துபாஷி: இந்தியத் திரைப்படம் - கலாச்சாரங்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் குழந்தைகளுக்கான திரையிடல்
சொர்ணவேல் ஈஸ்வரன்
டிஜிட்டல்யுகத்தில் குழந்தைகளுக்கான
படம் (2015):
கரின் பீலர் மற்றும் ஸ்டான்
பீலர் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூலிலிருந்து
இந்தியாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களின் திரையிடலும், துபாஷியும்
பெரும்பாலும் சி.எஃப்.எஸ்.ஐயால் (இந்திய குழந்தைகள் திரைப்படக்
கழகம்) தயாரிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கான
திரைப்படங்களுக்கு இந்தியாவில் இருக்கின்ற இலக்கு பார்வையாளர்கள் பற்றிய சிந்தனையை,
துபாஷி திரைப்படத்தின் கடந்த பத்தாண்டு கால புழக்கம் நமக்கு ஏற்படுத்தித் தருகிறது.

1955ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, டிஜிட்டல் தயாரிப்பு முறைக்கான
ஆதரவு வழங்கப்பட்ட 2012ஆம் ஆண்டு வரையிலும், சி.எஃப்.எஸ்.ஐயின் நிதி கொண்டே குழந்தைகளுக்கான
திரைப்படங்கள் 35மி.மீ அல்லது 16மிமீ ஃபிலிம் கொண்டு செல்லுலாய்டில் தயாரிக்கப்பட்டு
வந்தன. கடந்த பத்தாண்டுகளில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் விநியோகம் மற்றும் திரையிடலின்
மீது, தனிநபர் கணினி அல்லது மடிக்கணினியில் டிவிடி நகல்களை உருவாக்கிக் கொள்ள முடிவதன்
மூலம், எளிதாக மலிவான நகல்களை வழங்கி வருகின்ற டிஜிட்டல் தொழில்நுட்ப பொருளாதாரம் மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பரந்த அளவிலான திரையிடலை மிகச்சிறிய அளவிலான, எடை
குறைவான இலகுரக எல்சிடி ப்ரொஜெக்டர்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கின்றன. கடந்த
நூற்றாண்டின் அந்திமக் காலத்தில், 35 மிமீ செல்லுலாய்டு ஃபிலிமில் படமாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட
துபாஷி திரைப்படத்தை விநியோகித்து, திரையிடுவதற்கான
அரிய வாய்ப்பையும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூக அரங்குகளில் திரைப்படங்களைக்
காட்சிப்படுத்தி, பரந்த/இலக்கு பார்வையாளர்களை எளிதில் சென்றடைவதற்கான வழியையும் புதிய
நூற்றாண்டு வரவின் போது நமக்கு கிடைத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்தது.

இந்தியாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களின் தயாரிப்பு, விநியோகம்
ஆகியவற்றின் வரலாற்றைப் பார்க்கும்போது, அவை பொதுவாக
சி.எஃப்.எஸ்.ஐ.யால் தயாரிக்கப்பட்டு, குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்ற
இடங்களின் வழியாகப் பரப்பப்பட்டு, அரசு தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக காட்சிக்கு வைக்கப்படுவதாகவே
இருந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, துபாஷி திரைப்படம், அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியான
தூர்தர்ஷன் மூலமாகவே, தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இருந்து வந்த வழக்கத்தில்
கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் காணப்படுகிறது: குழந்தைகளுக்கான
திரைப்படங்களைத் திரையிடுகின்ற செயல்பாடு, மிகமுக்கியமான குழந்தைகளுக்கான திரைப்பட
விழாக்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளுக்கு அப்பாலும் விரிவடைந்து சென்றிருக்கின்றது.
பெரும்பாலும் மதிப்புமிக்க தேசிய, சர்வதேச சிறுவர் திரைப்பட விழாக்கள் நடக்கின்ற பெருநகர
இடங்களிலிருந்து தள்ளி அமைந்திருக்கின்ற பகுதிகளில் நடைபெறுகின்ற பிராந்திய, உள்ளூர்
திரைப்பட விழாக்களில் குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்களை மையமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட
படங்களின் திரையிடல்களைத் தொடர்ந்து வழக்கமான முறையில் நடத்துவது என்ற வகையில், தற்போது
சிறுவர் திரைப்பட விழாக்கள் குறித்த கருத்தாக்கம்
மாற்றமடைந்து விரிவடைந்திருக்கிறது.
ஆரம்பத்தில் 2001 நவம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 12ஆவது சர்வதேச
இந்திய குழந்தைகள் திரைப்பட விழா (தங்க யானை
சர்வதேச இந்திய ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்றும் அழைக்கப்படுகிறது), அதற்கு முன்பாக
2001 மார்ச் மாதம் நடைபெற்ற குழந்தைகளுக்கான கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா போன்ற முக்கியமான
குழந்தைகள் திரைப்பட விழாக்களில் துபாஷி திரையிடப்பட்டு பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
ஆசிய அளவிலே மிகவும் மதிப்புமிக்க சிறுவர் திரைப்பட விழாவாக இந்தியாவில் இரு ஆண்டுகளுக்கொரு
முறை சி.எஃப்எஸ்ஐயால் நடத்தப்படுகின்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, ஒவ்வொரு மாற்று
ஆண்டிலும் தென்னிந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் நவம்பர் 14, குழந்தைகள் தினம் முதல்
நவம்பர் 20 வரை நடைபெறுகிறது. திரைப்படத் திருவிழா
வட்டாரத்தில் காட்டப்படும் ஆரம்ப காட்சிகளுக்குப் பிறகு, தனது படம் பலரையும் சென்றடையும்
என்று துபாஷி திரைப்படத்தின் இயக்குனரான கே.ஹரிஹரன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் துபாஷியின்
தொடர்ச்சியான திரையிடல்கள் அவரது எதிர்பார்ப்புகளைத் தகர்த்ததோடு, குழந்தைகளுக்கான
திரைப்படத்தால் அதற்கான இலக்கு பார்வையாளர்களைச் சென்றடைய இயலாது என்று அவரிடமிருந்த
தீர்மானிப்புகளைத் தவறு என்பதாகவும் நிரூபித்தன.

1999ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும்
நடைபெறுகின்ற குழந்தைகளுக்கான திரைப்பட விழாக்களில் சி.எஃப்.எஸ்.ஐ தொடர்ந்து திரையிட்டு
வருகின்ற அரிய படங்களில் ஒன்றாக துபாஷி இருந்து வருகிறது. கூடுதலாக, கடந்த பத்தாண்டுகளில்
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் தனியார் திரைப்பட இயக்க ஆர்வலர்கள் மற்றும் திரைப்படக்
கழகங்களுக்கு கிடைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் மூலமாக, சாத்தியமான பார்வையாளர்களிடம்,
முக்கியமாக பள்ளிகளில் உள்ள மாணவர்களிடம் அந்தப் படத்தைக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
2001ஆம் ஆண்டில் 12ஆவது சர்வதேச இந்திய சிறுவர் திரைப்பட விழாவிற்கான அதிகாரப்பூர்வத்
தேர்வுக்கு முன்பாகவே, ஃபிலிம் பிரிண்டுகளைப் பயன்படுத்தி, துபாஷி திரைப்படம் பாரம்பரிய
முறையில் திரையிடப்பட்டிருந்தது: 2000ஆம் ஆண்டு ஜூலையில் சென்னையில் நடந்த குழந்தைகள்
திரைப்பட விழாவில் துபாஷி திரையிடப்பட்டது (காமத் – ‘பிரதான நீரோட்டத்துடன் இணைதல்’).
இந்த புதிய நூற்றாண்டில் பிரபலமடைந்துள்ள பிராந்திய திரைப்பட விழாக்கள் மூலமாக, சி.எஃப்.எஸ்.ஐ.யால்
தொடர்ச்சியாக கடந்த பத்தாண்டுகளில் திரையிடப்பட்ட குழந்தைகளுக்கான படங்களாக துபாஷியும்,
சந்தோஷ் சிவனின் மல்லி (1998) திரைப்படமும் இருந்தன.
2004 டிசம்பரில், வட இந்தியாவில் உள்ள ஜாம்ஷெட்பூரில் பதினைந்து
நாட்கள் நடைபெற்ற குழந்தைகளுக்கான திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட இந்தியப் படங்களில்
துபாஷியும் ஒன்றாக இருந்தது. அந்த விழாவை கிழக்கு சிங்க்பூமின் மாவட்ட நிர்வாகம் மற்றும்
நகரத்தில் செயல்பட்டு வந்த செல்லுலாய்டு சாப்டெர் என்ற திரைப்படக் கழகம் ஆகியவற்றுடன்
சி.எஃப்.எஸ்.ஐ இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. அந்த திரைப்படத் திருவிழாவின் போது திரையிடப்பட்ட
பதினொரு படங்களில் உள்ளூர் வங்காள மொழியில் மூன்று படங்களும், ஹிந்தி மொழியில் வசனவரிகளைக்
கொண்ட மெட்டர்னல் லவ் (இயக்குனர்: கமல் தப்ரிஸி,1998), தி ஃபாதர் (இயக்குனர்: மஜித்
மஜிதி,1996), இப்ராஹிம் (இயக்குனர்: ஹமீத் மொஹ்சேனி,1996) என்ற மூன்று ஈரானிய திரைப்படங்களும்
இருந்தன. திரைப்படவிழாவின் தொடக்கப்படம் ராஜேந்திர வித்யாலயா என்ற பள்ளியில் இருந்த
ஆடிட்டோரியத்தில் திரையிடப்பட்டது (சௌம்யா, ‘ரீல் ஃபேண்டஸி ஃபார் சில்ட்ரன்’). அதேபோன்று
2007 அக்டோபரில், தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சி.எஃப்.எஸ்.ஐ
கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி நகரங்களில் துபாஷியைத் திரையிட்டது.
சி.எஃப்.எஸ்.ஐ.யின் தெற்கு பிராந்திய அதிகாரியும், விநியோக அதிகாரியுமான
கே.பி.ராமகிருஷ்ணன், ‘விழுமியங்கள் அடிப்படையிலான பொழுதுபோக்கை குழந்தைகளிடம் எடுத்துச்
சென்று, தரமான திரைப்படங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்’ இலக்கைக் கொண்டு, அர்த்தமுள்ள
சினிமாவை ஒவ்வொரு குழந்தையிடமும் கொண்டு செல்லும் வகையில் மாவட்டத்தில் 72 திரையிடல்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறார் (ஜெஷி). காட்டூரில் உள்ள சாந்தி தியேட்டரில் நடந்த
திரையிடலில், ஃபிலிம் பிரிண்ட் திரையிடப்பட்டது. நடுநிலை முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
பார்வையாளர்களாக இருந்தனர். துபாஷி திரையிடப்பட்டபோது, ஆறாம் வகுப்பு மாணவர்கள் பல்திறமை
கொண்ட கோபாலைப் பாராட்டிய போது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தனது சகோதரரை உற்சாகப்படுத்துகிறார்,
தந்தையுடன் ஒத்துழைக்கிறார், உத்வேகத்திற்கான ஆதாரமாகச் செயல்படுகிறார் என்று கோபாலைப்
பாராட்டினர் (ஜெஷி, ‘மெட்ரோப்ளஸ் கோவை’).
பின்னர் 2009ஆம் ஆண்டில், உள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து
கேரள மாநிலத்தில் கோட்டயத்தில் சி.எஃப்.எஸ்.ஐ குழந்தைகளுக்கான திருவிழாவை ஏற்பாடு செய்தபோது,
மற்ற திரைப்படங்களுடன் மீண்டும் துபாஷி இடம் பெற்றது. நகரங்கள் மற்றும் கிராமங்களில்
உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும், மகிழ்விக்கும் முயற்சியாக மாவட்ட அளவிலான திரைப்படத்
திருவிழாக்கள் மூலமாக தாலுகா, பஞ்சாயத்து (கிராம) மட்டத்திலும், நான்கு நகராட்சிகளிலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட 17 இடங்களில் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. (நிருபர்,
‘குழந்தைகள் திரைப்பட விழா’). ஆகவே, கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சுமார்
100,000 நபர்களை, முக்கியமாக குழந்தைகள், பார்வையாளர்களைச் சென்றடைய சி.எஃப்.எஸ்.ஐ
மேற்கொண்ட முயற்சிகளில் துபாஷி முன்னணியில் இருந்தது. குழந்தைகளுக்கான தரமான பொழுதுபோக்கு,
கல்விக்கான தேவையை அந்த திரைப்படம் நிறைவு செய்தது. துபாஷி திரைப்படத்தின் மொழிபெயர்ப்பே
அத்தகைய முயற்சியை உருவாக்கித் தந்தது. துபாஷி தமிழ், இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் இருந்த வசனவரிகள் இந்தியாவில் இருந்த அனைத்து பார்வையாளர்களையும் சென்றடைவதற்கு
உதவின.

டிஜிட்டல் வடிவமைப்பை நோக்கிய சி.எஃப்.எஸ்.ஐயின் மாற்றம் மெதுவாகவும்,
தாமதமாகவுமே நடந்தது. சி.எஃப்.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்த, விருது பெற்ற நடிகையும்,
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்பட இயக்குனருமான நந்திதா தாஸ், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை
சி.எஃப்.எஸ்.ஐ ஏற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணமாக இருந்தார். 2009 முதல் 2012 வரையிலான
அவரது பதவிக்காலத்தில், சி.எஃப்.எஸ்.ஐ தன்னுடைய 50 திரைப்படங்களை டிஜிட்டல்மயமாக்கியது
மட்டுமல்லாது, ஷெமரூ மற்றும் க்ராஸ்வேர்ட்புக்ஸ் போன்ற பிரபலமான சில்லறை விற்பனையாளர்கள்
மூலம் டிவிடி நகல்களின் விற்பனையையும் தொடங்கியது. ‘இந்திய சர்வதேச சிறுவர் திரைப்பட
விழாவைப் பொறுத்தவரை, 35 மிமீ ஃபிலிம் வடிவில் மட்டுமே திரைப்படங்களைச் சமர்ப்பிக்க
முடியும். டிஜிட்டல் புரட்சி வந்திருக்கும் நிலையில், ரூ.4 கோடி பட்ஜெட்டை வைத்துக்
கொண்டு 35மிமீ திரைப்படங்களுக்கு இனிமேல் சாத்தியமில்லை’ (சித்திகி, ‘ரீலை மாற்றுவது’)
என்று தாஸ் கூறினார். ஆக ஃபிலிம் அடிப்படையிலான தயாரிப்புகள் / நிதியுதவி செய்வதிலிருந்து,
மிகவும் மலிவான டிஜிட்டல் வடிவத்திலான தயாரிப்புகளுக்கு சி.எஃப்.எஸ்.ஐயை தாஸ் மாற்றினார்.
அது மட்டுமல்லாமல், 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் மதிப்புமிக்க சர்வதேச குழந்தைகள்
திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான
கதவுகளைத் திறந்து வைப்பதிலும் தாஸ் மிகமுக்கிய கருவியாக இருந்தார். சி.எஃப்.எஸ்.ஐ.யின்
திரைப்படங்களைத் தாண்டி, திரைப்படத் திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து
சிறந்த திரைப்படங்களைக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை நல்ல விளைவுகளை ஏற்படுத்தியதாகக்
கூறிய தாஸ், ‘ஒரு வாரகால திரைப்படத் திருவிழாவில் 37 நாடுகளில் இருந்து 152 திரைப்படங்கள்
திரையிடப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 1,75,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்
கலந்து கொண்டனர். அவர்களில் பலரும், திரைப்படத்தைக் காண்பதற்காக தங்கள் சிறிய கிராமங்கள்,
நகரங்களை விட்டு முதன்முதலாக வெளியேறி வந்தவர்களாக இருந்தனர். நாட்டின் வடகிழக்குப்
பகுதி, காஷ்மீரிலிருந்தும் கூட முதல் தடவையாக திரைப்படங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டன.
திரைப்படங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்திருந்த எண்ணிக்கையை விட கூடுதலாகவே இருந்தது!
திருவிழாவில் முதன்முறையாக தென் அமெரிக்காவும், ஆப்பிரிக்காவும் கலந்து கொண்டன’ என்று
குறிப்பிட்டார் (சித்திகி, ‘ரீலை மாற்றுவது’).

சி.எஃப்.எஸ்.ஐயின் டிஜிட்டலை நோக்கிய மாற்றம் நிச்சயமாக இந்தியாவில்
குழந்தைகளுக்கான திரைப்படங்களின் உற்பத்தி, விநியோகம், திரையிடலை உற்சாகப்படுத்தியிருந்த
நிலையில், அதேபோன்ற குறிப்பிடத்தக்க பங்கை தமிழ்நாடு குழந்தைகள் திரைப்படக் கழகம் (CFSTN)
வகித்தது. இந்தியாவின் பழமையான, மதிப்புமிக்க திரைப்பட இயக்கங்களில் ஒன்றான தென்னிந்தியாவில்
மதுரையில் உள்ள யதார்த்தா திரைப்பட இயக்கத்தின் ஆர்.எஸ்.ராஜன் சி.எஃப்.எஸ்.டி.என் அமைப்பை
நிறுவினார். சி.எஃப்.எஸ்.டி.என் துவக்கத்தைக் குறிக்கும் வகையில், விமர்சன ரீதியாகப்
பாராட்டுதல்களைப் பெற்ற பிரபலமான இரண்டு படங்களான துபாஷி மற்றும் ஹேலோ (இயக்குனர்.
சந்தோஷ் சிவன், 1998) ஆகியவற்றை 2002 நவம்பர் 14 அன்று, மதுரை அரசரடியில் உள்ள இறையியல்
கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரையிடுவதற்கு சி.எஃப்.எஸ்.டி.என்இன் ஒருங்கிணைப்பாளராகவும்,
திரைப்படத் திருவிழா இயக்குநராகவும் ராஜன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார் (சந்திரசேகர்,
‘லைஃப் மதுரை’). தன்னுடைய ஆதிஅமைப்பான யதார்த்தாவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி
ஏற்படுத்தப்பட்ட சி.எஃப்.எஸ்.டி.என், அதன்பிறகு கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்தியாவில்
மிகமுக்கியமான குழந்தைகள் திரைப்படங்களைத் திரையிடும் அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக்
கொண்டது. சி.எஃப்.எஸ்.ஐ போலல்லாமல், சி.எஃப்.எஸ்.டி.என் அதிகாரத்துவ கட்டுப்பாடுகளிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்டதாக இருக்கிறது. தன்னுடைய உறுப்பினர்களிடமிருந்து வழக்கமான மாதாந்திர கட்டணத்தைக்கூட
வசூலிக்காத லாப நோக்கற்ற அமைப்பாக இயங்கி வருகிற, சி.எஃப்.எஸ்.டி.என் அமைப்பை ராஜனும்
(ராஜன் தற்போது சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டுள்ள இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின்
துணைத் தலைவராக உள்ளார். அதன் தலைவர்களாக மிகவும் பிரபலமான சத்யஜித் ரே, ஷியாம் பெனகல்
உள்ளிட்டோர் இருந்தனர்), நீண்டகாலமாக நல்ல சினிமாவை ரசித்து வருகின்ற அவரது நண்பர்களும்
நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிட ஆர்வம் கொண்டுள்ள எந்தவொரு
பள்ளி, சமூகம். திரைப்பட இயக்கம் போன்ற சமூக கழகங்கள் சி.எஃப்.எஸ்.டி.என் உடன் தொடர்பு
கொள்ளலாம் என்று ராஜன் கூறுகிறார். ஆரம்பத்தில் திரையிடலுக்காகப் பயன்படுத்திய 16மி.மீ
ப்ரொஜெக்டர்களுக்கான கட்டணத்தை மட்டுமே அவர்கள் வசூலித்தனர் (அரவிந்தன், ‘பட்டிங் வித்
கிரியேட்டிவிட்டி’). பின்னர், நண்பர்கள் மூலமாக ப்ரொஜெக்டர்களை நன்கொடையாகப் பெற்ற
பிறகு, அவர்களால் அந்தக் கட்டணத்தையும் நீக்கி விட முடிந்தது. சிஎஃப்எஸ்டிஎன் துவக்கப்பட்டு
மூன்றாவது ஆண்டில், 2005/2006 காலகட்டத்தில் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும்
அதன் செயல்பாடுகளின் உண்மையான விரிவாக்கம் நடந்தது (ராஜன், ஆர்.எஸ்.).
திரையிடலுக்கான இடத்திற்கென்று மிக அதிகப் பொருட்செலவில் அல்லது குறைந்த செலவில் பொருத்தமில்லாத நேரத்தில் 35மிமீ
ப்ரொஜெக்டர்களைக் கொண்டு திரையரங்குகளில் நடத்தப்பட்ட திருவிழாக்கள் / திரையிடல்கள்
மற்றும்/அல்லது 16 மிமீ ப்ரொஜெக்டர்கள் மற்றும் ஃபிலிம் பிரிண்டுகளைக் கொண்டு சமூக
அரங்குகள், பள்ளிகளில் உள்ள ஆடிட்டோரியங்கள் என்று மாற்றி மாற்றி கொண்டு சென்று நடத்தப்பட்ட
திரையிடல்கள் என்று அனைத்துமே, இந்த புதிய, பயனர் நட்பு கொண்ட தொழில்நுட்பத்தின் மூலம்
கிடைத்த உதவியால் மாற்றமடைந்தன. டிவிடிகள் மற்றும் இலகுரக எல்சிடி ப்ரொஜெக்டர்கள் மற்றும்
மடித்து எடுத்துச் செல்லக்கூடிய திரைகள் ஆகியவை கொண்டு செல்வதற்கு எளிதாக இருந்தன.
2007ஆம் ஆண்டில், பல பள்ளிகளும் தங்கள் ஆடிட்டோரியங்களில் மலிவு விலையில் எல்சிடி ப்ரொஜெக்டர்களை
நிறுவியிருந்தன. எனவே இப்போது திருவிழாக்கள்/ திரையிடல்களின் போது குழந்தைகளுக்கான
திரைப்படங்களின் டிவிடிகளை எடுத்துச் செல்வது மட்டும்தான் தேவை என்றாகிப் போனது.
அருகிலுள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் மற்றும் அவர்களின்
பெற்றோர்களுக்கான திரையிடல்களை ஏற்பாடு செய்ய விரும்புகிற போது, நன்கு வடிவமைக்கப்பட்ட
ஆடிட்டோரியங்களில் திரையிடுவதற்கான இடத்தைப் பெறுவதற்கு டி.வி.எஸ் குழுமத்தால் நடத்தப்படும்
பள்ளிகள் போன்ற பெரிய பள்ளிகளின் உதவியை சி.எஃப்.எஸ்.டி.என் நாடிப் பெற்று வருகிறது.
(ராஜன், ஆர்.எஸ்.). இவ்வாறான திரையிடல்கள் பள்ளிகள் விடுமுறையில் இருக்கும்போது நடத்தப்படுகின்றன.
மேலும் திரையிடலுக்கான பார்வையாளர்களை தங்கள் பேருந்துகளில் அழைத்து வருவதன் மூலம்
சி.எஃப்.எஸ்.டி.என்-க்கு உதவிட பெரும்பாலான பள்ளிகள் முன்வந்திருக்கின்றன. தற்போது,
நலம் விரும்பிகளின் நன்கொடைகள் மூலமாக சி.எஃப்.எஸ்.டி.என் தன்னுடைய
செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திரையிடலுக்கான வசதிகளற்ற தொலைதூரப் பகுதிகளில்
உள்ள பள்ளிகளில் திரையிடல்களை ஏற்பாடு செய்யும் போது, தன்னுடைய சொந்த ப்ரொஜெக்டர்களையும்,
எல்.சி.டி திரைகளையும் சி.எஃப்.எஸ்.டி.என் பயன்படுத்திக் கொள்கிறது (ராஜன், ஆர்.எஸ்.).

சந்தோஷ் சிவனின் மல்லி (1996) மற்றும் ஹேலோ தவிர, ஹரிஹரனின் வாண்டட்
தங்கராஜ் (1979), க்ரோகொடைல் பாய் (1986) மற்றும் துபாஷி போன்றவை சி.எஃப்.எஸ்.டி.என்
தேர்ந்தெடுத்த குழந்தைகளுக்கான திரைப்படங்களில் அடிக்கடி திரையிடப்பட்டவையாகும். இந்த
திரைப்படங்கள் சுவாரஸ்யமான திரைக்கதை, கல்விக்கான மதிப்பு, உரையாடல்களில் உள்ளூர் பேச்சுவழக்கின்
பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகளுக்குப் பிடித்தமானவையாக இருந்தன என்று
ராஜன் குறிப்பிடுகிறார். துபாஷி திரைப்படம் ஏராளமான தடவை அதிகமாக திரையிடப்பட்டதாகவும்,
சி.எஃப்.எஸ்.டி.என் வரலாற்றில் ஆறாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளிடையே
மிகவும் பிரபலமாக இருந்ததாகவும் ராஜன் சுட்டிக்
காட்டுகிறார் (தனிப்பட்ட நேர்காணல்).
தன்னுடைய ஆதரவாளர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கத் தயங்குகின்ற
லாப நோக்கற்ற அமைப்பாக இருப்பதால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சில குறைபாடுகள் மற்றும்
அதற்கென்று இருக்கின்ற வரம்புகளை சி.எஃப்.எஸ்.டி.என் சமாளிக்க வேண்டியிருந்தது. பல்புகள் அடிக்கடி ஃப்யூஸாகி விடுவதால், பழையதை மாற்றி
புதிய ஒன்றை அமைப்பது கவலை அளிப்பதாகி விடுகின்றது. புதிய பல்புகள் விலை உயர்ந்தவையாக,
சுமார் 18,000 ரூபாய் (சுமார் 300 அமெரிக்க டாலர்) விலையில் இருக்கின்றன. ராஜன் பயிற்சி
பெற்ற ப்ரொஜெக்ஸனிஸ்ட் என்பதால், முன்பிருந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர்களுடனான எந்தவொரு
இயந்திரம் தொடர்பான சிக்கல்களையும் அவரே சரிசெய்து கொள்வார். ஆனால் மின்னழுத்த ஏற்றத்தாழ்வு,
அதிகப்படியாக சூடேறுவது போன்ற பிற பிரச்சனைகள் காரணமாக எலெக்ட்ரானிக் ப்ரொஜெக்டர்கள்
அவ்வப்போது செயலிழக்கும்போது பழுதுபார்ப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடிவதில்லை.
திரையில் விழுகின்ற ஒளியின் அளவு எல்சிடி ப்ரொஜெக்சனில் உள்ள மற்றொரு குறைபாடாக உள்ளது.
35மிமீ மற்றும் 16மிமீ ப்ரொஜெக்டர்களில் அதிக அளவிலான ஒளியின் வீச்சு/அளவு பெரிய அளவிலான
பார்வையாளர்களைக் கொண்ட பெரிய அரங்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார் ராஜன். பொதுவாக
பிரகாசமாக எரிவதால், தேவைப்படுகின்ற இருள் இல்லாதிருக்கின்ற சமுதாய அரங்குகள் மற்றும்
பள்ளிகளில் உள்ள நிலைமைகளுக்குப் பொருந்துகிற வகையில் ஃபிலிம்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற
கார்பன்-ஆர்க் ப்ரொஜெக்சன் இருக்கும். 16மிமீ ப்ரொஜெக்டர்கள் திரையிடும் போது இருப்பதைவிட,
எல்சிடி ப்ரொஜெக்டர்கள் அதிக ஒலியை எழுப்புவதில்லை. ஆயினும் எல்சிடி ப்ரொஜெக்டர்கள்
பொதுவாக 60 மாணவர்களுக்கான வகுப்பறை போன்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக்
கொண்ட சிறிய அரங்குகளில் திரையிடுவதற்கு மட்டுமே சிறந்தவையாக இருக்கும் (ராஜன், ஆர்.எஸ்.).
ஆனாலும் எல்சிடி தொழில்நுட்பத்தின் அதிவிரைவான வளர்ச்சி, ப்ரொஜெக்சனுக்கான உபகரணங்களில்
ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டு, தன்னுடைய பார்வையாளர்களின் திறனை
அதிகரிப்பதில் சிஎஃப்எஸ்டிஎன் பரிசோதனைகளைச் செய்து வருகிறது.

எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு, பொதுவாக
மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தையே ராஜன் விரும்புகிறார் (ராஜன், ஆர்.எஸ்.).
ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சி.எஃப்.எஸ்.டி.என் திரைப்படத் திருவிழாக்களின் திட்டமிடல்
நவம்பர் 14ஐ ஒட்டியதாக இருக்கிறது. அந்தக் காலம் குளிர்காலமாக இருப்பதால், மாலை நேரம்
ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாகவே இருக்கிறது. பெரும்பாலும் மேகமூட்டமான வானமும், இருக்கின்ற
ஒளியும் மாலைநேரத் திரையிடலுக்குச் சாதகமாக இருக்கின்றன. .நவம்பர் 14 (நேருவின் பிறந்த
நாள்) முதல் நவம்பர் 19 (நேருவின் மகளும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின்
பிறந்த நாள், அவர் இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருந்தவர்)
வரையிலான காலத்தை குழந்தைகள் திரைப்பட விழாவிற்கான முக்கிய காலமாக சி.எஃப்.எஸ்.டி.என்
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது (ராஜன், ஆர்.எஸ்). அந்த நேரத்தில் பல இடங்களில் ஒரே
நேரத்தில் திரைப்படங்களின் திரையிடல்கள் நடத்தப்பட்டாலும், தென்னிந்தியாவில் பல இடங்களில்
உள்ளூர் நிர்வாகிகள், பள்ளிகள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து திரைப்படங்களின் தொகுப்பு
ஆண்டு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 குழந்தைகள்
மற்றும் அவர்களுடைய பெற்றோர்களில் சிலர் என்று சி.எஃப்.எஸ்.டி.என் திரைப்படங்களின்
திரையிடல்களைப் பார்த்து வருவதாக ராஜன் கூறுகிறார் (தனிப்பட்ட நேர்காணல்).

சி.எஃப்.எஸ்.டி.என் அமைப்பின் பயணத்தில் பிரதான படமாக விளங்கி
வரும் துபாஷி, 2002 நவம்பர் 14 முதல் சி.எஃப்.எஸ்.டி.என் மூலமாகத் தொடர்ந்து திரையிடப்பட்டு
வருகிறது. ஆக, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது பத்து லட்சம் குழந்தைகளாவது
துபாஷி திரைப்படத்தைப் பார்த்திருப்பதாகக் கூறலாம்.
Comments