![]() |
| சேஷாத்ரி ராஜன் மறைவு 15-09-2020 |
பின்னர்,
நகரத்தில் இருந்த சில திரைப்பட ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட யதார்த்தா திரைப்படத் திறனாய்வு
கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். விரைவிலேயே புனேவில் உள்ள திரைப்படப் பயிற்சி
நிறுவனத்திற்குச் சென்று திரைப்படத் திறனாய்வு
படிப்பை மேற்கொண்டார். அங்கிருந்து முதன்முறையாக மதுரைக்கு திரைப்படத் திறனாய்வு பாடத்திட்டத்தை
அவர் கொண்டு வந்த போது, சுமார் 100 பேர் அதில் பங்கேற்றனர்.
‘அப்பொழுது,
மதுரையில் ஏராளமான டாக்கீஸ் அல்லது தியேட்டர்கள் இருந்தன. எப்போதாவது கலை திரைப்படங்களைத்
திரையிடுவதற்கு அவை பயன்பட்டன. சிந்தாமணி டாக்கீஸ் நான் விருப்பத்தோடு நினைவு கூருகின்ற
அத்தகைய ஒன்றாகும். திரைப்படங்களைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும், அவற்றின் நல்ல, மோசமான அம்சங்களைப்
பற்றி நாங்கள் விவாதித்திருக்கிறோம். ஒரு இளைஞனாக, எப்போதும் நல்லதொரு திரைப்படத் தயாரிப்பைப்
பாராட்டுகின்ற வட்டத்தில் இருந்ததில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்று அவர் நினைவுபடுத்திக்
கொள்கிறார்.
பின்னர்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வி மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தில் வேலைக்குச்
சேர்ந்த ராஜன், இருபதாண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றினார். சிந்திக்க வைக்கின்ற
திரைப்படங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில், பல ஆவணப்படங்கள்
மற்றும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புகளில் ராஜன் பணியாற்றினார்.
‘எனக்குப்
பிடித்தமான கல்வித் திரைப்படங்கள் பலவற்றில் நான் பணிபுரிந்தேன். மதுரையில் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான புதுமண்டபம், சமண நினைவுச்சின்னங்கள் மற்றும் நாயக்கர் அரண்மனை குறித்த
ஆவணப்படங்களைத் தயாரித்தேன். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள தனிமைச் சிறை
பற்றி ஆவணப்படத் தயாரிப்பை மேற்கொண்டேன்’ என்று தான் மேற்கொண்ட பணிகளை அவர் பகிர்ந்து
கொண்டார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைப் பேராசிரியராக பல்கலைக்கழக மையத்திலிருந்து
ராஜன் ஓய்வு பெற்றார்.
2004ஆம்
ஆண்டில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக திரைப்பட விழாக்களை யதார்த்தா மூலமாக ஏற்பாடு
செய்யத் தொடங்கினார். அப்போதிருந்து, குழந்தைகளுக்கான மதுரை சர்வதேச திரைப்பட விழா
என்பது திரைப்படக் கழகம் ஏற்பாடு செய்கின்ற ஆண்டு நிகழ்வாக ஆனது. மாதத்திற்கு ஒரு முறை
நகரத்தின் வெவ்வேறு இடங்களில் திரைப்படங்களை யதார்த்தா திரையிட்டு வருகிறது.
சி.டி.க்கள்,
டிவிடிகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் வடிவில் 2,00,000 திரைப்படங்கள் கொண்ட தொகுப்பு
ராஜனிடம் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை எது சிறப்பானதாக்குகிறது என்பதைப் பற்றிக் கூறும்
போது, ‘ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதற்கான ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்துடன்
தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதில் தோல்வி அடையும் போது, அந்தப் படம் தோல்வியடைகிறது’ என்று அவர்
குறிப்பிடுகிறார்.
பரந்த பார்வையாளர்களை
அடைந்து அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிற வகையில், நல்ல திரைப்படங்கள் எப்போதும்
பேசப்பட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கும் ராஜன், ‘வித்தியாசமான திரைப்படங்களை
இயக்குவதற்கு, திரைப்படத் தயாரிப்பில் உங்களுக்கு முறையான கல்வி இருக்க வேண்டும் என்பது
தேவையில்லை. இந்தக் காலத்தில் உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் ஆர்வம் மட்டுமே. இயக்குனராக
இருந்தாலும் அல்லது பார்வையாளராக இருந்தாலும், நீங்கள் அதில் தீவிரமானவராக இருக்க வேண்டும்’
என்கிறார்.
‘ஒவ்வொருவரிடமும் எப்போதும் ஒருவிதமான தேடல் இருக்க
வேண்டும். அது உங்களுக்கு நீங்கள் யார், இந்த உலகம் எவ்வாறானது என்பதைக் காண்பிக்கும்.
இந்த உலகத்திற்குள் நுழையும்போது நாம் எதையும் நம்முடன் கொண்டு வருவதில்லை என்று நான்
நம்புகிறேன்; இறக்கும் போது நம்முடன் எதையும் எடுத்துப் போகப் போவதுமில்லை, எனவே இதற்கு
இடைப்பட்ட வாழும் காலத்தில், மற்றவர்களுக்கு ஏதேனும் பயனளிக்கின்ற ஒன்றை நாம் செய்ய
வேண்டும்’ என்கிறார் ராஜன்.


Comments