லாரா ஸ்பின்னி
தி கேரவான்
இதழ்
பாரிஸில் வாழ்ந்து வருகின்ற எழுத்தாளர் மற்றும் அறிவியல் பத்திரிகையாளர். ‘பேல் ரைடர்: 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் உலகை எவ்வாறு மாற்றியது’ என்ற அவரது புத்தகத்தை ஜொனாதன் கேப் 2017ஆம்
ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா
குறித்து எழுதப்பட்ட பகுதி.
நிராலா அல்லது ‘விசித்திரமானவர்’
என்றழைக்கப்பட்ட 22 வயதான கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி, 1918ஆம் ஆண்டு தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் துரதிர்ஷ்டத்தை
எதிர்கொண்டார். ‘டால்மாவில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று, நான் அங்கே காத்திருந்தேன். கங்கையில் கிடந்த இறந்த உடல்கள் வீங்கிப் பெருத்திருந்தன. என்னுடைய மாமியார் வீட்டில் இருந்த என்னுடைய மனைவி இறந்து போனார் என்பதை அறிந்து கொண்டேன்’ என்று தன்னுடைய ‘எ லைஃப்
மிஸ்பெண்ட்’ (வீணாக்கப்பட்ட வாழ்க்கை) என்ற நினைவுக் குறிப்பில் எழுதியிருந்தார். நிராலாவின் குடும்பத்தில் இருந்தவர்களில் பலரும் அப்போது இறந்து
போயிருந்தனர். அவர்களைத்
தகனம் செய்வதற்குப் போதுமான
மரம் கிடைக்கவில்லை. ஒருமுறை
‘அது என்னுடைய
வாழ்க்கையில் மிகவும்
கொடூரமான நேரமாக இருந்தது. ஒரு கண் சிமிட்டலில் என்னுடைய குடும்பம் முழுதும் காணாமல் போய் விட்டது. எங்களுடைய
நிலத்தின் குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள், என் உறவினருக்காகப் பணிபுரிந்து வந்த நான்கு
பேர், என்னிடம் பணியாற்றி வந்த இருவர் என்று அனைவரும் இறந்து
விட்டனர். என்னுடைய
உறவினரின் மூத்த
மகனுக்கு பதினைந்து வயது, எனது இளம் மகளுக்கு ஒரு வயது. எந்த திசையில் திரும்பினாலும் இருளையே நான் கண்டேன்’ என்று அவர் நினைவு கூர்ந்திருந்தார். அபோது நேர்ந்த மரணங்கள் அனைத்தும், அந்த கவிஞருக்கு மட்டும் தற்செயலாக
நடந்த தனிப்பட்ட துயர நிகழ்வாக
இருக்கவில்லை. அனைவருடனும் தொடர்பு கொண்டவையாக அந்த மரணங்கள் இருந்தன.
‘தொற்றுநோயின் பேரழிவுகளைப் பற்றி செய்தித்தாள்களின்
மூலம் நாங்கள் அறிந்து கொண்டோம்’ என்று நிராலா எழுதியுள்ளார்.
ஒட்டுமொத்த உலகையும் பாதித்த தொற்று நோய்
இந்தியத் துணைக்
கண்டத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகத்தையே பாதித்த தொற்றுநோயாக அது இருந்தது. அந்த இன்ஃப்ளூயன்சா நோய் உலகளவில் 5 கோடி முதல் 10 கோடிப் பேரின் உயிரைப் பறித்தது. இரண்டு உலகப் போர்களிலும் ஏற்பட்டதை விட, அந்த நோயால் ஏற்பட்ட உயிர்ப்பலி கூடுதலாகவே
இருந்திருக்கக்கூடும். அந்த
மரணத்தின் மிகப்பெரிய சுமையைச் சுமந்த
நாடாக இந்தியா இருந்தது. மேற்கு சமோவா (இப்போது சமோவா) நாடு 22 சதவீத மக்கள்தொகையைப் பறிகொடுத்தது. மற்ற நாடுகளும் தங்கள் மக்கள்தொகையை அதிக அளவில் இழந்திருந்தன. ஒப்பீட்டளவில் இந்தியாவில் 6 சதவீதம் பேரே மரணமடைந்திருந்தனர் என்றாலும், இந்திய
மக்கள்தொகையின் பெருமளவு காரணமாக, அந்த 6 சதவிகிதம் என்பது அதிர்ச்சியூட்டும் வகையில் மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது. 1918 மற்றும் 1920க்கு இடையில், இன்ஃப்ளூயன்சா அல்லது அது ஏற்படுத்திய பிரச்சனைகளால் 1.8 கோடி இந்தியர்கள் உயிரிழந்தனர். இறப்பின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால்,
அந்தப் பேரழிவின் மையப்
புள்ளியாக இந்தியாவே இருந்தது. அந்த
காலகட்டத்தில் காய்ச்சல்
தொடர்பான இறப்பானது, ஒட்டுமொத்த ஆசியக் கண்டத்தில்தான் மிக
அதிகமான அளவில் ஏற்பட்டிருந்தது என்றாலும், ஆசியக் கண்டத்தை அந்த நோய் எவ்வாறு அழித்திருந்தது என்பது குறித்து யாரும் அதிகமாக அறிந்திருக்கவில்லை.
1918ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த
காய்ச்சல் தொற்றுநோய் ‘மறந்துபோன’ தொற்றுநோய் என்றே இப்போது அழைக்கப்படுகிறது. அந்த நோயை முழுமையாக மறந்து விட்ட அந்தக் கண்டம்தான்,
அந்த நோயின் தாக்கத்தை முழுமையாகத் தாங்கிக் கொண்டிருந்தது என்பது முரண்பாடாக
உள்ளது.
ஸ்பானிஷ் காய்ச்சல்
‘ஒரு
மரணம் என்பது சோகம், ஒரு கோடி மரணங்கள் என்பது புள்ளிவிவரம்’ என்று ஸ்டாலின் சொல்லியிருந்ததைப்
போல அந்த மலட்டு எண்களை
மனித அனுபவங்களாக மொழிபெயர்க்கச் சொல்லி, அந்தக் கொடூரமான தருணத்தில்
வாழ்வது எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள அந்த
கவிஞரிடம் நாம்
செல்கிறோம். நவீன
ஹிந்தி இலக்கியத்தில் முன்னணி நபராக நிராலா அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அந்த 1918 காய்ச்சல் தொற்று பல இந்தியர்களைப் போலவே, ஆழமான தாக்கத்தை நிராலா மீதும் ஏற்படுத்தியிருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஸ்பானிஷ் காய்ச்சல் குறித்த எனது புத்தகத்தில், ஸ்பானிஷ் தொற்றுநோய் என்று
அறியப்பட்டிருந்தாலும், உண்மையில் அந்த நோய் ஸ்பெயினுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக இருக்கவில்லை என்ற
வாதங்களை நான் முன்வைத்திருக்கிறேன். அந்த நோயால் ஏற்பட்ட பேரழிவு இந்தியாவில்
சமூக பதட்டங்களை அதிகரித்திருந்தது. வன்முறைகள் வெடிப்பதற்கு அந்த நோய் பங்களிப்பு செய்தது.
சுதந்திர போராட்ட இயக்கத்தை வலுப்படுத்தியது
என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அது ஏன் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, பொதுவாக காய்ச்சல் தொற்றுநோய்களின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக இந்த 1918
காய்ச்சல் தொற்றுநோய் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.
வைரஸின் பரவல் மற்றும் தாக்கம்
இன்ஃப்ளூயன்சா
வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாது, பல விலங்குகளையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் திடீர் மரபணு மாற்றங்களுக்கு எளிதில் ஆளாவதாக
இருப்பதால், அதிக
தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. இந்த திடீர் மாற்றங்களால், முன்னர் இருந்திராத புது வகை வைரஸ் தோன்றி,
அது உயிரிகளுக்கு இடையிலான தடையைத் தாண்டுகிறது.
விலங்குகளிலிருந்து, பெரும்பாலும் பறவைகளிலிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. மீண்டுமொரு திடீர் மரபணு மாற்றம் மூலமாக மனிதர்களிடையே
எளிதில் கடந்து செல்லுகின்ற திறனை அந்த புதிய வகை வைரஸ் பெறுகின்றது. அதற்கு முன்னர் எந்தவொரு உயிருள்ள மனிதரும் அந்த புதிய வகை வைரஸின் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததில்லை
என்பதால், ஒட்டுமொத்தமாக
மனிதர்களிடம் அந்த வைரஸுக்கு எதிரான நோய்
எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். எனவே மாற்றத்திற்குள்ளான அந்த புதிய வகை வைரஸ் மனிதரிடையே
தொற்றுநோயைத் தூண்டக்கூடும்.
காலப்போக்கில், ஆதார உயிரியாக இருக்கின்ற மனிதனுடன் மிகவும் இணக்கமான சமநிலையில் வாழ்வதற்காக, தன்னுடைய வீரியத் தன்மையை அந்த புதிய வகை வைரஸ் மிதப்படுத்திக் கொள்கிறது.
அறிந்தே இந்த நோக்கத்துடன் வைரஸ் அதனைச்
செய்யாது. இயற்கைத் தேர்வு செயல்முறையின்
மூலமாக, தன்னுடைய ஆதார உயிரியான மனிதனை நீண்ட காலம் உயிரோடு வைத்திருப்பதற்காக, இந்த வைரஸ் பிறழ்வுகள், அந்த மனிதனை உயிரோடு சுற்றித் திரிய வைக்கின்றன.
அதன் விளைவாக கூடுதலாக மனித ஆதார உயிரிகளைப் பெற்று,
அவற்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து, அதன் மூலம் தன்னுடைய நகல்களை அதிக எண்ணிக்கையில் அந்த வைரஸால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
தொற்றுநோய் குறைந்தாலும்,
அதை ஏற்படுத்திய புதிய வகை வைரஸ் மனிதர்களிடையே தொடர்ந்து வைரஸ் மூலமாக
ஏற்படுகின்ற பருவகால காய்ச்சலாகப் பரவிக்
கொண்டே இருக்கும்.
இந்த
காய்ச்சல் தொற்றுநோய் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்படுவதாக இருக்கிறது. கடந்த 500 ஆண்டுகளில் இவ்வாறான 15 காய்ச்சல்கள் நிகழ்ந்திருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் அவற்றைப் பற்றி மற்றொரு விஷயத்தையும் கண்டுபிடித்துள்ளனர். நோயை வெளிப்படுத்துகின்ற மனிதர்களாலேயே, அந்த வைரஸ்களின் தீவிரம் ஓரளவிற்குத்
தீர்மானிக்கப்படுகிறது. 1890களில் இருந்து மனிதகுலம் எதிர்கொண்ட ஐந்து காய்ச்சல் தொற்றுநோய்களில், 1918 நிகழ்வைத் தவிர வேறு எந்த தொற்று நோயும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றதில்லை. எனவே 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்று நோய் சற்றே முரணாக, தீவிரமானதாக இருக்கிறது. அந்த நேரத்தில் உலகில் இருந்த நிலை, குறிப்பாக அப்போது இருந்த போர்ச்சூழல், அந்த நோயுடன் அதிக அளவில் தொடர்பு கொண்டிருந்திருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
போரும், பட்டினியும்
1918ஆம் ஆண்டு முதல் உலகப் போரின் கடைசி ஆண்டாகும். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை மையமாகக் கொண்டு நடந்த அந்தப் போரின் தாக்கம், பிற நாடுகளிலும் உணரப்பட்டது. பிரிட்டிஷ்
ராணுவத்தில் இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிரிட்டிஷ் போரின் போது இந்தியாவில் வளர்க்கப்பட்ட
உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டன. மிகமோசமான பொருளாதார நிலைமை, சுதந்திரப் போராட்டம் போன்ற காரணிகள் தொற்றுநோயையும், அதனால் ஏற்பட்ட இந்திய
அனுபவத்தையும் வடிவமைப்பதற்கு
உதவின.
நோயெதிர்ப்பு மண்டலத்தை பட்டினி பலவீனப்படுத்துகிறது. உணவு விநியோகத்தில் இருந்த
குறைபாடுகளால், 1918ஆம் ஆண்டில் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே பட்டினி அதிக அளவில் இருந்தது. காசநோய் மற்றும் டைபஸ் போன்ற பிற தொற்று நோய்களும் மனிதர்களிடையே
ஊடுருவி இருந்தன. போரால் ஏற்பட்டிருந்த இடையூறுகளால்,
அந்த தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கத்திற்கு மாறான புதிய சுவாசமண்டல நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். ராணுவத் துருப்புக்கள் மற்றும் அகதிகள் என்று ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அந்த நோய்த்தொற்றைப் பரப்புகின்ற சிறந்த வாகனமாகிப் போனது. இதற்கிடையில் அந்த ஆண்டில் எந்தவொரு இயக்கமுமின்றி ஒரே இடத்தில்
தங்கியிருந்த இருந்த ஏதோவொரு குழு, இந்த ஆபத்தான கிருமி பெருகுவதற்கு உதவியிருக்கலாம். அல்லது
குறைந்தபட்சம் ஆபத்தான நிலையில் அந்த கிருமியை நீண்ட காலம் தன்னுடன் தக்க வைத்துக்
கொண்டிருந்திருக்கலாம். பிரான்ஸை பெல்ஜியத்திலிருந்து சுவிஸ் எல்லைக்கு வெளியேற்றிய, அந்த 16 கிலோமீட்டர் அகல அகழிகள் கொண்ட மேற்கு எல்லைப் பகுதியை அந்த வைரஸ் சென்றடைந்த போது, பல வாரங்கள் அல்லது மாதங்களாக எங்கும் செல்லாமல் அந்த அகழிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த ஏராளமான இளைஞர்களை அது எதிர்கொண்டது. இதுபோன்ற விதிவிலக்கான நிலைமைகளில், அந்த வைரஸ் கொண்டிருந்த, வைரஸை மிதப்படுத்துவதற்கான
பரிணாம அழுத்தம் நீக்கப்பட்டிருக்கலாம்
என்று கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் பால் எவால்ட் தன்னுடைய வாதத்தை முன்வைக்கிறார். ஆதார உயிரி - வைரஸ்
உறவு பின்னர் அடுத்த உயிரியிடம் நகருவதாக
மாற்றமடைந்து, அந்த அகழிகள் வழியாக பரவிய போது, போகும்பாதையில் இருந்த பலரையும் கொன்றழித்தது.
அலை அலையாய் வந்து தாக்கும் தொற்றுநோய்
காய்ச்சல் தொற்றுநோய்கள் சிறப்பியல்பைக் கொண்டவையாக இருக்கின்றன.
அவை அலைகளாக வந்து உலகை மூழ்கடிக்கும். ஹெரால்ட் அலை என்று அழைக்கப்படுகிற முதல் அலை, பெரும்பாலும் மிதமானதாக இருக்கும். அது பருவகாலக் காய்ச்சலைப் போன்றதாகவே இருக்கும். பின்னர் அது மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையைத் தோற்றுவிக்கும். சில சந்தர்ப்பங்களில், மாறுபட்ட தீவிரம் கொண்ட அடுத்தடுத்த அலைகள் உருவாகும். 1918இல் ஏற்பட்ட காய்ச்சல் தொற்று, வழக்கத்திற்கு மாறான தீவிரத்துடன் ஏற்பட்டிருந்தாலும், இந்த விஷயத்தில் அது மாறுபட்டதாக இருக்கவில்லை. 1918ஆம் ஆண்டின்
வசந்த காலத்தில், பூமியின் வடக்குகோளப் பகுதியில் லேசான
ஹெரால்ட் அலை இருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையும், 1919இன் துவக்க மாதங்களில் இறுதியாக மீண்டுமொரு அலையும் தோன்றின. 1919ஆம் ஆண்டு தோன்றிய அந்த இறுதி தோற்றம்
மற்ற இரண்டு தோற்றங்களுக்கு இடையிலான தீவிரத் தன்மையுடன்
இருந்தது. தெற்கு கோளப் பகுதியிலும் மீண்டும் மீண்டும் இவ்வாறான அலை ஏற்பட்டது. ஆனால் அது வடக்கில் இருந்ததைப் போன்றதாக
இருக்கவில்லை. அதாவது அங்கே அலைகள் சற்று தாமதமாகவே தாக்க முனைந்தன. பொதுவாக இந்த
தொற்றுநோய் 1920 மார்ச் மாதத்திற்குள்
முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றாலும், பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ள டென்னிஸ் ஷாங்க்ஸ்
மற்றும் அவரது சகாக்கள் பசிபிக் தீவுகளில் மற்றுமொரு வருடத்திற்கு அந்த தொற்று நோய் இருந்ததாகவும், 1921 ஜூலையில் நியூ கலிடோனியாவில் அந்த நோய் குறித்து
பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
பம்பாயிலிருந்து இந்தியா முழுமைக்கும்
அந்த
1918 காய்ச்சல் இந்தியாவில் முதன்முதலாக ஜூன் மாதம் தோன்றியது. பம்பாய் நகரம் வழியாக அது நுழைந்திருந்தது. அங்கிருந்து பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு (இன்றைய உத்தரப்பிரதேசம்) ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அது பரவியது. அந்த அலை பின்வாங்குவதற்கு முன்பாகவே, செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இரண்டாவது அலை தோன்றியது. இரண்டாவது அலை பரவிய போது இருந்த
காய்ச்சல் ஏற்கனவே வந்திருந்த அதே நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஒருவேளை வசந்த காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடையில், அந்த மேற்கு எல்லைப் பகுதியில் இருந்த
அகழிகளில் அந்த வைரஸ் முக்கியமான மரபணு மாற்றத்திற்கு உள்ளாகி மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த அலை அக்டோபரில் உச்சத்தை அடைந்து, பின்னர் டிசம்பரில் குறைந்தது. 1919ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டது. இந்திய காய்ச்சல் அனுபவம், அப்போதிருந்த அறிவு நிலை குறித்து தொகுத்து 1998ஆம் ஆண்டு எழுதிய மும்பை பல்கலைக்கழகத்தின் மருத்துவ
வரலாற்றாசிரியர் மிருதுளா ராமண்ணா ‘நாட்டின் எந்தப் பகுதியும் அந்தத் தொற்று நோயிலிருந்து தப்பவில்லை ... அது சிம்லாவின் மலை உச்சிகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆரோக்கியமான சுகாதார நிலையங்கள் கொண்ட பம்பாய் போன்ற நவீன நகரங்கள் அல்லது அகமதாபாத்தின் சேரிகள் அல்லது தனித்திருந்த கிராமங்களாக இருந்தாலும்
சரி’ என்று குறிப்பிட்டிருந்தார். நாட்டின் அனைத்து பகுதிகளையும் அந்த நோய் சமமாகப்
பாதிக்கவில்லை என்பது
தெளிவாகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுகாதார பொருளாதார நிபுணரான சித்தார்த் சந்திரா கிழக்கு லான்சிங்கில் உள்ள மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது, அவரிடம் 1918 காய்ச்சல் தொற்றுநோயைப் பற்றி எந்தவிதமான சிந்தனையும் இருக்கவில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் அபினி உள்ளிட்ட பிற போதைப் பொருள்கள் கிடைப்பதை வரலாற்று ரீதியாக அரசாங்கங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளன என்ற முற்றிலும்
மாறுபட்டதொரு கேள்விக்கு விடை
தரக் கூடிய தரவுகளை அவர் அப்போது
தேடத் தொடங்கியிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால டச்சு கிழக்கு இந்தியா அல்லது இந்தோனேசியா மீதே அவரது கவனம் முழுவதும் இருந்தது. அந்த
காலகட்டத்திற்கான இந்திய மக்கள்தொகை தரவு மிகவும் விரிவாக இருப்பதை உணர்ந்து கொண்ட அவர், தனது கவனத்தை பின்னர்
இந்தியா மீது திருப்பினார். விரைவிலேயே அவர் வித்தியாசமான ஒரு விஷயத்தைக் கவனித்தார்:
1911, 1921ஆம் ஆண்டுகளில் காலனித்துவ அதிகாரிகள் நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையில், இந்திய மக்கள்தொகை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்பதை அவர் கண்டறிந்தார். அந்த காய்ச்சலே அதற்கான காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம்
அவரிடம் இருந்தது.
‘1918ஆம்
ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட காய்ச்சல் குறித்து மிகக் குறைவான ஆய்வுகள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தன. உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் தற்போது ஆசியாவில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான ஆய்வுகள் பணக்கார நாடுகளிலேயே மேற்கொள்ளப்பட்டன’ என்று சந்திரா என்னிடம் கூறினார். அவ்வாறு ஆய்வுகள் விடுபட்டுப் போயிருப்பதைச் சரிசெய்வதற்கான
முதல் படியாக
இந்திய நலவாழ்வு ஆணையரின் 1918ஆம்ஆண்டு அறிக்கையின் நகலை வாங்க அவர் முடிவு செய்தார். ‘உண்மையில் அது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஒரு
நாள் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து, முன் அட்டையில் இருந்து பின் அட்டை வரை அந்த அறிக்கையை நான்
முழுமையாகப் படித்தேன்’ என்று
அவர் கூறினார். கங்கை
மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்த ஆறுகள் சடலங்களால் நிறைந்து போனதை அவர் கண்டறிந்தார். அந்த அறிக்கையிலிருந்த தெளிவான விளக்கங்களும்,
சில மிகப் பெரிய எண்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தன.
கோடிக்கணக்கில் உயிரிழப்பு
பிரபல அமெரிக்க மக்கள்தொகை அறிஞரான கிங்ஸ்லி டேவிஸ், 1918ஆம் ஆண்டு தொற்றுநோயால் பறிக்கப்பட்ட இந்திய
உயிர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு தரவுகளின்
அடிப்படையில் கணக்கிட்டு, சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் இறந்து போனதாக 1951ஆம் ஆண்டு கண்டறிந்தார். மக்கள்தொகை தொற்றுநோய்க்கு முன்னும், பின்னும் ஒரே விகிதத்திலே வளர்ந்து வந்ததாக டேவிஸ் கருதினார். ‘அந்த அனுமானத்திற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை
இன்றைக்கு நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். உண்மையில், அந்த தொற்றுநோய் வருவதற்கு முன்பு மக்கள்தொகை மிக மெதுவாகவே அதிகரித்துக்
கொண்டிருந்தது’ என்று
சந்திரா கூறினார்.
அந்த முரண்பாட்டைச் சரிசெய்த சந்திராவும் அவரது சகாக்களும், சுமார் 1.4 கோடி இந்தியர்கள் தொற்றுநோயால் இறந்து போயிருந்ததாக 2012இல் தெரிவித்தனர். அவர்களின் மதிப்பீடு 1918ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியப் பகுதிகளுக்கு
மட்டும் பொருந்துவதாக இருந்தது. அது பிரிட்டிஷார் பினாமியாக ஆட்சி செய்து வந்த சமஸ்தானங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நேரடியாக
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்
இந்திய மக்கள்தொகையில்
சுமார் 80 சதவீதம் பேர் இருந்தனர். சமஸ்தானங்களில் ஏற்பட்ட இழப்புகளையும் எடுத்துக் கொண்டால்,
ஒட்டுமொத்த இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 1.8 கோடி என்ற அளவில் இருந்திருக்கும் என்பது நியாயமான மதிப்பீடாக
இருக்கும் என்று சந்திரா கூறினார்.
மக்கள்தொகையில் சுமார் 6 சதவிகிதமாக இருந்த அது மிக அதிக அளவிலான தேசிய இறப்பு விகிதமாக இருக்கவில்லை என்றாலும், பல பணக்கார, வளர்ந்த நாடுகள் அனுபவித்த 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவான இறப்பு விகிதம் என்பதை
விட, இந்தியாவில் ஏற்பட்டிருந்த இறப்பு மிகமிக
அதிகமான எண்ணிக்கையிலே இருந்தது.
சந்திராவின்
குழு அந்த தொற்றுநோய் எவ்வாறு இந்தியாவில் பரவியது என்பதை வரைபடமாக்குவதற்கு
முயற்சித்தது. இப்போது அவர்கள் புதிரான ஒன்றைக் கண்டுபிடித்தனர். 1918 செப்டம்பரில் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்த பாதிக்கப்பட்ட துருப்பு கப்பலுடன் காய்ச்சலின் இரண்டாவது அலை பம்பாய்க்கு வந்தபோது, பம்பாய் மாகாணத்தில் இறப்பு விகிதம் பெரிய அளவிற்கு அதிகரித்தது. அது மேற்கு எல்லைப்பகுதி வழியாக அந்த தொற்றுநோய் விரைவாகவும் ஆபத்தானதாகவும் கடந்து வந்திருப்பதையே குறிக்கிறது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி அது பரவிய போது ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு குறைந்து,
மிகவும் பரவலாக மட்டுமே
பெருகியதாகத் தோன்றுகிறது. மேலும் அந்த நோய் மெதுவாக நகர்ந்தது என்பதையும், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறிய பகுதியினரை மட்டுமே அது கொன்றதையும் குறிக்கிறது. கிழக்கே கல்கத்தாவைச் சென்றடைந்தபோது,
பம்பாயில் இருந்ததை விட மிகவும் குறைந்த அளவிலேயே அந்த நோய் தன்னுடைய தாக்கத்தை
ஏற்படுத்தியிருந்தது.
தொற்றுநோய் பரவல்
சந்திராவின்
கூற்றுப்படி, இந்த விளைவை விளக்குவதற்கு தற்போது மூன்று கோட்பாடுகள்
உள்ளன. முதலாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வெவ்வேறு காலநிலைகள் அந்த தொற்றுநோயை வடிவமைத்திருக்கலாம். இரண்டாவதாக, தொற்றுநோய் வருவதைப் பார்த்து, கிழக்கே வாழ்ந்த
மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தங்களுடைய நடத்தைகளை மாற்றிக்
கொண்டிருக்கலாம். எச்சரிக்கை
எதுவும் இல்லாததால் மேற்கே இருந்தவர்களால் செய்ய
முடியாத காரியங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டாக,
வீட்டுக்குள்ளேயே இருப்பது போன்றவற்றை அவர்கள் செய்திருக்க முடியும். ‘நாடு
முழுவதும் தொற்றுநோய் பரவும் போது, மிகவும் மிதமானதாகிற
செயல் வைரஸில் உருவாகி வருவதை
உங்களால் காண முடியும்’ என்ற மூன்றாவது கோட்பாடு மிகவும்
கவரும் வகையில் இருப்பதாகத் தோன்றினாலும்,
அது சோதித்தறியப்பட வேண்டியது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘தரவுகளில்
இருந்த சில வடிவமைப்புகள் பரந்த போக்குகள் இருப்பதைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டாவது அலை முதன்முதலில் பம்பாய் நகரில் தோன்றியிருந்தாலும், வடக்கே பெரிய அரண் இருந்ததால், அது விரைவிலேயே தென்கிழக்கு கடற்கரையில் மெட்ராஸில் வெடித்தது.
மெட்ராஸும் அரண் கொண்ட நகரமாக இருந்தால், பம்பாயுடன் அது ரயில்
மூலமாக அல்லது ஒரு துருப்பு கப்பல் வழியாக இணைக்கப்பட்டு காய்ச்சலைப் பெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிழக்கு கடற்கரையில் புனித ஹிந்து தளமான பூரி நகரில் இருந்த நோயின் ஆரம்பகாலத் தாக்கம்,
மேற்கே இருந்து வந்த யாத்ரீகர்களிடம் இருந்து
பெறப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இப்போதும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கின்ற உத்தரப்பிரதேசத்தில் அப்போது முப்பது
லட்சம் பேர் இறந்து போயினர். மாநிலத்தின் புவியியல் மற்றும் நிலவியல் அமைப்பு அந்த நோய் சென்ற பாதையைப் பாதித்தது. அந்த நேரத்தில் நிராலா மற்றும் பிரபல எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் ஆகிய இருவரும் வசித்து வந்த அந்த மாநிலம் கங்கை நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. ‘பொதுவாக, அனைத்து முக்கிய ரயில் பாதைகளும் ஓடிய ஆற்றின் தெற்குப் பகுதியில் காய்ச்சல் வந்ததற்குப்
பின்னரே, ஆற்றின்
வடக்கே மலைகளுக்கு நெருக்கமாக இருந்த பகுதிகளில் வந்தது’
என்று சந்திரா கூறினார்.
பிற இடங்களைப் போலவே இந்தியாவிலும், நிலப்பரப்பு மற்றும் மனிதர்களால் மாற்றப்பட்டிருந்த நிலப்பரப்பு போன்றவை அந்த
தொற்றுநோயை உருவாக்கின.
வைரஸ் வேகமாகப் பரவுவதை ரயில் பாதைகள் உறுதி செய்தன. ரயில் பாதைகளால் நன்றாக இணைக்கப்பட்டிருக்கும் நகரங்களில்
அதிக அடர்த்தியாக
மக்கள் வசிப்பதால், பொதுவாக கிராமப்புறங்களை விட அந்த நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சமூக, பொருளாதார காரணிகளும் அந்த நோயின் மீது தங்களுடைய
அடையாளத்தை விட்டுச்
சென்றன. காலனித்துவ
அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்த பொது சுகாதார
ஏற்பாடுகள் தேவையான நேரத்தில் செயலிழந்து போயிருந்தன.
மருத்துவர்கள் அங்கே இல்லாமல் போயினர். மேற்கத்திய மருத்துவம்
அந்த 1918ஆம் ஆண்டு காய்ச்சலைச் சமாளிக்கப் போதாததாகவே
இருந்தது.
அந்தக் காலகட்டத்தில்
வைரஸ் என்பதே புதியதொரு கருத்தாக இருந்தது. பெரும்பாலான மருத்துவர்கள் அந்த நோய் பாக்டீரியாவால் உருவாகியிருக்கும் என்றே நம்பினர்.
பணக்கார நாடுகளில்கூட, பலனளிக்கின்ற தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. வைரஸ் தடுப்பு மருந்துகளோ, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரைக் கொன்ற இரண்டாவது பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருந்திருக்க கூடிய நுண்ணுயிர்க் கொல்லிகளோ அப்போது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அதிசய மருந்தான ஆஸ்பிரின் கிடைத்தால் அதைப் பயன்படுத்துவது, இல்லாவிடில் விரக்தியடைந்து சந்தேகத்திற்குரிய
பல வண்ணமயமான மருந்துகளின் மீது போய் விழுவது என்றே அனைவரும் இருந்தனர்.
இந்தியாவில் மேற்கத்திய மருத்துவம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால், நோய்வாய்ப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆயுர்வேத சிகிச்சையை நோக்கித் திரும்பினர். சில நேரங்களில் அவ்வாறான சிகிச்சைகள் ஏற்படுத்திய மோசமான
விளைவுகளைத் தவிர, அவற்றில் எவை காய்ச்சலுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. கவனமாக மேற்கொள்ளப்பட்ட செவிலியப் பணியே, சில நேரங்களில் வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையே தெளிவான
வித்தியாசத்தை ஏற்படுத்திய ஒரே விஷயமாக இருந்தது. ஆனாலும் செவிலியம் என்பது இந்தியாவில் அப்போது தன்னுடைய
ஆரம்ப நிலையிலேயே இருந்தது.
‘எதிர்கொள்ளத்
தயாராக இல்லாத நேரத்தில், அந்த தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியது’ என்று 1998ஆம் ஆண்டு ராமண்ணா குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல பகுதிகளிலும் பஞ்சத்திற்கான சூழ்நிலைகள் இருந்ததாகவும், 1918ஆம் ஆண்டிற்கான பருவமழை தோல்வியடைந்ததால்
நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் நியூசிலாந்தின்
வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் சேகர் பாண்டியோபாத்யா குறிப்பிடுகிறார். செப்டம்பர் மாதத்திற்குள், நோயின் இரண்டாவது அலை பரவியபோது, நாடு கடுமையான வறட்சியின்
பிடியில் இருந்தது. ‘மக்கள் தண்ணீருக்காக தவித்தார்கள், தண்ணீர் பெறுவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்
கொண்டனர். அவர்கள் தண்ணீரைத்
திருடினார்கள்’ என்று அமெரிக்க மிஷனரி ஒன்று தெரிவித்திருந்தது.
பயிர்களின்
வருடாந்திர முதல் அறுவடை அப்போது செய்யப்படவிருந்தது. இரண்டாவது விதைப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணிகளைச் செய்து முடிக்கும் மனிதஆற்றல் அற்றவர்களாக நோயுற்றவர்கள்
இருந்தனர். ‘உள்நாட்டு
பற்றாக்குறையைப் போக்குவதற்குத் தேவையான எந்த சலுகைகளையும்
காலனித்துவ அதிகாரிகள்
அளிக்கவில்லை. இலையுதிர்காலத்தில் துருப்புக்களுக்குத் தேவையான உணவை அளிப்பதற்காக கோதுமை
மற்றும் அரிசியை தொடர்ந்து அவர்கள் ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தனர். குறிப்பாக உணவு தொடர்பான பணவீக்கம் அதிகரித்தது.
1914ஆம் ஆண்டு தேசிய அளவில் 147 ஆக இருந்த விலைக் குறியீடு, 1920ஆம் ஆண்டு 281ஆக உயர்ந்தது.
இதுபோன்ற உயர்வு எந்த சமூகத்திற்கும் அழிவையே ஏற்படுத்தும்’ என்று பாண்டியோபாத்யா விளக்கியிருந்தார். 1918 அக்டோபரில், தொற்றுநோயின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது, சரக்கு ரயில்களில் ஏறி மக்கள் தானியங்களைத் திருடத் தொடங்கியிருந்தனர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் அகதிகளாக
பம்பாய் நோக்கி விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்களும், கிராமங்களும்
‘நாட்டின்
அனைத்து பகுதிகளிலும் அதிருப்தி உணர்வுகள் வலுவாக இருந்த காலகட்டம் அது’
என்று பாண்டியோபாத்யாய் கூறுகிறார்.
இந்த அதிருப்தி அனைத்துப்
பகுதிகளிலும் இருந்தாலும், மற்ற பகுதிகளை விட சில பகுதிகளை மட்டுமே அந்த காய்ச்சல் கடுமையாகத் தாக்கியிருந்தது. சாதாரண காய்ச்சலைப் போன்று, முதியவர்கள் மற்றும் இளையவர்களை மட்டுமல்லாது,
உலகெங்கிலும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை, குறிப்பாக ஆண்களைக் குறிவைத்து அந்தக் காய்ச்சல்
தாக்கியது. பெண்கள் அந்த தாக்குதலில் இருந்து
பாதுகாப்புடன் இருந்ததாகத் தோன்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கர்ப்பமாக
இருந்த பெண்கள் கருச்சிதைவுகளுக்கு ஆளாகி அதிர்ச்சியூட்டும் அளவில் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். உலகின் சில பகுதிகளில் சில குறிப்பிட்ட வயதினரிடையே பாலினம் சார்ந்து நோயின் தாக்கம் தலைகீழாக
மாறியிருந்தது என்றாலும், இந்தியாவில், ஒவ்வொரு வயதினரிடமுமே அது தலைகீழாக மாறியிருந்தது. வேறுவிதமாகக் கூறினால், இந்திய ஆண்கள் மற்றும் சிறுவர்களைப் போன்று ஒரே மாதிரியாகவே இந்திய பெண்களும், சிறுமிகளும், பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான காரணங்களும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் இது குறித்து
முன்மொழியப்பட்ட விளக்கங்கள்
பின்வருமாறு இருந்தன: ஒரு குடும்பத்திடம் இருக்கின்ற வளங்களின் மீது ஆண்களுக்கு
அதிக உரிமை உண்டு. அந்த வளங்களில் பற்றாக்குறை ஏற்படும்போது,
நோய்வாய்ப்பட்டவர்களை பெண்கள் நன்கு கவனித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள்
அதிகம். அதனாலேயே பட்டினியுடன் இருந்த பெண்கள்,
அதிக பாதிப்புக்குள்ளாகி வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
பணக்காரர்களைவிட ஏழைகளும்
தொழிலாளர்களும் காய்ச்சலால் அதிகமாகப் பாதிக்கப்பட்டது, அந்த நேரத்தில் மற்றொரு உலகளாவிய பாதிப்பாக இருந்தது. இனமேம்பாட்டியல் அறிஞர்கள் கூறுவதைப்
போல இயல்பிலேயே
தாழ்ந்தவர்களாக அவர்கள் இருந்தது
அதற்கு காரணம் அல்ல. வெளித்தெரியாமல்
மறைந்திருக்கும் நோயைக் கொண்டிருப்பது,
பட்டினியுடன் இருப்பது,
நெரிசலான மற்றும் ஆரோக்கியமற்ற தங்குமிடங்களில் தங்கியிருப்பது,
மருத்துவம் அல்லது செவிலிய
வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே அதற்கான காரணங்களாக இருந்தன. அவர்கள் சமூகத்திலிருந்து
விலக்கி வைக்கப்படுவதும் தன்னுடைய பங்கைக் கொண்டிருந்தது. குஜராத்தில் தொலைதூரத்தில் காடுகள் நிறைந்த டாங்ஸ் பகுதி, பெரும்பாலான இந்திய நகரங்களை விட அதிகமாக தன்னுடைய மக்கள்தொகையை இழந்தது என்று 2012ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டேவிட்
ஹார்டிமன் குறிப்பிட்டுள்ளார். இது ‘கிராமப்புறத்திற்கென்று இருக்கின்ற நன்மை’
என்ற விதியை மீறியிருந்தது. காரணம், டாங்ஸ் ஆதிவாசிகளின் தாயகமாக இருந்தது. பிரிட்டிஷார் மற்றும் பிற
இந்தியர்கள் அவர்களை காட்டில் வாழுகின்ற பின்தங்கிய பழங்குடியினராகவே
கருதினர்.
தொற்றுநோய்க்கான நிவாரணமும் சுதந்திரப் போராட்டமும்
தொற்றுநோய்
கடந்து சென்ற பிறகு, அது ஒரு ‘தேசிய பேரிடர்’ என்பதை இந்திய நலவாழ்வு ஆணையர் உணர்ந்திருந்தார். அந்த நோய் உச்சத்தில் இருந்த போது, அதைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம் உதவிக்கான வேண்டுகோளை விடுத்தது. தேசிய சுதந்திரப் போராட்டத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த குஜராத் சபா போன்ற அமைப்புகளிடமிருந்து சரியான நேரத்தில் உதவி வந்து சேர்ந்தது.
சமூக சீர்திருத்தத்தில் தீவிரமாக இறங்கிய பலர், உள்ளூர் சாதி மற்றும் சமூக அமைப்புகளை அணிதிரட்டினர். எடுத்துக்காட்டாக, குஜராத் சூரத் மாவட்டத்தில், சுதந்திரப் போராளிகளான கல்யாண்ஜி, குன்வர்ஜி மேத்தா என்ற இரண்டு இளம் சகோதரர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட காய்ச்சல் நிவாரணப் பணிகள் ஆதிவாசிகள் மற்றும் பிற சுதந்திரப் போராளிகளுடன், குறிப்பாக தயாள்ஜி தேசாய் போன்றோருடன் தொடர்பு கொண்டு நடைபெற்றன. தங்களுடைய முயற்சிகளுக்கு நிதியளித்த தேசிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துடனான உறவை
அவர்கள் வலுப்படுத்திக் கொண்டனர். சூரத்தில் மட்டும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் மற்றும் தலித்துகள் உட்பட 10,000 பேருக்கு அவர்கள் உதவியதாகக் கூறப்படுகிறது.
காந்தியைத் தொற்றிய நோய்
1918வாக்கில்,
அறிவார்ந்த வட்டாரங்களில் தேசத்தின் எதிர்காலத் தலைவராக காந்தி காணப்பட்டார், ஆனால் அப்போது அடிமட்ட ஆதரவு அவருக்கு இருக்கவில்லை. அந்த வசந்த காலத்தில், தனது சொந்த மாநிலமான குஜராத்தில், தனது முதல் இரண்டு சத்தியாக்கிரகங்களுக்கு காந்தி ஏற்பாடு
செய்திருந்தார். பெரும் எண்ணிக்கையில் இல்லை என்றாலும்,
ஆயிரக்கணக்கான மக்கள் அந்த சத்தியாக்கிரகப் போராட்டங்களில் கலந்து
கொண்டனர். மீண்டும்
இலையுதிர்காலத்தின் போது காய்ச்சல்
திரும்பியபோது, அந்தக் காய்ச்சலால் அவரது
ஆசிரமத்தில் தங்கியிருந்த சுதந்திரப் போராட்ட
இயக்கத்தின் மற்ற முன்னணி உறுப்பினர்களான, குறிப்பாக வல்லமைமிக்க நூற்பு ஆசிரியர் கங்காபென் மஜ்முந்தர், ஆரம்பகால சத்தியாக்கிரகங்களை ஒழுங்கமைக்க உதவிய சங்கர்லால் பரிக் ஆகியோருடன் காந்தியும் பாதிக்கப்பட்டனர். காந்திக்கு பேசவோ படிக்கவோ முடியாத அளவிற்கு காய்ச்சல் இருந்தது. பேரழிவு உணர்வைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர், ‘வாழ்க்கை மீதான அனைத்து ஆர்வமும் தொலைந்து போனது’ என்று பின்னர் தனது சுயசரிதையில் எழுதியிருந்தார்.
நவம்பரில்,
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் விளைவாக,
ஐரோப்பாவில் போர் முடிவிற்கு
கொண்டு வரப்பட்டது. அப்போதும் காந்தி உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். பின்னோக்கி கண்டறிதல் என்பது நம்பமுடியாதது என்றாலும், அவரது நுரையீரலில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் விளைவாக நிமோனியா உருவாகியதால், அவரது நோய் இவ்வளவு காலத்திற்கு நீடித்தது என்றே கொள்ள முடியும்.
ரௌலட் அறிக்கை வெளியிடப்பட்டது. வைஸ்ராயின் சட்டமன்றக் குழுவில் இருந்த நீதிபதி சிட்னி ரௌலட், ராணுவச் சட்டத்தை அமைதிக்காலத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். போர்க்காலம் முழுவதும், குடிமை உரிமைகள் முற்றிலுமாக இடைநிறுத்தப்பட்டன. அதாவது குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இந்தியர்கள் கைது செய்யப்பட்டு, நடுவர் மன்றம் இல்லாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றானது. அவ்வாறான சூழலின் தேவையை தேசத்துரோகம், பயங்கரவாதம் போன்றவை
நியாயப்படுத்துவதாக ரௌலட் உணர்ந்தார். சுதந்திரத்தை எதிர்பார்த்திருந்த இந்தியர்களுக்கு அதிக அளவிலான அடக்குமுறையே கிடைத்தது. அவர்களை இது அதிக அளவிற்கு ஆத்திரமூட்டியது.
‘1918 முதல் இந்தியா முழுவதும் சமூகம் மற்றும் அரசியல் அமைதியின்மை இருந்தது. அந்த அமைதியின்மையின் சமூகப் பின்னணிகளில் ஒன்றாக அந்த தொற்றுநோயும்,
பஞ்சமும் இருந்தன’ என்று பாண்டியோபாத்யாய் குறிப்பிடுகிறார்.
1919 பிப்ரவரியில்
ரௌலட் மசோதா சட்டமாக
நிறைவேற்றப்பட்டது. காந்தி இன்னும்
பலவீனமாகவே இருந்தார்: ‘அந்த நேரத்தில் கூட்டங்களில் என்னால் குரல் எழுப்பி பேச முடியவில்லை. கூட்டங்களில் நின்று கொண்டு பேசுவதற்கு இயலாமல் இருந்த
நிலைமை தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. எனது உடல் முழுதும் நடுங்கும், நீண்ட நேரத்திற்கு நின்று பேசும் போது, கடும் துடிப்பு ஏற்படும்’ என்று எழுதியிருப்பது, அந்த சந்தர்ப்பத்தை அவர் சரியாக எதிர்கொள்ளவில்லை என்ற பொருளைத்
தராது. ‘கறுப்புச்
சட்டம்’ என்று அவரால் அழைக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக,
அவர் சத்தியாகிரகத்திற்கு அழைப்பு விடுத்தார். சூரத்தில்
தயாள்ஜி தேசாய்,
கல்யாண்ஜி மேத்தா ஆகியோர் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டனர். பொதுவாக சாதித் தடைகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இருவரும், சுயராஜ்யத்திற்கான அந்தப் போராட்டத்தில் ‘தாலு-காலு’ என்ற புனைபெயரில் ஒன்றிணைந்திருந்தனர்.
1919 ஏப்ரல்
13 அன்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமிர்தசரஸில் நடைபெற்ற சத்தியாக்கிரகம்,
பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டையர்
தனது படைகளை ஜாலியன்வாலா பாக் தோட்டத்திற்கு அனுப்பி, நிராயுதபாணியாக நின்றிருந்த கூட்டத்திற்குள்
துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற துயர நிகழ்வுகளுக்குள் சென்று முடிவுற்றது.
1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வு கல்கத்தாவில் நடைபெற்றது. பம்பாயிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் காந்தியுடன் சென்றவர்களில், இந்த மேத்தா சகோதரர்களும் அடங்குவர். நாடு தழுவிய சத்தியாக்கிரகத்திற்கான தனது அழைப்பை காங்கிரஸ் ஆதரிக்குமேயானால், ஓராண்டிற்குள் சுயராஜ்யம் கிடைத்து விடும் என்று காந்தி
அளித்த உறுதியால், குன்வர்ஜி
மேத்தா ஈர்க்கப்பட்டார்.
குஜராத்திற்குத் திரும்பிய அவர்,
அதற்காக ஐந்து நகரங்களில் உரையாற்றினார். 1921ஆம் ஆண்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலரும் கலந்து கொண்டனர். சற்று முன்கூட்டியே கூறப்பட்டதாக
காந்தியின் வாக்குறுதி மாறிப்
போனது. ஆனாலும்
1921வாக்கில், அவருக்கு அடிமட்ட ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக,
லட்சக்கணக்கான சாதாரண இந்தியர்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வந்த அந்த
சுதந்திரப் போராட்ட
வீரர்களுக்கு நன்றி
தெரிவிக்க வேண்டும்.
அமிர்தசரஸில்
நடந்த கொடூரமான சம்பவங்களுக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, சுதந்திரத்திற்கு ஆதரவாக இருந்து வந்த யங்
இந்தியா இதழில் ‘பொது சுகாதாரம்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டது. இன்ஃப்ளூயன்சாவால்
பம்பாய் தெருக்களில் 60 லட்சம்
மக்கள் ‘நாதியற்று
எலிகள் போன்று’
இறந்து போக அனுமதித்த அரசாங்கத்தார்,
இன்னும் சிலர் துப்பாக்கி
குண்டுகள் மூலம் இறந்து போனாலும் கவலைப்பட மாட்டார்கள் என்பதாக குறிப்பிட்டிருந்த அந்த தலையங்கம்
நாட்டின் இருண்ட
மனநிலையைப் பிரதிபலித்தது. அதே மனநிலையைத்தான்
1921ஆம் ஆண்டு நிராலா தனது
வழியில் வெளிப்படுத்தினார்.
‘பிச்சைக்காரர்’ என்ற தலைப்பில் அவர் கவிதை ஒன்றை எழுதினார். அதில் பின்வருகின்ற வரிகள் இருந்தன:
‘பட்டினியால்
அவர்களுடைய உதடுகள் சுருங்கும்போது
பெருந்தன்மையுள்ள
இறைவனிடமிருந்து
என்ன கூலி கிடைக்கும்?
நீங்கள் உங்கள் கண்ணீரைக் குடிக்கலாம்’.
உலகம் கொடூரமானது, உணர்ச்சிவசப்படுவதற்கு அதில் இடமில்லை என்று நிராலா அறிந்து கொண்டிருந்தார். அவரது சக எழுத்தாளரும், காய்ச்சலில் இருந்து தப்பியவருமான முன்ஷி பிரேம்சந்த், நாட்டில் உள்ள சாதாரண மக்களுடைய வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை விவரித்து தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டவர்.
அவருடைய கதைகள் தீர்வு கிடைக்காத மற்றும் சில நேரங்களில் கவனிக்கப்படாத அநீதிகளால் நிரம்பியிருந்தன. 1918ஆம் ஆண்டில், ஐக்கிய மாகாணங்களில் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தபோது, அவர் ‘கிராம வாழ்க்கை வரலாற்றாசிரியர்’ ஆனார்.
கலை, அரசியல் இரண்டிலும் தன்னுடைய தடயத்தை விட்டுச் சென்ற தொற்றுநோய், இன்னும் ஆழமான முறையில் இந்தியாவை வடிவமைத்துச் சென்றது. அந்தப் பேரழிவில் எத்தனை இந்தியர்கள் இறந்து போனார்கள் என்பதைக் கணக்கிட்ட சந்திரா, நோய்க்கு முன்னர் குறைவாக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி,
நோய்க்குப் பின்னர் அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தார். பொதுவாக
வறட்சி, பஞ்சம்
மற்றும் போர் ஆகியவை முந்தைய மந்தநிலைக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால் 1920களில் மக்கள்தொகை வளர்ச்சியை ஏதோவொன்று துரிதப்படுத்தியிருந்தது. அந்த காரணி 1918 காய்ச்சல் தொற்றுநோயாக
இருக்குமா?
அது ஒன்றும் கேள்விக்குரியதாக இருக்கவில்லை. 1919ஆம் ஆண்டு நாட்டில் 30 சதவிகிதம் குறைவை பிறப்பு விகிதம் சந்தித்திருந்த
போதிலும், கருவுறுதல் விகிதம் 1920இல் தொடங்கி காய்ச்சலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது மட்டுமல்லாமல், முந்தைய அளவைத் தாண்டவும் செய்தது. இவ்வாறான குழந்தை பிறப்பு அதிகரிப்பு உலகின் பிற பகுதிகளிலும் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட
அந்த எல்லைப் பகுதியில் இருந்து ஆண்கள் திரும்பி வந்ததைத் தொடர்ந்தே இவ்வாறு நடந்தது என்று இது குறித்து புதிய கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ‘காசநோய், மலேரியா மற்றும் பிற நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த, உடற்தகுதியவற்றவர்களை அந்த காய்ச்சல் அழித்து நீக்கி விட்டு,
சிறிய ஆனால் ஆரோக்கியமான மக்கள்தொகையை விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறு உயிர் பிழைத்தவர்கள் தங்களிடமிருந்த உறுதியான ஆரோக்கியத்தின்
காரணமாக, அதிக விகிதத்தில் இனப்பெருக்கம் செய்யக் கூடியவர்களாக இருந்திருக்கலாம். இதுவே 1920களில் இந்தியாவில் தொடங்கிய மக்கள்தொகைப் புரட்சிக்கான காரணமாக இருந்திருக்கலாம்’
என்பது தற்போது ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு வருகின்ற மற்றொரு
கோட்பாடாக இருக்கிறது. .
அந்த ஆண்டுகளில் நடந்த அனைத்தையும் தனிப்பட்ட சோகம், கூட்டு பின்னடைவு ஆகிய இரண்டும் வடிவமைத்தன. 1918 இன்ஃப்ளூயன்சா தொற்றுநோய் நமக்கு வேறு பல பாடங்களை, குறைந்தபட்சம் எந்தவொரு தேசமும் தொற்று நோய்க்கிருமிகள் குறித்து கவலைப்படாத தனித்தீவாக இருக்க முடியாது என்ற பாடத்தைக்
கற்பித்துக் கொடுத்துள்ளது. மற்றுமொரு காய்ச்சல்தொற்று தவிர்க்க முடியாதது என்பதை நாம் நன்கு அறிவோம். அறிவியலாளர்களும், பொது சுகாதார நிபுணர்களும் தங்களைத்
தயார்படுத்திக் கொள்வதில் மும்முரமாக
ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும், அது எப்போது அல்லது எங்கே
வெளிப்படும், எவ்வளவு
மோசமாக அது இருக்கும் என்பதை அவர்களால் இன்னும் கணிக்க முடியவில்லை. தொற்றுநோயானது ஓர் உயிரியல் மற்றும் சமூக நிகழ்வு என்பதே 1918 காய்ச்சல் நமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் மிக முக்கியமான பாடமாகும். அந்த நோய் ஏற்படுத்தியிருந்த உயிரியல் மற்றும் சமூக
விளைவுகள் என்ற பரிமாணங்களில் ஒன்றை நாம்
புறக்கணித்தாலும், அவ்வாறு செய்ததற்கான
விளைவுகளுக்கான முழு பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Comments