சுவாமி அக்னிவேஷ்
தலைவர் ஆரிய
சமாஜம்
தி வயர் இணைய இதழ்
2020 செப்டம்பர் 11 அன்று மறைந்து போன ஆன்மீகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி அக்னிவேஷ் 2019 பாராளுமன்ற பொதுத்
தேர்தல்களுக்கு முன்பாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
மோடி மற்றும் அமித்ஷாவால்
உருவாக்கப்பட்டிருக்கும் வகுப்புவாத துருவமுனைப்பு அரசியலால் ஏற்பட்டிருக்கும் தேசியப்
பேரழிவை இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

என்னுடைய சன்னியாசத்தின், ஆன்மீக ஒழுங்கின் ஒரு பகுதியாகவே நான் அரசியலுக்குள்
நுழைந்தேன். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை இரண்டு மாறுபட்ட வடிவங்கள் இருக்கின்றன. உலக விவகாரங்களுடன்
தொடர்புடையதாக இருக்கிற ஆன்மீக வடிவம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. அதிக ஆபத்துகள்
நிறைந்துள்ள மற்றொரு ஆன்மீக வடிவம் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வதாக இருக்கிறது.
சன்னியாசிகளாக இருப்பவர்கள் தங்கள் கரங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாதிருக்க
வேண்டும் என்று ஆன்மீகம் எதிர்பார்க்கின்ற வகையிலான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சன்னியாசிகள்
அரசியலில் பங்கெடுப்பது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருக்கும். அதனை
நாம் ஆன்மீகத்தின் மாய வடிவம் என்பதாக வகைப்படுத்தலாம். இரண்டாவதாக 'செயற்பாட்டாளர்'
வடிவத்தில் இருக்கின்ற ஆன்மீகத்தில் இந்த உலகைத் துறப்பது என்பது மிகவும் எளிதானதாக,
ஆனாலும் தேவையற்ற தேர்வாகவே இருக்கின்றது. அந்த ஆன்மீகம் உள்ளடங்கிய காடுகள் அல்லது
உயர்ந்த மலைகள் என்று கடவுளுக்கு மிக அருகமையில் இருக்க முற்படுவதில்லை. கடவுள்
என்பவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதால், உடல்ரீதியாக அருகமை என்பது இங்கே
முக்கியத்துவம் பெறாமல், தான் கொண்டிருக்கும் நெறிமுறையால் கடவுளுடன் ஒன்றுபடுவதே
முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த உலகில் சகமனிதர்களுடன் நடைமுறை உறவுகளைப் பேணுகின்ற அன்பு, உண்மை, நீதி,
கருணை போன்ற உலகளாவிய விழுமியங்களின் வடிவிலேயே கடவுளின் தன்வெளிப்பாடு இருக்கிறது.
இந்த விழுமியங்களின் உண்மையான வெற்றியே ஆன்மீகமாக மாறுகிறது. இவ்வாறான வடிவத்தையே நான்
தழுவி ஏற்றுக் கொண்டேன். இந்த உலகை மறுப்பது என்பது இந்த உலகத்தையே தங்களுடைய
சொத்தாகக் கருதுகின்ற ஓநாய்களிடம் இந்த உலகத்தை விட்டுச் செல்வது போன்றிருப்பதால்,
என்னைப் பொறுத்த வரை அது கடவுளை மறுப்பதாகவே இருக்கிறது.
என்னைப் பொறுத்த வரையிலும் அரசியல் என்பது எனது கடமையாக... தேசத்திற்கு
நான் ஆற்றிட வேண்டிய கடமையாகவே இருக்கிறது. 'கொள்கைகள் இல்லாத அரசியலை' ஏழு கொடிய பாவங்களில்
ஒன்றாக தன்னுடைய பட்டியலில் காந்தி முன்வைத்ததை நான் முழுமையாக ஆதரிக்கின்ற காரணத்திற்காகவே,
அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் பேராசை கொண்டவர்களிடம் இருக்கின்ற அரசியலை நானும்
மேற்கொள்வதை என்னுடைய கடமை என்பதாக நான் கருதுகிறேன். கொள்கைகள் இல்லாத அரசியல்
என்பதொரு கொடிய பாவமாக இருக்குமேயானால், அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமை -
தேவைப்பட்டால் அதற்காக தன்னுயிரையும் தர வேண்டிய கடமை ஆன்மீகத்திற்கு இருக்கிறது இல்லையா?
கருத்து முதல் கோட்பாட்டை என்னுடைய ஆன்மாவில் இசைத்துக் கொண்டிருந்த
பறவையாக சிக்கல்கள் நிறைந்திருந்த ஹரியானா அரசியலுக்குள் 1970களில் நான்
நுழைந்தேன். அங்கே என்னால் நீண்ட காலம் நீடித்திருக்க முடியவில்லை. மாநில கல்வி அமைச்சராக
இருந்த நான், சிறிது காலத்திற்குள்ளாகவே அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
அப்போது மிக மோசமான அரசியலுக்குள் நுழைந்து விட்டதாக நான் கருதினேன். ஆனால் அவ்வாறு
நான் கருதியது தவறு. இன்றிருக்கின்ற நடைமுறையோடு அது எவ்வாறு பொருந்திப் போகிறது என்பதைப்
பார்க்கும் போது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அந்த அரசியல் மிகவும் மனிதநேயமுள்ள
அரசியலாகவே இருந்திருக்கிறது என்பது இப்போது தெரிய வருகிறது.

ஆக நாம் இப்போது எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம்? நான் ஒன்றும் அரசியல் விஞ்ஞானி
அல்ல. நான் மதம் சார்ந்தவன். கீழே குறிப்பிடுகின்ற எனது பகுப்பாய்வுப் பார்வையை அந்த
கோணத்திலிருந்து தான் நான் இங்கே தருகிறேன். எனக்கு இப்போது 80 வயதாகி விட்டது. நான்
இன்னும் எவ்வளவு காலம் வாழ்வேன் என்பது எனக்குத் தெரியாது. ஏற்கனவே நமது மூச்சோடு கலந்து விட்ட தீவிர ஆபத்தை உங்களுக்கு முன்பாக முன்னிலைப்படுத்துவதை
என்னுடைய கடமையாகவே நான் இப்போது கருதுகிறேன்.
இந்திய அடிவானத்தில் மிகப் பெரிய அளவில் பேராபத்து சூழ்ந்து கொண்டு வருவதை
என்னால் காண முடிகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகம் ஆகியவை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி
இருப்பதை நான் காண்கிறேன். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்ட நமது ஜனநாயகக் குடியரசின் அடிப்படை விழுமியங்கள் மூச்சுத் திணறி வருகின்றன. இந்த
விழுமியங்கள் மேம்படுவதற்கான ஜனநாயக வெளிகளில் வகுப்புவாதம், துருவமுனைப்பு, வெறுப்பு
என்ற நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் வீழ்வின் விளிம்பில்
தள்ளாடிக் கொண்டிருக்கும் நாம், ஒருவேளை மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியில்
அமர முடியும் என்றால், ஹிந்து தேசத்தில் ’இருமுறை பிறந்தவர்களாகி’ விடுவோம்.
தவறான நோக்கங்கள் கொண்ட மிகத் தீவிரமான, ஆபத்தான கருத்தியல் மாற்றங்கள் செயல்படுத்தப்படுவதை
நான் இப்போது காண்கிறேன். அரசியல் தத்துவவாதிகளால் இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத
இந்த கருத்தியல் மாற்றங்களை 'இனவாத அரசியலில்' இருந்து 'மாய அரசியலுக்கு' மாறுவதாக
நாம் கூறலாம். மோடி மற்றும் அமித்ஷாவால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரசியல், வகுப்புவாத
துருவமுனைப்பு அரசியல் என்பதாக அரைகுறையாகவே பலராலும் விவரிக்கப்படுகிறது. இது
உண்மையில் மதச்சார்பின்மைக்கு எதிரான மிக மோசமான அரசியலாகும். 2014ஆம் ஆண்டுவரை
நிலவி வந்த அரசியல், மக்களின் மத உணர்வுகளை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற
வகையிலே இருந்து வந்தது. ஆனால் இப்போது வளர்ந்து வரும் இந்த அரசியல், மதத்திலிருந்து
நேரடியாகத் தன்னை வடிவெடுத்துக் கொள்கின்ற அரசியலாக இருக்கின்றது.

மோடி எவ்வாறு முன்னிறுத்தப்படுகிறார் என்பதை நன்றாக கவனியுங்கள். எந்தவொரு
அரசியல் தலைவரும் நமது வரலாற்றில் இதைப் போன்று முன்னிறுத்தப்பட்டதில்லை. வாரணாசியில்
பத்திரிகையாளர் ஒருவரால் நேர்காணல் செய்யப்பட்ட பெண் மூலமாக அந்த அரசியல்
செல்கின்ற திசையை நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. மோடியை அவதாரங்களின் வரிசையில்
வைத்து அந்தப் பெண் பேசியுள்ளார். இதற்காக அவரை நாம் குற்றம் சொல்ல முடியாது.
இயற்கையை மீறிய ஒளிவட்டம் நரேந்திர மோடியைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கின்ற
இந்த சூழலில், மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் தங்களைக் காக்க வந்த ரட்சகராக
மோடியை நம்புவது என்பது இயற்கையானதே. அரசியல் உலகிலிருந்து மோடி மற்றும் வாக்காளர்களை
மதம் சார்ந்த உலகிற்கு அது மாற்றுகின்றது. இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், முன்பிருந்த
'வகுப்புவாத அரசியல்' என்பது தோல் மீது தோன்றுகின்ற சிறு பொறிகளாக மட்டுமே இருந்தது.
ஆனால் இன்றைய அரசியலோ ஆளைக் கொல்லுகின்ற புற்றுநோய் போன்று இருக்கின்றது.
ஜனநாயக அரசியல் என்பது சந்தேகம், விவாதங்கள் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கான
பரந்த வெளியை ஏற்படுத்தித் தருவதாக உள்ளது. அங்கே அரசியல் தலைவர் ஒருவர் சொல்கின்ற
கருத்துகளுடன் விவாதம் செய்வது, மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது போன்றவை
மன்னிக்க முடியாத குற்றங்களாக கருதப்படுவதில்லை. மதத்தில் - குறிப்பாக வீடுபேறு
தருகின்ற அல்லது ரட்சிப்பின் மையமாகத் திகழ்கின்ற மதத்தில் – ரட்சகர் மீது
அவநம்பிக்கை கொள்வதென்பது மதங்களுக்கு எதிரான நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. மதங்களுக்கு
எதிரான நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்று இருப்பது
அங்கிருப்பவர்களின் கடமையாகிப் போகிறது. மதநம்பிக்கை கொண்டு விசுவாசமாக இருக்கின்ற
அந்த சமுதாயத்தில் மத எதிர்ப்பாளர்களுக்கு இடம் இருப்பதில்லை. அது ஒரு இறைமை
ஆட்சியாக இருந்து விட்டால், நாட்டிற்குள்ளும் மத எதிர்ப்பாளர்களுக்கு இடம்
கிடைக்கப் போவதில்லை.
மோடியின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருப்பவர்களிடம் சகிப்பற்ற தன்மை
அதிகரித்துக் கொண்டே வருவது 2014ஆம் ஆண்டிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. இப்போது
முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள் மதங்களுக்கு எதிரானவையாகவே கருதப்படுகின்றன.
நிச்சயம் இது அரசியல் அல்ல; அரசியல் போன்ற தோற்றத்தை மட்டுமே கொண்டிருக்கின்றது. மதத்திற்கு
எதிரானவர்கள் நரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று மதங்களில்
கூறியுள்ளவாறு இன்றைக்கு இந்த மோடி நிலத்தில் இருக்கின்ற அரசியல் எதிர்ப்பாளர்கள்
அனுப்பி வைக்கப்பட வேண்டிய இடமாக பாகிஸ்தான் இருக்கிறது.
பகுத்தறிவு கொண்ட விமர்சன சிந்தனை, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றைப் பரப்புவதற்கும்
ஒருங்கிணைப்பதற்குமான கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டுமென்று இந்திய அரசியலமைப்பு
நமக்கு கட்டளையிடுகிறது. உண்மையிலேயே பாவப்பட்டவர் இந்த சாம் பித்ரோடா - அவர் இன்னும்
மோடிக்கு முந்தைய காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்! தன்னை அறிவியலாளர் என்று
அறிவித்துக் கொள்கிற அவர், தான். மேற்கொண்ட பயிற்சி, எதற்கும் நிரூபணம் வேண்டும் என்கின்ற
மனம் மற்றும் தரவுகளை நன்கு ஆராய்வதற்கான உரிமை ஆகியவற்றைப் பயன்படுத்தி நன்கு பரிசீலித்து
எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு வந்து சேருகின்ற அறிவியலாளராகவே தான் இருக்க வேண்டுமென
விரும்புகிறார்.
பால்கோட் தாக்குதல்கள் குறித்து நம்பகமான இடங்களில் இருந்து தனக்கு கிடைக்கப்
பெற்ற தகவல்கள் 'அதிகாரபூர்வமாக' வெளியிடப்பட்ட தகவல்களுக்கு முரணாக இருப்பதாகக் கூறும்
அளவுக்கு அவர் துணிச்சலானவராக இருந்தார். தன்னிடம் வழங்கப்பட்ட தகவல்களுக்கு
முரணான ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களை அவரால் தள்ளுபடி
செய்ய முடியும். இதையே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கூறியிருந்தால், அவருடைய வார்த்தைகள்
அப்போது வெளிப்படையாக நியாயமானதாக இருந்திருக்கும். அறிவார்ந்தது, நியாயமானது என்று
அவரது நிலைப்பாடு நிச்சயம் பாராட்டப்பட்டிருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு நடக்கும் வாய்ப்புகளில்லை. அவரது வார்த்தைகள் இப்போது
பொருத்தமில்லாத மாற்றுக் கருத்து என்பதாகக் கருதப்பட்டு, தற்போது புழக்கத்தில் இருந்து
வருகின்ற மொழியில் தேசத்துரோகம் என்பதாகவே முத்திரை குத்தப்படும்.
இன்றைய தினம் மதம் எதிர்பார்க்கின்ற தேவைக்கும் அதிகமாக, அன்றாடம் நமக்கு அளிக்கப்படுகிற
விஷயங்கள் மீது குருட்டு நம்பிக்கை நமக்குத் தேவைப்படுகிறது. மதத்தின் மீது
பாய்ச்சப்படுகின்ற வெளிச்சத்தின் மையம் ஆன்மாவாக இருக்கிற நிலையில், தங்கள்
வழிக்கு மக்களை மயக்கி வழிநடத்திச் செல்லும் மதகுருக்களால் நிறைந்துள்ள பிரபல மதவாதத்திற்கு
அத்தகைய குருட்டு நம்பிக்கை மட்டுமே தேவைப்படும்.
ஒவ்வொரு ஆன்மீக மரபும் - குறிப்பாக இந்தியாவில் தோன்றிய மதங்கள் பொறுப்பான
இறை மறுப்புக் கோட்பாடுகளை அனுமதிக்கின்றன. குருட்டு நம்பிக்கை அதனை
நம்புகிறவர்களுக்கு தீங்கையே விளைவிக்கும். அது அவனை அடிமையாக்கி, மனநலம்
குன்றியவனாக்கி விடுகிறது. ஆன்மீகம் என்பது உண்மையைத் தேடுவது என்று புத்தரும், மகரிஷி
தயானந்தரும் வலியுறுத்திக் கூறுகின்றனர். சிந்தனையற்ற நம்பிக்கை என்பதை மதிக்கின்ற
அங்கீகரிக்கப்பட்ட தத்துவமோ அல்லது வேறெந்த வழியோ இருக்கவில்லை. மோடி வகை அரசியல் ராணுவத்தின்
மீது கூட குருட்டுத்தனமாக நம்பிக்கை வைக்க வேண்டும் என்றே இன்றைக்கு வலியுறுத்தி
வருகிறது.
வரலாற்றில் உலகில் எந்த ராணுவத்திலும் சாமியார்களுக்கென்று பதவி
இருக்கவில்லை. பொய்மை என்பது போர்க்களங்களில் ராணுவம் பயன்படுத்துகின்ற பிரச்சாரத்தில்
ஒருங்கிணைந்த ஒன்றாகவே இருக்கிறது. பிரச்சாரம் என்பது பொய்யை உண்மை என்பதைப் போல
சொல்கின்ற கலையாகவே இருக்கிறது. இந்திய ராணுவமானது, ஆதித்யநாத் சொல்வதைப் போல இப்போது
'மோடியின் படை' என்பதாகவே இருக்கிறது. அந்த அளவிற்கு ராணுவத்தின் மீதும் குருட்டுத்தனமான
நம்பிக்கையை வைப்பது அவசியம் என்பதாக இப்போதைய நிலைமை மாறியிருக்கிறது. இந்திய ராணுவம்
சுதந்திரமாகச் செயல்படுவதை இந்த அளவிற்கு, மோடி இப்போது செய்திருப்பதைப் போல,
இந்திய வரலாற்றில் இதுவரையிலும் எந்தவொரு அரசாங்கமும் மறுத்து சமரசம் செய்து கொள்ளவில்லை.
ராணுவம் என்பதை ஒரு கட்சியுடன் இணைந்த அமைப்பு போன்ற தோற்றத்தைப் பரப்புவது இந்த நாட்டிற்கு
செய்யும் மிகப் பயங்கரமான கெடுதியான செயலாகும்.

ஒருவரை ரட்சிக்கின்ற மதம் மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான மிக முக்கியமான
வேறுபாடு என்னவென்றால், 'இங்கே… இப்போது…' என்கிற அளவில் மட்டுமே அரசியல் தன்னுடைய
கவனத்தைச் செலுத்துகின்றது. ஆனால் மக்களின்
முன்பாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் வேதனை, துன்பங்களிலிருந்து அவர்களுடைய கவனத்தை
கிடைக்கவிருக்கும் வெகுமதிகள் பக்கம் திசை திருப்புவதாக மதம் இருக்கிறது. மோடி
முன்வைக்கின்ற இந்த இழிந்த வடிவம் ‘குறுகிய காலத்திற்கான வலி, நீண்ட காலத்திற்கான ஆதாயம்’
என்பதாக இருக்கின்றது.
பணமதிப்பு நீக்க அறிவிப்பு பல தியாகிகளை உருவாக்கியது. பாம்பு போன்று நீண்ட
முடிவற்ற வரிசைகளில் நின்ற சக இந்தியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து
போனார்கள். அந்த மக்களுக்காக 'இறப்பவர்களுக்காக வானில் உணவு காத்திருக்கிறது' என்று
கூறப்பட்டதால், அது எந்த கோபத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. இந்த பச்சைப் பொய்யை
நம்பி ஏழை மக்கள் எவ்வளவு ஆவலோடு காத்திருந்தார்கள்? 'நீண்ட காலம் கழித்து
கிடைக்கப் போகின்ற மிகப் பெரிய ஆதாயத்தை' காண்பதற்காக தாங்கள் உயிர் வாழ
வேண்டுமென்பதை அவர்கள் உண்மையில் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்பினார்கள்? அந்த நீண்ட
காலம் கழித்து கிடைக்கப் போகின்ற, ஆனால் எங்கும் காணப்படாத அந்த ஆதாயத்தைப் பற்றி ஒரு
வார்த்தை கூட இப்போது மோடி பேசுவதில்லை. யாருக்கும். அது குறித்து எந்த விளக்கமும்
அவர் சொல்லவும் போவதில்லை.
செல்வந்தர்கள், வலிமை வாய்ந்தவர்கள் போன்றவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு போலித்தனமாக
மதத்தைப் பரப்புவர்களின் கண்டுபிடிப்பாகவே இந்த 'இறப்பவர்களுக்காக வானில் உணவு
காத்திருக்கிறது' என்று சொல்கின்ற மதம் உள்ளது. 'இறப்பவர்களுக்காக வானில் உணவு
காத்திருக்கிறது' என்பதை கார்ப்பரேட் பெருநிறுவனத்தைச் சார்ந்தவரிடம் யாரும் சொல்ல
முடியாது. உங்கள் மீது தன்னுடைய ஜெர்மன் ஷெப்பார்டு நாய்களை ஒருவேளை ஏவி விடாமல்
இருந்தால், உங்களைக் கண்டு அவர் நகைப்பார். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி குறுகிய
காலத்திற்கானதா அல்லது நீண்ட காலத்திற்கானதா என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை.
அது குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ என்று பார்க்காமல், ஆதாயங்களைப்
பெறுகின்ற வரை அவர் சந்தோஷமாக இருப்பார். மிகச் சாதாரண மனிதனின் வலிகள் மிகப்
பெரிய நிறுவனங்களின் ஆதாயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது இப்போது தெளிவாகத்
தெரிகிறது. இந்தியாவில் உலா வருகின்ற விசித்திரக் கதைகளில் வருவதைப் போல, கோடீஸ்வரர்களின்
எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது
என்றாலும், ஏழைகள் இன்னும் தங்களுடைய வலிகளிலிருந்து மீளவில்லை என்பதே உண்மை.
மதத்தைப் பொறுத்த வரை இன்று வரையிலும் இந்திய மக்களுக்கு மோடி
அளித்திருக்கும் அனைத்து வாக்குறுதிகளும் புத்திசாலித்தனமானவையாகவே இருக்கின்றன.
ஆனால் கொள்கையுறுதி கொண்ட அரசியலைப் பொறுத்த வரை, அவை மிகவும் அபத்தமானவையாக
உள்ளன. இதை சரியான பார்வையில் பார்ப்பதற்கு வழக்கமான பிற மதங்களில் இருக்கின்ற,
அற்புதங்களை நிகழ்த்துகிறவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மந்திரவாதியிடம் அல்லது அற்புதங்களை நிகழ்த்துபவரிடம் சென்றால், அவர் உங்களுடைய
நோயை நிச்சயம் குணப்படுத்துவதாக வாக்களிப்பார். வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த அதிசயம்
நடக்காத போதிலும், தான் உங்களை ஏமாற்றவில்லை என்றே அந்த கடவுள் மனிதர் கூறுவார். மாறாக
அந்த அதிசயம் நடக்காமல் போனதற்கு உங்களுடைய நம்பிக்கையின்மை அல்லது உங்களைச் சுற்றியிருக்கின்ற
கெட்ட நம்பிக்கைகளே காரணம் என்று உங்கள் மீதே அவர் குற்றம் சுமத்துவார். தற்போது
நிலவுகின்ற நிலைமை அதை ஒத்ததாகவே இருக்கிறது. தன்னுடைய வாக்குறுதிகளை மோடியால்
நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் அல்லது மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மையை வாக்காளர்கள் தனக்கு வழங்கவில்லை என்பதே காரணம் என்று
கூறுகிறார்கள். மிகச் சாதாரண பெரும்பான்மையுடன் பிரதமர் ஒருவரால் எப்படி சாதிக்க முடியும்?
என்று நம்மிடமே கேட்கிறார்கள்.
இந்த ஆபத்தான மோடி-ஷாவின் கருத்தியல் மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில்
வேறு சில விஷயங்களும் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தையும் நாம் இங்கே
தொகுத்து வழங்க வேண்டியதில்லை. அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் உண்மையே. அதைக்
கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு, மனதார ஒருவர் குருடாக இருக்க வேண்டும். அவர்களுடைய
இத்தகைய செயல்பாடுகள் ஏன் நமக்கு வேதனை தருவதாக இருக்கின்றன?
மதத்தின் மேதைமை ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கு முற்றிலும் எதிரானது. எந்தவொரு
கடவுளும் ஜனநாயகவாதியாக இருப்பதில்லை; ஏன் ஒரு சின்ன பூசாரி கூட அவ்வாறு
இருப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வட்டத்திற்குள் மிகுந்த ஆற்றல்
மிக்கவர்களாகவே இருக்கின்றனர். மோடி மற்றும் ஷா ஆகியோரால் நிலைநாட்டப்பட்டிருக்கின்ற
செயல்பாடுகளை குடிமக்கள் மற்றும் வாக்காளர்களாகிய நாம் ஏற்றுக் கொள்வேமேயானால்,
அது இந்திய ஜனநாயகப் படுகொலைக்கு உதவுகின்ற செயலாகவே இருக்கும்.
மதம், கலாச்சாரம், இனம், மொழி ஆகியவற்றின் பன்முகத்தன்மையால் வேறுபடுகின்ற
உண்மையான, துடிப்பான, தனித்துவமான அரசியல் சக்தியாக இந்தியா திகழ்கிறது. சகிப்பற்ற
தன்மை கொண்ட மனோபாவத்துடன் இருக்கின்ற சர்வாதிகார அரசு தன்னுடைய மிருகத்தனமான சக்தி
கொண்டு அனைத்து வகைகளிலும் ஒருமுகத்தன்மையை திணிக்கவே முயலுகிறது. நாம் இதற்கு முன்னர்
பார்த்திராத ரத்தம் தோய்ந்த, அராஜகம் நிறைந்த நிலைக்குள் இந்தியாவைத் தள்ளுவதில்
அது உறுதியாக உள்ளது. இது ஒன்றும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதாக
இல்லை. தற்போதைய போக்குகள் மற்றும் நடப்புகளைக் கொண்டு காண்கின்ற போது, இத்தகைய விளைவுகளையே
நம்மால் எதிர்பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.
இந்திய சுதந்திரத்திற்காகவும், இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா
மலர்வதற்கும் கடுமையாகப் போராடிய தலைமுறையைச் சார்ந்தவன் நான். சகிப்புத்தன்மை, பரஸ்பர
மரியாதை ஆகியவற்றைக் கொண்ட கலாச்சாரத்தின் மூலம் சகிப்புத்தன்மை மற்றும் பன்மியம்
கொண்ட வலுவான தேசமாக இந்தியா மென்மேலும் வளரும் என்றும், 1947இல் உருவான நம்பிக்கைகளும்,
ஆசைகளும் நிறைவேறும் என்றும் நாங்கள் நம்பினோம். இந்தியா ஒரு ஹிந்து தேசமாக மரித்துப்
போவதை கனவிலும் கூட எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
அவ்வாறு பெற்ற சுதந்திரம் இப்பொழுது தேர்ச்சக்கரங்களின் கீழ் சிக்கிக்
கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு மிகமுக்கியமான ஆன்மீகப் பிரச்சினையாகவே
தோன்றுகிறது. பெருமளவில் ஏற்பட்டிருக்கும் இந்த தேசிய பேரழிவைத் தகர்த்தெறிவதற்காக
இந்தியா முழுவதிலுமுள்ள என் சகோதரிகளையும் சகோதரர்களையும் ஒருங்கிணப்பதற்கான என்னுடைய
கடமைகளில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால், கடந்த பல்லாண்டுகளாக நான் நம்பி, போராடி
வந்த அனைத்தையும் நான் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும்.

எனது நாட்டிற்கு ஆற்ற வேண்டிய என்னுடைய கடமையை நான் இதன் மூலம் செய்திருக்கின்றேன்.
கடற்கரை மணல் கொண்டு அமைக்கப்பட்ட அரண்மனைகளைப் போன்று தங்களுடைய சிறிய
லாபங்களுக்காக மிகப் பயங்கரமான கொடூரத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி நமது நாடு
எனும் புனித ஆலயத்தை அழித்தொழிக்க முயல்கின்ற சக்திகளுக்கு எதிராக பாலினம், வயது, கலாச்சாரம்,
மதம், பிராந்தியம், மொழி என்று அனைத்தையும் கடந்து நாட்டு மக்கள் அனைவரும் மிகப்
பெரிய அரணை உயர்த்தி எழுப்பி ஒன்றிணைய வேண்டும். அவர்களின் மணற்கோட்டைகளை உருளும்
அலைகள் மோதித் தள்ளி விடும்.
https://thewire.in/rights/india-democracy-pluralism-dissent-secularism
Comments