ஆர் அருண்குமார்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி
மாபெரும் வீரத் தியாகியான பகத்சிங்கின் பிறந்த நாள்
செப்டம்பர் 27 (சிலர் செப்டம்பர் 28 என்கிறார்கள்) அன்று இந்தியாவால் நினைவு
கூரப்படுகிறது. இளைஞர்களுக்கான அழியாத சின்னமாகத் திகழ்கின்ற பகத்சிங்கின் பிறந்த
நாள், நமது நாட்டில் உள்ள இளைஞர்களின் நிலைமையையும், இன்றைய சமூக-பொருளாதார
அரசியல் சூழலில் பகத்சிங்கின் கருத்துக்களின் பொருத்தப்பாட்டையும் காண்பதற்கான
சந்தர்ப்பமாக இருக்கிறது.
கடந்த ஒன்பது மாதங்களாக, தொற்றுநோய் மற்றும் அதனால்
ஏற்பட்ட சமூக-பொருளாதார நிலைமைகளை எதிர்த்து உலகம் முழுவதும் போராடிய வேளையில், இளைஞர்களின்
நிலை குறித்து தொடர்ச்சியான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இளைஞர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சனைகள் / கவலைகளுக்கான தீர்வுகளைக் காணும் வகையில், இன்றைய இளைஞர்கள் என்ன
நினைக்கிறார்கள், அவர்களிடையே நிலவி வருகின்ற போக்குகள் பற்றிய விவரங்களோடு,
அரசாங்கம் மற்றும் சமூகத்திற்கான சில பரிந்துரைகளையும் எம்டிவி கணக்கெடுப்பு (2020
ஜனவரி) தொடங்கி, ஐ.நா.உலக இளைஞர் அறிக்கை (2020 ஜூலை) வரையிலும் கொண்டிருந்தன.
உலக மக்கள் தொகையில் 121 கோடி என்ற அளவில் 15.5
சதவீதம் 15-29 வயதுக்குட்பட்டு இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டிருப்பவர்கள்
உள்ளனர். வேலையின்மை பிரச்சனை பெரியவர்களை விட, இளைஞர்களிடையே மிகஅதிக அளவில்
உள்ளது. ‘இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அடுத்த 15
ஆண்டுகளில் 60 கோடி வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று தொற்றுநோய்க்கு முந்தைய
கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை, பொதுமுடக்கத்திற்குப்
பின்னர் 1.9 கோடி அளவில் முறைசார்ந்த பொருளாதாரத்தில் உள்ள சம்பளதாரர்களுக்கு வேலை
இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது (சி.எம்.ஐ.இ). 41 லட்சம் இளைஞர்கள்
தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, 2013-14
முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பில் முழுமையான சரிவு
ஏற்பட்டுள்ளதாக 2017 ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நம் நாட்டில் நீட் இளைஞர்களின் எண்ணிக்கை (நீட்
என்பதை நுழைவுத் தேர்வோடு சேர்த்து வைத்து குழப்பமடையக் கூடாது. இது கல்வி,
வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லை (Not in Education, Employment or
Training) என்பதற்கான சுருக்கமாகும்) ஏழு கோடியிலிருந்து (2004-05) 11.60 கோடியாக
(2017-18). அதிகரித்துள்ளது, இந்த எண்ணிக்கையில் மிகவும் கவலையளிக்கக் கூடியதான
மற்றுமொரு மிகப்பெரிய உண்மையாக உள்ளது. இதனுடன் மற்றொரு புள்ளிவிவரத்தையும் நாம்
சேர்த்துக் கொள்ளலாம்: படித்த இளைஞர்களிடையே வேலையின்மை கிட்டத்தட்ட மூன்று மடங்கு
அதிகரித்துள்ளது. 2011-12ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்திலிருந்து 2017-18ஆம் ஆண்டில்
17.8 சதவீதமாக அது அதிகரித்துள்ளது. உயர்நிலையான பட்டம் என்றால் வேலையில்லாமல்
இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாகவே நிலைமை இருக்கிறது. நமது அரசாங்கமே
நாட்டின் திறமையான இளைஞர்களில் 33 சதவீதம் பேர் இன்று வேலையில்லாமல் இருப்பதாக
ஏற்றுக் கொண்டுள்ளது. வேலையின்மையே தாங்கள் எதிர்கொள்கின்ற, அதிருப்தி அடைந்துள்ள
முக்கியமான பிரச்சனையாக இருப்பதாக பல்வேறு நிறுவனங்களால் ஆய்விற்குட்படுத்தப்பட்ட
பல இளைஞர்களும் திட்டவட்டமாகக் கூறியிருப்பதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை. 46
சதவீத இசட் தலைமுறையினர் (1996க்குப் பிறகு பிறந்தவர்கள்) மற்றும் 44 சதவீத
மில்லினியல்கள் (1981 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) பொருளாதாரம்
செல்கின்ற திசை குறித்து கவலைப்படுவதாகக் கூறியுள்ளனர். ‘இதற்கு முன்னர் மோடியை ஆதரித்து
வந்த ஒரு சில படித்த இளைஞர்களும்கூட, இப்போது இருக்கின்ற பொருளாதாரத்தின் தவறான
நிர்வாகம் மற்றும் துருவமுனைப்பை ஏற்படுத்துகின்ற
பிரச்சனைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் முக்கியத்துவம் குறித்து
தங்களுடைய விரக்தியை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்கள்’ என்று
யூகவ்-மிண்ட்-சிபிஆர் மில்லினியல் சர்வே (YouGov-Mint-CPR
Millennial Survey 2020 ஜூன்)
குறிப்பிடுகிறது.
பகத்சிங் விரும்பியதைப் போல, விரக்தியடைந்திருக்கின்ற
இந்த இளைஞர்கள் தற்போதைய இக்கட்டான நிலைமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கும்,
விமர்சனரீதியாக அதனைப் பகுப்பாய்வு செய்வதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த
மோசமான சூழ்நிலையை இளைஞர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் / சமாளிக்கப் போகிறார்கள்?
என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
போராட்டங்கள் வீண் என்ற வாதத்தை ‘பொதுவாக எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்பதைத்
தவிர்ப்பதற்காக பலவீனமாக இருப்பவர்கள் தங்களுக்கான மறைப்பாகப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள்’ என்று பகத்சிங் கூறியதைப் போன்று இப்போதைய இளைஞர்கள்
நினைக்கிறார்களா? போராட்டங்களை ‘பயனற்றது’ என்று இளைஞர்கள் கருதவில்லை என்பதையே
எம்டிவி கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. இன்றைய இளைஞர்கள் தங்கள் முன்னோடிகளை
விட அதிக அளவில் நடவடிக்கை சார்ந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள் என்று அது
கூறுகிறது. இளைஞர்களின் செயல்பாடுகள் பற்றி சுட்டிக்காட்டிய எம்டிவி
கணக்கெடுப்பின் முந்தைய பதிப்பில், அது பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்து
செயல்படுவதாக இருந்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இளைஞர்களின் அணுகுமுறை
நாற்காலி செயல்பாட்டில் இருந்து அதிக அளவில் நடவடிக்கை சார்ந்த செயல்பாடாக
மாறியுள்ளது என்று இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இது
‘வீதிகளில் இறங்கிப் போராடுவது’ அல்லது ‘அமைப்பிற்கு எதிரான மனப்பான்மை’
இருப்பதைக் குறிக்கிறது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லக் கூடாது. ஆனாலும்
நிச்சயமாக இத்தகைய சுட்டிகள் அந்த திசை நோக்கியே நகர்கின்றன.
இளைஞர்களிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு
பிரச்சனையாக பாகுபாடு உள்ளது. தோற்றம், சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின்
அடிப்படையில் நியாயமற்ற முறையில் தாங்கள் நடத்தப்படுவதாக ஆய்விற்குட்படுத்தப்பட்ட
இளைஞர்களில் 80 சதவீதம் பேர் கூறினர். மிகவும் ஏழ்மையானவர்கள் என்றால், பாகுபாடு
காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மாதத்திற்கு
ரூ.25,000க்கும் குறைவான குடும்ப வருமானம் இருக்கும் இளைஞர்களில் 50
சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் பாகுபாட்டை எதிர்கொண்டிருப்பதாகக் கூறினர்.
தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுவது குறித்து கோபமடைந்துள்ள இந்த இளைஞர்கள் சமூக
சமத்துவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரரீதியாக தங்களுடைய
பின்தங்கிய நிலைமையே, மேலும் தங்களைச் சமூக பாகுபாடுகளால் பாதிப்படையுமாறு
செய்கிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
தலைமுறைகளைக் கடந்து, தங்களை மதச்சார்பற்றவர்கள்
என்றே பெரும்பான்மையான இளைஞர்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள்
ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இருந்து வந்த உறவுகள் தவறான திசையில்
நகர்வதாக நினைக்கிறார்கள். குறிப்பாக இவ்வாறு எண்ணுபவர்களின் எண்ணிக்கை இசட்
தலைமுறையினர் மத்தியில் அதிகமாக உள்ளது. ஆக நீண்ட காலத்திற்கு முன்பாக
‘ஒருவருக்கொருவர் வெறுப்பையும் பகைமையையும் போதிக்கும் இத்தகைய மதங்களிலிருந்து
இந்திய இளைஞர்கள் தங்களைத் தூர விலக்கி வைத்துக் கொள்கிறார்கள். மிகவும் திறந்த
மனப்பான்மை கொண்டவர்களாக இளைஞர்கள் மாறிவிட்டனர், அவர்கள் ஹிந்து, முஸ்லீம் அல்லது
சீக்கியர்கள் என்று மதங்கள் என்ற கண்ணாடி வழியாக நாட்டு மக்களைப் பார்க்கவில்லை.
மக்களை மனிதர்களாகவும், பின்னர் இந்தியர்களாகவும் மட்டுமே அவர்கள்
பார்க்கிறார்கள். இதுபோன்ற எண்ணங்கள் இந்திய இளைஞர்களிடையே வேரூன்றி வருவதால், நம்
நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை நாம் அறிகிறோம்’ என்று பகத்சிங் தெரிவித்திருந்த
கருத்தின்படியான ‘நற்செய்தி’ இப்போது நமக்குக் கிடைத்துள்ளது.
‘தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதை
உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வர்க்க உணர்வு மக்களுக்குத் தேவைப்படுகிறது.
தங்களுடைய உண்மையான எதிரி முதலாளித்துவம் என்பதை ஏழைகள், தொழிலாள வர்க்கம் மற்றும்
விவசாயிகளிடம் தெளிவுபடுத்த வேண்டும்…. - எந்த சாதி, நிறம், மதம் அல்லது
பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைத்து ஏழைகளுக்குமான உரிமைகளும் -
ஒன்றேதான்’ என்று கூறிய பகத்சிங் வகுப்புவாத சக்திகளைத் தெளிவாகக் கண்டித்து,
வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புமாறு மக்களிடம் அறிவுறுத்தினார்.
நமது நாட்டு இளைஞர்களை ‘இந்திய குடியரசின் வீரர்கள்’
என்று கூறிய பகத் சிங், ‘நாட்டின் ஒவ்வொரு
மூலை முடுக்கிற்கும் சென்று களத்தைத் தயார் செய்யுங்கள்’ என்று அவர்களுக்கு
அழைப்பு விடுத்தார். இளைஞர்கள் தயார் செய்ய வேண்டிய களம், சமூகத்தில் புரட்சிகர
மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ‘அரசியல் புரட்சியை
அடிப்படையாகக் கொண்டு, சமூகம் முழுவதையும் சோசலிச அடிப்படையில் மாற்றும் பணி
தொடங்க வேண்டும்’ என்றார். பின்னர் ‘இந்திய அரசாங்கத்தின் தலைவர் ரீடிங் பிரபுவா
அல்லது சர் புர்ஷோத்தம்தாஸ் தாகோர்தாஸா என்பது பற்றி அவர்களுக்கு (தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகளுக்கு) என்ன வித்தியாசம் தெரியும்? சர் தேஜ் பகதூர் சப்ருவிற்கு மாற்றாக
இர்வின் பிரபு இருந்தால், அதில் ஒரு விவசாயிக்கு என்ன வித்தியாசம் தெரியும்!’
என்று அவர் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். வெறுமனே அரசாங்கத்திற்குத் தலைமை
தாங்குகின்ற தனிநபர்கள் அல்லது கட்சிகளின் மாற்றத்திற்காக அவர் இருக்கவில்லை.
மாறாக அரசாங்கத்தின் வர்க்கத் தன்மையில் ஏற்படுகின்ற முழுமையான மாற்றத்திற்காகவே
இருந்தார் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ‘இளைஞர்கள் காங்கிரஸை இன்னும்
நம்பகமான மாற்றாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று
யூகவ்-மிண்ட் கணக்கெடுப்பு கூறுகிறது. பாஜகவிற்கு மாற்றாக காங்கிரஸ் இருக்க
முடியாது அல்லது அதற்கு நேர்மாறாகவும் இருக்க முடியாது என்பதை நம் நாட்டு
இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு ‘நிலையான போராட்டம்,
துன்பம் மற்றும் தியாகம்’ தேவைப்படுவதால், அந்த மாற்றத்திற்கான பணி எளிதான
காரியமல்ல என்று பகத்சிங் கூறினார். ‘முதலில் உங்களிடம் உள்ள தனித்துவத்தை
அகற்றுங்கள். தனிப்பட்ட உங்கள் வசதிகளுக்கான கனவுகளை அசைத்துப் பாருங்கள். பின்னர்
வேலை செய்யத் தொடங்குங்கள். அங்குலம் அங்குலமாக நீங்கள் உங்கள் பணியைத் தொடர
வேண்டும். அதற்கு தைரியம், விடாமுயற்சி மற்றும் மிகவும் உறுதியான உறுதிப்பாடு
தேவை. உங்கள் ஆர்வத்தை எந்தவொரு சிரமமும், கஷ்டமும் தடுத்து விடக் கூடாது. எந்வொரு
தோல்வியும் துரோகமும் உங்களைச் சோகத்தில் ஆழ்த்தி விடக்கூடாது. உங்கள் மீது
சுமத்தப்படும் எந்தவொரு துன்பமும், உங்களிடம் இருக்கின்ற புரட்சிகர விருப்பத்தை
பறித்து விடக்கூடாது. துன்பங்களை ஏற்றுக் கொண்டு, தியாகத்தின் மூலம் உங்களுக்கான
சோதனையில் நீங்கள் வெற்றிகரமாக வெளியே வருவீர்கள். இவ்வாறான தனிப்பட்ட வெற்றிகள் புரட்சிக்கான
மதிப்புமிக்க சொத்துக்களாக இருக்கும்’ என்றார்.
பல துயரங்களை இன்று துணிந்து ஏற்றுக் கொண்டுள்ள நம்
நாட்டு இளைஞர்கள், தங்கள் சொந்த விதியை விட மேலாக நமது நாட்டின் தலைவிதியை
மதிக்கிறார்கள். ‘குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), குடிமக்கள் தேசிய பதிவேடு
(NRC), சட்டப்பிரிவு 370 மற்றும் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால்
நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளில், இஜட்
தலைமுறை வாக்காளர்கள் மோடியுடன் உடன்படவில்லை என்று யூகவ்-மிண்ட் ஆய்வு
குறிப்பிடுகிறது. மாணவர்கள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கையை பெரும்பான்மையான
இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும், தலித்துகள்,
சிறுபான்மையினர், பெண்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம்
ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்பது
அவர்களிடம் உள்ள ஏமாற்றத்தையும் கோபத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
போராட்டங்களில் உள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து
இளைஞர்களை பகத்சிங் எச்சரிக்கிறார். ‘தற்போதைய இயக்கம் முடிவிற்கு வந்த
பிறகு, நேர்மையான புரட்சிகரத்
தொழிலாளர்களிடையே வெறுப்பையும் ஏமாற்றத்தையும் உங்களால் காண முடியும். ஆனால்
அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உணர்ச்சிவயப்படும் தன்மையை சற்றே ஒதுக்கி
வையுங்கள். உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். புரட்சி என்பது மிகவும்
கடினமான பணி. புரட்சி செய்வது எந்த மனிதனிடமும் உள்ள சக்திக்கு அப்பாற்பட்டது.
குறிப்பிட்ட ஒரு நாளில் அதைக் கொண்டு வர முடியாது. சிறப்பு சூழல்களால், சமூகம்
மற்றும் பொருளாதாரத்தாலே அது கொண்டு வரப்படும்’ என்றார்.
வெகுஜனங்களைத் தயார்படுத்துவதற்கும், புரட்சிக்கான
சக்திகளை ஒழுங்கமைப்பதற்கும் தேவைப்படுகின்ற, சூழ்நிலைகள் வழங்குகின்ற எந்தவொரு
வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியின் பணியாக
இருக்கிறது என்று பகத்சிங் கூறுகிறார். அவர் அறிவுறுத்தியதைப் போல, இளைஞர்கள்
‘கடமைக்கான தெளிவான அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்’, தற்போதைய
சூழலைச் சவாலாகவும், மக்களைத் தயார்படுத்துவதற்கும், ‘புரட்சிக்கான சக்திகளை’
ஒழுங்கமைப்பதற்குமான வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும்.
‘இயங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டாம்’ அல்லது
‘உயிர்ப்புடன் இருங்கள்’ என்று பகத்சிங் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சுகதேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் “நீங்களோ நானோ, நாம் எவருமே இதுவரை வலியை
அனுபவிக்கவில்லை. நமது வாழ்வின் அந்தப் பகுதி இப்போதுதான் தொடங்கியுள்ளது’ என்று
எழுதினார். நமது நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கும் ‘அவர்களுடைய வாழ்வின்
அந்தப் பகுதி இப்போது ஆரம்பமாகி விட்டது’.
பகத்சிங்கின்
வீர மரபின் உண்மையான வாரிசுகள் என்ற வகையில், ‘இவ்வளவு அற்புதமான காரணத்திற்காகச்
செய்யப்படும் எந்தவொரு தியாகமும் பெரிதாக இருக்கப் போவதில்லை.... புரட்சியின்
வருகைக்காக நாம் காத்திருக்கிறோம். புரட்சி நீடூழி வாழ்க’ என்று சொல்லி அவருடன்
சேருவதற்கான உத்தரவாதத்தை நேரம் நமக்குத் தந்திருக்கிறது.
https://peoplesdemocracy.in/2020/0927_pd/bhagat-singh-and-today%E2%80%99s-youth
Comments