குணால் புரோஹித்
ஆர்ட்டிக்கிள்14
இந்திய ஆளும் கட்சி கொண்டிருக்கும்
வெறுப்புணர்வைத் தடுப்பதை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தடுத்தார் என்று
கிடைத்த தகவல்களுக்குப் பிறகு நாங்கள் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம்
பாஜகவுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகளை
எடுத்ததுடன், அரசாங்கத்துடனான வணிக உறவுகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதும் தெரிய
வந்தது.
இந்திய
அரசியல் உள்ளடக்கத்தைப் பாகுபாடுடன் ஒழுங்குமுறைப்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனம்
இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆர்ட்டிக்கிள்14 நடத்திய விசாரணைகள்,
ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய உள்ளடக்கங்களை ஓராண்டிற்கும் மேலாக
உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல் நிறுவனம் பாதுகாத்து வருவதை வெளிக்கொணர்ந்துள்ளன.
கட்சி
சார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்தாமல் பாஜகவின் திட்டங்களை இதுபோன்று
ஊக்குவிக்கின்ற செயலானது, ஒருங்கிணைந்த நம்பத்தகன்மையற்ற நடத்தை என்று ஃபேஸ்புக்கின்
விதிமுறைகளின்படி அழைக்கப்படுகிறது. கிடைத்திருக்கின்ற புதிய சான்றுகள், அத்தகைய நடத்தை கொண்டதாக
இருக்கின்ற விளம்பரங்களுக்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில்
செலவிடுகின்றவர்களின் பக்கங்களுக்கு எதிராக அந்த நிறுவனம் செயல்படத் தவறியிருப்பதை
வெளிப்படுத்துகின்றன.
கடந்த
ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தல்களுக்கு சற்று முன்னதாக, 702 பக்கங்கள்
மற்றும் பயனர்களை ஃபேஸ்புக் கழற்றி
விட்டது. அவற்றில் 687 காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு கொண்டவையாக இருந்தன. கடந்த
ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் காங்கிரஸ் கட்சியுடனான தங்களுடைய தொடர்புகளை
வெளியிடாததற்காக அந்த பக்கங்கள் தண்டிக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பாஜகவுடன் வெளியிடப்படாத தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் மீது ஒப்பிடத்தக்க
வகையில் எந்த நடவடிக்கையையும் ஃபேஸ்புக் நிறுவனம் எடுக்கவில்லை.
ஃபேஸ்புக்
நிறுவனம் பாஜகவை மென்மையாகக் கையாள்வது இவ்வாறு நுட்பமானதாக இருக்கின்ற வேளையில்,
34 கோடி பயனர்களைக் கொண்ட அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில்
நரேந்திர மோடி அரசாங்கத்துடன் நன்கு அறியப்பட்ட, வணிகரீதியாக நன்மை பயக்கின்ற உறவை
அந்த நிறுவனம் கொண்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஃபேஸ்புக் குறைந்தது
எட்டு வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கூட்டு முயற்சிகளை கொண்டிருக்கிறது. அதன் பெருக்கப்பட்ட மெய்மை
மென்பொருள் மூலமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்
பயிற்சியளிக்க அனுமதிப்பதில் துவங்கி, தன்னுடைய சொந்த தளங்களில் பழங்குடி
மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குவது வரையிலும் என்று ஃபேஸ்புக்கின் இந்த
கூட்டு முயற்சிகள் பலவகைப்பட்டவையாக இருக்கின்றன. புதிய பார்வையாளர்களைப்
பெறுவதற்கும், தன்னுடைய பயனர் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும், அதிக
விளம்பரதாரர்களைப் பெறவும் ஃபேஸ்புக்கிற்கு இவ்வாறான கூட்டாண்மை உதவுவதாக
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று
நாட்களாக ஏராளமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இரண்டு மின்னஞ்சல்களை
அனுப்பிய போதிலும், ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து
விட்டது. ஒரு கட்சிக்கு எதிராக ஃபேஸ்புக் ஒருசார்புடன் இருப்பது பற்றிய கேள்விகளை
நகைப்புக்குரியது என்று பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவும், சமூக ஊடகத்
தலைவர் அமித் மாளவியாவும் நிராகரித்தனர். இந்த விவகாரம் குறித்த குறிப்பிட்ட
கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர்கள் மறுத்து விட்டனர்.
தனது
வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வெளிப்படையான முயற்சியில், பாஜக
உறுப்பினர்களால் தன்னுடைய தளத்தில் இடப்படுகின்ற வெறுப்பு பேச்சுக்கு எதிராகச்
செயல்படுவதர்கு ஃபேஸ்புக் மறுத்துவிட்டது என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்கிற
அமெரிக்க செய்தித்தாள் ஆகஸ்ட் 14 அன்று செய்தி வெளியிட்ட பிறகு, இப்போது புதிய
சான்றுகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியை பாஜக
புறந்தள்ளியிருக்கின்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி விளக்கம் கேட்டு ஃபேஸ்புக்கிற்கு
கடிதம் எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின்
தலைவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், ஃபேஸ்புக் பிரதிநிதிகளை
செப்டம்பர் 2 அன்று இதுகுறித்து விளக்கமளிக்க வருமாறு அழைத்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட
இலக்கு: காங்கிரஸ் சார்பு பக்கங்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன
இந்த
ஆண்டு மார்ச் மாதம் ஃபேஸ்புக்கிற்குள் நடந்த நிகழ்வுகள் வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான
அறிக்கையில் விளக்கப்பட்டிருந்தது. தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜாசிங்கின்
வெறுப்பு பேச்சுக்கான ஆதாரங்களை அந்த நிறுவனம் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜாசிங்கின் பதிவுகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பது, இந்தியாவில்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக நலன்களைப் பாதிக்கும் என்பதால், அந்தப் பதிவுகளை
நீக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின்
பொதுக்கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் எச்சரிக்கை செய்ததாக, நிறுவனத்தின் உள்நபர்களை
மேற்கோள் காட்டி அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. அவருடைய எச்சரிக்கையை ஃபேஸ்புக்
நிறுவனத்தின் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால், ராஜாசிங் பதிவுகள் மீது எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
2019
ஏப்ரலில் ஒருங்கிணைந்த நம்பத்தகத்தன்மையற்ற நடத்தைக்காக 702 பக்கங்களையும்,
கணக்குகளையும் நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்த போது, இவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட உள்ளடக்கங்களை மட்டும் சீராக்குகின்ற நடவடிக்கை தெளிவாகத்
தெரிந்தது. ‘சில பக்கங்களின் குழுக்கள் அல்லது மக்கள் ஒன்றிணைந்து தாங்கள் யார்
அல்லது தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து மற்றவர்களைத் தவறாக வழிநடத்தும்
போது இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக’ ஃபேஸ்புக்கின் இணைய பாதுகாப்புக் கொள்கையின்
தலைவரான நதானியேல் க்ளீச்சர் விளக்குகிறார்.
ஏப்ரல்
2 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது க்ளீச்சர்,
‘சுயாதீனமாகத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ஆனால் உண்மையில் ஓர்
அமைப்பு அல்லது அரசியல் கட்சியுடன் தொடர்புடைய அல்லது தொடர்பை மறைக்க
முயற்சிக்கின்ற குழுக்களின் பக்கங்களை ஃபேஸ்புக் தேடி வருகிறது’ என்று கூறினார்.
இந்த
702 பக்கங்கள் மற்றும் கணக்குகளில், 687 காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப
அணியுடன் இணைந்திருக்கின்ற நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக ஃபேஸ்புக்
கண்டறிந்தது, ஆனால் பாஜகவுடனான தொடர்புகளைக் கொண்ட பக்கங்கள் எதுவும் அந்தப்
பட்டியலில் இருக்கவில்லை. மீதமுள்ள 15 ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் பயனர்கள்
அகமதாபாத்தை தளமாகக் கொண்ட சில்வர் டச் என்ற ஐ.டி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவையாக
இருந்தன. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், அதனுடைய வாடிக்கையாளர்களாக இந்திய
அரசாங்கமும், குஜராத் அரசாங்கமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே
நாளில் ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில், பிரதமர் நரேந்திர மோடியின்
அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான நமோ செயலியுடன் சில்வர் டச் நிறுவனத்தை ஃபேஸ்புக்
இணைத்துக் கூறியது. இருப்பினும், பாஜக ஐடி அணித் தலைவர் அமித் மாளவியா சில்வர் டச்
மற்றும் நமோ செயலி ஆகியவற்றிற்கு இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்ததை
அடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையில், எங்கள் தளத்தில் உள்ள
நமோ செயலியுடன் சில்வர் டச் தொடர்புடையதாக இருப்பதாக எந்த ஆதாரமும் காணப்படவில்லை
என்று அறிவித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த
செயல்களும், அவற்றுக்கு பின்னால் உள்ள காரணங்களும் நம்பத்தகுந்தவை அல்ல என்று லாப
நோக்கற்று செயல்படுகின்ற உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூஸின் நிறுவனர்
பிரதிக் சின்ஹா கூறுகிறார். காங்கிரஸ் ஐடி அணியுடன்
தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் ஃபேஸ்புக்கின் முயற்சியை சுட்டிக் காட்டுகின்ற
சின்ஹா, ‘இந்த கட்சிகளுடன் தொடர்பில் இருப்பவர் யார், யார் தொடர்பில் இல்லை என்பதை
ஃபேஸ்புக் எவ்வாறு தீர்மானிக்கிறது? பாஜகவிற்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியுடனான தங்களுடைய தொடர்பை முன்னிலைப்படுத்தாமல், ஆயிரக்கணக்கான
பக்கங்களை அவர்கள் இயக்கி வருகிறார்கள். அந்த பக்கங்கள் எல்லாம் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன’ என்கிறார்.
தன்னுடைய
உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் ஃபேஸ்புக்கிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததே
இத்தகைய குழப்பத்திற்கான காரணமாக இருக்கிறது என்று சின்ஹா கூறுகிறார். ‘தீர்ப்பு
வழங்குவதைக் கடினமாக்குகின்ற வகையில், ‘ஃபேஸ்புக் உருவாக்குகின்ற விதிகள்
இரண்டகமாக இருக்கின்றன’ என்று கூறிய அவர், ‘எந்தெந்த பக்கங்கள் நீடித்திருக்கலாம்,
எவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து நிலையான அளவுகோல்கள் எதுவும்
இல்லை’ என்கிறார்.
காங்கிரஸுடன்
தொடர்புடைய பக்கங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்டதாகப் பெருமைப்பட்டுக்
கொள்ளும் பாஜகவுடன் தொடர்புடைய பல பக்கங்கள் மீதான நடவடிக்கைகளை ஃபேஸ்புக்
புறக்கணித்திருப்பதால், சின்ஹாவின் வார்த்தைகள் உண்மையாகவே இருக்கின்றன. இவ்வாறு நடவடிக்கை
மேற்கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு, அவர்களுடைய தளத்தில் இருந்து வருகின்ற பல
பக்கங்கள் மிகப்பெரிய அரசியல் சார்புடைய விளம்பரதாரர்களுடன் தொடர்பு கொண்டவையாக
இருக்கின்றன.
பாஜகவுடன் தொடர்புடைய
ஃபேஸ்புக் பக்கங்கள்
சமூக
ஊடக தளங்களில் பாஜகவின் இருப்பு மிகப் பெரியது. உலகத் தலைவர்களிலேயே மிகப் பெரிய
அளவில் ஃபேஸ்புக் பின்தொடர்பைக் கொண்டதாக, 4.5 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட
மோடியின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.
இந்தியாவிலேயே ஃபேஸ்புக்கில் மிக அதிக அளவில் விளம்பரச் செலவுகளைச் செய்வதாக இருக்கின்ற
பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கம், 1.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக்
கொண்டுள்ளது. தன்னுடைய ஃபேஸ்புக் தளங்களில் விளம்பரங்களுக்காக கடந்த ஆண்டு
பிப்ரவரி முதல் ரூ.4.60 கோடிக்கு மேல் பாஜக செலவிட்டிருப்பதாக ஃபேஸ்புக் தரவு
காட்டுகிறது. மோடிக்கும், கட்சிக்கும் இடையே தங்களுக்கு இருக்கின்ற எந்தவிதமான
அதிகாரப்பூர்வத் தொடர்புகளையும் இதுபோன்று வெளிப்படுத்தாமல், வேறு பல பக்கங்களும் அந்தக்
கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றன.
ஆர்ட்டிக்கிள்14
நடத்திய விசாரணைகள் ஃபேஸ்புக்கின் விதிகளை மீறி, அந்த பக்கங்களில் அவ்வாறு எதுவும்
குறிப்பிடப்படவில்லை என்றாலும், பாஜகவுடன் நேரடியான தொடர்பில் குறைந்தது ஐந்து
பக்கங்களாவது உள்ளன என்பதைக் காட்டுகின்றன. ஃபேஸ்புக் நடவடிக்கை எடுப்பதை
தவிர்க்கும் வகையில், அவற்றில் இரண்டு பக்கங்கள் தங்களை செய்தி மற்றும் ஊடக
இணையதளங்கள் என்று தவறாக முத்திரை குத்திக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இந்த
ஐந்து பக்கங்களில் மீதமுள்ள மூன்று பக்கங்கள் - நேஷன் வித் நமோ, மை ஃபர்ஸ்ட் வோட்
பார் மோடி மற்றும் பாரத் கே மன் கி பாத் ஆகியவை ஃபேஸ்புக்கின் முதலாவது பத்து
இந்திய விளம்பரதாரர்களில் இடம் பெற்றிருக்கின்றன. மொத்தத்தில், இந்த மூன்று
நிறுவனங்களும் 2019 பிப்ரவரி முதல் ஃபேஸ்புக்கின் முதல் பத்து அரசியல்
விளம்பரதாரர்களால் செலவிடப்பட்ட ஏறக்குறைய ரூ.16 கோடியில் ரூ.4.83 கோடியைச்
செல்வழித்திருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தரவு காட்டுகிறது.
இந்த
மூன்று பக்கங்களும் ஃபேஸ்புக்கிற்கு சமர்ப்பித்திருக்கின்ற விவரத்தில், 6-ஏ, தீன்
தயாள் உபாத்யாய் மார்க், புது தில்லி என்ற ஒரே முகவரியிலிருந்து செயல்படுவதாக தகவல்
அளித்துள்ளன. இந்த முகவரி பாஜகவின் தேசிய தலைமையகத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரி
ஆகும்.
எடுத்துக்காட்டாக,
பாரத் கே மன் கி பாத் என்ற 300,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக்
கொண்டிருக்கும் பக்கம், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர
மோடியைப் பாராட்டுவது, எதிரிகள் மீது
வகுப்புவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என்று கலவையான பதிவுகளைப் பதிவேற்றுகிறது.
வங்காளத்திலிருந்து
புதிய பாகிஸ்தானை உருவாக்குவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, அவரை ‘மம்தா பானோ’ என்று அழைத்ததோடு, மேற்கு வங்க
அரசு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மையமாக இருப்பதாகக் குற்றம் சுமத்தி கடந்த ஆண்டு ஜனவரியில்
ஒரு பக்கத்தை உருவாக்கியிருந்தது. ஃபேஸ்புக்கில் செய்யப்பட்ட 3,800க்கும் மேற்பட்ட
விளம்பரங்களுக்காக ரூ.2.24 கோடிக்கு மேல் இந்த பக்கம் செலவிட்டுள்ளது.
விளம்பரதாரர் விவரங்களில், தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜகவின்
தலைமையகமே, விளம்பரதாரரின் முகவரி என்று அந்தப் பக்கம் தெரிவிக்கிறது.
13
லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட மற்றொரு பக்கமான, ‘நேஷன் வித்
நமோ’ தன்னை ஒரு ‘செய்தி மற்றும் ஊடக இணையதளம்’ என்று காட்டிக் கொள்கிறது. மோடியின்
‘புதிய இந்தியா இயக்கத்தை’ ஊக்குவிப்பதற்கானதொரு ‘அனைத்து-இந்தியா குடிமக்கள்
ஈடுபாட்டு தளம்’ என்று தன்னை விவரித்துக் கொள்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல்,
ஃபேஸ்புக்கில் 4,100க்கும் மேற்பட்ட விளம்பரங்களை வெளியிட இந்த பக்கம் ரூ.1.28
கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. பாரத் கே மன் கி பாத்தைப் போலவே, நேஷன் வித்
நமோவும் பாஜகவின் தேசிய தலைமையகத்தையே தன்னுடைய முகவரியாகப்
பட்டியலிட்டிருக்கிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மீம்ஸ் என்ற கலவையை
இந்தப் பக்கம் பதிவிடுகிறது. அந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை மோடி அரசாங்கத்தைப்
புகழ்ந்து பேசுவதாகவே இருக்கின்றன.
இதேபோன்று
‘மை ஃபர்ஸ்ட் வோட் பார் மோடி’ என்ற பக்கமும் 2019இல் பிரதமரின் மறுதேர்தல்
பிரச்சாரத்திற்கான தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. 2019 பிப்ரவரி முதல், இந்த பக்கம் ஃபேஸ்புக் விளம்பரங்களுக்கென்று
ரூ.1.38 கோடியை செலவிட்டுள்ளது. ‘இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும், அணிதிரட்டுவதற்குமான
அனைத்து-இந்தியத் தளம்’ என்று தன்னை
விவரித்துக் கொள்கிற இந்த பக்கம், பாஜகவுடன் எந்தவொரு நேரடி தொடர்பையும் அதன்
முகப்பு பக்கத்தில் காட்டிக் கொள்ளாது இருக்கிறது. ஃபேஸ்புக்கின் விளம்பரச் செலவு
குறித்த அறிக்கையில் அதனுடைய பதிவு செய்யப்பட்ட முகவரி, பாஜக தலைமையகத்திலிருந்து
அது இயங்கி வருவதாகவே காட்டுகிறது.
பாஜகவின்
தலைமையக முகவரியில் பதிவுசெய்யப்பட்ட அத்தகைய பக்கங்களுக்கிடையே இருக்கின்ற
தொடர்பை அறிந்து கொள்வதில் ஃபேஸ்புக்கிடம் உள்ள இயலாமையானது, பாஜகவின்
பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் நடத்தப்படும் பல பக்கங்களுக்கும்
நீண்டுள்ளது.
‘தி ஃபியர்லெஸ் இந்தியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள
ஃபேஸ்புக் பக்கம் 600,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. ‘செய்தி மற்றும்
ஊடக இணையதளம்’ என்று தன்னை அழைத்துக் கொள்கிற அதே நேரத்தில், மோடியையும், அவரது அரசாங்கத்தின்
கொள்கைகளையும் அது தீவிரமாக ஆதரித்து, ஊக்குவித்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு
பூமிபூஜை நடந்த ஒரு நாள் கழித்து, அந்தப் பக்கத்தில் மோடியை ஹிந்து தெய்வமான அனுமனுடன்
ஒப்பிட்டப்பட்டிருந்தது; மிக சமீபத்தில், பெங்களூரு நகரில் நடந்த கலவரத்திற்குப் பிறகு,
தலையில் குல்லா அணிந்த, தாடியுடனிருக்கும் மனிதன் நகரத்திற்கு தீ வைப்பதான படத்தை வெளியிட்டிருந்தது.
ஃபியர்லெஸ்
இந்தியன் பக்கத்தை மகாராஷ்டிராவில் உள்ள பாஜக பிரிவின் ஐடி அணி கன்வீனரான தேவாங்
தவே நடத்தி வருவதாக ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள சுயவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு
மற்றும் வாக்குப்பதிவு செய்வதற்கான டிஜிட்டல் இயக்ககத்தை கூட்டாக ஏற்பாடு
செய்வதற்கான லாபகரமான ஒப்பந்தத்தை தவேயின் நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா தலைமைத்
தேர்தல் அதிகாரி வழங்கியதாக ஜூலை 23 அன்று சாகேத் கோகலே என்ற செயற்பாட்டு ஆர்வலர்
குற்றம் சாட்டினார். அந்த ஒப்பந்தத்தை வழங்கியது குறித்தும், தவேயின் நிறுவனத்திற்கு ஏதேனும் தரவுகள்
அனுப்பப்பட்டனவா என்பது பற்றியும் விசாரிப்பதற்கான விசாரணைக்கு தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
‘தி
ஃபியர்லெஸ் இந்தியன்’ பாஜக பொறுப்பாளரால் நடத்தி வரப்பட்ட போதிலும், அதன் மீது ஃபேஸ்புக்
எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்தப் பக்கத்துடன் தனக்கு தொடர்பு
இருப்பதாகவும், அது தனது அணியாலேயே இயக்கப்படுகிறது என்பதையும் தவே
உறுதிப்படுத்தியுள்ளார். செய்திகளில் கவனம் செலுத்துகிற அந்தப் பக்கம் தொழில்
வல்லுநர்களால் சுயாதீனமாக இயக்கப்படுகிறது என்று ஆர்ட்டிக்கிள்14 இடம் அவர்
தெரிவித்தார்.
கட்சிக்கு
அதில் எந்த பொறுப்பும் இல்லை என்று கூறிய தவே. ‘உண்மையில், எங்களுக்கான தரத்தை நிறைவு
செய்வதாக இருந்தால், அரசாங்கத்தை விமர்சிக்கின்ற உள்ளடக்கத்தை வெளியிடுவதில்
நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அத்தகைய பதிவுகள் எதுவும் இல்லாமலிருப்பது தற்செயல்
நிகழ்வு. ஒருவேளை எங்களுக்கு கிடைக்கின்ற எழுத்தாளர்கள் அனைவரும் பாஜகவிற்கு
ஆதரவானவர்களாக இருக்கலாம்’ என்று கூறுகின்ற அவர், ‘இன்று நம் நாட்டின்
பெரும்பான்மை இதுதான்’ என்கிறார்.
இதேபோன்று,
தன்னை மோடியின் ‘ரசிகர் பக்கம்’ என்று வர்ணித்துக் கொள்கின்ற ‘ஐ சப்போர்ட் நரேந்திர
மோடி’ என்ற பக்கத்திற்கு 1.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ஆனாலும் அந்தப் பக்கம் பாஜகவுடன் எந்தவிதமான முறையான உறவும் கொண்டிருப்பதாகக்
குறிப்பிட்டுக் காட்டவில்லை. இருந்தபோதிலும், அந்தப் பக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான
விகாஸ் பாண்டே தனது ட்விட்டர் சுயவிவரத்தில் தன்னை ‘பாஜக தொண்டர்’ என்று
அறிவித்துக் கொண்டிருக்கிறார். 2019 பிப்ரவரி முதல் ரூ.1.30 லட்சத்துக்கும் அதிக
மதிப்பிலான ஃபேஸ்புக் விளம்பரங்களை அந்தப் பக்கம் கொடுத்துள்ளது.
இதற்கு
முன்பாகவும் பாஜகவிற்கு எதிராக ஃபேஸ்புக் மிகவும் மென்மையாகச் செயல்பட்டதாக ஆல்ட்
நியூஸின் சின்ஹா கூறுகிறார். ‘ஃபேஸ்புக்கிற்கென்று
கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும், வெறுக்கத்தக்க பேச்சுக்களைப் பேசுகின்றவர்கள்,
பாஜக நடத்துகின்ற பக்கங்கள் மற்றும் பாஜகவிற்கு அனுதாபம் காட்டுகின்ற
பக்கங்களிடம், அந்தக் கொள்கைகளை எல்லாம் அது
செயல்படுத்துவதில்லை என்பதைக் கடந்த காலங்களிலும் நாங்கள் கண்டிருக்கிறோம்’ என்று
அவர் கூறினார்.
பாஜகவின்
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மாளவியா, ஃபேஸ்புக் பாகுபாடுடன் நடந்து
கொள்வதாகச் சொல்வதை மறுத்தார். அந்த சமூக வலைப்பின்னல் தளம் உண்மையில் 700க்கும்
மேற்பட்ட பக்கங்களை நீக்கியிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையானவை தேசியவாதத்தின்
மீது அனுதாபம் கொண்டவையே என்கிறார்.
இந்தக்
கூற்றை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, மாளவியா பதிலளிக்க
மறுத்துவிட்டார். ‘லட்சக்கணக்கான சமூகங்களுடன் தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு
நலன் கொண்ட குழுக்களால் நடத்தப்படுகின்ற பெரிய பக்கங்கள் மற்றும் குழுக்களை
இலக்காகக் கொண்ட இந்த போக்கு (கடந்த ஆண்டு நடவடிக்கையால்) நிறுத்தப்படவில்லை. எந்த
காரணங்களும் சொல்லப்படுவதில்லை என்பதோடு முறையீடுகளும் அனுமதிக்கப்படுவதில்லை’
என்று மாளவியா கூறினார்.
மோடி அரசாங்கத்துடனான
கூட்டணியால் ஃபேஸ்புக் அடைந்த லாபம்
அத்தகைய
பக்கங்களிலிருந்து பெறப்பட்ட விளம்பர வருவாயுடன், பிற வணிக காரணங்களுக்காகவும்
சான் பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட சமூக ஊடக நிறுவனம், அதன் விதிமுறைகளை மீறுகிற
பாஜகவுடன் தொடர்புடைய உள்ளடக்கத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கு விருப்பமில்லாமல்
இருந்திருக்கலாம்.
மோடி
அரசாங்கத்துடன் ஃபேஸ்புக்கிற்கு உள்ள அணுகல் மிகவும் விரிவானது. பேரழிவுகளுக்கான
எதிர்வினைக்காக உள்துறை அமைச்சகத்துடன் கூட்டு சேருவதிலிருந்து, மத்திய இடைநிலைக்
கல்வி வாரியத்திற்கான (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை உருவாக்குவது வரையிலான
ஃபேஸ்புக்கின் இருப்பு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைக் கட்டுப்படுத்துவதாக
இருக்கிறது. வாக்காளர் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், உத்தரப்பிரதேசம்,
பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில்
வாக்களிப்பதற்கு முன்னதாக புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கும் 2017ஆம் ஆண்டு
இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டது.
2020
மே மாத தொடக்கத்தில், ‘கோயிங் ஆன்லைன் ஆஸ் லீடர்ஸ்’ என்ற புதிய திட்டத்திற்காக
ஃபேஸ்புக்குடன் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் ஏற்படுத்திக்
கொண்டது. அது பல்வேறு துறைகளில் உள்ள வெற்றிகரமான நிபுணர்களை வழிகாட்டிகளாக
இணைத்துக் கொள்வதன் மூலம், 5,000 பழங்குடி இளைஞர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவில்
பயிற்சியளிக்கின்ற திட்டமாகும். அந்த திட்டம் முற்றிலும் ஃபேஸ்புக் மற்றும்
அதற்குச் சொந்தமான மொபைல் செயலியான வாட்ஸ் ஆப் மூலமாக செயல்படுத்தப்படும். அந்த
நிகழ்வின் தொடக்க விழாவில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா,
சமூக ஊடக நிறுவனத்திற்கான புதிய பார்வையாளர்களை இவ்வாறான கூட்டணி உறுதி செய்து
தரும் என்று கூறியிருந்தார்.
‘பழங்குடி
இளைஞர்கள் வாழ்க்கைக்கான இலக்குகளை அடைவதற்கு தங்கள் மொபைல் தொலைபேசியை ஒரு
கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஃபேஸ்புக்
போன்ற சமூக ஊடகங்களை தங்கள் வாழ்க்கையின் நோக்கங்களுடன் அவர்கள் இணைத்துக் கொள்ள
வேண்டும் என்று அவர் கூறினார்’ என்று பழங்குடியின உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட
தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திறநுட்பம்
ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற வெபினாரில் முண்டா ஆற்றிய உரை குறித்து வெளியான
அரசாங்க செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டில், பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஃபேஸ்புக்குடன் இணைந்து ‘100 பெண்கள்’
என்ற முயற்சியைத் தொடங்கி, அதன் மூலமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய
பெண்களைப் பரிந்துரைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. பெண்களைப் பரிந்துரைப்பதற்கான
முன்மொழிவுகள் ஃபேஸ்புக் வழியாக மட்டுமே
செய்யப்பட வேண்டும் என்பதால், இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புகின்ற அனைவருக்கும்
ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படும். அதன் பிறகு
அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட வேண்டும் என்று
அப்போதைய அமைச்சரான மேனகா காந்தியை மேற்கோள் காட்டி, 2015 ஜூலை 14 அன்று வெளியான
ஏஎன்ஐ அறிக்கை தெரிவிக்கிறது.
2020 ஜூலையில், மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஃபேஸ்புக்குடனான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அந்த உடன்படிக்கையின் கீழ்,
டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணையவழி நல்வாழ்வு குறித்த பாடத்திட்டத்தை அந்த சமூக
ஊடக நிறுவனம் உருவாக்கும். மேலும் 10,000 ஆசிரியர்களுக்கும் 30,000
மாணவர்களுக்கும் ஃபேஸ்புக்கின் பெருக்கப்பட்ட மெய்மை மென்பொருளான ஸ்பார்க் ஏ.ஆர் ஸ்டுடியோவைப்
பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள
பல்கலைக்கழகங்களில் 60,000 இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு டிஜிட்டல்
கல்வியறிவு மற்றும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டை ஊக்குவித்தல் குறித்து பயிற்சி
அளிப்பதற்காக 2018ஆம் ஆண்டில் தேசிய பெண்கள் ஆணையம் ஃபேஸ்புக்கோடு இணைந்து இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு இது வருகிறது.
2020 ஏப்ரலில், தனது வாட்ஸ்
ஆப்பை அடிப்படையாகக் கொண்ட கொரோனா வைரஸ் ஹெல்ப்லைனுக்காக 11 மாநில
அரசாங்கங்களுடனும், ஃபேஸ்புக் மெசஞ்சர் அடிப்படையிலான கொரோனா வைரஸ்
சாட்போட்டுக்காக ஒன்பது மாநில அரசாங்கங்களுடனும் கூட்டாண்மையை
ஏற்படுத்தியிருப்பதாக டெக் க்ரஞ்ச் அறிவித்தது. ஃபேஸ்புக்கில் மட்டுமே நடந்த
அமர்வுகளில் அமைச்சர்கள் உரையாற்றிய நிகழ்வுகளை ஆர்ட்டிக்கிள்14 கண்டறிந்தது. இது
அந்த தளங்களின் பயனர்களுக்கு மட்டுமே பயனளிப்பதாக இருக்கிறது.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம்
ஃபேஸ்புக்கிற்கு அதிக அளவிலான பயனர்களை ஏற்படுத்தித் தந்து, இறுதியில் அந்த நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கு அவர்கள்
உதவுவதால், இதுபோன்ற கூட்டாண்மைகள் சிக்கல் நிறைந்தவையாக இருக்கின்றன
என்று ஆல்ட் நியூஸின் சின்ஹா கூறுகிறார். ‘வைரல் ஆவதன் மூலம் விளம்பரதாரர்கள் அதிக
எண்ணிக்கையில் பார்வைகளைப் பெற முடியும் என்பதால் ஃபேஸ்புக் அதை நம்பியே
இருக்கிறது’ என்று சின்ஹா கூறுகிறார். இவ்வாறாக உருவாக்கப்படும் வாய்ப்புகள்
நேரடியாக அல்லது மறைமுகமாக அந்த தளத்தை
அதிகமாகக் காண்பதற்கு வழிகளை வகுத்துத் தருகின்றன. நேரடியாகவோ அல்லது
வேறுவிதமாகவோ இதனால் அந்த நிறுவனத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும்’.
இதன் விளைவாக ஃபேஸ்புக்கின்
எந்தவொரு ஒழுங்குமுறை நடவடிக்கையிலிருந்தும் அரசாங்கமும்,
கட்சியும் பாதுகாக்கப்படுவதை இவ்வாறான கூட்டாண்மைகள் உறுதி செய்கின்றன. அரசாங்கத்திடமிருந்தோ
அல்லது அரசாங்க நிறுவனங்களிடமிருந்தோ செல்கின்ற விளம்பர வருவாயைத் தடுத்து
நிறுத்துவதன் மூலமாக, அரசாங்கங்கள் ஊடக நிறுவனங்களைத் திணறடிப்பதைப் போன்ற செயலாக இது இருக்கிறது என்று
சின்ஹா விளக்கினார்.
‘ஊடக அமைப்பின் சார்பில்
வெளியாகும் அறிக்கை அரசாங்கத்தை விமர்சிப்பதாக இருந்தால், அதன் விளைவாக தன்னுடைய
வருவாயை இழக்கக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. அதேபோன்ற நிலைமைதான் ஃபேஸ்புக்
மற்றும் அரசாங்கத்துடன் அதனுடைய கூட்டாண்மைக்கும் இருக்கிறது’ என்று சின்ஹா கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கான
டிஜிட்டல் தொடர்புகள் மற்றும் சமூக ஊடகத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌரவ்
பாந்தி கூறுகையில், இதுபோன்றதொரு ஏற்பாடு ஃபேஸ்புக் மற்றும் மோடி அரசாங்கம்
இரண்டும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து கொள்ளும் நிலையை உருவாக்கியிருக்கிறது. தனியார் நிறுவனமான
ஃபேஸ்புக்கிற்காக அரசாங்கம் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாகவும், சமூக ஊடக
தளங்களில் சேர்வதற்கு மக்களை ஊக்குவிப்பதாகவுமே இத்தகைய கூட்டாண்மை பொருள்படுவதாக
இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய
சந்தையாக உள்ள இந்தியாவின் நிலையை பாந்தி சுட்டிக்காட்டினார். ‘அரசாங்கம் ஊக்குவிப்பதால்
தான், ஃபேஸ்புக் இந்தியாவால் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடிகிறது. இந்த
ஏற்பாட்டின் மூலம் அது வெகுவாக முன்னேறியிருப்பதால், அரசாங்கத்திற்கு எதிராக
வெளிப்படையாக ஃபேஸ்புக் நடவடிக்கையை எடுக்காது’ என்று பாந்தி கூறுகிறார்.
சமீபத்திய விமர்சனங்களுக்குப்
பதிலளிக்கும் விதமாக, ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான
அஜித் மோகன், இரண்டு கட்சிகளையும் ஆதரித்து, தன்னுடைய தளத்தில் வெறுப்பு மற்றும்
மதவெறிக்கு எதிராகச் செயல்படுவதில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்கிறார். ஆனால் அதற்கு
முற்றிலும் மாறாக, இப்போது
கிடைத்திருக்கும் புதிய ஆதாரங்களின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, ஃபேஸ்புக்
நிறுவனம் ஒருசார்பாக இருப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் இன்னும் தீவிரமடைய
வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
Comments