலைகளே இவ்விதமான பாதுகாப்பை வழங்குவதற்கு காரணமாய் இருப்பதால், அதற்கான பொறுப்பை
நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன்.
மாணவர்களிடம் ஒருபுறம் நமது சமுதாயத்தில் நிலவி வரும் குறைகளைக் களைய அவர்கள் எவ்வாறு
உதவ முடியும் என்பதையும், மறுபுறம் வன்முறைச் சிந்தனைகளை தங்களிடமிருந்து அகற்ற வேண்டியதன்
அவசியம் பற்றியும் விளக்கினேன்.
இருபது
வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்து வருகின்ற நான், கொந்தளிப்பான நிலைமையில் இருக்கிற
கூட்டத்தினரை பல்வேறு கூட்டங்களில் பேசுகின்ற போது சந்தித்திருப்பதால், பார்வையாளர்களின்
எண்ணவோட்டத்தைக் கண்டறியும் அனுபவம் எனக்கு இருக்கிறது. எனது பேச்சு எவ்வாறு எடுத்துக்
கொள்ளப்படுகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வந்த என்னால், அன்றைய தினம் எந்த விதத்திலும்
மாணவர்கள் எனது பேச்சால் தூண்டப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த
நாள் காலையில் என்னைச் சந்தித்த சில மாணவர்கள் எனது கருத்துக்களை தாங்கள் சரியாகப்
புரிந்து கொண்டதாக என்னிடம் தெரிவித்தனர். விவாதங்களில் ஈடுபாடு கொண்ட மாணவர் ஒருவர்
என்னிடம் பல்வேறு குறுக்குக் கேள்விகளைக் கேட்டு எனது பேச்சின் தொடர்ச்சியாக சில விவாதங்களை
எழுப்பிய பிறகு திருப்தியடைந்தார். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என்று பல்வேறு
நாடுகளில் மாணவர்களிடமும், நமது நாட்டைச் சேர்ந்த பொதுமக்களிடமும் நான் பேசியிருக்கிறேன்.
அன்று மாலையில் நான் வைத்த விவாதங்களிலிருந்த கருத்துக்கள் மாணவர்களை அனார்கிச முறைகளிலிருந்து
விடுவிக்கும் வகையில் அமைந்ததாகவே நான் கருதுகிறேன்.
அந்த
நிகழ்ச்சி குறித்து தி ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய பம்பாயைச் சேர்ந்த செட்லூர் என்னிடம்
நட்பு பாராட்டாதவராக இருப்பதோடு, என்னைக் குறி வைத்து தாக்கும் விதத்தில் மட்டுமே அவர்
எழுதியிருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும் நடந்த நிகழ்வுகளை நேரில் கண்டவரான செட்லூர்,
அன்றைய நிகழ்வுகளை திருமதி.பெசன்ட் விவரித்துள்ள விதத்திற்கு மாறாகவே பதிவு செய்துள்ளார்.
அனார்கிசத்தை ஆதரிப்பவனாக நான் பேசவில்லை என்று கருதுகின்ற செட்லூர், அதிகார மையத்திலிருப்பவர்களுக்காக
வாதாடி ஆதரவு தெரிவிப்பவனாக நான் இருப்பதாகக் கூறுகிறார். அவர் கூறுவது அனைத்தும் உண்மை
எனும் பட்சத்தில், வன்முறையைத் தூண்டியவன், நகைகள் குறித்து நான் பேசியது ஏற்கத்தகாதது
என்று என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து நான் விடுபட்டவனாகி விடுகிறேன்.
திருமதி.பெசன்ட்டுக்கும்,
எனக்கும் முழுமையான நியாயம் கிடைக்கும் வகையில் எனது ஆலோசனையாக இதை நான் தெரிவிக்கிறேன்.
இளவரசர்கள் வெளியேறியதற்கு தான் காரணமல்ல என்றும், வேறு யாரோ அதைச் செய்திருப்பதாகவும்
அவர் கூறுகிறார். ஏற்கனவே உளவாளிகள் எனது பேச்சை கைகளில் வைத்திருக்கும் போது, அவரது
முந்தைய அறிக்கையின்படி பார்த்தால் கூட, எனது பாதுகாப்பு குறித்த அவரது அக்கறை ஒரு
போதிலும் எனக்கு உதவாது.
ஆகவே
எனது பேச்சை, அவரிடம் அது இருந்தால், உள்ளது உள்ளவாறே அவர் பிரசுரிக்க வேண்டும். இல்லையேல்
எனது பேச்சை அவர் இடையூறு செய்தது, அதற்குப் பின்னர் இளவரசர்கள் வெளியேறியது போன்ற
செயல்களுக்குக் காரணமாக எனது பேச்சில் இருந்ததாக அவர் கருதும் கருத்துக்களைப் பற்றித்
தெரிவிக்க வேண்டும்.
நான்
ஏற்கனவே கூறியிருந்தவாறே எனது இந்த அறிக்கையை முடிக்கிறேன். திருமதி.பெசன்ட் குறுக்கிடாமல்
இருந்திருந்தால், சில நிமிடங்களிலேயே எனது பேச்சை நான் முடித்திருப்பேன். அவ்வாறு முடித்திருக்கும்
பட்சத்தில் அனார்கிசம் குறித்த எனது கருத்துக்கள் தவறாகக் கருதப்பட்டிருக்காது.
18-02-1916
அன்று நியூ இந்தியா பத்திரிக்கையில் வெளியான காந்தியின் கடிதம்
17-02-1916 அன்று வெளியாகியுள்ள தங்களது தலையங்கத்தில்,
மிஷினரிகளின் அழுத்தத்தாலேயே, பனாரஸ் நிகழ்வு குறித்து நான் பழைய நிலைக்கே திரும்பி
விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 09-02-1916 அன்று வெளியான எனது அறிக்கைக்கும் மிஷனரிகளுக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும், எந்த மிஷினரியுடனும் இது குறித்த எனது உரையாடல்
நடைபெறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்…
அன்னி
பெசன்ட் அளித்த விளக்கம் குறித்து 19-02-1916 அன்று நியூ இந்தியா பத்திரிக்கையில் வெளியான
செய்தி
காந்தியின் பேச்சு குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையைப் படித்தவர்களால், நான் ஏன் அவரது பேச்சை இடைமறித்தேன் என்பதை நான் விளக்க
வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளின் மூலமாக தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும் திரு.காந்தியின்
அறியாமையைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
. . . மற்றவர்களிடம் நான் கூற மறுத்த விஷயங்கள் பற்றிப்
பேசுவதற்கு, காந்தியே இப்போது என் மீது அழுத்தம் கொடுப்பதனால், அவரது கருத்தோட்டத்தில்
தவறாகப்படுகின்ற வார்த்தைகள் உண்மையில் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதவையாக மட்டுமே
இருந்தன என்பதைத் தெரிவிப்பதற்காக என்னால் இப்போது தாராளமாகப் பேச முடியும். தேவையற்ற
வகையில் அவமானப்படுத்தப்படும் வகையில் சிஐடி அதிகாரிகளால் நடத்தப்பட்டது, ஆண்கள், வயதான
பெண்கள் என்று பலரும் மோசமான முறையில் நடத்தப்பட்டது, நகரில் இருந்த மரியாதைக்குரியவர்கள்
சிலரை முந்தைய நாட்களில் கைது செய்தது குறித்து அன்றைய தினம் கல்லூரிக்கு வந்திருந்த
மாணவர்களில் பலரும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை
என்றாலும், மாணவர்களிடமிருந்த ஆத்திரம் குறித்து நான் நன்கு அறிந்திருந்தேன். வெடிக்கும்
நிலையில் உள்ள வெடிமருந்து தூளைப் போன்ற நிலையில் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
இருந்தனர். காந்தி முன்வைக்கின்ற ‘எதிர்ப்பற்ற கொள்கை’ குறித்து அறியாத சிலர், அவரது
பேச்சில் அவரால் குறிப்பிட்டப்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களை அவர் நியாயப்படுத்துவதாகக்
கருதி, அவருக்கு உடன்பாடில்லாத அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடக் கூடாது என்றே
நான் அஞ்சினேன்.
கட்டாயத்தின்
பேரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைப் பற்றி திரு.காந்தி கூறிய கருத்துக்கள்
சுயாட்சி இயக்கத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் பங்கெடுத்து வரும் எனது வாயிலிருந்து வரக்
கூடிய வார்த்தைகளிலிருந்து மாறுபட்டதாகவும், விவேகமற்றவையாகவும் இருந்தன. சுயாட்சி
கொண்ட ஒரு தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையைப் பலரும் தங்களது மனத்தில்
கொண்டிருப்பதால், அவருடைய அந்தக் கருத்தை நான் கூறியிருந்தால், அது ஒரு அச்சுறுத்தலாக
இருந்திருக்கும். ஆட்சி அதிகாரத்தை நீக்குவதற்காகப் போராட்டங்களை முன்னெடுக்கும் வேலைகளைச்
செய்தாலும், வருங்காலத்தில் அமையவிருக்கும் அரசாங்கத்திற்கு ஆங்கிலேயர்களது உதவி தேவை
என்று கருதுபவளாகவே நான் இருப்பதால், ‘நீங்கள் அவ்வாறு சுயாட்சியைக் கொண்டு வர விரும்பாத
பட்சத்தில், அது குறித்து அவ்விதமான கருத்தை ஏன் தெரிவிக்க வேண்டும்?’ என்றே நான் சொல்லியிருப்பேன்.
‘நீங்கள் சுயாட்சிக்குத் தகுதியானவர்கள் இல்லை’ என்று கூறும் திரு.காந்தியை அத்தகைய
நோக்கங்களைக் கொண்டவராகக் கருதிவிட முடியாது. அவர் அவ்வாறு கருதவில்லை என்ற போதிலும்,
அவ்வாறு அவர்கள் தயாராக இருந்தாலொழிய துப்பாக்கி முனைகளுக்கருகில் சென்று உயிரிழக்க
எண்ணியிருக்க முடியாது. எனது கருத்துக்களைப் போலவே திரு.காந்தியின் உதடுகளிலிருந்து
வந்த வார்த்தைகளும் சண்டையிடுவதற்கான தொனியைக் கொண்டிருக்கவில்லை. ஆயுதங்களுக்கெதிராகத்
தலைமையேற்றிருந்த அவர் சாவதற்குத் தயாராக இருந்தாரே தவிர, வன்முறையின் வாயிலாக யாரையும்
கொல்வதற்கு அல்ல. அவரது எதிர்ப்புகள் அனைத்தும் சாத்வீகமுறையில் இருந்தனவே ஒழிய, பிறருக்குத்
துன்பத்தை ஏற்படுத்தும் சாகசங்கள் கொண்டவையாக இருந்ததில்லை. எனவே அவரைச் செயல்பாட்டுத்
திறன் கொண்ட ஒரு அரசியல்வாதியாகக் கணிக்க முடியாது என்றே நான் சொல்லுவேன். தன்னுடைய
மற்றும் தனது தொண்டர்களுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்தவராக அவர் இருந்தாரே தவிர, தனது
எதிரிகளின் வாழ்வை ஒருபோதும் இடர் நிரம்பியதாக்க நினைத்தவராக அவர் இருந்ததில்லை.
அனார்கிசம்
என்பது வெடிகுண்டுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், நான் ஒரு அனார்கிஸ்ட்
என்று கூறுவது அறிவார்ந்த செயல் அல்ல என்பதை எவ்விதத் தயக்கமுமின்றி என்னால் கூற முடியும்.
திரு.காந்தி ஒரு தத்துவார்த்த அனார்கிஸ்ட் என்ற முறையில் டால்ஸ்டாயுடன் ஒத்துப் போகிறவராக
இருக்கிறார். பெரும்பாலும் ஐரோப்பாவில் வசிக்கும் கனவான்களான ஆண்களும், பெண்களும் திரு.காந்தி
உபயோகப்படுத்திய பொருளில் அனார்கிஸ்டுகளாகவே இருக்கின்றனர். சட்டங்களுக்கு அப்பாற்பட்டு,
கடவுளின் வழிநடத்துதலின் பேரில் உண்மையான மறைஞானிகளாக இருக்கின்ற இளவரசர் குரோபோட்கின்,
எட்வர்ட் கார்ப்பெண்டர், வால்ட் விட்மேன் போன்ற அனைவரும் இவ்வகையிலான எண்ணங்களைக் கொண்டவர்களாகவே
இருக்கின்றனர். டால்ஸ்டாயுடன் திரு.காந்தியை ஒப்பிடுவதில் மெட்ராஸ் மெயில் பத்திரிக்கை
எரிச்சலடைந்துள்ளது. இலக்கியத்தைத் தவிர்த்துப் பார்த்தால் இருவரில் திரு.காந்தியே
சிறந்தவராக இருக்கிறார். தனது செருப்புக்களைத் தானே தைத்துக் கொள்ளும் விவசாயியாக இருக்கின்ற
டால்ஸ்டாயைப் போலவே இருக்கின்ற காந்தி கூடுதலாக தனது சமுதாயத்திற்கு உதவி செய்வதற்காக
உழைப்பவராகவும் இருக்கிறார். தென்னாப்பிரிக்க அரசாங்கத்தால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட
காந்தியைப் போல ரஷிய அரசாங்கத்தால் சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட டால்ஸ்டாய், ஒருபோதும்
தன்னுடைய மக்களுக்காகத் துன்பப்பட்டவராக இருந்ததில்லை. ஆங்கிலோ-இந்தியர்களால் வியந்து
பாராட்டப்படுவதற்கான வாய்ப்பைக் கொண்டவராக டால்ஸ்டாய் இருக்கிறார். ஆனால் காந்தியோ
அவர்களால் திட்டப்படும் நிலையிலே இருக்கிறார். ஒருவகையில் இருவரும் தீர்க்கதரிசிகளாகக்
கருதப்பட்டு அனைவராலும் விரும்பப்படுகின்றவர்களாகவே இருக்கின்றனர்.
இன்றைய
நிலைக்குத் தகுந்தவையாக உள்ளதால், 1894ஆம் ஆண்டு மெட்ராஸ் காங்கிரஸில் நான் ஆற்றிய
உரையில், அனார்கிஸம் பற்றிய தத்துவார்த்த விளக்கங்களைக் குறிப்பிடுவதற்காகப் பேசியவற்றை
நினைவுபடுத்துகிறேன். ‘வெகு காலத்திற்கு முன்பாக அரசு என்ற ஒன்று இல்லாத நிலையில்,
தன்னுடைய சகோதரருக்கு கடவுளைத் தவிர வேறெதனையும் கற்றுத் தர வேண்டிய அவசியம் தீர்க்கதரிசியானவருக்கு
இல்லாமல் இருந்தது’ என்று என்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தேன். நாள் முழுவதும் உழைத்துக்
கொண்டிருக்கும் இன்றைய உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தேவைப்படாத ஒன்றாக
இருந்த போதிலும், அனார்கிசத்தை வெகு தொலைவில் இருக்கின்ற ஆனாலும் கடைப்பிடிக்கப்பட
வேண்டிய சீரிய குறிக்கோளாகவே டால்ஸ்டாய், காந்தி, கார்பெண்டர் போன்றோர் வலியுறுத்துகின்றனர்.
மனிதன் தனது அகத்திலிருக்கும் தெய்வீகச் சட்டங்களால் வழி நடத்தப்படுகின்றவனாக இருக்கும்
போது மட்டுமே, வெளியிலிருந்து பலவந்தமாகப் போடப்படுகின்ற சட்டங்களைப் புறக்கணிக்க இயலும்.
தன்னலமற்ற, தூய்மையான, எளிமையான தியாக வாழ்வை அனுதினமும் கடைப்பிடித்து வருகின்ற காந்திக்கு
என்ன விதமான புறச்சட்டங்கள் தேவைப்படும்? இத்தகைய மனிதர்கள் தாங்கள் பிறந்த நாட்டின்
சொத்தாக அனைவருக்கும் எழுச்சியூட்டும் வகையில் திகழ்கின்றனர்.
காந்தியின்
கருத்துக்கள் தொலைநோக்கு கொண்டவையாக, இன்றைய சூழலுக்கு ஒவ்வாதவையாக இருப்பதாகவே நான்
கருதுகிறேன். இத்தகைய கருத்துக்கள் நடைமுறைக்குச் சாத்தியப்படாதவையாக இருப்பதோடு, அதிகார
மாற்றத்திற்கு எதிரானவையாக இடையூறு செய்பவைகளாகவும் இருக்கின்றன. இன்று நிலவும் அசாதாரண
சூழலில், அவரது கூற்றுக்கள் அறிவார்ந்தவையாக இல்லை என்பது தெரிந்தாலும், ஆங்கிலோ-இந்தியர்கள்
மற்றும் அதிகார மையங்களின் தாக்குதல்களிலிருந்து அவரைக் காப்பதற்கு அவரது வாழ்க்கைமுறை
மற்றும் அவரது உயர்ந்த கொள்கைகளை மதிக்கின்ற பல்லாயிரக்கணக்கிலான நாம் ஒன்று சேர்ந்து
அவரைச் சூழ்ந்து நிற்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments