அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, பாஜக அரசியல் என்பது வழிபாட்டு முறையாக மாறியிருக்கிறது: பாஜக தலைவர் ராம் மாதவின் முன்னாள் சீடரான சிவம் சங்கர் சிங்
அபிமன்யு சந்திரா
தி கேரவான் இதழ்

2013ஆம் ஆண்டில் கல்லூரி மாணவராக
இருந்த சிவம் சங்கர் சிங், அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெறவிருந்த தேர்தலில்,
பாரதிய ஜனதாவிற்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்வந்தார். 2015ஆம் ஆண்டில்
கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 2016இலிருந்து பாஜகவில் அதிகாரப்பூர்வமாகப்
பணியாற்றத் தொடங்கினார். பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும், ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின்
மூத்த சித்தாந்தியுமான ராம் மாதவ் என்பவரால் சிங் வழிகாட்டப்பட்டார். தரவு
பகுப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களில் கட்சி சார்ந்து பணியாற்றிய சிங். 2018 மார்ச்
மாதம் கட்சியில் இருந்து விலகினார். அப்போது இணையத்தில் இட்ட பதிவில்,
எதிர்க்கட்சிகள், ஊடகங்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி உருவாக்கிய தவறான கதைகள்,
அரசியல் கருத்து வேறுபாடுகள், போலி செய்திகளைப் பரப்புதல் மற்றும் ஹிந்து
பெரும்பான்மை குறித்து வகுப்புவாத துருவமுனைப்பை வேண்டுமென்றே ஏற்படுத்துதல் போன்ற
காரணங்களால் தான் கட்சியிலிருந்து விலகுவதாக சிங் விளக்கியிருந்தார்.
இந்திய அரசியல் கருத்தியல்ரீதியாக
வலதுபுறம் தன்னை உறுதியாக நிறுத்திக் கொண்டிருப்பதால், வலதுசாரி அமைப்புகளில் முன்னர்
உறுப்பினர்களாக இருந்த சிலர் இடதுபுறமாக நகர்ந்துள்ளனர் - அல்லது குறைந்தபட்சம்
வலப்பக்கத்திலிருந்து விலகி நிற்கிறார்கள். இன்னும் சிலர், குறிப்பாக வலதுசாரி
சூழலில் இருந்து வந்தவர்கள், அதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதோடு, அரசியல்
வலதுசாரிகளின் மீது கடுமையான விமர்சனங்கள் கொண்டவர்களாகவும் மாறி விட்டனர். அத்தகையவர்களை
இந்த நீரோட்டத்திற்கு எதிராக எது செல்ல வைக்கிறது? அவர்களுடைய முடிவுகளை எந்த
மாதிரியான நிகழ்வுகள், சூழ்நிலைகள் மற்றும் பரிசீலனைகள் வடிவமைக்கின்றன? இந்த
மாற்றங்கள் குறித்து தி கேரவன் வெளியிட்டு வருகின்ற கன்வெர்ஸ் லென்ஸ் என்ற
தலைப்பில் தொடர்ச்சியான நேர்காணல்களை நடத்துவதன் மூலமாக, சிகாகோ பல்கலைக்கழகத்தில்
முனைவர் பட்டம் பெற்ற அபிமன்யு சந்திரா ஆராய முற்படுகிறார். சிங் ராஜினாமா
செய்வதற்கு வழிவகுத்த இறுதியான காரணம் குறித்தும், தற்போதைய அரசாங்கத்தின் மீது
பாஜகவிற்குள் இருக்கின்ற அமைதியான ஏமாற்றம் குறித்தும் சந்திரா பேசினார். மேலும் அந்த
ஏமாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஏன் தவறிவிட்டன என்பது
குறித்தும் சிங்கிடம் அவர் விவாதித்தார்.
திருத்தி சுருக்கப்பட்ட நேர்காணல்

அபிமன்யு சந்திரா: நீங்கள் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்து இரண்டு
வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது கட்சி மீதான உங்களுடைய கருத்து ஏதேனும் மாறியிருக்கிறதா
- அல்லது அப்படியேதான் இருக்கிறதா?
சிவம் சங்கர் சிங்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக அமைப்புகள் மீது அதிகமாக
ஊடுருவியுள்ளது என்றே நான் சொல்வேன். ஆரம்பத்தில், அரசியல் கட்சியாக மட்டுமே இருந்த
பாஜக, இனிமேல் அவ்வாறு இருக்கப் போவதில்லை. இப்போது அவர்கள் அரசியல் கட்சியாக
இருப்பதையும் தாண்டி தங்களை நீட்டித்துக் கொண்டுள்ளனர். ஏராளமான வழக்குகளை நீதித்துறை
கையாளுகின்ற விதத்தைப் பார்த்தால், இறுதியில் இந்த நாடு அரசியல் கட்சி ஒன்றால்
முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ளதை உங்களால் கண்டறிய முடியும்.
நீதித்துறையில்,
பாஜகவிற்குள், பாஜகவிற்கு வெளியே, ஊடகங்களில் என்று அனைத்து இடங்களிலும் நிகழ்கின்ற
நிகழ்வுகள் புதிதாக இருக்கின்றன. இவை 2019க்குப் பிந்தைய நிகழ்வாக இருக்கின்றன.
கொரோனா வைரஸ் நிலைமை, அதைக் கையாண்ட விதத்தைப் பார்க்கும்போது, தன்னைப் பின்தொடர்கின்ற
ரசிகர்களைக் கொண்டு இன்று மோடிஜி செய்து கொண்டிருப்பது, அரசியல் கட்சியை நடத்துவது
என்பதை விட, வழிபாட்டு முறையைப் போன்றதாகவே இருக்கிறது.
அபிமன்யு சந்திரா: உங்களுடைய ராஜினாமா குறித்து நீங்கள் வெளியிட்ட
பதிவில், பாஜகவில் நீங்கள் பார்த்ததில், நல்லது, கெட்டது மற்றும் இழிவானது என்று சிலவற்றைக்
குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றிற்கிடையிலான சமன் இப்போது எவ்வாறு மாறியிருக்கிறது என்று நீங்கள்
கூறுவீர்களா?
சிவம் சங்கர் சிங்: இன்று, அதைத் தாண்டி நாம் நகர்ந்திருக்கிறோம். இந்த
நேரத்தில் பாஜகவிற்கு இருக்கும் அதிகாரத்தின் யதார்த்தம் மாற்றியமைக்க முடியாததாக உள்ளது,
அதற்கான எதிர்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. அரசியல் ரீதியாகவும் மிகக் குறைவான
செயல்பாடுகளே இருக்கின்றன. நீதித்துறையைப் பொறுத்தவரை மிகமிகக் குறைவாகவே
நடக்கிறது. அது [பாஜகவை எதிர்ப்பது] குறித்து ஏதாவது செய்யக்கூடியவர்களாக இருந்தவர்களில்
பெரும்பாலானவர்கள் அவற்றைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதான உணர்வே முழுமையாக மேலோங்கி
உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் முன்பாக மாற்றுத்தேர்வை முன்வைக்க வேண்டும் என்ற
உண்மையான உணர்வு இருக்கவில்லை.
அபிமன்யு சந்திரா: அப்படியானால், நல்ல-கெட்ட-இழிவான என்ற அடிப்படையில்
பாஜகவை இனி மதிப்பீடே செய்ய முடியாது என்ற வகையில் நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளில்
மாறிவிட்டது என்று சொல்கிறீர்களா?
சிவம் சங்கர் சிங்: ஆமாம்.
அபிமன்யு சந்திரா: ஆனாலும், உங்கள் பார்வையில், பாஜக நல்லது அல்லது இழிவு
இவற்றில் எதை நோக்கி நகர்ந்துள்ளது?
சிவம் சங்கர் சிங்: எடுத்துக்காட்டாக, தில்லி கலவரத்தைப் பொறுத்தவரை, என்ன
நடக்கிறது, கைது செய்யப்பட்ட நபர்கள் யார் என்பதைப் பார்க்கின்ற அனைவரும், என்ன
நடக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். மாணவர்களைக் கைது செய்வது,
தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்வது, மூன்று
மாதங்களுக்குச் சிறைக்கு அனுப்புவது போன்ற செயல்கள் நியாயமானவை என்று யாரும்
நினைக்கவில்லை.
நடந்து கொண்டிருப்பவை
தவறுதான் என்று அனைவருக்கும் தெரிகிறது. சூனிய வேட்டை நடக்கிறது என்ற புரிதல் பாஜகவிற்குள்ளும்
ஏராளமானோரிடம் இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், இவ்வளவு வெளிப்படையாக
நடக்கின்ற செயல்களுக்கு எதிரான உண்மையான கோபம் பொதுமக்களிடம் இல்லை. உண்மையில்
எதிர்க்கட்சிகளால் அதிகம் செயல்பட முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி எதுவும்
சொல்லவில்லை. காங்கிரஸ் எதுவும் சொல்லவில்லை. கைது செய்யப்படுபவர்கள் குறித்து
உண்மையில் ஊடகங்கள் பொருட்படுத்தவே இல்லை. சஃபூரா சர்கார் கர்ப்பமாக இருந்ததாலேயே,
கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்னும் சிறையில் இருக்கிறார் என்று இரண்டு நாட்கள்
[ஊடகங்களில்] அவர் பெயர் அடிபட்டது.
ஆனால் கர்ப்பிணிப் பெண்
என்பதைத் தாண்டி, அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலவரத்தில்
சிக்கிக் கொண்டார்கள் என்ற வாதம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான வாதத்தை யாரும்
முன்வைக்கவில்லை. எனவே, பாஜக இன்னும் முன்பு இருந்ததைப் போலவே இருக்கிறது என்றே
நான் கூறுவேன். உண்மையில் நல்லது, கெட்டது மற்றும் இழிவானது என்று குறிப்பிட்ட
எதுவும் அவ்வளவாக மாறவில்லை. அவை இருந்த இடத்திலேயே இருக்கின்றன. தவிர, மறுபக்கம்
என்ற ஒன்று இப்போது முற்றிலும் மறைந்து விட்டது.
ஹர்ஷ் மந்தர்
போன்றவர்கள் கலவரத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் - இது தவறு என்று எதிர்க்கட்சிகள்
ஒன்று கூடி கூறியிருக்க வேண்டும். உண்மையில் அதுபோன்ற குரல் இனி இருக்கப்
போவதில்லை. அது நிகழும் வரை, [பாஜக முன்வைக்கின்ற] கதைகள் உடைக்கப்படப் போவதை நாம் காணப் போவதில்லை. மந்தரைப் போன்ற ஒருவர் குற்றம்
சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால், இன்னும் அதிகமானோர் விலகி விடுவார்கள்,
பின்வாங்குவார்கள். கூடுதல் பயம் வரும்.
அதற்கும் மேலாக, மக்கள் இப்போது இருக்கின்ற நிலைமையை [கருத்து வேறுபாட்டிற்கான
இடத்தைப் பொறுத்தவரை] சாத்தியமற்றது, நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதாகவே உணருவார்கள்.

ஜே.என்.யூ
[ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்] பிரச்சனை [2016இல்] நடந்து கொண்டிருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி பேசியதை, காங்கிரஸ் பேசியதை உங்களால் கேட்க முடிந்திருக்கும். குரல் கொடுக்க முடிந்தவர்களாக, கன்னையா குமார் போன்றவர்கள் வெளிப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இப்போது தில்லி கலவரத்தின் போது, என்னால் அதைப் பார்க்க
முடியவில்லை.
அபிமன்யு சந்திரா: 2016இல்
ஜே.என்.யூவில் இருந்த அமைதியின்மையை, அந்த நேரத்தில் கட்சி நடவடிக்கைகளுக்குள்
இயங்கி வந்த ஒருவராக நீங்கள் எப்படி பார்த்தீர்கள்?

சிவம் சங்கர் சிங்: உண்மையைச்
சொல்வதானால், ‘இது என்ன முட்டாள்தனம். அரசு
இயந்திரங்கள் ஒரு பல்கலைக்கழகத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகின்றன?’ என்பதாகவே எனது
முதல் எதிர்வினை இருந்தது. அதிலிருந்து
எனக்கு ஒன்றும்
விளங்கவில்லை. அதைச் செய்த நபராக ஒருவேளை நீங்கள் இல்லாவிட்டால், அது குறிப்பிட்ட
அளவிற்கு கணடனம் செய்பவர்களைச் சென்றடையும் வரையிலும், நடந்து கொண்டிருந்த
முத்திரை குத்தலை நீங்கள் காணவில்லை என்றே பொருள்படும். இதுபோன்ற விஷயங்கள்
மிகவும் அற்பமானவை, முட்டாள்தனமானவை. கட்சியின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற சில
முட்டாள்களால் அது நடந்திருக்கலாம் அல்லது முட்டாள் அதிகாரிகள் சிலர் அதை
நடத்தியிருக்கலாம் என்று அவர்கள் கூறலாம். நீங்களும் அவ்வாறே அதை நினைத்திருப்பீர்கள்.

‘துக்டே-துக்டே’,
‘தேசவிரோதி’ என்பது போன்ற வார்த்தைகளைக் கொண்டு முத்திரை குத்துகின்ற போது ஏற்படப் போகின்ற விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள
சிறிது காலம் ஆகும். அந்த முடிவைக் காண்பதற்கு நீண்ட காலம் ஆகும். குறிப்பிட்ட
காலத்திற்குப் பிறகு, இவ்வாறுதான் அது இயங்குகிறது என்பதை அவர்கள் உணர்வார்கள். கொஞ்ச
காலமாகவே இதுபோன்ற வேலைகளை
அவர்கள் செய்து
வந்தனர். அதை அவர்கள் கம்யூனிஸ்டுகளுடனும், முஸ்லீம்களுடனும், மேலும் பல
விஷயங்களிலும் இணைத்தனர். பின்னர் அது கட்டமைக்கப்பட்டது.
2017 நடுப்பகுதி,
2018இல் இவ்வாறான செயல்பாடு இருந்தது. அரசாங்கத்திற்கு எதிராகப் பிரச்சனையை
எழுப்பும் எவரும், எடுத்துக்காட்டாக ரவிஷ்குமார் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு
முத்திரை குத்தப்பட்டார்கள். அது இப்போது தெளிவாகிக் கொண்டே வருகிறது. அவ்வாறு அவர்கள் நடந்து கொள்கின்ற
வரையிலும், இப்போதுதான் அரசாங்கம்
அமைக்கப்பட்டுள்ளது, ஏதாவது நடக்கும் என்று இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கலாம். புதிய வல்லரசாக இந்தியா ஆகப் போகிறது. ஏதோ ஆச்சரியமான ஒன்று நாட்டிற்கு நடக்கப் போகிறது என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது.
அபிமன்யு சந்திரா: 2018
மார்ச் மாதத்தில் பாஜகவை விட்டு நீங்கள் வெளியேறினீர்கள்.
ஆனால் ஜே.என்.யூவில் அமைதியின்மை 2016 பிப்ரவரியிலேயே தொடங்கியது.
2017இல் ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப்பட்டார்.
கலகத்தைத் தூண்டுகின்ற அவரது ஹிந்து-தேசியவாத சாதனைகள் மற்றும்
அவருடைய நியமனம் பாஜகவிற்குள் இருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. நீங்கள்
ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள்? அதற்கான இறுதிக் காரணம் என்னவாக இருந்தது?
சிவம் சங்கர் சிங்: 2018
திரிபுரா தேர்தலுக்கான வேலைகளில் நான் அப்போது ஈடுபட்டிருந்தேன். கட்சியிலிருந்து
வெளியேறுவதற்கு முன்பாக அதை முடித்துவிட விரும்பினேன். பாஜகவிற்காக நான்
பணிபுரியும் கடைசி வேலை அது என்று நான் முடிவு செய்தேன்.

கர்நாடகாவில் [2018
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது] மற்றும் பிற இடங்களில் மோடிஜி ஆற்றிய
உரைகள் என்னுடைய விலகலுக்கான காரணமாக இருந்தன. அவர்கள் கர்நாடகாவில் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை,
அவர்கள் பேசிய பேச்சுகளைக் கேட்ட போது என்னால் உணர
முடிந்தது. 2014இல்
அவர்களிடம் அடிநாதமாக இருந்த வளர்ச்சி குறித்ததாக அவர்களுடைய
திட்டம் இனிமேல் இருக்கப் போவதில்லை; அவர்களுடைய
திட்டம் ஊழல்
எதிர்ப்புத் திட்டமாக இருக்கப் போவதில்லை, தலைசிறந்த இந்தியாவை உருவாக்குவதாக
இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

2014இல்
காங்கிரசுக்கு எதிரான ஊழல் தடுப்புத் திட்டத்தில் கவனம் செலுத்திய பாஜக,
வளர்ச்சியின் மீது அதிக கவனம் செலுத்தியது. அச்சே தின் ஆனே வாலே ஹைன் - நல்ல நாட்கள் விரைவில்
வரப்போகின்றன என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர். விலை உயர்வு குறித்து கவனம்
செலுத்தினர். உண்மையில் பேசப்பட வேண்டிய அடிப்படை சிக்கல்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் 2019இல், அவை எதுவும் அவர்களுடைய
திட்டத்தில் இருக்கப்
போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
அபிமன்யு சந்திரா: கர்நாடகாவில்
பிரதமரின் உரைகளை நீங்கள் குறிப்பிட்டீர்கள் - எந்த குறிப்பிட்ட உரை, எந்த சூழலில்
அது உங்களைத் தாக்கியது?
சிவம் சங்கர் சிங்: நான்
ஏன் கர்நாடகாவைக் குறிப்பிடுகிறேன் என்றால், அது உண்மையில் எனக்கு
மிகவும் விசித்திரமான அனுபவமாக இருந்தது. குறிப்பிட்ட மட்டத்தில், துருவமுனைப்பை நான் காணத்
தொடங்கினேன். கர்நாடகாவைப் பொறுத்தவரை பிரதமர் தவறான அறிக்கையை வெளியிட்டது, மிகவும் தனித்துவம் கொண்டதாக இருந்தது.
அவர் ஜவஹர்லால் நேரு அல்லது பகத்சிங் அல்லது ஏதோவொன்றைப்
பற்றி பொய் சொன்னார். எனக்குச் சரியாக நினைவில் இல்லை. பகத்சிங்கை
சிறையில் யாரும் சந்திக்கவில்லை என்று மேடையில் நின்று அவர் கூறினார். சில வரலாற்று உண்மைகளை அவர் அன்று முழுவதுமாகக்
குழப்பினார். சமூக ஊடகங்களில் பிரதமருக்கு வரலாறு தெரியவில்லை என்று
கூறி, அனைவரும் அவரைத் திருத்தத் தொடங்கினர்.
அரசியல் உரை ஒன்றைத்
தயாரிப்பதற்காக எந்த அளவிற்கு வேலை செய்யப்படுகிறது என்பது குறித்த அடிப்படைப் புரிதல் எனக்கு இருப்பதால், தவறான உண்மை இதுபோன்று வாய்தவறி வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது
எனக்குத் தெரியும். கதைகளை எவ்வாறு வடிவமைப்பது என்பது பாஜகவிற்குத் தெரியும்
என்பதை அடிப்படையில் உங்களால் உணர முடியும். அதுவரை, [2018 கர்நாடக] தேர்தல்களின்
போது, பிரச்சாரம் எடியூரப்பாவுக்கு [கர்நாடகாவின் தற்போதைய முதல்வர்
பி.எஸ்.எடியூரப்பா] எதிரானதாகவே இருந்து வந்தது. பெல்லாரி சகோதரர்களின் [அந்த நேரத்தில் சட்டவிரோத
சுரங்கம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கிய ஜனர்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, சோமசேகர
ரெட்டி] ஊழல் குறித்ததாகவே தேர்தல் பிரச்சாரம் இருந்தது. கர்நாடக உள்ளூர் அரசியலில், அந்த ஊழல்
குறித்து விரிவாக
விவாதிக்கப்பட்டு வந்தது. தவறான செய்தியொன்றை மோடிஜி வெளியிட்ட பிறகு, அந்த
விவாதங்கள் அனைத்தும் வடிந்து வீணாகிப் போயின. இவர்களும் ஊழலைச் செய்யத் தயாராக
இருக்கிறார்கள் என்பது அப்போது எனக்குப் பெரிய பாடமாக அமைந்தது.

அபிமன்யு சந்திரா: நீங்கள் எதிர்பார்த்திராத ஒன்றைச் செய்வதற்கு பாஜக
தயாராக இருப்பதைக் கண்டு நீங்கள் வியப்படைந்ததாகத்
தெரிகிறது.
சிவம் சங்கர் சிங்: வியப்பு என்று நான் அதைக் கூறமாட்டேன். அடிப்படையில்,
அரசியலில், ஒரு பின்னணியிலேயே அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றன. எந்தவொரு
கட்சியும் முற்றிலும் நல்லதுமல்ல அல்லது முற்றிலும் மோசமானதுமல்ல என்பது
உங்களுக்குத் தெரிந்திருக்கும். 2014இல் ஏராளமானோர் நம்பிக்கையுடன் பாஜகவிற்கு
வாக்களித்தனர். 2017 நடுப்பகுதி, 2018 வரையிலும் நாட்டின் வளர்ச்சி குறித்த
நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தன.
அந்த நம்பிக்கை
முற்றிலுமாக மெதுவாக மறைந்து கொண்டிருப்பதை நான் காண ஆரம்பித்தேன். அது ஒரு
வெறித்தனமான விஷயமாக மாறியது. அதனால்தான் நான் வழிபாடு என்ற குறிப்பை உருவாக்கிச்
சொல்கிறேன். ஏனென்றால் இப்போது அதுதான் நடந்திருக்கிறது. ஆளுமை வழிபாட்டு முறையில்
ஆட்சி செய்கின்ற தலைவர் இருக்கிறார்.
இனிமேல் ஆட்சியானது, மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கப் போவதில்லை.
நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அடிப்படையாகக்
கொண்டிருக்கப் போவதில்லை. எனவே, என்னால் இனிமேல் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட
முடியாது, இத்தோடு போதும் என்ற நிலையை நான் அடைந்தேன்.
அபிமன்யு சந்திரா: உங்கள் ராஜினாமா குறித்த பதிவை வெளியிட்ட சிறிது
நேரத்திலேயே, ‘எனது நம்பிக்கைகளைக் கொன்று புதைக்க வேண்டியதில்லை என்ற உரிமைப்பேறு
கொண்டவனாக அரசியலில் ஈடுபட்டுள்ளவன் நான்’
என்று கட்டுரையொன்றில் எழுதினீர்கள். இங்கு குறிப்பாக, நீங்கள் உரிமைப்பேறு
கொண்டிருப்பதாக எதைச் சொன்னீர்கள்? வர்க்கம், அல்லது சாதி, அல்லது பாலினத்தைக்
குறிப்பிடுகிறீர்களா அல்லது குறிப்பாக எதைக் கூறினீர்கள்?
சிவம் சங்கர் சிங்: உண்மையில் அது அனைத்து வகையிலுமானது. உண்மையில் நான்
பார்த்த அந்த வேலை எனக்குத் தேவையில்லை. நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய பின்னணியில்
இருந்து வந்தவன் நான்; பாஜகவில் நான் சம்பாதித்ததை விட என்னால் அதிக சம்பளத்தைப்
பெற முடியும். இரண்டாவதாக பாலினம் மற்றும் சாதி ஆகியவை குறித்த உரிமை - உயர் ஜாதி
ஹிந்துவாக நான் இருப்பதன் மூலம். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு
குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்னை இழிவுபடுத்த முடியும், இல்லையா? நான் சொன்ன
மிகப் பெரிய உரிமை என்பது என்னவென்றால், பாஜகவில் ஏராளமானோர் தனிப்பட்ட முறையில் என்னை
நன்கு அறிவார்கள். எனவே, இவையனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது,
கட்சிக்குள் எனக்கு நண்பர்கள் உள்ளதால்,
மிகப்பெரிய அளவிலான பின்னடைவு இருக்க முடியாது என்றே நான் புரிந்து
கொள்கிறேன்.
அபிமன்யு சந்திரா: உங்கள் பின்னணியைப் பற்றி அனைத்தையும் விடுத்து, பெண்
அல்லது முஸ்லீம் என்பதாக எடுத்துக் கொள்வோம். அவர்களைப் பொறுத்தவரை இவ்வாறு
ராஜினாமா செய்வது, எதிர்க்குரல் கொடுப்பது, எதிர்வினை செய்வது போன்ற செயல்கள் எப்படி
இருந்திருக்கும்?
சிவம் சங்கர் சிங்: பெண்ணாக இருந்திருந்தால், ட்ரோலிங் மிக அதிகமாக
இருந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். முஸ்லீமாக இருந்தால், அவர் அங்கே நீண்ட
காலத்திற்கு இருந்திருப்பது உண்மையில் நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கும். அது
யதார்த்தமானது என்று நான் நினைக்கவில்லை.
அபிமன்யு சந்திரா: கட்சி முன்னெடுத்துக் கொண்டிருந்த அரசியலைக் கருத்தில்
கொண்டால், நீங்கள் ராஜினாமா செய்த காலம் வரையிலும், நீங்கள் இருந்த பதவிகளில் முஸ்லீமால்
ஒருவரால் தொடர்ந்திருக்க முடியுமா?
சிவம் சங்கர் சிங்: ஆம். அதாவது படிநிலையில் அந்த அளவுக்கு உயரலாம். எனக்கு
அந்த அமைப்பில் முஸ்லீம் சகாக்கள் யாரும் இருக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப அணியில்
அதிக அளவில் முஸ்லீம்களை நான் சந்தித்ததில்லை. அது அவ்வாறு நடக்கக்கூடிய செயல்
அல்ல. பெண்களும் இந்த விஷயத்தில் அவ்வாறே இருந்தனர். பாஜக தகவல் தொழில்நுட்ப அணியை
நீங்கள் பார்த்தால், அது அவ்வாறாக அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இருக்கவில்லை. குறிப்பிட்ட
அளவிற்கு, இது அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள உண்மைதான் - அனைத்து அரசியல்
கட்சிகளும் பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் கொண்டவையாகத்தான் இருக்கின்றன.
அபிமன்யு சந்திரா: உங்கள் ராஜினாமாவிற்கான ஆதரவை பல வாசகர்களிடமிருந்து பெற்றதாக
நீங்கள் அந்தக் கட்டுரையில் எழுதியி்ருந்தீர்கள். உங்களைப் போன்று உள்கட்சி
நடைமுறைகள் குறித்து புகார் கூறி, பாஜகவில் உள்ள வேறு சிலரும் உங்களுடன்
உடன்பட்டார்களா? மற்றவர்கள் யாராவது ராஜினாமா செய்தார்களா?
சிவம் சங்கர் சிங்: தனிப்பட்ட முறையில், கிட்டத்தட்ட நான் சந்தித்த
அனைவரும் அடிப்படை விஷயங்களை [ராஜினாமா பதிவில் இருந்த] ஒப்புக் கொண்டார்கள்.
‘வேறு என்ன வழி இருக்கிறது’ ‘காங்கிரசும் பயனற்றது’ ‘இது மிகமோசமாக
இல்லாவிட்டாலும் மோசமானது’ என்பது போன்று சில கருத்து வேறுபாடுகள் அவர்களிடம் இருந்திருக்கலாம்.
ஆனால் அடிப்படையில், நிறைய விஷயங்களை அனைவருமே ஒப்புக் கொண்டார்கள். இப்போது
நீங்கள் யாருடன் பேசினாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பாஜக சிறப்பாகச்
செய்திருக்கிறது என்று எதையும் கூற மாட்டார்கள். ரூ.20 லட்சம் கோடி நிதித்
தொகுப்பு [நோய்த்தொற்று, அதற்குப் பின் பொது முடக்கத்தின் போது நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் அறிவித்த] போதாது என்பதை நான் பேசிய அனைவருமே அறிந்திருந்தனர்.

அபிமன்யு சந்திரா: பாஜகவுக்குள் உள்ளவர்கள் இதைச் சொல்வார்கள் என்று
சொல்கிறீர்களா?
சிவம் சங்கர் சிங்: ஆம். தனிப்பட்ட முறையில், அரசாங்கம் சரியாகச்
செயல்படவில்லை என்பதை கிட்டத்தட்ட அனைவருமே உணர்கிறார்கள். வளர்ச்சி குறித்த
பிரச்சனைகளில் தங்களால் இலக்கை எட்ட முடியாது என்பதை கிட்டத்தட்ட எல்லோரும்
உணர்ந்திருக்கிறார்கள்; வெவ்வேறு பிரச்சனைகளில் அவர்கள் வெற்றி பெற வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு புதிய பிரச்சனை தோன்றும் என்பதே என்னுடைய புரிதலாக
இருக்கிறது. கடைசியாக பாலகோட்டின் புல்வாமா அவர்களுக்கு கிடைத்தது [2019 பிப்ரவரி
14 அன்று, நாற்பதுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் வெடிகுண்டு
தாக்குதலில் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அந்த
தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. பிப்ரவரி 26 அன்று, இந்திய அரசு
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது.தளத்தின் மீது எதிர் வான்வழித் தாக்குதலை
நடத்தியது]. அது பாகிஸ்தானுக்கு எதிராக ஆனது. அடுத்த தேர்தலில் பிரச்சனை வேறு
ஒன்றாக இருக்கும். ஆனால் அது உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருக்கும்.
[கட்சிக்குள்] ஏராளமானோர் இதை அடிப்படையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக ஓர் அரசியல்
கட்சிக்குள்ளே தங்கள் அரசியலைக் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்கள்,
[நான் செய்ததை விட அதிகமாக] இழந்து நிற்க ஏராளம் இருக்கிறது. பத்து ஆண்டுகளாக,
ஒருவர் [அத்தகைய நபர்] அரசியல் செய்து வருகிறார், தனக்கான இடத்தைப் பெற
முயற்சிக்கிறார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸில் பதினைந்து இருபது ஆண்டுகளைக்
கழித்து அந்த அமைப்பை உயர்த்தியுள்ளவர்களுக்கு, கட்சி மாறுவதால் ஏற்படும் இழப்பு
மிக அதிகம். தனிப்பட்ட நலன் இருக்கவில்லையென்றால், பெரும்பாலானோர் உண்மையில்
தங்களை இடம் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
கட்சியிலிருந்து விலகுவதை அவ்வளவு சுலபமாகச் செய்யக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கை மற்றும்
வாழ்வாதாரங்களுக்காக உண்மையில் அரசியலை நம்பியிராதவர்கள்; அரசியல் என்பது
அவர்களுடைய முழுநேரத் தொழிலாக
இருப்பதில்லை. எதிர்க்கட்சி
ஒரு தளத்தை உருவாக்கித் தருமானால், கட்சிகளை மாற்றிக் கொள்வதற்கான விருப்பம் அவர்களிடம்
இருக்கும்.
எடுத்துக்காட்டாக, காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா
போன்ற ஒருவருக்கு, கட்சியை விட்டு வெளியேறக்கூடிய தளத்தை பாஜக உருவாக்கித் தந்தது.
ஆனால் தொழில்ரீதியான அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற ஒன்றைச் செய்து தருவதற்கான
தளத்தை மறுபுறத்தில் உள்ளவர்களால் உருவாக்க முடியவில்லை.
அபிமன்யு சந்திரா: அப்படியென்றால், பாஜகவை விட்டு வெளியேறியவர்கள், நீங்கள், அல்லது யஷ்வந்த்
சின்ஹா, அல்லது புரோட்யுத் போரா போன்றவர்கள் தங்களுக்கான உரிமைப்பேறு
கொண்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தமா?
வெளியேறக்கூடியவர்கள் மற்றும் வெளியேற முடியாதவர்களிடையே இருக்கின்ற பொதுவான
அம்சங்கள் என்ன?
அபிமன்யு சந்திரா: பாஜகவை
விட்டு வெளியேறுபவர்கள், சில சமயங்களில் அதுவரை பாஜகவை
ஆதரித்ததற்காக இடதுசாரிகளால் விமர்சிக்கப்படுகிறார்கள். பாஜகவை விட்டு
வெளியேற விரும்புபவர்களுக்கு தாராளவாதிகள் வெளிப்படையாக வரவேற்பு அளிப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது அதுவரையிலும் மோடியை ஆதரித்ததற்கான விமர்சனங்களே
அதிக அளவில் இருக்கின்றனவா? இதில் உங்களுடைய தனிப்பட்ட அனுபவம் என்ன?
சிவம் சங்கர் சிங்: பொதுவாக,
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் [வேறு சில குழுவை விட்டு வெளியேறுகின்ற] மக்களைச்
சேர்த்துக் கொள்வதில் மிகச் சிறந்த வேலையைச் செய்கிறார்கள் என்று நான் கூறுவேன்.
பொதுவாக அந்த நிறுவனங்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் உங்களை உள்ளுக்குள் அழைத்து வந்து, அந்தச்
சமூகத்தின் அங்கமாக உங்களை உணர வைக்கின்ற வகையிலேயே
கட்டமைக்கப்பட்டுள்ளது. முடிந்தவரையிலும் பெரிய அமைப்பாக மாற வேண்டும் என்பதே
அவர்களின் ஒட்டுமொத்த நோக்கமாக இருக்கிறது. அதுதான் அவர்களுடைய கூறப்பட்ட
நோக்கமாகவும் இருக்கிறது.
உண்மையான அமைப்பு
இல்லாததால், இந்த வகையான விஷயங்கள் இடதுசாரிகளிடம் இருப்பதில்லை. அனைவரும் தங்கள்
சொந்த காரியத்தைச் செய்கிறார்கள். பாஜகவிற்கு எதிராக இருக்கின்ற பல்வேறு
பிரிவினரிடையே மிகவும் குறைந்த அளவிலேயே ஒற்றுமையே இப்போது உள்ளது. ‘உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்’ அல்லது
‘ஒருமுறை அவர்களை ஆதரித்திருக்கிறீர்கள் என்பதால் எங்கள் பக்கத்தில் நீங்கள் இருக்க
முடியாது’ என்று இடதுசாரிகளிடமிருந்து சில எதிர்ப்புகள் எழுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்டு சில அமைப்புக்கள் அல்லது அரசியல் கட்சிகள் என்பதாக இல்லாமல், சீரற்ற முறையிலேயே இருக்கின்றன.
அபிமன்யு சந்திரா: கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் பாஜகவுடன் வேலை
செய்ததற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?
சிவம் சங்கர் சிங்: இல்லவே
இல்லை. குறிப்பிட்ட கட்டத்தில் பாஜகவை ஆதரிப்பது முக்கியமானது என்றே நான் நினைத்தேன்.
ஏனென்றால் 2014இல் காங்கிரஸ் கட்சி எவ்வாறு இருந்தது என்று பரப்பப்பட்டு
வந்த தொடர் செய்திகளால் யாரும் அப்போது காங்கிரஸை ஆதரித்திருக்க
முடியாது. அந்த வயதில் அரசியலைப் புரிந்து கொள்ளத் தொடங்கிய ஏராளமானோர், அரசின்
ஊழல் மற்றும் செயலற்ற தன்மை குறித்து பேசப்பட்டவற்றை,
காங்கிரஸை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே
புரிந்து கொண்டிருந்தனர். அத்தகைய
பேச்சுக்கள் உண்மையில் துல்லியமானவையா,
இல்லையா என்பதை உணர்ந்து கொள்வதற்கு குறிப்பிட்ட அளவு அனுபவமும் முதிர்ச்சியும்
தேவைப்படுகிறது. ஆனால் அவ்வாறான கதை உருவாக்கப்படும்போது வாக்களிக்கும் வயதிற்குள்
நுழைந்தவராக நீங்கள் இருந்தால், அதனால் தூண்டி விடப்பட்டவராகவே நீங்கள் இருப்பீர்கள்.
பிரச்சாரங்களை
வடிவமைக்கும் போதும், கட்டமைக்கும் போதும்கூட நாங்கள் [பாஜகவில்] இதுகுறித்தே
பணியாற்றினோம். அந்தப் பிரசாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். பிரச்சாரத்தின் அல்லது
விளம்பரத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம்.
ஆனாலும் அவ்வாறு இருப்பது கிட்டத்தட்ட யாராலும் முடியாதது என்பதே உண்மையாக இருக்கிறது.
அபிமன்யு சந்திரா: ஆனால்
அவ்வாறு பேசப்பட்ட சில பேச்சுக்கள் ஆதாரமற்றவை
என்பது குறித்த உண்மை எவ்வாறு இருந்தது?
சிவம் சங்கர் சிங்: இவ்வளவு
காலமாக நான் அரசியலில் பணியாற்றியுள்ளேன். ஒரு கூட்டமாக மக்களை
நீங்கள் எப்படி சேர்ப்பீர்கள் என்று எனக்கு இப்போது தெரியும். கூட்டம் எவ்வாறு
ஒன்று சேர்கிறது, கூட்டம் எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும். ஒரு கூட்டத்தைப் பார்த்து, எத்தனை பேர்
திரட்டப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் சொந்தமாக வந்திருக்கிறார்கள் என்பதை
இப்போது என்னால் எளிதில் சொல்ல முடியும். தேர்தல்களில் பணிபுரிந்த பிறகு, அந்த பேச்சுக்கள் எவ்வாறு
வடிவமைக்கப்பட்டுள்ளன, பிரச்சாரம் எவ்வாறு இயங்குகிறது என்பவற்றைச் சொல்வது மிகவும்
எளிதாகவே இருக்கும்.
ஆனால் வெளியில்
இருந்து பார்க்கும்போது, அது [வழங்கப்பட்ட
கதை] சக்தி வாய்ந்ததாகக்
காண்பார்கள். கிட்டத்தட்ட அனைவரும் அதனால் தூண்டி விடப்படுவார்கள். பலமுறை இது இவ்வாறு செயல்படுவதைக் கண்டிருக்கிறோம். பாலகோட் மற்றும்
புல்வாமாவிலும் பார்த்தோம். இப்போது சீனாவில் அதைப் பார்க்கிறோம். கொரோனா
வைரஸுடன், தட்டுகள் மற்றும் பானைகளைத் தட்டிய நாடகத்தில் அதைப்
பார்த்திருக்கிறோம். இது போன்ற விஷயங்களை அவர்கள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதை
நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் உள்ளே இருந்து அதைப் பார்க்கின்ற போது, அதில் உள்ள மந்திரத்தன்மை மறைந்து விடும்.
அபிமன்யு சந்திரா: உங்கள்
பார்வையில் பாஜகவை விட்டு வெளியேற முடிவு செய்வது என்பது மாற்று வழிகள் இல்லாது
அரசியலை விட்டு வெளியேறுவது போன்றது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். 2018 மார்ச்
மாதம் பாஜகவை விட்டு வெளியேறிய பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?
சிவம் சங்கர் சிங்: நான்
இரண்டு நிறுவனங்களுடன் பணி புரிந்து வருகிறேன். ஒன்று ரிப்ளி அனலிட்டிக்ஸ் என்ற
தரவு பகுப்பாய்வு நிறுவனம், மற்றது பப்ளிக் ரிலேசன்ஸ் அண்ட் அட்வகசி க்ரூப்
எனப்படும் ஊடக நிறுவனம்.
அபிமன்யு சந்திரா: ஏதாவதொரு
கட்சி அல்லது அரசியல் இயக்கத்தில் சேரும் திட்டம் உங்களிடம் இருக்கிறதா?
சிவம் சங்கர் சிங்: கணிசமான
அளவு வங்கி இருப்பு இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் மரியாதையுடன் அரசியல் செய்ய
முடியும் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். அரசியலில் உங்கள் கருத்திற்காக குரல்
கொடுக்கும் சுதந்திரம் உண்மையில் உங்களிடம் உள்ள நிதி பலத்திலிருந்தே வருகிறது.
அபிமன்யு சந்திரா: நீங்கள் இப்போது அதற்காக வேலை செய்து
கொண்டிருக்கிறீர்களா?
சிவம் சங்கர் சிங்: ஆம். இதைத்தான் நான் மற்றவர்களுக்கும்
அறிவுறுத்தி வருகிறேன். அரசியலில் நுழைய விரும்பும் நபர்களிடமிருந்து ஆலோசனை
வேண்டி எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ‘அரசியலுடன் இருங்கள்,
அரசியல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருங்கள். ஆனாலும் உடனே தேர்தலில் போட்டியிட வேண்டாம். ஏனென்றால், அவ்வாறு
செயல்படும்போது, நீங்கள் கட்சித் தலைமைக்கு அடிபணிந்த நிலையில் இருக்க வேண்டும்.
உங்கள் சொந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதே, அதை முறியடிப்பதற்கான ஒரே வழி.
அதற்குப் பிறகு நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்’ என்று நான் அவர்களிடம்
சொல்கிறேன்.
Comments