மில்லி கெஜட் பத்திரிக்கை
இந்திய அரசியலில், குறிப்பாக ஹிந்துத்துவா வகை இந்திய அரசியலில், பால்ராஜ் மதோக் குறித்து எந்த அறிமுகமும் தேவையிருக்கப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் மிகமிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த அவர், 1920ஆம் ஆண்டு குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பிறந்தவர். 1942 முதல் பெரும்பாலான நேரங்களில் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கிய அமைப்பாளராக அவர் செயல்பட்டு வந்திருக்கிறார்.
தேசப்பிரிவினைக்கு முந்தைய நாட்களில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் என்ற
முறையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ராஜ் மதோக், மாநிலத்தை
விட்டு வெளியேறுமாறு சேக் அப்துல்லா அரசால்
உத்தரவிடப்பட்ட 1948ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து வந்தார். டெல்லியில் ஆர்கனைசர் என்ற ஆர்.எஸ்.எஸ்சின் ஆங்கிலப் பத்திரிக்கையின்
ஆசிரியராக இருந்த அவர், 1948இல் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை நிறுவினார். பின்னர் 1951ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்சின்
அரசியல் பிரிவான பாரதிய ஜனசங்கத்தை (பிஜேஎஸ்) நிறுவுவதில் சியாமா பிரசாத் முகர்ஜியுடன்
இணைந்தார்.
பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் (1951-1965), டெல்லி
பாரதிய ஜனசங்கத் தலைவர் (1954-1963) போன்ற முக்கியமான பதவிகளை வகித்த அவர், இறுதியாக
அகில இந்திய பாரதிய ஜனசங்கத் தலைவராகப் (1965-1967) பொறுப்பேற்று உச்சக்கட்டத்தை அடைந்தார்.
அவரது பொறுப்பில் நடைபெற்ற 1968 பொதுத்தேர்தலில் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து
பாரதிய ஜனசங்கம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு
டெல்லியில் இருந்து இரண்டு முறை (1961 & 1967) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது வாழ்க்கை முழுவதும் ஈடுபாடு கொண்ட அரசியல்வாதியாக இருந்த போதிலும்
பால்ராஜ் சளைக்காத எழுத்தாளராகவும் இருந்து வந்திருக்கிறார். சர்ச்சைக்குரிய அரசியல்
எழுத்துக்களுக்கு பெயர் பெற்றவராக அவர் இருந்தார். 1969ஆம் ஆண்டில் 'இந்தியமயமாக்கல்'
கோட்பாட்டை முன்வைத்தன் மூலம். சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கான
ஹிந்துத்துவா கருத்தியல் மறுமொழியை வெளிப்படுத்துவதில் அவர் முக்கியப் பொறுப்பேற்றிருந்தார்.
வாழ்க்கைப்பயணம்-1 (ஜிந்தகி கா சஃபர்-1), வாழ்க்கைப்பயணம்-2 (ஜிந்தகி கா சஃபர்-2) என்று
1994இல் முதல் இரண்டு தொகுதிகளாக தனது சுயசரிதையை
பால்ராஜ் வெளியிட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் இந்தத் தொடரின் மூன்றாவது தொகுதி ’வாழ்க்கைப்
பயணம்-3: தீன் தயாள் உபாத்யாயாவின் கொலை முதல் இந்திரா காந்தியின் கொலை வரை’ (ஜிந்தகி
கா சஃபர்-3: தீன் தயாள் உபாத்யாய் கி ஹத்ய சே இந்திரா காந்தி கி ஹத்ய தக்) என்ற பெயரில்
வெளியானது. அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய உண்மைகளால் நிறைந்திருந்த
அந்த தொகுதி, அதிக சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
அவருடைய சுயசரிதையின் இந்தப் பகுதி 1968 மற்றும் 1984க்கு இடையிலான
அரசியல் நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கின்றது. பாரதிய ஜனசங்கத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட
தீன் தயாள் உபாத்யாயாவின் (1916 செப்டம்பர் 25 - 1968 பிப்ரவர் 11) சர்ச்சைக்குரிய
மரணத்தில் தொடங்குகின்ற இந்த தொகுதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் துரதிர்ஷ்டவசமான
மரணத்துடன் நிறைவடைகிறது. பால்ராஜின் சுயசரிதையின் தற்போதைய தொகுதியில் எழுப்பப்பட்டுள்ள
பிரச்சினைகளும், சர்ச்சைகளும் அதற்கு முன்னதாகவே மக்கள் கவனத்தில் இருந்தன என்பது உண்மைதான்.
முக்கியமான தலைவராக, சித்தாந்தவாதியாக, ஆர்.எஸ்.எஸ்சின் சிந்தனையாளராக இருந்த தீன்
தயாள் உபாத்யாயாவின் சர்ச்சைக்குரிய மரணம் (அதை கொலை என்று பால்ராஜ் விவரிக்கிறார்)
மற்றும் அந்தக் குற்றத்தில் உடந்தையாக இருந்த அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களான வாஜ்பாயி,
நானா தேஷ்முக் போன்ற சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து விளக்கங்களைக் கோருகின்ற சர்ச்சையை
ஏற்படுத்தப் போகும் பல நேரடி உண்மைகளை தன்னுடைய சுயசரிதையில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
மேற்குறிப்பிடப்பட்ட இருவரையும் அவர்கள் செய்த தவறான செயல்களில் இருந்து பாதுகாத்த
குற்றவாளி என்று ஆர்.எஸ்.எஸ்சின் அப்போதைய சர்சங்சாலக் (தலைவர்) பாலாசாகேப் தேவரஸ்
மீதும் பால்ராஜ் குற்றம் சுமத்துகிறார். இந்த சுயசரிதை நம்பப்படுமேயானால், ஏற்கனவே
ஆர்.எஸ்.எஸ்சின் உயர்பீடம் அடைந்துள்ள சீரழிவு நிலை இன்னும் மோசமாகும். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுயம் சேவக்கான
(பிரச்சாரகர்) பால்ராஜ் மதோக் எழுதியுள்ளார் என்பதே இந்த சுயசரிதையின் மிக முக்கியமான
அம்சமாக இருக்கிறது.
சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் உண்மைகள் குறித்து
தான் எழுதியிருக்கும் விதத்தைக் கோடிட்டுக் காட்டும் போது, ‘கொந்தளிப்பான இந்தக் காலகட்டத்தில்
நடந்த முக்கியமான சம்பவங்கள், என்னுடைய அனுபவங்கள், என் மீது அவர்கள் ஏற்படுத்தியிருக்கும்
தாக்கம், ஜனசங்கம் மற்றும் தேசத்தின் வாழ்வு பற்றிய உண்மையான புறநிலை விவரிப்புகளையும்,
மதிப்பீடுகளையும் தருவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன். வரலாற்று மாணவன் என்பதால்,
மாறுபட்ட விளக்கங்கள் இருக்கலாம் என்றாலும் வரலாறு குறித்து உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்
‘உண்மைகள் புனிதமானவை’ என்ற கொள்கையை நான்
எப்போதும் மனதில் கொண்டவனாகவே இருக்கிறேன்’ என்று புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
1968 பிப்ரவரி 11 அன்று நடந்த தீன் தயாள் உபாத்யாயாவின் கொலை, ஜனசங்கத்தைத்
தடம் புரட்டிய கொடூரமான புயலின் தொடக்கமாக, முன்னோடியாக இருந்தது என்றே பால்ராஜ் கருதுகிறார்.
உபாத்யாயாவின் கொலையில் உள்ள மர்மத்தை வெளிக்கொணர்வதற்கு முன்பாக ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்,
அந்தச் சதித்திட்டத்திலே ஈடுபட்டவர்கள் யார், அந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின்
நோக்கம் மற்றும் குறிக்கோள் என்ன என்பது போன்ற சில கேள்விகளை எழுப்புன்ற மதோக், இந்தக்
கேள்விகள் அனைத்துமே மர்மமாக மறைக்கப்பட்டுள்ளன என்றும். ஆனால் அந்தக் கொலை குறித்த
அனைத்து மர்மங்களையும் வெளிப்படுத்தப்படும் வகையில் சூழ்நிலை ஆதாரங்கள் இருப்பதால்,
அவையனைத்தும் (நிச்சயமாக) வெட்ட வெளிச்சத்திற்கு வரும் (பக்கம் 14-15) என்று தெரிவிக்கிறார்.
பால்ராஜின் அந்த சுயசரிதை,
தீன் தயாள் உபாத்யாயாவின் கொலை குறித்த உண்மைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவதன்
மூலம் கொலையின் பின்னணியில் இருந்த சதித்திட்டங்களை
அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, மிகமுக்கியமான சட்ட ஆவணமாகவும் இருக்கிறது. தீன் தயாள் உபாத்யாயாவைக்
கொன்றவர்களை நேரடியாக அடையாளம் காட்ட வரும் போது, ‘ஒன்று மிகத்தெளிவாக உள்ளது. தீன்
தயாள் உபாத்யாயாவின் கொலைக்குப் பின்னால் கம்யூனிஸ்டுகளின் கைகளோ அல்லது எந்தவொரு
திருடனுமோ இருக்கவில்லை... கூலிப்படையாலேயே
அவர் கொலை செய்யப்பட்டார். சுயநலமிகளாக இருந்த, சட்டத்தை மீறி குற்றம் செய்கின்ற
மனநிலை கொண்டிருந்த, ஜனசங்கத்தைச் சார்ந்த
தலைவர்களே அந்தக் கொலைக்கு ஆதரவளித்த
சதிகாரர்களாக இருந்தனர்’ (பக்கம் 22) என்று குறிப்பிடத்தக்க தகவலை அளிக்கிறார்:
‘தீன் தயாள் உபாத்யாயாவைக் கொலை செய்வதற்காக சதி செய்ததாக சந்தேகத்தின் விரல் யாரைச் சுட்டிக் காட்டுகிறதோ, அந்த பேராசை கொண்ட
சுயநலமிகள் அனைவரும் அவருடைய பெயரைக் கொண்டு
பயனடைந்ததைத் தவிர, அவரது கொலை பற்றிய உண்மை வெளிவருவதை விரும்பவில்லை. இருப்பினும்,
தீன் தயாள் உபாத்யா சிந்திய ரத்தம் நிச்சயம் பழி தீர்த்துக் கொள்ளும், வரலாறு நிச்சயம்
அவருக்கான நீதியை வழங்கும். அவரைக் கொல்ல சதி செய்தவர்கள் சாபத்திற்கு
உள்ளாவார்கள் என்று ஒரு வரலாற்று மாணவனாக
நான்
நம்புகிறேன்’ (பக்கம் 15) என்று அந்த சுயசரிதையில் உண்மைகளை மறைப்பதற்கான கொலையாளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியைப்
பற்றி குறிப்பிடப்படுகிறது.
சுயம்சேவக் ஒருவரால் எழுதப்பட்ட இந்த சுயசரிதை, பாரதிய ஜனசங்கத்தின் தலைவரான தீன் தயாள் உபாத்யாயாவின்
கொலையில் முக்கிய சதிகாரர்களாக அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நானா தேஷ்முக் ஆகியோரை
நோக்கி விரலைக் காட்டுவதில் எவ்விதத் தயக்கமும் கொண்டிருக்கவில்லை. ‘தீன் தயாள் உபாத்யாயாவின்
கொலை குறித்த சந்தேகத்தின் விரல்கள், அவர்களை
நோக்கியே சுட்டிக் காட்டுகின்ற வகையிலே வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் இருக்கின்றன’ (பக்கம் 23). என்கிறார்.
பாரதிய ஜனசங்கத்தின் முன்னணி பதவிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாலேயே
தீன் தயாள் உபாத்யாயா படுகொலை செய்யப்பட்டார் என்று அந்தச் சுயசரிதை கூறுகிறது. 1967
டிசம்பரில் பால்ராஜ் மதோக்கிடமிருந்து ஜனசங்கத்
தலைவர் பதவியை தான் ஏற்றுக் கொண்டதிலிருந்தே, அடல் பிஹாரி வாஜ்பாய், நானா தேஷ்முக்
இருவரையும் கட்சியின் முக்கியமான பதவிகளில் இருந்து தீன் தயாள் உபாத்யாயா ஒதுக்கியே வைத்திருந்தார்
என்பதை இங்கே கவனிக்க வேண்டும். உபாத்யாயா கொலை செய்யப்பட்டார்
என்றே பால்ராஜின் கூற்று உள்ளது. ‘அமைப்பின்
நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, ஜனசங்கத்தில் மோசமான
நபர்களுக்கு பதவி உயர்வு கிடைத்து விடக் கூடாது
என்பதை தீன் தயாள் தொடர்ந்து முயற்சித்து
வந்தார். இதனாலேயே நன்னடத்தையற்ற சில சுயநலமிகள், தங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்கான
பாதையில் தடைக்கல்லாக அவர் இருப்பதாகவே பார்த்தனர்’ (பக்கம்
145) என்று கொலைக்கான காரணத்தைச் சொல்கிறார்.
இந்த நன்னடத்தையற்ற சுயநலமிகள் யார் என்று சொல்வதற்கோ, அவர்களின்
பெயர்களைக் கூறுவதற்கோ பால்ராஜ் சற்றும் தயங்கவில்லை.
ஏற்கனவே ஜனசங்கத் தலைவராக இருந்திருந்த பால்ராஜ் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவராக இருக்கிறார்.
‘ஜனசங்கத்தின் தலைவராக நான் இருந்தபோது, மத்திய அலுவலகத்தின் பொறுப்பாளராக
இருந்த ஜெகதீஷ்பிரசாத் மாத்தூர், 30 ராஜேந்திர
பிரசாத் சாலையில் உள்ள வீட்டில் அடல் பிஹாரியுடன் தங்கியிருந்தார். அந்த வீட்டை ஒழுக்கக்
கேடான நடவடிக்கைகளுக்கான இடமாக அடல் பயன்படுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு நாளும் புதுப்புது
பெண்கள் அங்கே வருகிறார்கள். விஷயங்கள் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. ஜனசங்கத்தின்
மூத்த தலைவராக நான் இந்த உண்மையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வரத் துணிந்தேன் என்று
அவர் என்னிடம் புகார் தெரிவித்தார். அடலின் குணநலன்கள் பற்றி என்னிடம் சில தகவல்கள் இருந்தாலும், நிலைமை இவ்வளவு
மோசமடைந்திருப்பது பற்றி எனக்குத் தெரியாது.
என் வீட்டிற்கு நான் அடலை வரவழைத்தேன்.
மூடிய அறைக்குள் ஜெகதீஷ் பிரசாத் மாத்தூர் கூறிய விஷயங்கள் குறித்து நான் அவரிடம் விசாரித்தேன். ஜகதீஷ் பிரசாத்
மாத்தூர் தெரிவித்தவற்றை உண்மை என்று
நிரூபிக்கின்ற வகையிலேயே அவர் கூறிய விளக்கம் இருந்தது. அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடுவதோடு, ஜனசங்கத்தின் நற்பெயரும்
பாதிக்கப்படும் என்பதால் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் அப்போது பரிந்துரைத்தேன்’ (பக்கம் 25) என்று பால்ராஜ் எழுதியுள்ளார்.
தீன் தயாள் உபாத்யாயா தலைவராவதற்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த
பால்ராஜ் பாரதிய ஜனசங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மிக அருகில் இருந்து உன்னிப்பாக
கவனித்து வந்தார். கட்சியின் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாயை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ்
தலைமையின் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு பிரிவினர் ஆர்வம் காட்டியதைக் கண்டு அவர் மிகுந்த
ஆச்சரியமடைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அன்றைய சர்சங்சலாக், எம்.எஸ்.கோல்வால்கரின் கவனத்திற்கு இந்த உண்மைகள் அனைத்தையும் பால்ராஜ் கொண்டு சென்றார். இது குறித்து எழுதும்
போது கோல்வால்கருடனான டெல்லியில் 1970களின்
முற்பகுதியில் அந்தச் சந்திப்பு நடந்தது
என்று குறிப்பிடும் பால்ராஜ், ‘எனது பேச்சைக் கேட்ட பிறகு, அவர் சிறிது நேரம் அமைதியாக
இருந்தார். பின்னர் இவர்களின்
நடத்தையில் உள்ள பலவீனங்களை நான் அறிவேன். ஆனாலும் ஓர் அமைப்பை நடத்த வேண்டியிருப்பதால், அனைவரையும் நான் ஒருங்கிணைத்து
அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. சிவனைப் போல
நான் தினமும் விஷம் குடித்துக்
கொண்டிருக்கிறேன்’ (பக்கம் 62) என்று கோல்வால்கர்
தன்னிடம் கூறியதாக குறிப்பிடுகிறார்.
இந்த சுயசரிதை முகலாய அரசவையில் நடைபெற்ற சில சூழ்ச்சிகளை மீண்டும்
கொண்டு வருவதாகவோ அல்லது அவற்றைப் பிரதிபலிப்பதாகவோ
தோன்றும் வகையிலான நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. ‘தன்னுடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே தலைவர் மரணமடைந்து விட்டால்,
எஞ்சியுள்ள காலத்திற்கான தலைவர் பொறுப்பு மூத்த துணைத்தலைவரிடம் வழங்கப்படுவதே ஜனசங்கத்தின் பாரம்பரியமாகும். எனவே பிதாம்பர் தாஸ் அல்லது முதல்வர் தேவ் பிரசாத் கோஷிடம்
தலைவர் பதவி வழங்கப்படும் என்றே நான் எண்ணியிருந்தேன். அடல் பிஹாரி வாஜ்பாய்
இதில் கணக்கிலேயே வரவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயை தலைவராக்க சங் தலைவர்கள் விரும்புவதாகத் தகவல் கிடைத்தபோது உண்மையில் நான் திகைத்துப்
போனேன்’.
‘தலைவரான உடனேயே அமைப்பின் முக்கிய பதவியில் இருந்த (சங்காதன் மந்திரி)
ஜகந்நாத் ஜோஷியை நீக்கிவிட்டு, நானா தேஷ்முக்கை அந்தப்
பதவியில் வாஜ்பாயி நியமித்தார். தான்
பொதுச் செயலாளராக, தலைவராக இருந்த பதவிக்காலங்களில் மிக முக்கியமான பதவிகளில்
இருந்து சிலரை விலக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவான கொள்கையை உபாத்யாயா கொண்டிருந்ததே, இவ்வாறு உபாத்யாயாவின் கொலையால் உடனடியாக நன்மை அடைந்த இந்த இரண்டு நபர்களால்தான்’
(பக்கம் 16-17 )
தீன் தயாள் உபாத்யாயாவைக் கொன்ற உண்மையான
கொலைகாரன் யார் என்பதைக் கண்டறிவதற்கான அனைத்து விசாரணைகளையும் முறியடித்ததாக அடல்
பிஹாரி வாஜ்பாய், நானா தேஷ்முக் ஆகியோர் மீது பால்ராஜ் மாதோக் தனது சுயசரிதையில் மிகக்
கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். உபாத்யாயாவின் மரணம் குறித்து ஆர்.எஸ்.எஸ்
எந்த நிலையை எடுத்தாலும், அது ஒரு சிறிய
விபத்து என்பதாகவே அடல் பிஹாரி வாஜ்பாய் கருதி வந்தார். அந்த விவகாரத்தில் அடல் பிஹாரி
வாஜ்பாயுடன் தான் நடத்திய உரையாடலின் போது, ‘யாருடனும் சண்டையிடுகின்ற நபராக இருந்த
தீன் தயாள், ரயிலில் இருந்த யாரோ ஒருவருடன் சண்டையிட்டிருக்கலாம். அந்தச் சண்டையில்
அவர் ரயிலிலிருந்து வெளியே தள்ளப்பட்டு இறந்திருக்கிறார். அதை கொலை என்று சொல்லாதீர்கள்’
(பக்கம் 16) என்று தன்னிடம் வாஜ்பாயி கூறியதாக பால்ராஜ் தன்னுடைய சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.
உபாத்யாயாவின் மரணம் குறித்த உண்மையை
வெளிக் கொணர்வதற்காக அமைக்கப்பட்ட சந்திரசூட் விசாரணை ஆணையத்தை அடல் பிஹாரி
வாஜ்பாய், நானா தேஷ்முக் இருவரும்
எவ்வாறு தவறாக வழிநடத்த முயன்றார்கள் என்பதையும் பால்ராஜ் விவரித்திருக்கிறார்.
சந்திரசூட் ஆணையம் விசாரணையைத் தொடங்கியபோது, விசாரணைக்குழுவின் முன்பாக ஜனசங்கத்தின்
நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கான முழுப்பொறுப்பையும் நானா தேஷ்முக்கிடம், பாரதிய ஜனசங்கத்தின்
தலைவர் (அடல் பிஹாரி வாஜ்பாய்) வழங்கியுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே நானா தேஷ்முக் அனுமதிக்கப்பவர்கள் (பொறுக்கியெடுக்கப்பட்ட)
மட்டுமே ஜனசங்கத் தரப்பிலிருந்து சாட்சிகளாக ஆஜராக முடியும். அவருடைய அனுமதியின்றி
ஜனசங்கத்தின் வேறு எந்த உறுப்பினரும்
சாட்சியாக ஆஜராக முடியாது. விசாரணைக்குழுவின்
முன் என்னையும் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் நானா தேஷ்முக் தயாரித்து வைத்திருந்த
சாட்சிகளின் பட்டியலில் நான் இடம் பெறவில்லை...
அதுபோன்ற சூழ்நிலையில், கொலையின் மர்மத்தை அவிழ்ப்பதில் சந்திரசூட் ஆணையம் தோல்வி கண்டது.
கொலைக்கான உண்மையை வெளிக்கொணர்வதற்குப் பதிலாக, அதை மூடிமறைக்கவே அவர்கள் ஆர்வத்துடன் இருந்ததால், விசாரணை ஆணையம்
மற்றும் அதன் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் தொடர்பாக அடல் பிஹாரி வாஜ்பாய், நானா
தேஷ்முக் ஆகியோரால் இவ்வாறான முடிவை மட்டுமே எடுக்க முடியும் (பக்கம் 19)
எம்.எஸ்.கோல்வால்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்சின் சர்சங்சாலக்காக ஆன பாலாசாகேப் தேவரஸும் இதற்கு உடந்தையாக
இருந்ததாக பால்ராஜ் கூறுகிறார். ‘பாரதிய ஜனசங்கத்தின்
தலைவரான பிறகு தீன் தயாள் உபாத்யாயாவின் நன்மதிப்பு மேலும் அதிகரித்தது. அவருக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின்
அடுத்த சர்சங்சாலக் ஆவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்த வாய்ப்பு சுயநலமிகள் சிலருக்கு,
குறிப்பாக பாலா சாகேப் தேவ்ரஸுக்கு
ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. தாங்கள் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள்
தீன் தயாளின் செல்வாக்கால் பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் உணரத் தொடங்கினர். அவர்களிடம் இருந்த இத்தகைய உணர்வுகளே, தீன் தயாளின்
கொலைக்குப் பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாயை ஜனசங்கத்
தலைவராக ஆக்குவதில் காட்டப்பட்ட நேரடி அக்கறை, தீன் தயாளின் கொலையை மூடிமறைப்பதற்கு
உதவியது போன்ற செயல்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். அதை ஒரு கொலை என்று பேசுவதை நிறுத்தி விட்டு, அவரைப்
போன்று நானும் அதை ஒரு விபத்து என்பதாகவே விவரிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் என் கண்களால் பார்த்து, சரிபார்க்கப்பட்ட உண்மையை
மறைப்பதற்கு நான் தயாராக இல்லை’ (பக்கம் 21) என்று தீன் தயாள் உபாத்யாயாவின்
கொலைக்குப் பிறகு நடந்தவை குறித்து பால்ராஜ் எழுதுகிறார்.
இந்த சுயசரிதை பாலாசாகேப் தேவரஸின் மோசமான, தனிப்பட்ட மற்றும்
அரசியல் வாழ்க்கையையும் வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது. 1975ஆம் ஆண்டின் நெருக்கடி நிலை நாட்களைப் பற்றி குறிப்பிடுகையில், ‘சங்கத்தின்
சர்சங்சாலக் பாலா சாஹேப் தேவ்ரஸ் மிசாவின் கீழ் கைது
செய்யப்பட்டார். கோல்வால்கரின் போராட்ட வாழ்க்கை மற்றும் லட்சியவாதத்திற்கு முற்றிலும் மாறாக, வசதியான
வாழ்க்கை மீது மிகுந்த விருப்பம் கொண்டவராகவே தேவரஸ் இருந்தார். அதன் காரணமாகவே, சங்கத்தின்
மீதான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறும், சங்கத்தின் மீதான தடையை நீக்குமாறும்
கோரி இந்திரா காந்திக்கு 1975 ஆகஸ்ட்
22 மற்றும் 1975 நவம்பர் 10 ஆகிய நாட்களில்
இரண்டு கடிதங்களை அவர் எழுதினார். இந்திரா
காந்தியின் உள்ளத்திலிருக்கும் [சங்] எதிர்ப்பு உணர்வுகளை நீக்க முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டு வயோலா பிஹேவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார்’
(பக்கம் 188-189)
அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அவருடன்
இருந்தவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்கான அனைத்து வகை முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தனர்
என்று குறிப்பிடுகின்ற பால்ராஜ், 1973ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் அடிப்படை உறுப்பினர்
பதவியில் இருந்து தன்னை வெளியேற்றியதிலும் அவர்கள் வெற்றி பெற்றனர் என்கிறார். இந்த
மோசமான விளையாட்டில் கைப்பாவையாக இருக்க தன்னை அனுமதித்துக் கொண்டார் என்று எல்.கே.அத்வானி
மீது கசப்புணர்வு கொண்டவராக பால்ராஜ் இருக்கிறார். தான் வெளியேற்றப்பட்டது பற்றி ‘அது
விதிகளை மீறிய ஒழுக்கக்கேடான, குற்றச் செயலாகும். சங்கத்தின் சர்கார்யாவாவில், பாலாசாகேப் தேவரஸ், மாதவ்ராவ் மூலே உள்ளிட்ட சில பிரச்சாரகர்களும், அமைப்புச் செயலாளர்களும்
முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் அடலை கேடயமாகவும்,
அத்வானியை கைப்பாவையாகவும் பயன்படுத்தினர்’
(பக்கம் 144) என்று பால்ராஜ் எழுதுகிறார்.
ஹிந்துத்துவாவின் ‘இரும்பு மனிதர்’ எல்.கே.அத்வானி
பற்றி தனிக் கவனத்துடன் பால்ராஜ் குறிப்பிடுகிறார். ‘லால் கிருஷன் அத்வானியின் நிலைமை
ஒரு கைப்பாவையைப் போன்றதாகவே
இருந்தது. மூத்த உறுப்பினர்கள்
பலரை நிராகரித்து விட்டு வழங்கப்பட்டிருந்த [ஜனசங்கத் தலைவர்] பதவிக்கு அவர் தகுதியானவராக
இருக்கவில்லை. எலும்பற்ற அதிசயப் பிறவியாக அவர்
இருந்தார் என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாக நான் அறிந்திருந்தேன்.
அவரிடம் தனிப்பட்ட நேர்மையோ, அவருக்கென்று
சொந்தக் கருத்தோ இருந்ததில்லை. ஆனாலும் அவர் அதிர்ஷ்டசாலியாக இருந்தார். வாஜ்பாயி மற்றும் சங்கம்
அளித்த சலுகைகளின் மூலம் அவருக்கு கிடைத்த
பதவியின் காரணமாக, அவர் தன்னுடைய கவுரவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, தனக்கென்று ஒதுக்கப்படுகின்ற
எந்தவொரு வேலையையும் செய்கின்ற கொத்தடிமைத் தொழிலாளியாகவே செயல்பட்டு வந்தார்’ (பக்கம் 146)
பல விஷயங்களிலும் குறிப்பிடத்தக்கதாக
இந்த சுயசரிதை இருக்கிறது. முதலாவதாக, குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும், ஹிந்துத்துவப் படையணியின்
முன்னணித் தலைவராகவும் இருந்த பால்ராஜ் மதோக் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளில் சிறிதளவே உண்மை இருந்தாலும்கூட, தற்போதைய
ஆளும்கட்சியின் கைகளில் எவ்வளவு பாதுகாப்பாக இந்தியா இருக்கும் என்பதை யாராலும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தேசிய
அளவிலான விசாரணை தேவைப்படுகின்ற கடுமையான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள் என்றால்,
அவை குறித்து தேசத்திடம் விளக்கிச் சொல்லப்பட வேண்டும் என்பதோடு, பால்ராஜ் மதோக் மீது
நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, ஹிந்துத்துவா முகாமில் இருக்கின்ற முக்கிய நபர்கள் / அமைப்புகள் குற்றச் செயல்களில்
ஈடுபடுவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிவருவது என்பது இது முதல் தடவையல்ல. ஆளும்
கட்சியை குற்றவாளிகள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே குஜராத் படுகொலை காட்டியது.
மனிதத் தன்மைக்கு கேடு விளைவிக்கும் சீரழிவுகளின் வேர்களைத் தேடிச் செல்வதாகவே இந்த
சுயசரிதை இருக்கிறது.
மூன்றாவதாக, ஹிந்துத்துவா என்பது ஆரோக்கியமான
மனமும் உடலும் கொண்ட பரிவாரம் அல்ல என்பதை இந்த சுயசரிதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.
தன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள்ள இரை தேடி எந்த அளவிற்கும் செல்வதாக, இரக்கமற்று
அதிகாரத்தைத் தேடுகின்ற இந்தக் கும்பல் உள்ளது. எந்தவொரு பாசிச அமைப்பையும் போன்று
துரோகம், துஷ்பிரயோகம், சுய அழிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டவர்களால் இதுவும்
நிரம்பியுள்ளது.
2003ஆம் ஆண்டு மில்லி கெஜட் பத்திரிக்கையில்
வெளியான கட்டுரை
https://www.academia.edu/11939516/Madhok_Makes_Stunning_Revelations
Comments