பேரா.லெ.ஜவகர்நேசன்
துணைவேந்தர்
மைசூரு ஜே எஸ் எஸ் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
நாட்டிற்கு கெடுதலாக, மக்களுக்கு கெடுதலாக,
கல்விக்கே கெடுதலாக இருக்கின்ற இந்தக் கல்விக் கொள்கை
தத்துவார்த்தமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து தமுஎகச சார்பில் நடைபெற்ற
தொடர் விமர்சன அரங்கின் முதல் அமர்வு
நாள்: 09-08-2020
அனைவருக்கும்
நன்றி. வணக்கம். 130 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகின்ற, இந்தியாவின்
தலையெழுத்தை, இந்தியக் கல்வியை மாற்றியமைக்கப் போகின்ற கொள்கையாக தேசிய கல்விக் கொள்கை
வந்திருக்கிறது. அது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டில்
மிக அருமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கல்விக் கொள்கையை ஆதரிப்பவர்கள் ஒரு
குற்றச்சாட்டை வைக்கிறார்கள். கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களால், அதை அறிவுப்பூர்வமாகவும்,
ஆய்வுப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் மறுக்க முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த அரங்கின் ஏற்பாட்டாளர்கள் தொடர் அமர்வுகளாக வைத்திருக்கிறார்கள். தொடர் விமர்சன
அரங்கங்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். இன்றைய தலைப்பு தத்துவம். தத்துவார்த்தமாக,
கல்வித் தத்துவத்தைப் போற்றி, கல்விக்கே உண்டான இலக்கினையும், நோக்கத்தையும் உள்வாங்கி,
கல்வித் தத்துவத்தின் அடிப்படையிலே அது பிறழாமல், அது கல்வியை அனைத்து மக்களும் எட்டக்கூடிய
நிலைக்கு எடுத்துச் செல்கிறதா என்ற தத்துவார்த்தமான பார்வையில்தான் இன்று ஆரம்பிக்கிறோம்.
இதுபோன்று வெவ்வேறு தலைப்புகளில் பல அரங்குகள் நடைபெற உள்ளன. இன்றைய அரங்கின் நோக்கம்
கல்வித் தத்துவம் குறித்ததாக இருக்கிறது. கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தக்
கல்விக்கொள்கை இருக்கிறதா என்பதுதான் இந்த அரங்கின் கேள்வியாக இருக்கும்.
இந்தப்
பேரமர்வில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இங்கே நான் முழுவதும் தத்துவார்த்தமாகப்
பேச விரும்புகிறேன். இது சாதாரண விவாத மேடை அல்ல. உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கின்றதைப்
போன்ற மேடையாக நான் இதைக் கருதுகிறேன். இங்கே ஆணித்தரமாக எது தேவையோ அதை எடுத்து வைக்க
வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அந்தக்
கருத்தின் ஆழத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முழுமையாகப் புரிந்து கொண்டு,
மக்களுக்கு விளக்கியாக வேண்டியது கட்டாயம். தத்துவம் என்பது சற்றே சிக்கலானதாக இருந்தாலும்,
அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
கல்விக்கொள்கை
என்றால், அது ஒரு செயல்திட்டம் அல்ல. கல்விக் கொள்கை என்பது பொதுவாக ஒரு தத்துவத்தின்
அடிப்படையிலே, ஒரு தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலே, பல காரணிகளை ஆய்வு செய்து,
அங்கு நிலவும் சூழல்களை, மக்களுடைய பிரச்சனைகளை, நாட்டின் வளங்களை என்று இவையனைத்தையும்
உள்வாங்கி, இறுதியில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், தத்துவப் பார்வையுடன் செயல் திட்டங்களை
வகுப்பதாகும். இதுதான் கொள்கை என்பது. ஆக கொள்கை என்பது ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டிருக்கும்.
அதே சமயம் நுணுக்கத்தையும், தத்துவத்தையும் தாங்கி நிற்பதாகவும் இருக்கும். ஆனால் தேசிய
கல்விக் கொள்கை என்பது கல்வியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை மிக விலாவாரியாகச் சொல்கிறது.
அதாவது மத்திய அரசு எப்படிச் செயல்படும், மாநில அரசுகள் எப்படிச் செயல்படும், யார்
பாடத்திட்டத்தை வகுப்பார்கள், யார் புத்தகத்தை உருவாக்குவார்கள், எந்தப் பாடங்களை உள்வாங்கி
கொண்டு வருவது, இவர்கள் சொல்கின்ற தாராளக் கல்வியை எவ்வாறு கையாளுவது, மொழியை எவ்வாறு
கையாளுவது என்று பல திட்டங்களைக் கூறுகிறது. இதுவெல்லாம் உண்மையில் செயல்திட்டம் மட்டுமே.
இதில் எங்காவது நுணுக்கம், தொலைநோக்குப்
பார்வை, இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் உண்டான தத்துவத்தை இந்தக் கல்விக் கொள்கை
தாங்கி இருக்கிறதா? என்ற கேள்வி முதலாவது எழுகின்றது. அப்படியொரு தத்துவத்தை தாங்கி
இந்த கல்விக் கொள்கை நிற்கவில்லை. முற்றிலும் செயல்பாட்டு நடைமுறைகளாக மட்டுமே இருக்கிறது.
அவ்வளவுதான். சொல்லப்பட்டிருக்கின்ற செயல்பாட்டுத் திட்டங்களும்கூட, பல நாடுகளிலே பேசப்படும்
பகட்டு வார்த்தைகளைக் கொண்ட விளையாட்டாகவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் கதம்பமாகச்
சேர்த்துக் கொண்டு, அடிமட்ட அளவிலே நடத்தக் கூடிய செயல்திட்டத்தையே, இவர்கள் கொள்கை
என்று கூறியிருக்கிறார்கள். தேசத்திற்கான காரணிகளைக் கையிலெடுத்துக் கொண்டு, சமுதாயம்
சந்திக்கின்ற பிரச்சனைகள், கேள்விகள், அவர்களுடைய சமூகக் கட்டமைப்பு இவையனைத்தையும்
எடுத்துக் கொண்டு, மற்ற பிற காரணிகளையும் தீர்க்கமாக எடுத்துக் கொண்டு, ஒரு தத்துவத்தை,
நமக்கென்று, இந்த தேசத்திற்கென்று, இந்த சூழலுக்கென்று கல்வி குறித்த தத்துவத்தை கல்விக்
கொள்கையின் மூலமாக அவர்கள் கோடிட்டு காட்டியிருக்க வேண்டும். அதனடிப்படையிலே, இந்தச்
செயல்திட்டங்களை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதுவுமே இந்தக் கல்விக்
கொள்கையிலே ஒரு வரிகூட இல்லாத போது, அடிப்படையில் இதை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொள்ள
நான் மறுக்கிறேன். இது கொள்கைக்கான தத்துவம் அல்ல, வெறுமனே கீழ்மட்டத்தில் செயல்படுத்தக்கூடிய
செயல்திட்டம் மட்டுமே. இது கல்விக் கொள்கையே அல்ல.
கல்வி என்னதான் செய்கிறது என்று எடுத்துக்
கொண்டால், அது அறிவைக் கையாளுகிறது அவ்வளவுதான். கல்வியிலே பிரதானமாக என்ன வேலை இருக்கிறது?
கற்றல் இருக்கிறது. கற்பித்தல் என்பது இரண்டாம் பட்சம். அது கற்றலை ஆதரிக்கின்ற செயல். அங்கே
உள்ள ஆசிரியர் சூழலை உருவாக்கித் தருகிறார். அதுதான் ஆசிரியரின்/கற்பிப்பவரின் வேலை.
ஆக கற்றலே பிரதான வேலை. மாணவர் எதைக் கற்கிறார்? எதற்காகக் கற்கிறார்? அறிவைக் கற்கிறார்.
அறிவை உருவாக்கவும் செய்கிறார். ஆக அறிவு பிரதானமாக பொருளாக இருந்து போற்றப்படுகிறது.
அறிவைக் கற்கும் மாணவர், அறிவை உருவாக்கவும் செய்கிறார். மாணவர் அறிவை உள்வாங்கும்
போது, தன்னுடைய அறிவையும் சேர்த்து அதனுடன் வெளிப்படுத்தும் போது, அது புதிய அறிவாக
உருவெடுக்கிறது. ஆக கற்றல் என்பது ஒருபக்கமாக மட்டும் அறிவை உள்வாங்குவது கிடையாது. அறிவை உள்வாங்கி, அதைத் தொகுத்து,
சிந்தித்து, புதிய அறிவை வெளிக் கொணர்வது. அதுதான் கற்றலின் உண்மையான நோக்கம். ஆக கல்வியில்
கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆராய்ச்சி செய்வதும் அறிவை உருவாக்குமே என்று சொல்லலாம்.
ஆய்வு என்பதை கற்றலின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். காரணம், நாம் கற்கும் போது, பல கேள்விகள்
எழுகின்றன. பல சந்தேகங்கள் வருகின்றன. அவ்வாறு வருகின்ற போது ஒரு மாணவன், கற்றுக் கொள்கின்றவன்
தன்னைத்தானே உட்புகுத்தப்படுகிறான். அவ்வாறு உட்புகுத்தப்படும் போது, அவன் அறிவுப்பூர்வமாகச்
சிந்திக்கிறான். ஆய்வு அங்கே நடைபெறுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில், அறிவை உள்வாங்குகின்றான்.
அந்த அறிவை அவன் வெளிப்படுத்துகிறான். அது புதிய அறிவாகக்கூட வரும். ஆக கற்றலில் ஆய்வு
இருப்பதினால், கற்றல், ஆய்வு இவை இரண்டும் சேர்ந்ததுதான் கல்வியின் பண்பு.
இங்கே யார் கற்கிறார்கள்? மாணவர்கள்
கற்கிறார்கள். யார் இந்தக் கற்றலைப் போற்றுகிறார்கள். ஆசிரியர்கள் போற்றுகிறார்கள்.
இவையிரண்டையும் தாண்டி, இதை யார் நடத்துகிறார்கள்? கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள்,
பல்கலைக்கழகங்கள் என்று இவையனைத்தும் கற்கும் வேலையைச் செய்வதற்கு சூழலை உருவாக்கித்
தருகின்றன. இதைத் தாண்டி அரசுகள் என்ன செய்ய முடியும்? இந்தக் கல்வி அனைவருக்கும் சென்று சேரக் கூடிய வகையிலான
ஒரு சில வேலைகளை, ஆதரவுகளை நிதியாதாரம், அணுகல் போன்ற மற்றபிற தேவைகள் ஏதாவது இருந்தால்,
அரசு செய்யலாம். ஆக கல்வியை நடத்துவது பிரதானமாக மாணவன் மட்டுமே. அந்த மாணவன் கல்வியைப்
பெறுவதற்கு ஆதரவான வேலைகளைச் செய்வதுதான் ஆசிரியருடைய வேலை.
இந்தக் கல்விக் கொள்கையிலே, மாணவன்
கற்றலைச் செய்வதற்கான ஏதாவது கொள்கையை வகுத்திருக்கிறார்களா என்றால், அது குறித்து
ஒருவரி கூட கிடையாது. கொள்கைப் பரிந்துரைகளை எடுத்துக் கொண்டால், ஓரிடத்தில்கூட மாணவன்
கல்வியைக் கற்கக்கூடிய கொள்கை இதில் கிடையாது. இவர்கள் தந்திருக்கும் 66 பக்கங்களிலும்
முழுக்க இருப்பது என்னவென்றால், தேசிய அரசு பாடத்திட்டத்தை வகுக்கும்; தேசிய அரசு தேர்வை
நடத்தும்; தேர்வுகளுக்கான அடிப்படையான அமைப்புகளை உருவாக்கும்; மற்ற பிற அமைப்புகளைக் கொண்டிருக்கும். இவை சரியாக
நடைபெறுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்கு, கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாட்டு அமைப்புகள்,
தர நிர்ணய அமைப்புகள்
போன்ற மற்ற பிற விஷயங்களையும் தேசிய அரசு செய்யும். கல்வியைச்
செயல்படுத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளை,
பிரதானமாக மாணவரும், ஆசிரியரும் செய்ய வேண்டிய வேலைகளை, அரசு கொடுத்திருக்கும் 66 பக்கத்திலே
அனைத்தையும் நாங்களே செய்வோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பாடத்திட்டங்களை நாங்கள் வகுப்போம்,
பாடப் பொருண்மைகளையும் நாங்களே செய்வோம் என்று கூறுவார்கள் என்றால், கல்வி கற்பவருக்கும்,
கற்பிப்பவருக்கும் இங்கே என்ன வேலை என்று சொல்வது? அதிலும் இதை மத்திய அரசு எடுத்துக்
கொள்வதுதான் மிகப் பெரிய அவலம். குறைந்தபட்சம் மாநில அரசோ அல்லது அதற்குக் கீழுள்ள
உள்ளாட்சி அமைப்புகளோ செய்தார்கள் என்றால், சரியென்றுகூட கூறலாம். ஆனால் இதை மத்திய
அரசு எடுத்துக் கொள்கிறது. அரசு என்ன செய்யப் போகிறது என்று மட்டுமே 66 பக்கங்களிலும்
கூறுகிறார்களே தவிர, கல்வி என்ன செய்யப் போகிறது, கல்வியை மாணவர்களும், ஆசிரியர்களும்
எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி எதுவும் அங்கே இல்லை. ஆக அடிப்படையிலே பார்த்தால்,
கல்வி செய்ய வேண்டியதைக் கூறாமல், அரசு என்ன செய்யப் போகிறது என்று கூறி விட்டு, அதைக்
கல்விக் கொள்கை என்று கூறினால், நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கல்வி குறித்த
தத்துவத்தைப் புரிந்து கொண்டால், வெளிவந்திருக்கும் கல்விக் கொள்கை கல்விக்கானதே அல்ல என்பதை, அது நிச்சயம்
அரசியல் ஆவணம் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். தேசிய அரசுகள் எப்பொழுதும்
அதைத்தான் செய்யும். அதைத்தான் இவர்களும் செய்திருக்கிறார்கள்.
இப்போது தத்துவத்திற்கு வரலாம். கல்வி
என்பது அறிவைக் கையாளுவதாகும். அதாவது அறிவை உள்வாங்கி, அதை உள்ளுக்குள் தொகுத்து,
சிந்தித்து, மீண்டும் அறிவை வெளிப்படுத்துவதுதான் கல்வியின் நோக்கமாக, கற்றலின் நோக்கமாக
இருக்க முடியும். கல்வியில் பிரதானமாகத் திகழ்வது கற்றல். கற்பது என்னவென்று பார்க்கும்
போது, பாடப்பொருண்மை இரண்டாவது அங்கம் வகிக்கிறது. எதைக் கற்பது என்பதுதான் பாடப்பொருண்மை.
ஆக இரண்டு விஷயங்கள் நமக்குத் தெளிவாகின்றன. ஒன்று, கல்வியிலே முக்கியமானதாக கற்றல்
நடக்கிறது. அந்தக் கற்றலை எது நடத்துகிறது? எந்தப் பாடப்பொருண்மையைப் படிக்க வேண்டுமென்று
நினைக்கிறோமோ அதைப் படிக்கிறோம். ஆக இவையிரண்டும்தான் கல்வி குறித்த தத்துவத்தில் பிரதானமான
அங்கம் வகிக்கின்றன.
சற்று பின்னால் சென்று பார்க்கலாம்.
கற்றலில் நாம் அறிவிற்காகப் போராடுகிறோம். அறிவு கையாளப்படுகிறது என்று கூறுகிறோம்.
அறிவு என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்து கொண்டால், இப்போது இருக்கின்ற
கல்வியும், இவர்கள் கொண்டு வரவிருக்கின்ற கல்வியும், கல்வியே அல்ல என்பதை நிச்சயமாக
ஆணித்தரமாக நீங்கள் நம்புவீர்கள். அதை உங்களின் சிந்தனைக்கே நான் விட்டுவிடுகிறேன்.
என் சிந்தனையை உங்கள் சிந்தனையாக மாற்ற நான் நினைக்கவில்லை.
அறிவு என்பது என்னவென்று பார்க்கும்
போது, திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்கிறார்: ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
அறிவு’ என்று. இங்கே மெய்ப்பொருள் என்பதுதான் முக்கியமான ஒன்று. மெய்ப்பொருள் என்பது என்ன? உண்மை. உண்மைப் பொருள். உண்மையைக் கண்டறிவது
அறிவு. அறிவு என்பது மெய்ப்பொருள் காண்பது என்று சொல்லி, 2000 ஆண்டுகளாகி விட்டது.
இப்போது 2000 வருடங்கள் கழித்து, இந்த மெய்ப்பொருளைக் காண்பது குறித்து எப்போதாவது
ஏதாவது ஆய்வுகள் நடந்துள்ளனவா? நமது பாட்டனாரோ, முப்பாட்டனரோ அல்லது முப்பாட்டனுக்கு
முப்பாட்டனாரோ ஏதாவது தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே அதுகுறித்து ஆய்வு செய்திருக்கிறார்களா?
யாருமில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிவுப்
புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக தமிழ்ச் சமூகத்திலே, தமிழ் இலக்கியத்திலே, தொல்காப்பியக்
காலத்திலே என்று அந்த காலத்தில்தான் அறிவுப்பூர்வமான வாழ்க்கை நடந்திருக்கிறது. மெய்ப்பொருள்தான்
அறிவு என்று கூறும் போது, அந்த மெய்ப்பொருளை எவ்வாறு அடைவது என்பதை திருவள்ளுவர் கூறவில்லை;
வழிமுறைகளை அவர் கூறவில்லை; மெய்ப்பொருளை அடைவதற்கான திட்டங்களை அவர் வகுத்துத் தரவில்லை.
அப்படியிருக்கும்போது, அந்த மெய்ப்பொருளை எதன் மூலமாக அடைவது, இந்த மனிதனை எப்படி அறிவாளியாக
மாற்றுவது? இதுதான் இங்கே எழுகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு ஏன் நமது முப்பாட்டனர்கள்
எதையும் செய்யவில்லை என்ற கேள்வி எழுகின்றது. கடந்த 1500 ஆண்டுகளாக நம்முடைய முப்பட்டனார்கள்
அனைவரும் என்ன செய்து விட்டார்கள் என்றால், மெய்ப்பொருளை இறைவனிடம் காணச் சென்று விட்டார்கள்.
எங்காவது கோவிலுக்கு, குளத்திற்கு, கடவுளிடம் சென்றால், மெய்ப்பொருள் எனக்கு கிடைக்கும்
என்று அறிவு கிடைக்குமிடத்திற்குச் செல்லாமல், அவர்கள் எங்கோ சென்று அறிவைத் தேடியிருக்கிறார்கள்.
1500 ஆண்டுகளாக இந்தியாவிலே, குறிப்பாக
எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் இல்லை என்பதாலேயே இதை நான் சொல்கிறேன். யாரும் சிந்திக்கவே
இல்லை. மெய்ப்பொருளை இறைவனிடம் காணச் சென்று விட்டோம். இறைபக்தர்கள் மன்னிக்க வேண்டும்.
உங்கள் இறையுணர்வை நான் மறுக்க விரும்பவில்லை. அது உங்கள் முடிவு. ஆனால் அறிவை இறைவனிடம்
தேடக் கூடாது. நம் சொந்த மூளையிலே தேட வேண்டும். அது நம்மிடமே இருக்கிறது. அது நம்மிடையே இருக்கிறது என்பதை இம்மானுவேல் காண்ட் முதன்முதலாகச் சொல்லியிருக்கிறார். கடந்த
1500 ஆண்டுகளில் இதிகாசங்களும், தமிழ் இலக்கியங்களும், சங்க இலக்கியங்களில் இருந்ததைப்
போல் அல்லாமல், அறிவுப்பூர்வமாக இல்லாமல் போயின. அங்கே பக்தி மார்க்கம் செழித்தது.
பக்திமார்க்கம் மூலமாக மட்டுமே படிக்க வேண்டிய சூழல் 1500 ஆண்டுகளாக நீடித்தது. இந்தவொரு
சூழ்நிலையிலே நாம் எவ்வாறு மெய்ப்பொருளைக் கண்டிருப்போம்? மெய்ப்பொருளைக் காண்பதற்கு,
நமது முப்பாட்டனார்கள் யாரும் எதையும் செய்து தரவில்லை. ஆனால் அதே காலகட்டத்திலே கிரேக்க
அறிஞர்களும், ஜெர்மானிய அறிஞர்கள் பலரும், மெய்ப்பொருளை, அறிவை எவ்வாறு எட்டுவது என்பது
குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். நாம் பக்திமார்க்கத்தில் மூழ்கி, மெய்ப்பொருளைக் காண்பதற்கு
இறைவனிடம் சென்ற போது. அறிவை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று தத்துவத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இம்மானுவேல்
காண்ட், அறிவு என்பது உன்னிடத்தில் இருக்கிறது என்கிறார். அந்த அறிவை நாம் எவ்வாறு
கண்டுகொள்வது, உண்மையை எப்படி கண்டுபிடிப்பது என்பதைக் கூறுகிறார். அவர் சுத்தமான அறிவு என்று
வேறு கூறுகிறார். அப்படியென்றால், அசுத்தமான அறிவு என்ற ஒன்று உள்ளதா? ஆமாம் நம் புலன்களுக்குள்
சிந்திப்பது அசுத்த அறிவு. என்னுடைய புலன்களுக்குள் இருப்பது, என்னுடைய உணர்வுகளின்
அடிப்படையில் நான் எடுக்கும் முடிவு அசுத்த அறிவு. ஊசியால் குத்தினால் வலிக்கிறது என்று
சொல்வது அசுத்த அறிவு. குத்தினால் வலிக்கிறது என்பதைத் தாண்டி, அந்த உணர்வைத் தாண்டி
கருத்தாக்கம் வேண்டும் என்று சொல்கிறார். அந்த நிலைக்கு ஒரு மனிதனால் சிந்திக்க முடியும் என்று சொல்கிறார். அதுதான் உயிரியல் சிந்தனாமுறை.
ஒருபொருளைப் பார்க்கும் போது, நமக்குள்
ஓர் உணர்வு பிறக்கிறது. அந்த உணர்வு நம்மை ஒரு கருத்தாக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
அந்தக் கருத்தாக்கம், பிறகு கருத்துக்கு எடுத்துச் செல்கிறது. அந்தக் கருத்துகூட சரியா,
தவறா என்பது அந்தக் கட்டத்திலே நமக்குத் தெரியாது. அதையும் தாண்டி சிந்திக்க வேண்டும்
என்கிறார். சிந்திப்பதற்கு மூளையில் ஏராளமான அறைகள், நரம்பு செல்கள் இருக்கின்றன. அவை
சிந்திக்கும் வல்லமை பெற்றவை. அந்த நிலையில் சிந்திக்கும் போது, எவ்வாறு சிந்திக்க
வேண்டும் என்பதையும் அவர் சொல்கிறார். அவ்வாறு சிந்திக்கும் போது உண்மை தெரியும் என்கிறார்.
அதைத்தான் அறிவு, மெய்ப்பொருள் என்று அவர் சொல்கிறார். திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு
முன்பு மெய்ப்பொருள் அறிவு காண வேண்டும் என்று சொல்லிச் சென்ற பிறகு, எந்தவொரு இந்தியனும்
அந்த மெய்ப்பொருள் என்பது என்னவென்று சொல்ல முடியாமல் இருந்த நிலையில், திருவள்ளுவரைப்
படிக்காத, ஜெர்மனியில் இம்மானுவேல் காண்ட் இப்படித்தான் அதைக் கண்டு பிடிக்க வேண்டும்
என்பதைச் சொல்லி விட்டார்.
இது சரிதானா? ஒரு தனிமனிதனுக்குள்
உருவாகும் அறிவை, அனைவருக்குமான அறிவு, அதுதான் உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியுமா
என்றால், அது இல்லை என்று ஹெகல் 150 ஆண்டுகளுக்கு முன்பு சொல்கிறார். அது தனிமனிதனைச்
சார்ந்தது அல்ல என்கிறார். இம்மானுவேல் காண்ட் சொல்வது பகுதி உண்மைதான். அந்த மெய்ப்பொருளை
நமக்கு நாமே காண வேண்டும்; நாம் சிந்திக்க
வேண்டும். சிந்தனையின் முடிவில் அந்த உண்மை தெரியும். அதுதான் மெய்ப்பொருள். ஆனால்
அந்த மெய்ப்பொருள் ஒரு தனிமனிதனிடத்தில் மட்டும் அடக்கமாகி இருக்காது. அது உண்மையும்
அல்ல என்கிறார். அது பிற பொருண்மைகளுடன், பிறபொருட்களுடன், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடன்,
பிற மனிதர்களுடன் தொடர்பு உடையது என்று அவர் கூறுகிறார். இன்று ஒரு பொருண்மை இருக்கிறது.
அது நாளை வேறொரு பொருண்மையாக, வேறு விதமாக உருமாறுகிறது. இன்றைக்கு இதுதான் கருத்து,
இதுதான் அறிவு என்று கொள்வது இப்படியே இருக்காது. நாளை அது வேறு அறிவாக மாறும். அது
எவ்வாறு மாறும்?
ஒரு பொருண்மைக்கு, எப்போதுமே நேரெதிர்
பொருண்மை உண்டு. ஒரு மனிதனுடைய சிந்தனைக்கு எப்போதுமே நேரெதிரான கருத்து உண்டு. ஆக
கருத்தையும், அதற்கு நேரெதிரான கருத்து என்று இவையிரண்டையும் தொகுத்து சிந்திக்கும்
போது அறிவு உருவாகிறது என்கிறார். அதுதான் உண்மையான அறிவு என்று அவர் சொல்கிறார். அது
valid knowledge என்று அவர் சொல்கிறார். ஒரு தனிமனிதனுடைய சிந்தனை,
அவன் உருவாக்குகின்ற, கண்டுபிடிக்கின்ற அறிவு
என்பது மற்றவர்களுடன் தொடர்புடையது. மற்றவர்களுடன் தொடர்புடையது என்பதால், அது தனிமனிதனுக்குள்ளே
இருப்பது அல்ல. அது ஒரு சமூகத்திடம் இருக்கிறது என்கிறார். எனவே சமூக நிறுவனங்கள்,
சமூக கட்டமைப்பிற்குள்தான் அறிவு பொதிந்து கிடக்கின்றது. அறிவு என்பது உண்மையான அறிவு
என்பதுதானா என்று எடை போடுவது அந்த சமூகத் தளத்தில் இருக்கிறது
என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அதையும் தாண்டி அவர் பிரதிபலிப்பு
என்று சொல்கிறார். உங்களிடம் உள்ள கருத்திற்கே நீங்கள் எதிர்க்கருத்து கொண்டிருக்க
வேண்டும் என்கிறார். அந்த எதிர்க்கருத்து, முன்பிருந்த கருத்தை உதறி விட்டு வேறொரு
கருத்தை உருவாக்கும். அவ்வாறு தொகுத்து சிந்திக்கும் போக்கில்தான், உண்மையான அறிவு
வெளிப்படுகிறது என்று சொல்கிறார். எந்தவொரு சமுதாய வளர்ச்சியும், பரிணாம வளர்ச்சியும்
இந்த எதிர்க்கருத்துக்களாலேயே, முரணாலேயே வரும் என்கிறார். ஒரு கருத்து இருக்கிறது.
அது சரியில்லை என்று சொல்லி எதிர்க்கருத்தை முன்வைக்கிறோம். இவையிரண்டையும் சேர்த்து
சிந்திக்கும் போது வேறொன்று புதிதாக வருகின்றது. அதுவே முக்கியம். இதுதான் புத்தர்
2500 ஆண்டுகளுக்கு முன் சொன்னது. Nothing is permanent on Earth. No physical or mental object is
permanent. இது புத்தர் சொன்னது.
அதே காலகட்டத்திலே வாழ்ந்த ஹெராக்ளிட்டஸ்
என்ற கிரேக்க அறிஞர், தத்துவஞானி இதையேதான் சொல்கிறார். it flows; nothing is permanent; it flows; it changes இன்றிருக்கும் கருத்து
நாளை வேறொரு கருத்தாக உருவாகிறது. எனவே எதுவுமே நிரந்தரம்
கிடையாது. ஆக பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை எல்லாம் அறிவு என்று சொல்லிக் கொண்டிருந்தால்,
உங்களுடைய கல்விக் கொள்கை சொல்வதைப் போல… அது அறிவு என்பதாகுமா? மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு கலைகளை உருவாக்கியிருக்கிறோம், இந்தியப் பெருமையை உருவாக்கியிருக்கிறோம் என்று
கல்விக் கொள்கை சொல்கிறதல்லவா? அதுதான் அறிவு என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான
சிந்தனை? இந்தக் கல்விக் கொள்கையிலே முட்டாள்தனமான சிந்தனை இருக்கிறது. இது நம்மை ஏமாற்றுகின்ற வேலை, இது கல்விக்கே எதிரானது,
ஒத்து வராதது என்று இந்த அடிப்படையிலேயே நம்மால் மறுத்து விட முடியும். இது கல்விக்கு
எதிரானது என்று நம்மால் கூற முடியும்.
2000 ஆண்டுகளுக்கு முந்தையதை விடுங்கள்.
இந்த நொடியில் சொல்வதற்கே, அடுத்து உடனடியாக மாற்றம் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும்,
நொடியும் மாறும். அறிவும், கருத்தும் அந்த பரிணாம வளர்ச்சியை எடுத்துக் கொண்டே இருக்கும்.
இதுதான் இந்த உலகம் 2500 ஆண்டு காலமாக ஏற்றுக்
கொண்ட உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. அப்படியிருக்கும் நிலையில், 2000ஆண்டுகளுக்கு
முன் கண்டுபிடித்தேன், நான் ஏரோப்ளேனில் பறந்தேன், சிசேரியன் பண்ணினேன் என்று சொல்வது
தவறு அல்லவா? இவ்வளவு பிற்போக்கான கருத்தியலை கல்விக் கொள்கை கொண்டிருப்பது எவ்வளவு
கேவலமானது? நான் இந்தியன்தான். இந்தியன் என்பதில்
பெருமை கொள்ள விரும்புகிறேன். அது எனது சொந்த விருப்பம். நீங்கள் சொல்வது எல்லாமே
பெருமையாக இருக்குமா என்பதுதான் என்னுடைய கேள்வி. நீங்கள் சொல்லி விட்டாலே அது இந்தியப்
பெருமையா?
அறிவு என்பது ஹெகல் சொன்னதைப் போல,
பிரதிபலிப்பில் வருகிறது. அதுதான் பகுத்தறிவிற்கு கொண்டு போய்ச் சேர்க்கிறது. எனது
கருத்துக்கு நேரெதிரான கருத்தை நானே எடுப்பேன். என்னை நானே எதிர்த்துக் கொள்கிறேன்
என்று பொருள். இன்றைக்கு நான் சொல்வதற்கு மாறாக, வேறொன்றை நான் அடுத்த நிமிடம் சொல்கிறேன்
என்றால், என்னை நானே உதறித் தள்ளுகிறேன் என்று அர்த்தம். நான் அவ்வாறு உதறிக் கொள்வதன்
மூலம், என்னுடைய சொந்த எண்ணங்களை உதறிக் கொள்வதன் மூலம், நான் அப்பாற்பட்டு சிந்திக்கிறேன்.
உண்மையைக் கண்டு கொள்வதற்காக நான் அடுத்த பரிணாமத்திற்குச் செல்கிறேன் என்று அர்த்தம்.
இதுதான் அறிவினுடைய மலர்ச்சி. இதுதான்
உண்மையைக் கண்டறிவது; இதுதான் திருவள்ளுவர் ஒரு வரியில் சொன்ன மெய்ப்பொருளைக் காண்பது.
அதை நிரூபித்தவர் ஹெகல்தான். தனிமனிதனின் அறிவு, அவனுடைய சிந்தனை, அவனுடைய கருத்தாக்கம்
என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாது; அது மற்றதுடன் தொடர்புடையதாக இருக்கிறது; அதுமட்டுமல்லாது,
எந்தவொரு பொருளை எடுத்துக் கொண்டாலும், எந்தவொரு பொருண்மையை எடுத்துக் கொண்டாலும்,
அவையனைத்தும் அடுத்ததுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. அந்த தொடர்பு இருப்பதனால்,
அந்த ஒரு கருத்து மட்டுமே உண்மையாகாது. அது அடுத்த பரிணாமத்திற்கு எப்பொழுதும் சென்று
கொண்டே இருக்கும்; இந்தக் கருத்து எப்பொழுதும் நிலையாக இருக்காது; அதையே சரியென்றும்
கூற முடியாது. அடுத்த கருத்து தானாக உருவாகும்; அதுதான் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று
சொல்கிறார். ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்த சமூக கட்டமைப்பில்தான் இந்தவொரு பரிணாமம்
உருவாகிறது என்று சொல்கிறார்.
‘எண்பொருளவாகச் செலச்சொல்லித்
தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு’ என்று வள்ளுவர்
மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார். நாம் யாருக்காவது ஏதாவதொரு கருத்தைச் சொல்ல வேண்டும்
என்று நினைக்கிறோமோ, அதைத் தெளிவாக, எளிமையாக மற்றவருக்குப் புரியும்படி சொல்லிவிட
வேண்டும். அதேபோன்று மற்றவர்களின் பேச்சில் உள்ள நுண்ணறிவை நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.
அந்த அறிவுதான் மெய்ப்பொருள் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் திருவள்ளுவர் கோடிட்டுக்
காட்டுகிறார். ஒரு தனிமனிதனுடைய அறிவை யாரின் மீதும் திணிக்க முடியாது என்கிறார். அது மற்றதுடன் தொடர்புடையதாக இருக்கிறதால், அந்த
தொடர்புடைய மாற்றுக் கருத்துக்களையும் உள்வாங்கி, இது ஒரு சிந்தனைத் தொகுப்பாக, வேறொரு
கருத்தாக வெளிவரும். அதற்கு வழிவிட வேண்டும். அது சமூகத்தில்தான் நடக்கும். ஆக அந்த
சமூக கட்டமைப்பு எப்படியிருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், அறிவு அந்த மெய்ப்பொருளைக்
காண முடியும் என்று கூறுகிறார்.
அப்படியிருக்கும் பொழுது, இந்தியாவிலே இருக்கின்ற சமூக கட்டமைப்பு நீர்கசியாத தொட்டிகளாக இருப்பதாக அம்பேத்கர் சொல்கிறார். இது ஒரு சாதி, அது ஒரு சாதி. இவனுக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்காது. இவன் சேர்ந்து வாழ மாட்டான். ஒரு பொருண்மைக்கும், இன்னொரு பொருண்மைக்கும் தொடர்பு இருக்கிறது, அந்த தொடர்புமுறைப்படுத்தித்தான் அறிவை உருவாக்க முடியும்; அறிவின் மூலம் உண்மையைக் காண முடியும் என்றிருக்கும் போது, இவர்களுக்குள் தொடர்பே இல்லாத போது, இவர்கள் கருத்து வேறு, அவர்களுடைய கருத்து வேறு, நீர்கசியாத தொட்டிகள் என்று இப்படி இருக்கும் போது, ஒரு சமுதாயமாகவே நாம் வாழ முடியாத சூழலில், நம்மால் இந்தியாவிலே மெய்ப்பொருளைக் காண முடியுமா? இங்கே இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை வைத்துக் கொண்டு காண முடியுமா என்பதுதான் கேள்வி.
ஜான் டூவி என்ன சொல்கிறார் என்றால், சமுதாயம் என்றால் சேர்ந்து வாழ்வது. conjoint communicative experience என்று சொல்கிறார். நாமெல்லாம் சேர்ந்து நமக்குள்ளே தகவல் பரிமாற்றத்தை, அறிவுப் பரிமாற்றத்தை எடுத்துக் கொள்வதுதான் சமூகத்திற்கு அழகு. அதுதான் சமூகத்திற்கான குறியீடு என்று சொல்கிறார். அவர் சொல்வதை அப்படியே இந்தியாவில் பொருத்திப் பாருங்கள். அறிவு என்பது நமது உணர்வுகளைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். அந்த உணர்வுகளைத் தாண்டி சிந்திக்கும் போது, நம்மிடம் பல பரிமாணங்களைத் தாண்டி உள்ளுக்குள்ளே உயிரியல் சிந்தனாமுறை என்ற செயல்முறை நடக்கிறது. பயில்கின்ற மாணவர்களை அவ்வாறு சிந்திக்க வைப்பதற்கான கற்பித்தல் முறை இருக்கிறது. அந்த அளவிற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், இந்த சமூகத்திலிருக்கின்ற அறிவுதான் பள்ளிக்கூடத்திற்கு வருகிறது. பள்ளிக்கூடத்தில் யாரும் அறிவை உருவாக்குவதில்லை. எந்தப் பல்கலைக்கழகத்திலும் அறிவு உருவாக்குவதில்லை. அது தானாகவே இந்த செயல்முறைப்படி சமுதாயத்தில் உருவாகிறது. கருத்து - எதிர்க்கருத்து – கருத்தாக்கம் என்ற செயல்முறைப்படித்தான் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அங்கிருந்து காப்பி அடித்து, நாம் பாடத்திட்டத்திற்குள் கொண்டு வருகிறோம். அதுதான் அறிவு என்று கொண்டு வருகிறோம். அதை நாம் படிக்கிறோம்.
அந்த அறிவு இப்படி சின்னாபின்னமாகி சிதறி, பல ஆறாயிரம் சாதிகளாக, பல வர்ணங்களாக சிதறிக் கிடக்கும், நீர்கசியாத தொட்டிகளாக தொடர்பே அற்ற நிலையில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் அந்த மெய்ப்பொருளைக் காண முடியுமா? முடியாதல்லவா? அதற்கு ஒரு கல்வி தேவைப்படுகிறதல்லவா? அந்தக் கல்வி அந்த வேலையைச் செய்ய வேண்டுமல்லவா? அந்தக் கல்வி எந்த வேலையைச் செய்ய வேண்டும்? கல்வி conjoint communicative experienceஐ உருவாக்க வேண்டும். அதைத்தான் educative capacity of the society என்கிறோம். இது புது சொற்றொடர்தான் என்றாலும், educative capacity of the society என்றால் என்னவென்று நான் நிரூபித்திருக்கிறேன். சமூகத்தின் தன்னைத்தானே கற்பித்துக் கொள்ளக்கூடிய திறன் என்பது எப்போது நடக்கும் என்றால், அங்கே conjoint communicative experience அவற்றிற்கிடையில் சேர்ந்து வாழும் தன்மை இருக்க வேண்டும். அது இல்லாதபட்சத்தில், சாதிகளாகப் பிரிந்து கிடக்கும்பட்சத்தில், கல்வி என்ன செய்ய வேண்டும்? அந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த அறிவுகளை கல்வி உள்வாங்க வேண்டும். பரந்து கிடக்கும் அறிவுகளை, கருத்து - எதிர்க்கருத்து – கருத்தாக்கம் என்று தொகுத்து சிந்திக்க வைக்கின்ற ஒரு செயலுக்குள் கல்வி சமூகத்தின் அனைத்து கூறுகளையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி ஒரு கல்வி வந்து விட்டது என்றால், இந்தியாவை எந்த நாட்டிற்கும் இணையல்ல என்று கூற முடியும். அனைத்து கண்டுபிடிப்புகளும் இந்தியாவில்தான் நடக்கும். அனைத்து அறிவுப் பரிமாணங்களும் இந்தியாவிலிருந்துதான் உருவாகும். அப்படியொரு கல்வித்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஆக அறிவு என்றால் என்னவென்று பார்த்தோம். அறிவு தனிமனிதனைத் தாண்டி ஒரு சமூகத்தில் இருக்கின்றது என்பதைப் பார்த்தோம். ஜனநாயகப்பூர்வமாக, சேர்ந்து வாழக் கூடியதாக, பல பரிமாற்றங்களைச் செய்து கொள்ளக்கூடிய கூறுகளைக் கொண்டதாக அந்த சமூகம் இருக்கும்பட்சத்தில், அறிவுப் புரட்சி நடக்கும் என்று நாம் கூறுகிறோம். அது இல்லாதபட்சத்தில் கல்வி அதைச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறோம்.
ஆக இங்கே அறிவு என்பது பிரதானம்.
அந்த அறிவைப் பெறுவதற்கான பாடப் பொருண்மைகள் இரண்டாவது பிரதானம். இந்தப் பாடப் பொருண்மைகள்
மூலமாக, அந்த அறிவைப் பெறுவதற்காக கற்கும் முறை என்பது மூன்றாவது தேவைப்படுகிறது. இந்த
மூன்றும்தானே கல்வியைக் குறிக்கிறது. இந்த மூன்றிலே யார் இருக்கிறார்கள்? மாணவன் இருக்கிறான்,
ஆசிரியர் இருக்கிறார்கள். அதற்கும் மேலே நமக்கு பள்ளிக்கூடம் தேவையா? பல்கலைக்கழகம் தேவையா? 70000 ஆண்டுகளாக இந்த மனித
சமுதாயம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் எல்லாம் கிடையாது. பல்கலைக்கழகங்கள்
கிடையாது. பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் வந்து 2500 வருடங்கள்தான் ஆகும். அதிலும் இந்த
நவீன கல்வி வந்து 300 வருடங்கள் ஆகும். பள்ளிக்கூடம் இல்லாமல், பல்கலைக்கழகம் இல்லாமல்
இத்தனை வருடங்களாக எவ்வளவு கண்டு பிடித்திருக்கிறோம். அதைச் சமுதாயம்தான் கண்டுபிடித்தது.
ஆக அந்த சமுதாயத்தில் அப்படிப்பட்ட அறிவுப் புரட்சி இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இங்கே பள்ளிக்கூடம் தேவை, பல்கலைக்கழகம் தேவை. காரணம் ஆண்டான் அடிமை என்ற
நிலை தொடர்கிறது. அடிமையாக இருக்கிறவனைப் பார்த்திருப்பீர்கள். 2500 ஆண்டுகளாக பெரும்பான்மையான
மக்களுக்கு கல்வி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும்கூட அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பல நாடுகளில் பல காரணங்கள் இருக்கின்றன.
அங்கே வர்க்கப் பிரச்சனைகள் இருக்கிறது. ஏழை பணக்காரன் என்று. பல மேற்கத்திய நாடுகளிலே, அங்கும் இதே பிரச்சனைதான்.
ஆக அங்கு ஒரு கல்வி உருவாக்கப்பட்டது. அது யாருக்கானது என்ற கேள்வி எழுந்த போது, கல்வி
அனைவருக்குமானது என்று ஜெர்மனியிலே கூறப்பட்டது. கிரேக்கத்திலே கூறப்பட்டது. அமெரிக்காவிலே
இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்தியாவில் நடக்கவில்லை? காரணம் இங்கே கல்வி,
அது செய்ய வேண்டிய வேலையை, சமூகத்தின் கூறுகளை, சமூக கட்டமைப்புகளை உள்வாங்கி கல்வி
தத்துவம் இந்தியாவில் உருவாகவில்லை என்பதுதான் காரணம். அப்படிப்பட்ட ஒரு கல்வித் தத்துவம்
இந்தியாவில் உருவாகவில்லை. இந்த கல்விக் கொள்கை உண்மையிலேயே நல்ல கொள்கையாக இருந்திருந்தால்,
இதைமட்டும்தான் செய்திருக்க வேண்டும். மீதி திட்டங்களையெல்லாம் நாங்கள் பார்த்துக்
கொள்வோம். பேராசிரியர்கள் இருக்கிறோம். ஆசிரியர்கள் இருக்கிறோம். மாணவர்கள் இருக்கிறார்கள்.
எங்களுக்குத் தெரியும் கற்பிக்கும் முறை என்னவென்று. எங்களுக்குத் தெரியும், பாடத்திட்டங்கள்
என்ன, பாடப்பொருண்மைகள் என்னவென்று. அதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் செய்ய
வேண்டியது - நீங்கள் ஆறாயிரம் சாதியாகப் பிரிந்து கிடக்கிறீர்களே, அறிவுப் புரட்சி
இங்கே ஹெகல் சொன்னபடி நடக்க முடியவில்லையே, ஆக அதற்குண்டான இந்தக் கூறுகளைக் கணக்கில்
எடுத்துக் கொண்டு எங்களுக்கு ஒரு தத்துவத்தைக் கொடுங்கள். வழிமுறைகளைக் கொடுத்து விட்டுச்
செல்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஆக ஒரு சமூகம் ஜனநாயகப்பூர்வமாக இருக்க
வேண்டும். அப்போது அறிவுப் புரட்சி ஏற்படுகிறது. புதிய அறிவால் மெய்ப்பொருள் காண முடிகிறது.
அங்கிருக்கும் சமூகக் கூறுகள் அனைத்தும் அறிவார்ந்த சமூகக் கூறுகளாக மாறுகின்றன. அதற்கு
ஒரு கல்வித் தத்துவம் வேண்டும். கல்வி என்றால் என்ன, கல்வி செய்யும் வேலை என்ன, கல்வியில்
பிரதான அங்கம் வகிப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதற்கு மேல் அரசு என்ன
செய்ய வேண்டும் என்பதையும் பார்த்து விட்டோம். வழியைக் காட்டி, தத்துவத்தை மட்டும்
அரசு கொடுத்து விட்டால் போதும். மீதி என்ன செய்ய வேண்டும் என்பது கல்வி நிறுவனங்களுக்குத்
தெரியும், ஆசிரியர்களுக்குத் தெரியும், மாணவர்களுக்குத் தெரியும்.
இதுபோன்று செய்யும் போது, இதிலே எங்கே
பிரச்சனை வருகிறது? எப்போதுமே உலகளாவி உள்ள இந்த தேசிய அரசுகள் நாட்டை நம் கைகளிலேயே
பிடித்துக் கொள்ள வேண்டும், அதிகாரத்தை நமது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும், ஆட்சியில்
எப்போதுமே உட்கார்ந்திருக்க வேண்டும் என்று இப்படியான ஆதிக்க சக்திகள் இருக்கின்றனவே,
அவை எப்போதும் இப்படி ஒரு கல்வித் தத்துவத்தை, இந்த நாட்டிற்கு, அந்த மண்ணிற்குத் தேவையான
ஒரு கல்வித் தத்துவத்தை அளிக்க அவர்கள் முன்வரமாட்டார்கள். நாம் அவர்களிடம் கெஞ்சியெல்லாம்
பெற முடியாது. எங்கேயும் அது நடந்தது கிடையாது.
ஹிட்லர், முசோலினி காலத்திலிருந்து
– முசோலினிகூட அவர் ஒரு தத்துவஞானியை வைத்துக் கொண்டுதான் கல்விக் கொள்கையை வகுத்தார்.
ஜெண்டைல் என்பவரை வைத்திருந்தார்.
ஜெண்டைல் ஹெகலிடமிருந்துதான் பெற்றுக் கொண்டார். ஜெண்டைல் என்ன சொல்கிறார்? மனிதர்கள் ஒருவருக்கொருவர்
தொடர்புடையதாக இருக்க கடமைப்பட்டவர்கள். இது ஒரு சமூகக்கூறு. தேசத்திற்கான இறையாண்மை
எப்போது நிலைநிறுத்தப்படும் என்றால், அங்கு ஒன்றுக்கொன்று இருக்கின்ற தொடர்புடையதாக
தேசியம் இருக்க வேண்டும் என்று ஜெண்டைல் சொல்கிறார். தேசியம் இருந்தால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும்.
மக்களைக் காப்பாற்ற முடியும். ஏனென்றால் நாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவர்களாக இருக்கின்றோம்.
நம் கருத்துக்களும் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. உண்மைகூட தொடர்பு மூலமாகத்தான்
வருகிறது. ஆக நாம் அனைவரும் இந்த தேசத்தை, நாட்டை, மக்களை ஒற்றுமையாகப் பிரதிபலிக்க
வேண்டும். அப்படிப் பிறந்ததுதான் பாசிசம்.
ஆனால் ஹெகல் அப்படிச் சொல்லவில்லை.
இவர்கள் தவறாக எடுத்துக் கொண்டார்கள். பாசிச பாதைக்கு எடுத்துச் சென்றார்கள். ஹிட்லரைப்
பார்த்தோம், முசோலினியைப் பார்த்தோம். அவர்கள் நான் சொல்வேன் அதுதான் பாடத்திட்டம்
என்று சொன்னார்கள். நான் சொல்வேன் அதுதான் கல்வி என்று சொன்னார்கள். நான் இதைத்தான்
கலை என்று சொல்வேன், நீ அதைத்தான் படிக்க வேண்டும்
என்று சொன்னார்கள். பாடங்கள் அனைத்தையும் அவர்களே இறுதி செய்தார்கள். அவ்வாறு செய்வது
அரசியல் நோக்கம் கொண்டது இல்லையா? அது அரசியல் அல்லவா? அது கல்வியா? அது அரசியல். தன்னுடைய
அதிகாரத்தை நிலைநிறுத்துகின்ற அரசியல். இதைத்தான் அவர்கள் செய்தார்கள். எந்தவொரு அரசு
கல்வியை மையப்படுத்துகிறதோ, தன்னுடைய அதிகாரத்தில் வைக்க வேண்டும் என்று நினைக்கிறதோ,
அது தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு மட்டுமே கல்வியைக் கையாளுகிறது என்றுதான்
பொருள்படும். அதைத்தான் இப்போது இந்தக் கல்விக் கொள்கையும் செய்கிறது.
இந்தக் கல்விக் கொள்கையிலே, இந்த
கல்வித் தத்துவத்தின் அடிப்படையிலே என்ன இருக்கிறது? இந்தியப் பாரம்பரியம், நெறிமுறைகள், கலைகள்
எல்லாம் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். கல்வியின் பாடப்பொருண்மைகள் தனித்தனியாக மாணவனுக்கும்,
ஆசிரியருக்கும் இடையில் இருக்கின்ற விஷயம். அதற்குத்தான் ஒரு பாடத்திட்டம் வேண்டும்.
அந்த பாடத்திட்டத்தை யார் வகுக்க வேண்டும்? பள்ளிக்கூடங்கள்தான் வகுக்க வேண்டும். அல்லது
அங்கே இருக்கின்ற உள்ளூர் அமைப்புகள் செய்ய வேண்டும். அந்த பாடப்பொருண்மை மாணவர்களுக்குத்
தேவையா, இல்லையா, தொடர்புடையதா, இல்லையா என்று
அவர்களுக்குத்தான் தெரியும். அவ்வாறிருக்கும் பொழுது, பாடப்பொருண்மைகளை தில்லியில்
உட்கார்ந்து முடிவு செய்யப் போவதாகக் கூறுகிறார்கள். அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு,
3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கலைகளையும், பொருண்மைகளையும் கல்வியின் மூலமாக மீண்டும்
நாங்கள் பறைசாற்றப் போகிறோம் என்று கூறுகிறார்கள். இது மெய்ப்பொருளை எவ்வாறு காண வேண்டும்
என்று காண்ட் சொன்னாரோ, ஹெகல் சொன்னாரோ, ஜான் டூவே சொன்னாரோ, அவையெல்லாவற்றையும் தவறு
என்று சொல்லி, தவறாக அல்லவா இவர்கள் போகிறார்கள்.
இங்கே பாடத்திட்டம் வகுப்பதற்கு தில்லியிலே
தேசிய பாடத்திட கட்டமைப்பு கவுன்சில் என்று பள்ளிக் கல்விக்கென்று, உயர்கல்விக்கென்று
என்று அமைப்புகளை வைத்திருக்கிறார்கள். NHERC என்று ஏராளமான அமைப்புகளை உருவாக்குகிறார்கள். இவையனைத்தையும்
எவ்வாறு செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த நாட்டிலும் இதுபோன்று நான் பார்த்தது
கிடையாது. அப்படியொரு பைத்தியக்காரத்தனமான விஷயம். இவ்வாறான மிகப் பெரிய அரசு இயந்திரத்தை
நடத்துவது சாதாரண விஷயமல்ல. அவ்வளவு மிகப்பெரிய அதிகாரத்துவ அமைப்பு.
அது
ஒரு பக்கம் இருக்கட்டும். பாடத்திட்டத்திற்கு வருவோம். தில்லியில் அமர்ந்து பாடப்பொருண்மைகளை அங்கே நீங்கள் முடிவு செய்தால்,
எனது சொந்த சிந்தனையின் அடிப்படையிலான மெய்ப்பொருளை நான் இங்கே இருந்து கொண்டு எவ்வாறு
காண முடியும்? பாடப்பொருண்மைகளுக்குள் ஒரு பாடத்திட்டத்தைக் கொண்டு வரும் போது, மெய்ப்பொருளைக்
காண நாம் என்ன செய்ய வேண்டும்? ஹெகல் என்ன சொல்கிறார்? நேரெதிர்மறையான கருத்தை எடுத்து உன் கருத்துடன் மோதிப் பார்; உனக்குப் புதிய அறிவு
பிறக்கும் என்று சொல்கிறார். ஒரு கருத்தை நீங்கள்
பாடத்தில் திணிக்கின்ற போது, அதைப் படிக்கின்ற மாணவன் தனது எதிர்க்கருத்தை எடுத்து
அலசிப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ள விரும்பினால், அது இந்தக் கல்வித் திட்டத்தில்
முடியாதே? தேசிய பாடப்புத்தகம் என்று போட்டு விட்டால், அத்துடன் அது முடிந்து விடுகிறது.
தேசியப் பாடப்புத்தகத்தில் இதுதான்
பாடம் என்று போட்ட பிறகு, அது குறித்து எவ்வாறு கேள்வி கேட்பது? அதற்குப்பிறகு எதிர்மறையான
கருத்துக்களை எடுத்துக் கொண்டு மெய்ப்பொருளை எவ்வாறு காண்பது? ஆக அங்கே பாடத்திட்டத்தை
வகுத்துவிட்டு, அறிவு இதுதான் என்று கூறி விட்டு - அரசு மட்டும், தேசிய அரசு மட்டும்
இதைக் கூறவில்லை; தாராள பொருளாதாரச் சந்தைகள், சந்தை
வியாபாரிகள் சொல்கிறார்கள் – எனக்குத் தேவையான திறன் கொண்ட மாணவர்களை எனக்குத் தயாரித்துக்
கொடுங்கள் என்று சொல்கிறார்கள் .இவர்களுக்காக நாம் மாணவர்களை உருவாக்க வேண்டுமா? ஆனால்
அதைத்தான் இந்தியாவில் இருக்கின்ற ஆயிரம் பல்கலைக்கழகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
நான்கு பேர் பெருநிறுவனங்களை வைத்துக் கொண்டு, இந்த நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார்களே,
அவர்கள் சொல்கிறார்கள்… employability என்றால், எனக்குத் தேவையான திறனையும், அறிவையும் அங்கே பாடத்திட்டமாக
வைக்க வேண்டும் என்கிறார்கள். கல்வியா இது?
கல்வி,
அறிவிற்கான விளக்கங்களை முழுமையாக அறிந்த பிறகு, இவற்றைத் திணிக்கும் போது, நம்மால்
எவ்வாறு மெய்ப்பொருளைக் காண முடியும்? பொறியியல், தொழில்நுட்பம் என்று எதுவாக இருந்தாலும்,
அங்கும் மெய்ப்பொருள் இருக்கிறது. வாழ்வியல் புலங்களில் மட்டுமல்ல. தொழில்நுட்பத்தை
நான் கையாளுகிறேன் என்றால், செயற்கை நுண்ணறிவை எடுத்துக் கொள்ளுங்கள் - செயற்கை நுண்ணறிவு என்னுடைய மூளைக்குள்
சென்று என்னையே மழுங்கடிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த செயற்கை நுண்ணறிவை கல்வியில்
கையாளப் போவதாகச் சொல்கிறீர்கள். கவனம் வேண்டும். அது சீர்கெடுக்கும் தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்பம் இல்லாமல், நாம் வளர முடியாது. அது பல நன்மைகளுக்கும் பயன்படுகிறது
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனாலும் நீங்கள்
கொண்டு வரும் கல்வி, இந்த செயற்கை நுண்ணறிவு, சரியாக என்னைச் சிந்திக்க வைக்குமா? இவர்களால்
இதற்குப் பதில் சொல்ல முடியுமா? இந்தக் கல்விக்கொள்கையில் அதற்கான தீர்வு இருக்கிறதா?
நாளைக்கே தேர்தல் நடந்தால்கூட, யாருக்கு வாக்கு அளிக்க வேண்டுமென்று… செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பத்தை வைத்து மக்களை மழுங்கடிக்கிறார்கள் என்பது அமெரிக்காவிலே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பல ஆய்வுகளில் குறிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவை கல்வியிலே, பாடத்திட்டத்திலே
கொண்டு வந்து… வரத்தான் வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கல்வித்திட்டம்
என்ன சொல்கிறது? கல்விக் கொள்கை என்ன சொல்கிறது? மாணவர்களை எளிதாக மழுங்கடித்து விடலாமே!
எந்த பாடப்பொருண்மைகளை மாணவன் படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த பொருண்மையை,
அவனுடைய தலையில் இந்த செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தின் மூலம் திணித்து விடுவீர்கள்
என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. உங்களால் பதில் சொல்ல முடியுமா? இந்தக் கேள்விக்கு
கஸ்தூரிரங்கன் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும்
அமைச்சரவை இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்கெல்லாம் எந்த பதிலும் அவர்களிடம்
கிடையாது.
பாடப் பொருண்மையில்தான் நான் நிற்கிறேன்.
மீதியெல்லாம் விட்டு விடுங்கள். தூக்கி எறிந்து விடுங்கள். அவையெல்லாம் குப்பை. அதில்
ஒன்றுமில்லை என்பதை எந்த அவையிலும் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இது என்னுடைய
பெருமைக்காக அல்ல. என் தேசத்தைக் காக்க வேண்டும். இந்த மக்களைக் காப்பதில், இந்த சிந்தனையும்
கருத்தாக்கமும் இருக்க வேண்டும் என்ற கவலையில் பேசுகிறேன். வேறு எந்தவொரு சுயலாபமும், எந்த நோக்கமும் கிடையாது.
நான் ஆட்சியாளர்களுக்கும் சேர்த்துச் சொல்கிறேன். நீங்கள் நல்லபடியாக இந்த கல்வியைக்
கையாண்டு இந்த மக்கள் உங்களைப் போற்ற வேண்டுமென்று நான் கேட்கிறேன். பாடப்பொருண்மையில்தான்
அறிவு பொதிந்திருக்கிறது. பல சாதிகளாகப் பிரிந்திருக்கும் போது, பல அனுபவங்கள் இருக்கிறது.
பல கருத்தியல்கள் இருக்கிறது. பல கருத்து மோதல்கள் உருவாக வேண்டும். அந்த கருத்து மோதல்களின்
மூலம் உண்மை, மெய்ப்பொருள் வெளிவர வேண்டும். அதுதான் அறிவு என்று அறிஞர்கள் எல்லோரும்
சொல்லியிருக்கிறார்கள். அந்த அறிவைப் பெறுவதற்கு, நீங்கள் உங்கள் பாடங்களைச் சொல்லி,
உங்கள் பழம்பெருமையைச் சொல்லி, யார் மீது திணிக்கப் பார்க்கிறீர்கள்?
இதுதான் என்னுடைய கேள்வி. பாடப்புத்தகத்தை
யார் தயாரிப்பது? நீங்கள் எவ்வாறு அதைத் தயாரிக்க முடியும்? யார் கொடுத்தது? ஆட்சியாளர்கள்
வழிமுறைகளை மட்டும் தரலாம். பாதையை மட்டும்தான் காட்ட வேண்டும். அமெரிக்காவும் இதைத்தான்
செய்தது. நீங்கள் போற்றி புகழ் பாடுகின்ற ஃபின்லாந்திலே, அவர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.
பாடத்திட்டத்தை அவர்கள் போடுவதில்லை. அங்கே பள்ளிகளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர்களிடம் இதை விட்டு விடுங்கள். நீங்கள் அரசியல்வாதிகள் ஏன் இதைக் கையில் எடுத்துக்
கொள்கிறீர்கள்? அல்லது நீங்கள் உருவாகியிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், தில்லியிலே உட்கார்ந்து
ஆட்சி செய்யப் போகிறார்களே, அவர்களுக்கு கல்வியாளர்களைவிட, பேராசிரியர்களைவிட அவர்களுக்குத்
தெரியுமா? பாடப்பொருண்மைகளை அடையாளம் காண அதிகம் தெரியுமா? முடியாது. தயவுசெய்து உங்களைச்
சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன். கல்விக் கொள்கையை வகுத்தவர்களே! ஆட்சியில் இருக்கும்
தலைவர்களே! நீங்கள் எங்களுக்கும் சேர்த்துத்தான் தலைவர்களாக இருக்கிறீர்கள். தயவுசெய்து
உங்கள் மனதினை மாற்றிக் கொள்ளுங்கள். தயவுசெய்து… தயவுசெய்து… மிகவும் மிகவும் தவறு
செய்கிறீர்கள். அதை
உங்களிடம் எவ்வாறு தர முடியும்? அரசியல்வாதிகளுக்கு வேலையில்லை.
அதிகாரிகளுக்கும் தெரியாது. முடியாது. கல்விக் கொள்கை வகுத்தவர்களும், ஆட்சியாளர்களும்
மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். தயவுசெய்து.. மிகவும், மிகவும் தவறு செய்கிறீர்கள்.
ஒரு ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு மேல் இது தொடர்ந்து விட்டால் பின்வாங்குவது மிகவும்
கடினம். எச்சரிக்கிறேன்.
கல்வி என்பது அணுகலைத் தர வேண்டும்.
இந்தியாவில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 26 சதவீதம் இருக்கிறது, 50 சதவீதமாக அதிகரிக்கப்
போகிறோம் என்று நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது எல்லா மாணவர்களுக்கும்
அணுகலை ஏற்படுத்தித் தரப் போகிறோம் என்று. கிராமங்களுக்கெல்லம் செல்லப் போவதாக சொல்லியிருக்கிறீர்களே!
எங்கே போடப் போகிறீர்கள்? நீங்கள் தில்லியிலே உட்கார்ந்து கொண்டு எப்படி போடப் போகிறீர்கள்?
நீங்கள் மாநில அரசிடம் இதைக் கொடுத்தீர்கள் என்றால், அது நடக்கும். மாநில அரசுகள்கூட
வழிமுறைகளை மட்டுமே போட வேண்டும். மாநில அரசுகளுக்குகூட, எந்த அதிகாரமும் கிடையாது
கல்வியிலே. மாநில அரசு அந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டு, அந்த மாநிலத்திற்கேற்ப,
அங்கிருக்கும் மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், கருத்தியல்கள் இவையனைத்தையும் கையில்
எடுத்துக் கொண்டு, வழிமுறைகளைக் கொடுத்தால் போதும். பேராசிரியர்களும், மாணவர்களும்
சேர்ந்து இந்தக் கல்வியையும் அறிவையும் உருவாக்கி விடுவார்கள். இதைச் செய்திருக்கிறோமா நாம்? மாநிலத்திடம்
விட்டு விடுவதுதான் மிகச்சிறந்த உத்தி. நீங்கள் எடுத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை.
பல ஆயிரம் கலாச்சாரம், பல ஆயிரம் பழக்கவழக்கங்களை எதிர்கொள்ள உங்களால் முடியாது.
இதைச்
சொல்லும் போது, அணுகலை நீங்கள் எவ்வாறு கொடுப்பீர்கள்? ஒரு பழமொழி சொல்வார்களே, என்
ஆத்துக்காரரும் போய்ட்டு வந்தார் என்று அந்த மாதிரி, என் பிள்ளைகளும் பள்ளிக்குப் போய்
வருகிறார்கள் என்று கணக்கு காட்டுவது கல்வி அல்ல. அணுகல் என்பது உள்ளூர் மொழியை, அறிவை,
தேவைகளைப் பூர்த்தி செய்வது. ஒரு சமுதாயம் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண
முடியவில்லை அல்லது அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை; அதை உங்கள் கருத்து
ஏற்றுக் கொள்ளாது; உங்கள் கல்வி அதற்கான தீர்வைக் கொண்டு வராது. மாணவர்களை வெளிச்சத்திற்கு
கொண்டு வராது என்றால், அதை எப்படி அணுகல் என்று சொல்கிறீர்கள்? அந்தக் கல்வியை அனைவரையும்
உள்ளடக்கிய கல்வி என்கிறீர்களே, அது எப்படி? எல்லோருக்கும் கல்வி கொடுத்து விட்டால்,
அது கல்வி கிடையாது. எல்லோருடைய பழக்கவழக்கங்களையும் அனுபவங்களையும், சமுதாயத்தின்
அனைத்து கூறுகளின் தேவைகளையும், கேள்விகளையும், சவால்களையும் உள்வாங்கிக் கொள்ள முடியுமென்றால்,
அது அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வது. அதுதான் உள்ளடக்கிய கல்வி என்று அர்த்தம். பள்ளிக்குச்
செல்ல முடியாதிருந்த பையன், இன்று பள்ளிக்குச் சென்று விட்டால், அது உள்ளடக்கிய கல்வி
அல்ல. கல்வியில் பங்கு பற்றிச் சொல்கிறீர்கள்.
என் பிள்ளைகளின் பங்கு எத்தனை பேர் அங்கே படிக்கிறார்கள் என்பதில் இல்லை. அதுவும் தேவைதான்.
ஆனால் அது மட்டுமல்ல. நீங்கள் நடத்தும் பாடத்திலே, என் அறிவுப் பங்கு இருக்கிறதா?
என் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அந்த அறிவு அங்கு இருக்கிறதா? என் கேள்விகள்,
என் சமுதாயத்தின் சவால்கள், இந்த நாடு சந்திக்கும் பிரச்சனைகள் என்று அனைத்து கேள்விகளுக்கும்,
சவால்களுக்கும் உங்களிடம் பதில் இருக்கிறதா? அப்படியிருந்தால் அது பங்கு. கல்வியில்
அது என்னுடைய பங்கு என்று ஏற்றுக் கொள்கிறேன். என் பிள்ளைகளுக்கு படிக்க அனுமதி கொடுத்து
விட்டால், அது பங்கு கிடையாது. அப்படியென்றால் பங்கு, உள்ளடக்கியது ஆகியவற்றை நீங்கள்
மாற்றியமைத்தாக வேண்டும். அதை எப்படி கல்வி என்று சொல்ல முடியும்?
தேர்வு
என்று சொல்கிறீர்கள். தேர்வுகளும்கூட தேசிய மதிப்பீடு என்று போட்டு வைத்திருக்கிறீர்கள்.
அதையும் தில்லியில்தான் போட்டு வைத்திருக்கிறீர்கள். எப்படி கேள்வி கேட்க வேண்டும்?
எப்படி கேள்வித்தாள்கள் இருக்க வேண்டும்? எப்படி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று எங்கிருந்து
சொல்லப் போகிறீர்கள்? தில்லியில் இருந்து கொண்டு நீங்கள் எங்களுக்கு சொல்லப் போகிறீர்கள்.
இதில் பல லட்சம் பள்ளிகளும், 50000 கல்லூரிகளும், 1000 பல்கலைக்கழகங்களும், நீங்கள்
சொல்வதைக் கேட்டுக் கொண்டு ஒரேமாதிரியாக நாங்கள் செய்ய வேண்டும். அதுபோன்று ஒரேமாதிரியாக
நாங்கள் இதைச் செய்து கொண்டிருக்கும் போது, புதுமை இருக்குமா? புதுமை கொண்டு வரப் போகிறோம்
என்று சொல்கிறீர்கள். அதாவது உருவாக்கும் திறனை, உய்யச் சிந்தனையைக் கொண்டு வரப் போவதாகச்
சொல்கிறீர்கள். அதெல்லாம் எங்கே இருந்து வரும்?
தேர்வுகளை நீங்கள் அங்கிருந்து நடத்தினால், மாணவன் உய்யச் சிந்தனையில் இருக்கிறானா,
உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறானா என்று யார் எடை போடுவது? அதையும் தாண்டி நீங்கள்
தேர்வு நடத்தப் போகிறீர்கள் என்றால், தேசிய அளவில் ஒரே அமைப்பிற்குள்தானே பள்ளிகள்
வேறாகவும், மாநிலங்கள் வேறாகவும் ஆகி விடும்? ஒரே கட்டமைப்பின் கீழ் தேர்வு நடத்தப்
போகிறோம் என்று சொல்கிறீர்கள். அப்புறம் எதற்காக நீட் தேர்வு வைத்திருக்கிறீர்கள்?
ஒரே அமைப்பின்கீழ் தேர்வுகள் என்றால், அப்புறம் எதற்கு நீட் தேர்வு?
அமெரிக்காவில் சாட் என்று ஒன்று இருக்கிறதே
என்று சொல்கிறீர்கள். அமெரிக்காவில் ஏன் சாட் இருக்கிறது என்றால், அங்கே தேர்வுகளை
பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. மாநிலம் நடத்தவில்லை. மாவட்டம் நடத்தவில்லை. அங்கே தேசியம்
நடத்தவில்லை. தேர்வு, கேள்வித்தாள், பாடத்திட்டம் எல்லாமே அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள்
முடிவு செய்வதுதான். பல ஆயிரம் பள்ளிகள், அவரவர்கள் பாடத்திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.
தங்களுக்குள் போட்டி போட்டு நல்ல அறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தேசிய
அளவில் ஒரு திறனறித் தேர்வை நாம் வைத்துக் கொள்வோம் என்று அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள். அதுகூட அமெரிக்க அரசாங்கம் வைத்திருக்கவில்லை. சாட்
என்பது காலேஜ் போர்டு
என்ற தனியார் நிறுவனம் நடத்துகிறது. அது ஓர் அரசுசாரா அமைப்பு நடத்துகிறது.
நீங்கள் தில்லியில் உட்கார்ந்து கொண்டு, லட்சக்கணக்கான பள்ளிகளுக்கு ஒரே கட்டமைப்பிற்குள்
தேர்வு நடத்துவீர்கள் என்றால், பிறகு எதற்கு மற்றுமொரு தேர்வு? ஒரேதன்மையுடன் தேர்வுகள்
நடக்கும் போது, பிறகு ஏன் நீட் தேர்வைப் புகுத்துகிறீர்கள்?
எல்லாமே தேர்வுமயம். தேர்வு ராஜ்யம்
என்பது கல்வி கிடையாது. தேர்வு ராஜ்யம் மட்டுமே கல்வி கிடையாது. புரியாமல் நிறைய பேராசிரியர்கள்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்; புரியாமல் நிறைய துணைவேந்தர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கல்வியாளர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து உள்ளார்ந்து
சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது உண்மை விளங்கும்.
ஆக தேர்வு என்பது போதனா முறையையும்,
பாடப்பொருண்மையையும் பொறுத்தது. தேர்வு வேறு, போதனாமுறை வேறு, பாடப்பொருண்மை வேறு என்று
இருக்கும் போது, படிக்கின்றவனின் கதி என்ன ஆகும்? அவன் எவ்வாறு சிந்தனை நோக்கி போவான்?
மெய்ப்பொருளைக் காண்பது எவ்வாறு என்று இம்மானுவேல் காண்ட் சொல்லியிருக்கிறார். அந்த
நிலைகளையெல்லாம் தாண்டி, ஒரு மாணவனை சிந்திக்க வைக்க வேண்டுமே, நீங்கள் கொண்டு வந்திருக்கும்
கட்டமைப்பிற்குள் அது முடியுமா? நீங்கள் கொண்டு வந்திருக்கும் கட்டமைப்பிற்குள் வெவ்வேறு
நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு அழுத்தங்கள் வருகின்றன. பல வகைகளில் பல அமைப்புகள் கழுகுகள்
போன்று மாணவர்களைக் கொத்திப் பிடுங்குகின்றன. ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
மாணவர்களும் தங்களிடம் இருக்கின்ற அறிவையும் தொலைத்து விடுவார்கள். இந்த 66 பக்கங்களில்
கற்பித்தல் முறை குறித்து எதுவுமே இல்லை. கல்வி அறிவைக் கையாளுகிறது. அதற்கடுத்து பாடப்பொருண்மைகளைக்
கையாளுகிறது. அந்தப் பாடப்பொருண்மைகளைச் சரியாகச் சிந்திக்க வைப்பதற்காக ஒரு கற்பியம்
ஈடுபடுத்தப்படுகிறது. இந்த மூன்றும்தானே கல்வியில் இருக்கிறது? இந்த மூன்றும் சேர்ந்ததுதான்
கல்வி எனும் போது, இந்த கற்பியம் குறித்து என்ன பதில் உங்களிடம் இருக்கிறது? எதுவும்
இல்லையே!
ஆக இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்
போது, நீங்கள் உருவாக்கியிருக்கும் கல்விக் கொள்கை கல்விக்கென்று இருக்கின்ற நோக்கத்தையும்,
தத்துவத்தையும், பண்பையும் எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதை ஆணித்தரமாக
நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் பொழுது, இந்தக் கொள்கை முற்றிலும்
தவறானது. இந்த நாட்டு மக்களுக்கு ஏற்புடையது அல்ல. கல்வித் தத்துவத்தின் அடிப்படையில்
அமையவில்லை. இது ஜவகர்நேசனின் கருத்து அல்ல. கல்விக்கு உண்டான தத்துவத்தை விளக்கியிருப்பதில்,
தவறு இருக்கிறதென்றால் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இதுதான் கல்வித் தத்துவம்
என்று நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம் என்றால், இவர்கள் கொண்டு வந்திருக்கும் கல்விக்
கொள்கை அந்தக் கல்வித் தத்துவத்திற்கு எதிரானது; இந்த நாட்டு மக்களுக்கு எதிரானது.
காரணம் இந்த நாட்டு மக்களுடைய சமூகத் தன்மைகளையும், கூறுகளையும், தேவைகளையும், சவால்களையும்,
கேள்விகளையும் இந்த கல்விக் கொள்கை மூலமாக இவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஆதலால் நாட்டிற்கும்
கெடுதல். மக்களுக்கும் கெடுதல். கல்விக்கே இது கெடுதல். ஆதலால் இந்தக் கல்விக் கொள்கை
தத்துவார்த்தமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
2020 ஆகஸ்ட் 09 அன்று
ஜவகர்நேசன் ஆற்றிய உரை
நன்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,
கலைஞர்கள் சங்கம்
Comments