இந்தியா போன்றதொரு பெரும்பான்மை ஜனநாயகத்தால் கமலா ஹாரிஸ் போன்ற ஒருவரை உருவாக்கியிருக்க முடியாது

நிருபமா சுப்பிரமணியன்

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பெண்ணாக, அமெரிக்காவில் இனச் சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக இருக்கின்ற ஹாரிஸ், அதிபர் பாரக் ஒபாமாவைப் போல அமெரிக்க அரசியலின் உயர்மட்டத்திற்கு உயர்ந்திருப்பது பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்ற அமைப்பின் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது.



அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியர்கள், தமிழர்கள், தமிழ் பிராமணர்கள், ஏன் அதிமுக கட்சியினர் என்று அனைவருமே எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, அவர் ஏற்கனவே வென்று விட்டார். தங்கள் மீது கவனம் ஈர்க்கப்பட்டது குறித்து உலகில் உள்ள சித்திகள் பரவசத்துக்குள்ளாகியுள்ளனர். மிகவிரைவில் பெசண்ட் நகர் ஏ-பிளாக் குடியிருப்போர் நலச் சங்கம் கூட, இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற தென்சென்னை சுற்றுப்புறத்தைச் சார்ந்த முன்னாள் குடியிருப்பாளர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தந்து அவருக்கு துணை நிற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிடக் கூடும்.

’நம்முடைய பெண்‘ என்ற உணர்வு அனைவரையும் பெருமை கொள்ள வைத்திருக்கிறது. வரவிருக்கின்ற தேர்தல்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவர் வந்தால் எச்1பி விசா, வர்த்தகம் மற்றும் பொதுவாக இந்திய-அமெரிக்க உறவுகள் ஆகியவற்றைப் பொறுத்து, ’இந்தியாவுக்கு நல்லது‘ செய்பவராக இருப்பார் என்று உத்திகளை முன்னிறுத்துகின்ற சமூகம் கூட நம்புகின்றது. அதிபர் வேட்பாளரான ஜோ பிடனைப் பொறுத்தவரை, அனைத்து விவாதங்களிலும் ஹாரிஸ் மற்றும் அவரது இந்தியக் குடும்பத்தைப் பற்றிய அடிக்குறிப்பை முன்வைப்பவராகவே இருக்கிறார்.

செனட்டர் ஹாரிஸின் நியமனம் மற்றும் அவரது அசாதாரண பயணங்கள் மூலமாக முன்னிலைப்படுத்த உதவுகின்ற, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா போன்ற ஒரு பெரும்பான்மை ஜனநாயகத்தால் கமலா ஹாரிஸை நிச்சயம் உருவாக்கியிருக்க முடியாது என்பது போன்ற இந்தியாவைப் பற்றிய உண்மைகள் நிச்சயமாக விவாதிக்கப்படாதவையாகவே இருக்கப் போகின்றன.

பெண்ணாக, அமெரிக்காவில் இனச் சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக இருக்கின்ற ஹாரிஸ், அதிபர் பாரக் ஒபாமாவைப் போல அமெரிக்க அரசியலின் உயர்மட்டத்திற்கு உயர்ந்திருப்பது பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்ற அமைப்பின் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வந்த பழமையான முரண்பாடுகள் உயிர்ப்புடன் இருப்பதை மட்டுமல்லாது, பல விஷயங்களில் அது பரந்து, ஆழமாக வளர்ந்திருப்பதை அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆயினும் நாட்டின் ஜனநாயக உள்ளுணர்வுகள் ஆழமாக இயங்கவே செய்கின்றன. வெள்ளை மேலாதிக்கத்தின் ஆபத்துகள் குறித்த தீவிர விழிப்புணர்வு, அதன் எழுச்சியைத் தடுப்பதற்கான நிறுவன, அரசியல், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் வழியிலான முயற்சிகள் மற்றும் அதனை ஊதிப் பெருக்குவதற்கான அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிகள் ஆகியவை கடந்த சில மாதங்களாகத் தெளிவாகத் தெரிகின்றன.



கறுப்பின அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்றும் கிடைக்க இயலாததாக இருக்கவில்லை. முன்னேற்றம் என்பது சீரற்றதாக இருந்த போதிலும், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் கறுப்பின அரசியல் தலைமை அதிகரித்து, இன்று மக்கள்தொகையில் கறுப்பர்களின் பங்கிற்கு இணையாக உள்ளது என்று பியூ ஆராய்ச்சி மைய இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் 52 கறுப்பின பிரதிநிதிகள் அதாவது மொத்த உறுப்பினர்களில் 12 சதவிகித உறுப்பினர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவின் மிகப்பெரிய இனச் சிறுபான்மையினரான கறுப்பர்கள், அமெரிக்க மக்கள்தொகையில் 13.5 சதவிகிதம் உள்ளனர். மூன்று கறுப்பு செனட்டர்கள் (ஹாரிஸ் உட்பட), கறுப்பு ஆளுநர்கள் இல்லை என்றாலும், கறுப்பர்களுக்கான அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவே ஒட்டுமொத்த போக்கு இருக்கிறது. அரசியல்வாதியாக ஹாரிஸ் வளர்ந்த சூழல் அமைப்பு இவ்வாறு இருக்கிறது. ஹாரிஸின் தமிழ் பிராமண வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் அவர் அடைந்திருக்கும் அரசியல் உச்சத்தை, இன்று இந்தியாவில் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கென்று குறைந்து வருகின்ற இடம் மற்றும் அரசியல் சாராத துறைகளிலும் அனைத்து வகையான பன்முகத்தன்மையும் இல்லாத நிலையுடன் ஒப்பிட்டுக் காண வேண்டும்.



இந்தியாவில், மிகப்பெரிய மதச்சிறுபான்மையினராக, மக்கள்தொகையில் சுமார் 15 சதவீதம் இருக்கின்ற முஸ்லீம்கள், அமெரிக்காவின் கறுப்பின சமூக எண்ணிக்கையுடன் ஒப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர். 1980இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 49 என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையிலிருந்து, அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. 2019ஆம் ஆண்டில் மக்களவைக்கு 27 முஸ்லீம் உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களில், அது வெறுமனே 4.97 சதவீதம் பேர் ஆகும். பாரதிய ஜனதா கட்சி ஆறு முஸ்லீம் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தியது. அவர்கள் அனைவரும் தோற்றுப் போயினர். 2014ஆம் ஆண்டில் 16ஆவது மக்களவையில் 23 முஸ்லீம்கள் இருந்தனர். அவர்கள் யாரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹிந்துத்துவா மற்றும் ஹிந்து பெரும்பான்மையின் அரசியல் வாகனமான இருக்கின்ற அந்தக் கட்சி, கடந்த 40 ஆண்டுகளில் மொத்தம் 20 முஸ்லீம் வேட்பாளர்களை மட்டுமே தேர்தல்களில் நிறுத்தியுள்ளது. அவர்களில் மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் (கிறிஸ்டோபர் ஜாஃப்ரலோட் மற்றும் கில்லஸ் வெர்னியர்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், 2018 ஜூலை 30). 242 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இப்போது 16 முஸ்லீம்கள் அதாவது 6.6 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். பாஜகவைப் போன்று, ஹிந்துத்துவா அல்லாத அரசியல் கட்சிகளும் குறைவான முஸ்லீம் வேட்பாளர்களையே தேர்தல்களில் நிறுத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



செனட்டர் ஹாரிஸின் இந்திய தமிழ் தாய் மற்றும் அவரது கறுப்பு ஜமைக்கா தந்தை ஆகியோர் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினராக, 1950கள் மற்றும் 1960களில் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சிவில் உரிமைகள் இயக்கத்தில் பங்கேற்பாளர்களாகச் சந்தித்தனர். ஐ.ஐ.டி-மெட்ராஸில் பயின்று வந்த ஜெர்மன் மாணவர் கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வளாகத்தில் மற்ற மாணவர்களுடன் அணிவகுத்துச் சென்றதற்காக நாடு கடத்தப்பட்டதைப் போல, அந்தக் காலகட்டப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர்கள் இருவரும் தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தால், இன்று சென்னை முதல் டெல்லி வரை கொண்டாடுவதற்கு கமலா ஹாரிஸ் இருந்திருக்க மாட்டார்.



இந்தியர்களுக்கும், கறுப்பின அமெரிக்கர்களுக்கும் இடையிலான திருமணங்கள் மிகவும் அரிதானவையாகவே இருக்கின்றன. அது போன்ற திருமணங்களை இந்திய பெற்றோர்கள் எதிர்க்கின்றனர். மீரா நாயர் படமான மிசிசிப்பி மசாலா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. அமெரிக்காவில் உள்ள குழுக்களில் இனங்களுக்கிடையே நடைபெறுகின்ற திருமணங்களுக்கான அணுகுமுறைகள் இப்போது மிகவும் தளர்ந்திருந்தாலும், இந்தியர்களைப் பொறுத்தவரை, கறுப்பினத்தவருடனான திருமணம் என்பது மனத்தளர்வை ஏற்படுத்துவதாகவும், குடும்பம் மற்றும் சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்படுவதாகவுமே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனைப் புரிந்து கொள்வதற்கு, கறுப்பின மக்கள், கறுப்பர்கள் என்று தங்களைச் சுயமாக அடையாளப்படுத்துபவர்கள் மட்டுமல்லாது, கறுத்த தோல் உள்ளவர்களும் இந்தியாவில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இங்கே தலித் அல்லது முஸ்லீமைத் திருமணம் செய்து கொள்வது குழு வன்முறையை ஏற்படுத்தப் போதுமானதாக இருக்கிற நிலைமையே இருக்கிறது.

அதிகமான எண்ணிக்கையிலானோர் தங்களுடைய மதவெறியை மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகின்ற அளவிற்கு இப்போது வகுப்புவாதம் இந்தியாவில் மிகவும் இயல்பாக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் மற்றும் மாடுகளின் பெயரால் முஸ்லீம் மக்களைக் கொல்வது கூட, அதற்குண்டான சீற்றத்தை மக்களிடம் தூண்டுவதாக இருக்கவில்லை. மக்கள்தொகை சார்ந்த மாற்றத்தை செயல்படுத்துகின்ற வகையில் விதிகளை மாற்றுவதை உள்ளடக்கி முஸ்லீம் பெரும்பான்மை உள்ள ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தி, இத்தகைய மாற்றங்கள் பற்றி தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்காமல், உலகிலேயே மிக நீண்ட இணைய தடை உட்பட, பல்வேறு சர்வாதிகார உத்திகளை மத்திய அரசு பயன்படுத்துவது குறித்து, வகுப்புவாத ‘மற்றமை’ உணர்வு மக்களிடையே ஊடுருவி இருப்பதால், பெரும்பாலான இந்தியர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் மறுபுறத்தில், மற்றவராக இருக்கின்ற கமலா ஹாரிஸ் மற்றவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கடந்த ஆண்டு வரையிலும் அவரை பாதி இந்தியர் என்று அமெரிக்காவில் சிலருக்கு மட்டுமே தெரியும் வகையில், அவர் தன்னை முதன்மையாக கறுப்பின மனிதராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

அவரது நியமனம் சமீபத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிரச்சாரத்துடன் இணைந்து பேசுகிறது. அமெரிக்காவில் கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களுக்கு இடையில் பிளவுகள் இருந்தபோதிலும், ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறை சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது, இவர்கள் இருவர்களுக்குமிடையே கட்டமைக்கப்பட்ட அரசியல் தனித்தன்மையை மழுங்கடிப்பதற்கான திறன் கொண்ட நிகழ்வாக இருந்தது. இந்தியாவில் உள்ள பலரும் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையின் மிருகத்தனம் அவசியம் தேவைப்படுவதாக, அவ்வாறு நடந்து கொள்ளும் போது சட்டப்புத்தகத்தின் பக்கங்களை காவல்துறையினர் மீறினாலும் பரவாயில்லை என்றே பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுபவர்களைக் கொன்ற காவல்துறையினர் மீது மலர் இதழ்கள் பொழியப்பட்டன. கடந்த மாதம் விகாஸ் துபே கொல்லப்பட்டதைப் போன்ற என்கவுண்டர் கொலைகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஊக்குவிப்பதைக் காண்கிறோம். என்கவுண்டர்-ஸ்பெஷலிஸ்டுகள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, அவர்கள் ஹீரோக்களாக ஆக்கப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 19 அன்று தனது வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில்,  ‘அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி வழங்குவதற்கான வாக்குறுதி’ பற்றியும், ‘அனைத்து மக்களின் போராட்டங்களையும் பற்றி விழிப்புடனும் கருணையுடனும் இருப்பது,  பொது சேவையை உன்னதமான சேவை என்றும் நீதிக்கான போராட்டத்தை அனைவருக்குமான பொறுப்பு என்றும் நம்புவது’ பற்றியும் தன்னுடைய  தாயார் சியாமளா கோபாலன் தனது இரண்டு மகள்களுக்கும் கற்றுக் கொடுத்தது பற்றியும் ஹாரிஸ் பேசினார்.

‘நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம், எங்கிருந்து வருகிறோம், அல்லது யாரை நேசிக்கிறோம் என்பது பற்றிய கவலையில்லாமல், அனைவரையும் வரவேற்கின்ற வகையில், தேசத்தை நேசமான சமூகமாகப் பார்க்கின்ற பார்வை வேண்டும். அனைத்து விஷயங்களிலும் நாம் அனைவரும் உடன்படாத ஒரு நாடாக இருந்த போதிலும், ஒவ்வொரு மனிதனும் எல்லையற்ற மதிப்புடையவன், பரிவு, கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவற்றிற்குத் தகுதியானவன் என்ற அடிப்படை நம்பிக்கையால் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். ஒருவரையொருவர் நாம் கவனித்துக் கொள்கின்ற நாடாக, நாம் ஒன்றாக உயர்ந்து, வீழ்ந்து வருகிறோம், நமது சவால்களை எதிர்கொள்கிறோம், நமது வெற்றிகளை அனைவரும் இணைந்து கொண்டாடுகிறோம். இன்று… அந்த நாடு தனித்திருப்பதாக உணர்கிறோம்’



அவரைப் போன்ற ஒருவரின் நியமனத்தை சிறுபான்மையினரின் ‘திருப்தி’க்கானது என்றும், அவரது கட்சி ‘சிறுபான்மை’ அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கண்டனம் செய்யப்படும் நிலைமையில் இருக்கின்ற இந்தியாவைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கலாம்.

https://indianexpress.com/article/opinion/columns/kamala-harris-us-elections-india-tamils-6569773/


Comments