டி ஜே எஸ் ஜார்ஜ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
எனது குறுகிய மனப்பான்மையை (அல்லது அதுதான் யதார்த்தமா?) மன்னியுங்கள்.
வடக்கும், தெற்கும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
ஒருபோதும் அவையிரண்டும் சந்தித்துக் கொள்ளப் போவதில்லை. மனுஸ்மிருதி (பொ.ச.மு.
இரண்டாம் நூற்றாண்டு?) என்ன சொல்கிறது என்று பாருங்கள்: ‘கிழக்கு கடலில் இருந்து
மேற்கு கடல் வரை, இரண்டு மலைகளுக்கிடையேயான பகுதி [இமயமலை மற்றும் விந்திய மலைப்
பகுதிகளைக் குறிக்கிறது] ஆரியர்களின் நிலம் என்று ஞானிகளால் அழைக்கப்படுகிறது...
அதற்கு அப்பால் இருப்பது காட்டுமிராண்டிகளின் நாடு’. இதுபோன்ற ஆரியக்
கருத்துக்கள்தான் விஷயங்களை இங்கே சிக்கலாக்குகின்றன.
ஆரியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்ற கருத்து உண்மையில்
காட்டுமிராண்டித்தனமானது. இதுபோன்ற பார்வையே வடக்கு மேன்மையை நிலைநிறுத்துகிறது.
உண்மையாகப் பார்த்தால், கலாச்சாரம் மற்றும் அறிவார்ந்த வகையில், திராவிடர்களிடம்
முதிர்ச்சி உள்ளது. அவர்கள் மற்றவர்களை விட தாங்களே மேன்மையானவர்கள் என்று
கோருவதைத் தூண்டி விடாமல், அதிலிருந்து அவர்கள் பயனடைவதற்கே அந்த முதிர்ச்சி உதவுகிறது.
ஆம், வடக்கு வடக்குதான்; தெற்கு தெற்குதான்.
இந்த பழைய விவாதத்தின் மீது ஆதி இந்தியர்களால் புதிய ஒளி வீசப்படுகிறது.
டி.என்.ஏ பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களின் மூலம் கிடைத்திருக்கின்ற
புதிய தரவுகளை டோனி ஜோசப் பயன்படுத்தி இருக்கிறார். இந்தப் ‘புதிய கருதுகோள்’ வேறு
வழியில் பழைய கருதுகோளை உறுதிப்படுத்துகிறது. ‘கடந்த 40,000 ஆண்டுகளில்
இந்தியாவிற்கு பெருமளவிலான இடப்பெயர்வு எதுவும் நடைபெறவில்லை. மாறாக வட
இந்தியாவில் ஒன்று, மற்றொன்று தென்னிந்தியாவில்
என்று இரண்டு மிகப் பழமையான மக்கள்குழுக்கள் இருந்தன. இன்றைக்கு இருக்கின்ற
மக்கள் அனைவரும், தொழில்நுட்பரீதியாக வடஇந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர்
என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு குழுக்களின் கலவையிலிருந்து
வந்தவர்களாகவே உள்ளனர்’ என்று இந்தப் புதிய தரவுகளிலிருந்து அறிய வருகிறது.
வடஇந்திய மூதாதையர் காகசியன் வேர்களைக் கொண்டுள்ளதாகவும், தென்னிந்திய மூதாதையர்
50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு பாதை வழியாக
குடிபெயர்ந்து வந்தததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வடக்கு-தெற்கு பிளவுகளை வரலாறு நிலைநிறுத்துகிறது. திராவிடமாக இருந்த
சிந்து சமவெளி/ஹரப்பன் நாகரிகம், ஆரிய படையெடுப்பைத் தொடர்ந்து தெற்கு நோக்கி
நகர்ந்தது. இந்த ஆரிய படையெடுப்பு என்கின்ற சொற்றொடர் வடக்கே உள்ள
அரசியல்வாதிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆரியர்கள் எல்லாம் தூத்துக்குடி
அல்லது அதற்கருகே ஏதோ ஓரிடத்திலிருந்து வந்தவர்கள் என்று நாம் நம்ப வேண்டும் என்று
அவர்கள் விரும்புகிறார்கள். வரலாறானது அரசியல்வாதிகளுக்கான சேவையைச் செய்து
தராவிட்டால், அவர்களுக்கு அதனால் என்ன பயன் இருக்கப் போகிறது?
இந்திய நாகரிகத்தின் அஸ்திவாரங்களாக வேதங்கள் இருப்பதாகச் சுட்டிக்
காட்டப்படுகின்ற நிலையில், வேதங்களுக்கு முன்பாகவே நாகரிகம் இருந்ததற்கான
சாத்தியத்தைக் சுட்டிக்காட்டுகின்ற எதுவொன்றும் இந்திய ஹிந்துத்துவக் கோட்பாடுகளின்
மீதான பேரிடியாகவே இருக்கும். ஆனால் ரிக்வேதமே இதற்கு முரண்பாடாக, நிலத்தின் மீதான
உரிமையைப் பெறுவதற்காக தஸ்யூக்களுடன் ஆரியர்கள் எவ்வாறு மோதினார்கள் என்பதை விவரித்துக்
கூறுகிறது. ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே தங்களுடைய கட்டுப்பாட்டில் நிலங்களை வைத்திருந்த
இந்த தஸ்யூக்கள் யார்? ‘ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய ஒரு பகுதியினர் எவ்வாறு
இந்தியாவிற்குச் சென்றார்கள், பரிணாமரீதியிலான தங்களுடைய சகோதரர்களை அவர்கள்
எவ்வாறு கையாண்டார்கள்... அந்த நிலத்தை தங்களுக்குச் சொந்தமாக்கி, பூமியில்
மிகப்பெரிய அளவிலான மக்கள்தொகையாக எவ்வாறு மாறினர்’ என்பதற்கான விளக்கத்துடன்
தொடங்குகின்ற ‘முதல் இந்தியர்கள்’ என்ற டோனி ஜோசப்பின் அத்தியாயம். யுரேசிய
புல்வெளிப் பகுதியிலிருந்து நடைபெற்ற இடப்பெயர்வு ஐரோப்பாவிலிருந்து தெற்காசியா
வரை பரவியிருக்கின்ற பகுதியில் இருந்த மக்கள்தொகையை எவ்வாறு மாற்றியமைத்தது என்பதை
விளக்கிச் சொல்கின்ற பின்னிணைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனாலும் சிலர் இன்னும்,
ஆரிய படையெடுப்பு என்ற கதை ஒரு மிகப் பெரிய சதி என்றே வலியுறுத்திச் சொல்கின்றனர்.
இந்த விஷயம் முழுமையாக உண்மையில் இந்திய வாழ்வியலைத் தீர்மானிக்கின்ற
வடக்கு-தெற்கு என்ற இருபிளவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி
வடஇந்தியக் கட்சியாகவே கருதப்படுகிறது. (அது கர்நாடகாவில் காலூன்றியிருப்பது ஒரு பிறழ்வாகவே
காணப்படுகிறது) அதன் கலாச்சார சாராம்சம் ஹிந்தியாகவே இருக்கிறது. எனவேதான் ஹிந்தி
அல்லாத தெற்கே உள்ள திராவிடர்களுக்கு அதன் மீதான ஈர்ப்பு குறைவாகவே உள்ளது.
மொழி சார்ந்த வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு மாறுபாடுகள் நமது காவியங்களிலேகூட பொதிந்திருக்கின்ற
போது, ஒருவரிடமிருந்து அன்னியப்படுதல் என்பது எவ்வாறு வாய்ப்பு இல்லாமல் போகும்?
வடக்கே பிரபலமாக இருக்கின்ற ராமாயணமான துளசிதாஸ் ராமசரித்மனாஸ், தெற்கில் எங்குமே
கொண்டாடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கம்பராமாயணம், தெலுங்கு தேசத்தில் திவிபாத்
ராமாயணம், கன்னட தேசத்தில் தோரவா ராமாயணம், மலையாள மொழியில் ஆத்யாத்மா ராமாயணம்
என்றே ராமாயணம் இருந்து வருகிறது. பாவம் வால்மீகி தனது படைப்பின்
மாறுபாடுகளுக்குள் முழுமையாக மூழ்கி விட்டார்.
‘விவசாயிகளாகவும், பழங்குடி இனங்களை வென்றவர்களாகவும் ஆரிய இனம்
இந்தியாவில் வளர்ந்தது’, ‘காட்டுமிராண்டிகளிடமிருந்து நாடு முழுவதையும் நாகரிகமடைந்திருந்த
இனம் வென்றெடுத்தது’ அல்லது ‘ஆரிய வெற்றியாளர்கள் மேற்கு நோக்கிச் சென்று, ஈரானில்
குடியேறி, ஜெண்ட் அவெஸ்தாவை இயற்றினர்’ என்பது போன்ற கூற்றுக்களுக்கு நாம் எவ்வாறு
எதிர்வினையாற்றுவது? இதுபோன்றவை ரொமேஷ் தத் போன்ற புகழ்பெற்ற அறிஞர்களாலும்
முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளாக இருக்கின்றன. ஆனால் காட்டுமிராண்டிகள் போன்ற
சொற்களுக்குள் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முன்நிபந்தனைகளை அவர்கள் புறக்கணித்திருக்கும்
நிலையில், அந்தக் கருத்துக்களுக்கு எந்தப் பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை.
வடக்கு கலாச்சார ஆதிக்கத்திற்கான வாகனமாக ராமாயணம் இருப்பது குறித்த
தத்துவத்தை ஈ.வெ.ராமசாமி உருவாக்கினார். ராமர் கதையில் அயோத்தி மையமாக இருக்கும்
வரையிலும், அவருடைய அந்தக் கருத்து மாறுவதற்கான வாய்ப்பில்லை. மேலும், இங்கே
ராவணன் ஒரு தென்னகராகவும், ஹீரோவாகவும் பார்க்கப்படுகிறான் என்பதையும் மறந்து விடக்
கூடாது. இது இறுதி வரை யாரும் வெல்லாத விளையாட்டாகவே இருந்து விடலாம். அல்லது தோல்வியுற்றவர்கள்
மட்டுமே இருக்கப் போகின்ற விளையாட்டாகவும் இருக்கலாம். ‘நாம் அனைவரும்
இந்தியர்களாக இருக்கிறோம். அதே போன்று நாம் அனைவருமே குடியேறியவர்களாகவும்
இருக்கின்றோம்’ என்ற டோனி ஜோசப்பின் கருத்தின் மீது சிறப்பு கவனத்தைச் செலுத்தப்
போதுமான காரணம் இருக்கிறது.
https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2020/jul/12/why-north-and-south-do-not-meet-2168473.html
Comments