இசபெல் வில்கர்சன்
தி
கார்டியன்
1959ஆம் ஆண்டு குளிர்காலத்தில், ரோசா பார்க்ஸ் கைதிற்குப்
பிறகு எழுந்த மான்ட்காமரி பேருந்து புறக்கணிப்பை வழிநடத்திய பின்னர், விசாரணைகள்
மற்றும் வெற்றிகளுக்கு முன்பாக, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அவரது மனைவி
கோரெட்டா இருவரும் அகிம்சைப் போராட்டத்தின் தந்தையான மோகன்தாஸ் கரம்சந்த்
காந்தியின் தேசத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியாவில், புதுதில்லியில் உள்ள பாலம்
விமான நிலையத்தில் தரையிறங்கினர். வந்திறங்கிய அவர்களுக்கு மாலைகள் குவிந்தன. ‘மற்ற
நாடுகளுக்கு வேண்டுமென்றால் நான் சுற்றுலாப்பயணியாகச் செல்லலாம். இந்தியாவைப்
பொறுத்தவரை, ஒரு யாத்ரீகனாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்’ என்று கிங் அப்போது செய்தியாளர்களிடம்
கூறினார்.
இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கனவு
அவரிடம் இருந்தது. ஒரு மாதம் முழுவதும் அவர்கள் இந்தியாவில் தங்கினர். பிரிட்டிஷ்
ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான போராட்டம் நடந்த இடத்தை, அமெரிக்காவில் நீதிக்காக
தான் நடத்திய போராட்டத்திற்கு ஊக்கமளித்த அந்த இடத்தை நேரடியாகப் பார்க்க வேண்டும்
என்று விருப்பம் கொண்டவராக கிங் இருந்தார். பழமையான இந்திய சாதி அமைப்பில்
மிகக்கீழான சாதியான ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களை, இந்தியா
சுதந்திரம் பெற்று ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்த போதிலும், இன்னும்
ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்ற அவர்களைப் பற்றி படித்திருந்த,
அவர்கள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவர், அவர்களைக் காண வேண்டும் என்று விரும்பினார்.
தான் வழிநடத்திய பேருந்து புறக்கணிப்பிற்கான காரணம்
குறித்து நன்கு அறிந்திருந்த அவர், இந்தியாவில் இருந்த அந்த மக்கள் தனது சொந்த
ஒடுக்கப்பட்ட மக்கள் அமெரிக்காவில் எதிர்கொண்ட சோதனைகளையே எதிர்கொண்டு வருவதைக் கண்டார்.
பம்பாய் மற்றும் டெல்லி வீதிகளில் எந்த இடத்திற்குச் சென்றாலும், அங்கே இருந்த
மக்கள் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக அவரைச் சூழ்ந்து கொண்டனர். தங்களுடைய பயணத்தின்
ஒரு கட்டத்தில், கிங் மற்றும் அவரது மனைவியும் இந்தியாவின் தென்முனையில், கேரள
மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நகருக்குச் சென்றனர். தீண்டத்தகாதவர்களாக இருந்த
உயர்நிலைப் பள்ளி மாணவர்களை அவர்கள் அங்கே சந்தித்தனர். ‘இளைஞர்களே,
அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் நம்மைப் போன்ற தீண்டத்தகாத ஒருவரை உங்கள் முன்பு,
நான் இப்போது அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்’ என்று அந்தப் பள்ளியின்
முதல்வர் தனது மாணவர்களிடம் அவர்களை அறிமுகம் செய்து வைத்த போது, கிங் உண்மையில்
அதிர்ச்சி அடைந்தார். அந்த வார்த்தை தனக்குப் பொருந்தும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
முதலில் அதைக் கவனத்தில் கொள்ளாது ஒதுக்கி வைத்தார். ஆனாலும் வேறொரு
கண்டத்திலிருந்து பறந்து வந்து இந்தியப் பிரதமருடன் உணவருந்தியிருந்த அவரால், அந்த
வார்த்தைக்கான தொடர்பையோ, இந்திய சாதி
அமைப்பு தன்னுடன் எவ்வாறு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது என்பதையோ, இந்தியாவில்
மிகக்கீழான நிலையில் இருக்கின்ற சாதி மக்கள் ஏன் தங்களைப் போன்ற கீழ்சாதியினராக, தங்களில்
ஒருவராக அமெரிக்க நீக்ரோவும், புகழ்பெற்ற விருந்தினருமான தன்னைப் பார்க்க வேண்டும்
என்பதையோ அவரால் உடனடியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. பின்னர் ஒருமுறை இந்த
நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், ‘ஒருகணம், என்னைத் தீண்டத்தகாதவர் என்று
குறிப்பிடப்பட்டதைக் கேட்டு நான் சற்றே அதிர்ச்சியடைந்தேன்’ என்றே கூறியிருந்தார்.
பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவின் மிகக்கீழான பதவிகளில்
அமர்த்தப்பட்டிருப்பவர்களாக, இன்னும் வறுமை என்ற காற்றோட்டமில்லாத கூண்டிற்குள்
திணறிக் கொண்டிருப்பவர்களாக, தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களாக,
சொந்த நாட்டிற்குள்ளேயே நாடுகடத்தப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருந்த, தான் போராடி
வந்த இரண்டு கோடி மக்களுடைய வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பற்றி அவர் பின்னர்
சிந்திக்கத் தொடங்கினார்.
‘ஆம், நான் தீண்டத்தகாதவன்தான், அமெரிக்காவில் உள்ள
ஒவ்வொரு நீக்ரோவும் தீண்டத்தகாதவர்தான்’ என்று அவர் தனக்குள்ளேயே கூறிக் கொண்டார்.
தான் இருக்கின்ற அந்த சுதந்திரமான நிலம், இந்தியாவின் சாதி முறையைப் போலல்லாத
வேறொரு சாதி முறையைத் தங்களுக்கு விதித்திருப்பதையும், தன்னுடைய வாழ்நாள்
முழுவதும் அந்த அமைப்பின் கீழேயே தான் வாழ்ந்து வந்திருப்பதையும் அந்த தருணத்தில்
அவர் உணர்ந்தார். அமெரிக்காவில் அவர் போராடி வந்த சக்திகளிடம் அது மறைந்திருந்தது.
தனது நாடு குறித்து மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
அப்போது அறிந்து கொண்டவை, அவருடைய
முன்னோர்களின் மூதாதையர்கள் பிறப்பதற்கு நீண்ட காலம் முன்பாகவே தொடங்கியிருந்தன. அமெரிக்கப்
புரட்சிக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னதாக, பின்னர் ஐக்கிய அரசாக உருவாகிய போராட்ட மண்ணில்
மனிதர்களுக்கிடையிலான அதிகாரப்படிநிலையானது, பிறப்புரிமை என்ற கருத்தாக, உலகின்
மிகப் பழமையான ஜனநாயகம் என்ற இயக்கத்திற்கான விரிவாக்கத்திற்கான தூண்டுதலாக, அதனுடன்
சேர்த்து மனித மாண்பு மற்றும் வழக்காற்று மரபு குறித்த தரவரிசை என்பதாக உருவாகியிருந்தது.
தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக நம்பி, நிலத்தையும்,
மனிதர்களையும் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கு, மனசாட்சிக்கெதிராக வெற்றி பெறுகின்ற
மனிதர்களிடமிருந்த பேராசையும், தற்பெருமையும் அனுமதித்தன. அவையே மனித மனங்களின்
சீர்குலைவிற்குக் காரணமாகின. அத்தகைய மோசமான மனப்பான்மையை தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு
நாகரிகப்படுத்திக் கொண்ட அவர்கள், ஏற்கனவே அங்கிருந்த மக்களை வெற்றி கொண்டு அடிமைப்படுத்துவது அல்லது அங்கிருந்து அகற்றுவது
என்று முடிவு செய்தனர். அங்கிருந்த நிலங்களைப் பழக்கப்படுத்தி, செழிப்பான மண்,
கரையோரங்களில் பொதிந்திருக்கும் செல்வத்தை எடுப்பதற்கு, கீழானவர்களாகத் தாங்கள்
கருதியவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
தங்களுடைய திட்டங்களை நியாயப்படுத்துவதற்காக, தங்களைச்
சுற்றிலும் ஏற்கனவே நிலவி வந்த சூழலையும், தங்களுடைய சுயவிருப்ப விளக்கங்களின்
அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டிருந்த பைபிள் குறித்த கருத்துக்களையும் தங்கள்வசம்
அவர்கள் எடுத்துக் கொண்டனர். யார் என்ன செய்வது, யார் எதைச் சொந்தமாக்கிக்
கொள்வது, யார் மேலே இருப்பது, யார் கீழே இருப்பது, யார் இடையில் இருப்பது என்ற
படிநிலையை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். ஐரோப்பாவிலிருந்து மேல்தட்டு மக்கள் வந்த
போது, மனிதகுலத்தின் உலகளாவிய அடுக்குமுறை தோன்றியது. தங்களிடமிருந்த துப்பாக்கிகள்,
வளங்கள் மூலமாக வடக்கு அமெரிக்காவிற்கான ரத்தக்களரிப் போராட்டத்தில் வெற்றி பெற்ற
ஆங்கிலேய புராட்டஸ்டன்ட்டுகள் அவர்களுக்குள்ளாக உச்சியில் இருப்பதாக, அவ்வாறு மிக
உயர்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களிடம் இருக்கின்ற அருகமையின் அடிப்படையில்,
மற்றவர்கள் அனைவரும் இறங்கு வரிசையில் அடுத்தடுத்து இடம் பெற, மிகக் கீழே ஒருவர்
வரும் வரையிலும் அந்த தரவரிசை கீழ்நோக்கித் தொடர்ந்தது. ஆப்பிரிக்கக் கைதிகள் புதிய
உலகைக் கட்டியெழுப்புவதற்கும், தலைமுறை பல கடந்து 12 தலைமுறைகளுக்கு அந்த
வெற்றியாளர்களுக்குச் சேவை செய்வதற்காகவும் கொண்டு வரப்பட்டனர்.
மக்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் என்பதை
அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு அங்கே உருவானது. அவர்களால் உள்வாங்கிக்
கொள்ளப்பட்ட அந்த தரவரிசை, சாதாரண மக்களால் பேசப்படாத, பெயரிடப்படாத, ஏற்றுக் கொள்ளப்படாதிருக்கின்ற
போதிலும், இன்றுவரையிலும் அவர்களுடைய வாழ்க்கையுடன்
பிணைந்ததாக, ஆழ்மனதில் அதனைக் கொண்டே செயல்பட்டு வருவதாக இருக்கின்றது. கட்டிடம்
ஒன்றின் உள்கட்டமைப்பை உருவாக்குகின்ற திருகாணிகள், இணைப்புக்கள் மற்றும் உத்தரம்
போன்றவை அந்த கட்டிடத்திற்குள்ளே வசிப்பவர்களின் கண்களுக்குப் புலப்படாது. சாதியும்
அதைப் போன்றதாகவே இருக்கிறது. இவ்வாறு கண்ணுக்குப் புலப்படாதிருக்கும் தன்மையே, அதற்கான
ஆற்றலையும், நீண்ட ஆயுளையும் தருகின்றது. விழிப்புணர்வு நிலைக்கு உள்ளும், வெளியிலும்
சென்று வரக்கூடியதாக, எழுச்சிக்கான காலங்களில் பட்டொளி வீசி தன்னை உறுதிப்படுத்திக்
கொண்டும், அமைதியான காலங்களில் பின்வாங்கிக் கொண்டும் இருந்து வருவதால், நாட்டின்
செயல்பாட்டில் சாதி என்பது எப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.
சாதி அமைப்பு என்பது செயற்கையானதொரு கட்டுமானமாகவே இருக்கிறது.
மனித மாண்புகள் குறித்த நிலையான, உட்பொதிக்கப்பட்ட தரவரிசையாக இருக்கின்ற இந்த சாதி
அமைப்பு, மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்ற மனப்பான்மையை ஒரு குழுவிடம் கட்டமைப்பதாக
உள்ளது. வம்சாவளி மற்றும் பெரும்பாலும் மாறாதிருக்கின்ற நடுநிலையான பண்புகளின்
அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது போன்றதாக அந்த அமைப்பு தோன்றினாலும், அதிகாரப்படிநிலையில்
வாழ்வா, சாவா என்று வரும்போது, அதனை வடிவமைத்த முன்னோடிகளான மேலாதிக்க
சாதியினருக்குச் சாதகமாகவே அது இருக்கிறது. சாதி அமைப்பு கடுமையான, பெரும்பாலும்
தன்னிச்சையான வரையறைகளைப் பயன்படுத்தி, தரவரிசைப்படுத்தப்பட்ட குழுக்களைப்
பிரித்து வைக்கிறது. ஒருவருக்கொருவரை வேறுபட்டவர்களாகக் கருதுகின்ற சாதி அமைப்பு,
அவரவர்களுக்கான இடங்களை ஒதுக்கித் தருகிறது.
நாஜி ஜெர்மனியில் மிகமோசமாகத் தீவிரப்படுத்தப்பட்ட,
வெறுப்பூட்டும் வகையிலான, அதிகாரப்பூர்வமாக வென்ற சாதி அமைப்பு; இந்தியாவில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து இருந்து வருகின்ற சாதி அமைப்பு; அமெரிக்காவில்
வடிவத்தை மாற்றிக் கொண்டு, பேசப்படாத, இனம் சார்ந்த சாதி பிரமிடு அமைப்பு என்று காலம்
மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து, மூன்று வெவ்வேறு நாடுகளில் உள்ள சாதி அமைப்புகள் ஒவ்வொன்றும்
தங்களுடைய சொந்த வழியில் தனித்தவையாக நிற்கின்றன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும், மிகக்கீழான
தரநிலையில் உள்ளவர்களை கீழே வைத்திருப்பதற்குத் தேவையான மனிதநேயமற்று இருத்தல்
மற்றும் அதனை அமலாக்குவதற்கான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை நியாயப்படுத்துவதற்காக,
தாழ்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களைப் பழிக்குள்ளாக்குவதையே நம்பியுள்ளன.
பெரும்பாலும் புனித நூலிலிருந்து அல்லது இயற்கையானது என்று கருதப்படும் அனுமானச்
சட்டங்களிலிருந்து உருவாகி, ஒட்டுமொத்த கலாச்சாரத்தில் வலுப்படுத்தப்பட்டு
தலைமுறைகளைக் கடந்து நிற்கின்ற சாதி அமைப்பை தெய்வீக விருப்பம் என்பதாக அவர்கள் நியாயப்படுத்தப்படுவதாலேயே,
அந்த அமைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இடைகழிகளில் கீழே ஒளிருகின்ற விளக்குகள் உள்ள இருண்ட
அரங்கத்தின் வார்த்தைகள் ஏதுமற்ற வாயிற்காப்பாளர், நமக்கு ஒதுக்கப்பட்ட
இருக்கைகளுக்கு வழிகாட்டுவதைப் போன்றதாகவே, நமது அன்றாட வாழ்க்கையில் சாதி அமைப்பு
இருந்து வருகிறது. உணர்வுகள் அல்லது ஒழுக்கம் குறித்ததாக சாதியின் அடுக்குமுறை இருக்கவில்லை.
அது அதிகாரம் குறித்ததாக, எந்தக் குழுக்களுக்கு அதிகாரம் இருக்கிறது, எந்தக்
குழுவிற்கு அதிகாரம் இல்லை என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. வளங்களைப் பொறுத்தவரை,
எந்த சாதி தகுதியானதாகக் கருதப்படுகிறது, எது அவ்வாறு கருதப்படவில்லை; யார்
அவற்றைப் பெறுபவர்களாக, கட்டுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும், யார் அவ்வாறு
இருக்கக் கூடாது என்பதாகவே சாதி இருக்கிறது. மரியாதை, அதிகாரம் யாருக்கு
வழங்கப்படுகிறது, யாருக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறித்த அனுமானங்களாகவே சாதி இருக்கிறது.
மனிதகுலம் முழுமைக்கும் மாண்பை வழங்குவதற்கானதொரு
வழியாக, பெரும்பாலும் நம் விழிப்புணர்வைத் தாண்டி நம் ஒவ்வொருவரையும் சாதி வழிநடத்திச்
செல்கிறது. அது நமக்குள்ளாக மனித குணாதிசயங்கள் குறித்த தரவரிசையை உட்பொதிக்கிறது.
மேலும் நமது மனித இனத்திற்குள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் எதிரான கொடுமைகளை
நியாயப்படுத்துவதற்குப் பயன்படுகின்ற விதிகள், எதிர்பார்ப்புகள் மற்றும்
ஒரேமாதிரியான கருத்து வகைகளை அது முன்வைக்கிறது. அமெரிக்க சாதி அமைப்பில்,
இவ்வாறான தரவரிசையின் அடையாளத்தையே, மனிதர்களின் தோற்றத்தின் அடிப்படையிலான
பிரிவாக இருக்கின்ற இனம் என்று நாம் அழைக்கிறோம். அமெரிக்காவில், சாதிக்கான முகவரைப்
போன்று முதன்மைக் கருவியாக, தெளிவான தூண்டிற்பொருளாக இனம் என்பது இருக்கிறது.
இனம் என்பது மனிதர்களைப் பிரிக்கின்ற வழிமுறை
தேவைப்படுகின்ற சாதி அமைப்பைத் தூக்கி நிறுத்துகிறது. இனம் என்ற மொழியால் மனிதர்களைக்
காண்பதற்கு நமக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகக் கொள்வோம் என்றால், நமது தாய்மொழியைக்
கற்றுக் கொள்ளும் போது, சாதி என்பது இலக்கணமாக, குழந்தைகளாக நாம் எவ்வாறு அதைப்
புரிந்து கொள்கிறோமோ, அதைப் போலவே இருக்கிறது. எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு
மட்டுமல்லாது, சிந்திக்காமலேயே, தன்னியல்பாக வாக்கியத்தை அமைத்து தகவல்களை உருவாக்கிக்
கொள்வதைப் போல, கண்ணுக்குப் புலப்படாத வழிகாட்டியாக சாதி மாறுகிறது. நம்மில்
பலரும் ஒருபோதும் இலக்கணத்திற்காக மட்டுமே வகுப்புகளுக்குச் சென்றதில்லை என்றாலும்,
வாக்கியம் ஒன்றில் வினையுடன் செயப்படுபொருள்
வரும், பெயர்ச் சொல்லுக்கு வினைச் சொல் தேவை, படர்க்கை ஒருமைக்கும், படர்க்கை
பன்மைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று எதைப் பற்றியும் சிந்திக்காமலேயே நம்மால்
வாக்கியத்தை அமைக்க முடிகிறது. மக்களை கறுப்பு, வெள்ளை, லத்தீன், ஆசியர் அல்லது
பழங்குடியினர் என்று நாம் இனம் பற்றி குறிப்பிடுகின்ற அந்த ஒவ்வொரு முத்திரையின்
கீழும் பல நூற்றாண்டுகளின் வரலாறும், மனித அடுக்குமுறைக்கான கட்டமைப்பில் உள்ள பொருள் சார்ந்த
அம்சங்களும், அனுமானங்களும் இருக்கின்றன.
மக்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் - அவர்களுக்கென்று
குறிப்பிட்ட இனத்தை ஒதுக்குவது அல்லது அவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று
கருதுவது – என்பது அவர்களுடைய சாதி குறித்து காணக்கூடிய குறிப்பாக உள்ளது. மக்கள் எவ்வாறு
நடத்தப்பட வேண்டும், அவர்கள் எங்கே வசிக்க வேண்டும், எந்த வகையான பதவிகளை அவர்கள் வகிக்கலாம்,
நகரத்தில் அவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது போர்டு ரூமில் அந்த
இருக்கைக்கானவர்கள், இந்த அல்லது அந்த விஷயத்தில் மட்டுமே அவர்கள் அதிகாரத்துடன்
பேசலாம், மருத்துவமனையில் அவர்களுக்கு வலிநிவாரணம் வழங்கப்படுமா, அவர்களுடைய சுற்றுப்புறம்
நச்சுக் கழிவு வெளியேறுகின்ற இடத்துடன் இணைந்திருக்குமா அல்லது அவர்களுடைய குழாய்களில் இருந்து அசுத்தமான நீர் வருமா,
உலகில் மிகமுன்னேறிய தேசத்தில் பிரசவத்தில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு அவர்களிடம்
குறைவாக இருக்குமா, விசாரணைகள் எதுவுமின்றி அவர்கள் சுடப்படுவார்களா என்பதைப்
பொதுமக்களுக்குக் காட்டுகின்ற முக்கியமான குறிப்பு அட்டையாக சாதி இருக்கிறது.
சாதியும், இனமும் ஒன்றையொன்று ஒத்தவையாகவோ அல்லது
பரஸ்பரமாக விலக்கி வைத்துக் கொள்பவையாகவோ இருக்கவில்லை. அவை ஒரே கலாச்சாரத்தில்
இணைந்து, ஒன்றையொன்று வலுப்படுத்திக் கொள்ள தங்களுக்குள் உதவிக் கொள்பவையாக இருக்கின்றன.
சாதி என்பது எலும்புகளாக, இனம் என்பது தோலைப் போன்று இருக்கின்றன. உடல்ரீதியான
பண்புகளுக்கு தன்னிச்சையான பொருளைத் தருவதாக, ஒரு நபர் யார் என்பதைப் பற்றிய சுருக்கெழுத்தாக
நாம் இனம் என்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு குழுவையும் அதனதன் இடத்தில்
வைத்திருக்கும் சக்தி கொண்ட உள்கட்டமைப்பாக சாதி என்பது இருக்கிறது.
சாதி என்பது நிலையானதாக, வளைந்து கொடுக்காததாக உள்ளது. ஆனால்
இனம் என்பது இப்போது அமெரிக்காவில் இருக்கின்ற ஆதிக்க சாதியின் தேவைகளைப் பூர்த்தி
செய்ய அவ்வப்போது மறுவரையறைக்கு உட்படுவதாக, நெகிழ்வுடன், மேலோட்டமானதாக இருக்கிறது.
வெள்ளையராவதற்குத் தகுதி பெறுவதற்கான தேவைகள் பல நூற்றாண்டுகளாக மாறிக் கொண்டே
வந்திருக்கிற போதிலும், ஆதிக்க சாதி என்பது அதன் தொடக்கத்திலிருந்தே மாறாமலே
இருந்து வருகிறது. வரலாற்றில் அனைத்துக் கட்டங்களிலும், வெள்ளையர் என்ற வரையறைக்கு
யாரெல்லாம் பொருந்துகிறார்களோ, அவர்களுக்கு ஆதிக்க சாதியின் சட்ட உரிமைகளும்,
சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. கீழ்நிலைச் சாதியினரோ துயரம், சோகம் தரும் வகையில் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஏணியின் மறுமுனையில், அதற்கும்
கீழ் எதுவுமில்லாத அடித்தளத்தில், மற்ற எந்த சாதியினரும் இருக்க முடியாத இடத்தில்
மாறாதிருக்குமாறு வைக்கப்பட்டுள்ளனர்.
சாதி என்பது பெரும்பாலும் அமெரிக்காவில்
பயன்படுத்தப்படுகின்ற சொல் அல்ல என்றும், இந்தியா அல்லது நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில்
பயன்படுத்தும் சொல்லாக அது இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஆயினும், சில
மானுடவியலாளர்களும், இனம் குறித்த அறிஞர்களும் பல ஆண்டுகளாக அந்த வார்த்தையை அமெரிக்காவில்
பயன்படுத்தி வருகின்றனர். நவீன காலத்திற்கு முன்பாக, சாதி பற்றிய கருத்தை
எடுத்துக் கொண்ட ஆரம்பகால அமெரிக்கர்களில் ஒருவரும், போருக்கு முந்தைய அடிமைத்தன
ஒழிப்புவாதிகளில் ஒருவரும், அமெரிக்க செனட்டருமான சார்லஸ் சம்னர், வடக்கில் இருந்த
பிரிவினைக்கு எதிராகப் போராடியவர். ‘நிறம் அல்லது இனம் காரணமாக பாஸ்டன் பொதுப்பள்ளிகளில்
குழந்தைகளைப் பிரிப்பது, சாதியின் தன்மையுடன் இருப்பதால், சமத்துவத்தை மீறுவதாக
இருக்கிறது’ என்று எழுதினார். ‘கடவுள் அவ்வாறு
உருவாக்கியிருக்காத நிலையில், உயிரினங்கள் சாதியால் வேறுபடுகின்றன’ என்று சக
மனிதாபிமானி கூறியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
நம் அனைவரிடமும் மறைத்து வைக்கப்பட்டுள்ள சாதி அமைப்பு
குறித்த மனித பிரமிடைக் கணக்கில் கொள்ளாமல், தற்போதைய எழுச்சிகள் அல்லது அமெரிக்க
வரலாற்றில் நிகழ்ந்துள்ள எந்தவொரு திருப்புமுனை குறித்தும் முழுமையாக நம்மால் புரிந்து
கொள்ள முடியாது. சாதி அமைப்பும், அதிகாரப்படிநிலையைப் பாதுகாப்பதற்கான, நிலைநிறுத்துவதற்கான
அல்லது அகற்றுவதற்கான முயற்சிகளும், ஓர் நூற்றாண்டுக்குப் பின்னர், அமெரிக்க
உள்நாட்டுப் போரையும், சிவில் உரிமைகளுக்கான இயக்கத்தையும் அடிக்கோடிட்டுக்
காட்டுவதோடு, 21ஆம் நூற்றாண்டு அமெரிக்க அரசியலுக்குள்ளும் ஊடுருவுவதாக இருக்கின்றன.
செல்களின் வளர்ச்சிக்கான வழிமுறைகளுக்கான குறியீடுகளைக் கொண்டதாக டி.என்.ஏ இருப்பதைப்
போலவே, அமெரிக்காவில் அதன் தொடக்க காலத்திலிருந்தே பொருளாதார, அரசியல் மற்றும்
சமூக தொடர்புகளுக்கான இயக்க முறைமையாக சாதி இருந்து வருகிறது.
ஸ்வீடன் நாட்டு சமூகப் பொருளாதார நிபுணரான கன்னர்
மிர்டல், அந்த நாட்டின் மிகத் திறமையான ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து 2,800
பக்கங்களுடன் இரண்டு தொகுதிகளைக் கொண்ட படைப்புகளை 1944ஆம் ஆண்டு தயாரித்தார். அது
அமெரிக்காவில் இனம் குறித்த மிக விரிவான ஆய்வாக இன்னும் இருப்பதாகக்
கருதப்படுகிறது. ‘ஓர் அமெரிக்கச் சங்கடம்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. ‘இனம் என்பது அமெரிக்க சமுதாயத்தின் செயல்பாடுகளை
விவரிப்பதற்கான மிகவும் துல்லியமான சொல்லாக இருக்கவில்லை, சாதியே அவ்வாறானதாக
இருக்கிறது; உண்மையில் மனித விழுமியங்களின் நெகிழ்வற்ற, நிலையான தரவரிசை குறித்து பேசுகின்ற
ஒரே சொல்லாக சாதி என்பதே இருக்கும்’ என்பதை இனம் குறித்த அந்த ஆய்வு மிர்டலுக்கு உணர்த்தியது.
‘இனம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு, சமூக கட்டமைப்பு,
அது உயிரியல்ரீதியானது அல்ல - அமெரிக்காவில் உள்ள பிளவுகளையும்,
ஏற்றத்தாழ்வுகளையும் புரிந்து கொள்ள முற்படுகையில், பொதுவாக இனம் குறித்த புதைமணல்
மற்றும் புராணங்களுக்குள் நாம் வீழ்ந்து விடுகிறோம்’ என்று முதன்முதலாக மானுடவியலாளர்
ஆஷ்லே மாண்டெகு வாதிட்டார். 1942ஆம் ஆண்டு அவர் ’அமெரிக்காவில் உள்ள இனம் குறித்த
பிரச்சனை பற்றி பேசுகின்ற போது, உண்மையில் நாம் சாதி அமைப்பு மற்றும் அந்த சாதி
அமைப்பு அமெரிக்காவில் உருவாக்கும் பிரச்சனைகளைப் பற்றியே பேசுகிறோம்’ என்று எழுதினார்.
முந்தைய நூற்றாண்டின் முன்னணி வெள்ளை மேலாதிக்கவாதிகள்
சிலரிடையே, இந்தியாவில் உள்ள சாதி அமைப்பிற்கும், அமெரிக்காவிலேயே தூய்மையான சட்ட
சாதி அமைப்பு இருந்து வந்த அமெரிக்க
தெற்கிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து சிறிய குழப்பம் இருந்து வந்தது. 1916ஆம்
ஆண்டு அதிக அளவில் விற்பனையான ‘சிறந்த இனத்தைக் கடந்து செல்வது’ (The
Passing of the Great Race) என்ற
தனது நூலில், பிரபல இனமேம்பாட்டியலாளரான மேடிசன் கிராண்ட் ‘வெற்றி பெற்ற உயர் வர்க்கங்கள், தங்கள்
ரத்தத்தின் தூய்மையைக் காத்துக் கொள்வதற்காக மிகக்கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்ட சாதி
அமைப்புகளின் மூலமாக இன்றுவரையிலும் இந்தியாவில் மேற்கொண்ட விடாமுயற்சிகள் குறித்த
பதிவு இருக்கிறது. நமது தென்மாநிலங்களில் உள்ள ஜிம் க்ரோ கார்களும், சமூக
பாகுபாடுகளும் அதே நோக்கத்தையே கொண்டுள்ளன’ என்று அவர் எழுதியுள்ளார்.
இந்தியாவின் மத்திய மாகாணத்தில், சாதி அமைப்பின்
அடிப்பகுதியில் தீண்டத்தகாதவராகப் பிறந்த பீம்ராவ் அம்பேத்கர், பம்பாயிலிருந்து
நியூயார்க் நகரத்திற்கு 1913ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். கொலம்பியாவில் பட்டதாரி
மாணவராக, பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவிற்கு வந்த அவர், இனம், சாதி மற்றும்
வர்க்கங்களுக்கிடையே இருந்த வேறுபாடுகள் மீது கவனம் கொண்டவராக இருந்தார்.
ஹார்லெமிற்கு அருகே வாழ்ந்து வந்த அவர், அமெரிக்காவில் இருந்த தனது சகாக்களின்
நிலைமையை நேரடியாகப் பார்த்தார். தெற்கு கூட்டமைப்பிற்கு மரியாதை செலுத்துகின்ற வகையில்
1915ஆம் ஆண்டு நியூயார்க்கில் ‘தேசத்தின் தோற்றம்’ (The
Birth of a Nation) என்ற திரைப்படம் திரையிடப்பட்ட
வேளையில், தனது ஆய்வறிக்கையை அவர் நிறைவு செய்திருந்தார். லண்டனில் மேலும் படித்த
அவர், தீண்டத்தகாதவர்களின் தலைவராக உருவாகும் வகையில் இந்தியாவிற்குத்
திரும்பினார். புதிய இந்திய அரசியலமைப்பை உருவாக்க உதவிய தலைசிறந்த அறிவுஜீவியாக
இருந்த அவர், ‘தீண்டத்தகாதவர்’ என்ற இழிவான வார்த்தையின் பொருளை அகற்றும் வகையில் பணியாற்றினார்.
அவர்களைக் குறிப்பிடுவதற்காக காந்தியால் பயன்படுத்தப்பட்ட ஹரிஜன் என்ற வார்த்தையை
நிராகரித்து, சாதி அமைப்பு காரணமாக அவர்கள் ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்ற பொருளில்,
தலித்துகள் என்ற வார்த்தையைத் தழுவிக் கொண்டார்.
அம்பேத்கர் மீது தனிப்பட்ட முறையில் அமெரிக்க சமூக அமைப்பு
என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை அறிவது கடினம். ஆனால் தலித்துகளைப் போலவே
இருந்த அமெரிக்காவின் கீழ்சாதியினர் மீது அவர் பல ஆண்டுகளாகக் கவனம் செலுத்தி
வந்தார். அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் நிலை குறித்தும், அமெரிக்காவில் இருந்த
அவர்களுடைய சந்ததியினரைப் பற்றியும் நீண்ட காலமாக இந்தியர்கள் அறிந்திருந்தனர்.
1870களில் அடிமைத்தனம் முடிவிற்குவந்த பின்னர், கறுப்பினத்தவர் முன்னேற்றம்
குறித்த புனரமைப்பிற்கான சுருக்கமான காலத்தின் போது, அமெரிக்க அடிமைத்தன
ஒழிப்புவாதிகளிடமிருந்து, இந்திய சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் பூலே உத்வேகம்
பெற்றார். ‘அவர்களை தங்களுக்கான வழிகாட்டியாக, முன்மாதிரியாக, என்னுடைய நாட்டு
மக்கள் எடுத்துக் கொள்ளலாம்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1946ஆம் ஆண்டு
கோடைகாலத்தில், சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக கறுப்பின அமெரிக்கர்கள் ஐக்கிய
நாடுகள் சபைக்கு மனு அளித்துள்ளனர் என்ற செய்தியைக் கருத்தில் கொண்ட அம்பேத்கர் அன்றைய
சிறந்த ஆப்பிரிக்க-அமெரிக்க அறிவுஜீவியான டு பாய்ஸைத் தொடர்பு கொண்டார். கடல்களைக்
கடந்து, தான் நீக்ரோ பிரச்சனையின் மாணவராக இருப்பதாக டு பாய்ஸிடம் தெரிவித்த அவர்,
தங்களுக்கிடையே பொதுவான விதிகள் இருப்பதாக அங்கீகரித்திருந்தார். ‘இந்தியாவில்
உள்ள தீண்டத்தகாதவர்களின் நிலைக்கும், அமெரிக்க நீக்ரோக்களின் நிலைக்கும் இடையே
ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன’ என்று டு பாய்ஸுக்கு
கடிதம் எழுதிய அம்பேத்கர், அமெரிக்க நீக்ரோக்கள் குறித்த ஆய்வு இயற்கையானது
மட்டுமல்ல, மிகவும் அவசியமானது என்றார்.
அம்பேத்கருக்கு டு பாய்ஸ் பதில் கடிதம் எழுதினார். தான் அம்பேத்கரை
நன்கு அறிந்தவர் என்றும், இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதவர்கள் மீது தனக்கு
அனுதாபம் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டு பாய்ஸ் அவர் குறிப்பிட்டிருந்தார். தங்களுடைய
இருப்பு குறித்த இரட்டை நனவை அடையாளம் கண்டு, இரு நாடுகளிலும் ஒதுக்கி
வைக்கப்பட்டவர்களுக்காக பேசியவராக டு பாய்ஸ் இருந்தார். டு பாய்ஸ்தான் பல
ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மக்களின் சகிக்க முடியாத அழுகையை
வெளிக் கொணரும் வகையில் ‘கடவுள் என்னை ஏன் என் சொந்த வீட்டிலேயே வெளிநாட்டவராகவும், அந்நியராகவும் ஆக்கி வைத்திருக்கிறார்?’
என்ற இந்தியக் கருத்தை முன்வைத்தார்.
தெற்கு ஜிம் க்ரோவின் வரலாறு குறித்த ஆய்விற்கு
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க சாதி அமைப்பு குறித்து நான் ஆய்வு
செய்யத் தொடங்கினேன். அடிமைத்தனத்திலிருந்து துவங்கி, 70களின் முற்பகுதிக்குள் வரை
நீடித்து வந்த சட்டரீதியான சாதி அமைப்பு, இன்றைக்கு இருக்கின்ற அமெரிக்கர்கள் பலரின்
ஆயுட்காலத்திற்குள் நடந்திருப்பதாகவே இருக்கிறது. நான் புவியியல் மற்றும்
இடமாற்றம் பற்றி எழுதவில்லை என்பதையும், அமெரிக்க சாதி அமைப்பு பற்றியே
எழுதுவதையும் கண்டு கொண்டேன். வடக்கு மற்றும் தெற்கே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட செயற்கையான
அதிகாரப்படிநிலையில், நீங்கள் செய்யக்கூடியது மற்றும் செய்ய முடியாதது என்று
அனைத்துமே நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
உலகளாவியிருக்கும் தங்கள் சொந்த புலம்பெயர்ந்தோரிடமும் சாதியின் நிழலை இந்தியர்கள்
பின்தொடர்வதைப் போன்று, 60 லட்ச மக்களை, தெற்கில் உள்ள சாதி அமைப்பிலிருந்து
விடுதலையைத் தேடிக்கொண்டிருந்தவர்களை, அதிகாரப்படிநிலை அவர்கள் எங்கே சென்றாலும் பின்தொடர்வதைக்
கண்டுகொள்வதற்காக மட்டுமே, நான் அவர்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆப்பிரிக்கர்கள் முதன்முதலாக 1619ஆம் ஆண்டு கோடையில் வர்ஜீனியா
காலனிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தக் காலனியில் ஆயுள் முழுமைக்கும்
யாரையெல்லாம் அடிமைப்படுத்தப்படலாம், யாரை அடிமைப்படுத்த முடியாது என்பது போன்ற பிரிவினைகளைச்
செம்மைப்படுத்த முயன்ற போது, அமெரிக்க சாதி அமைப்பு தொடங்கியது. காலப்போக்கில், காலனித்துவச்
சட்டங்களும் ஆங்கிலேய மற்றும் ஐரிஷ் தொழில்முறை ஒப்பந்த ஊழியர்களுக்கு, அவர்களுடன்
பணியாற்றி வந்த ஆப்பிரிக்கர்களை விட அதிகமான சலுகைகளை வழங்கின. கறுப்பிற்கு எதிரான
துருவமுனைப்பு கொண்டதாக வெள்ளையை
வகைப்படுத்தி, புதியதொரு அடையாளம் ஐரோப்பியர்களுடன் இணைக்கப்பட்டது. ‘தங்களுடைய
தோற்றத்தைக் கொண்டு தூய்மையான காகசியன் வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என்று தங்களைக்
கூறிக் கொண்டவர்களிடமிருந்து, தங்களுடைய தோற்றத்தின் மூலமாக சிலர் அல்லது அனைவருமே
நீக்ரோக்களாக இருந்தவர்களை சாதி அமைப்பு பிரித்தது’ என்று கூறிய வரலாற்றாசிரியர்
கென்னத் எம்.ஸ்டாம்ப், இனம் என்பதை அது சாதி என்றாக்கியது என்கிறார். அவர்
கூறியவாறு, காகசியன் சாதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளை மேலாதிக்கத்தை நம்பினர். அதைப்
பாதுகாப்பதற்காக உயர்சாதி ஒற்றுமையைக் கடைப்பிடித்தனர்.
எனது ஆய்வின் நடுவே இருந்தபோது, அந்த ஆய்வுகள் குறித்த செய்திகள் அமெரிக்காவில் இருந்த இந்திய சாதி அறிஞர்கள் சிலரிடையே பரவின. டு பாய்ஸின் பிறந்த நகரமான ஆம்ஹெர்ஸ்டில் அவருடைய கட்டுரைகள் வைக்கப்பட்டிருக்கும் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சாதி மற்றும் இனம் குறித்த முதல் மாநாட்டில் பேசுவதற்காக அவர்கள் என்னை அழைத்தார்கள்.
வெளிப்படையான வெள்ளை மேலாதிக்கத்தின் காலமாக, அமெரிக்காவின் தெற்கில் இருந்த ஜிம் க்ரோ சகாப்தம் குறித்து 600 பக்க புத்தகத்தை நான் எழுதியுள்ளதாகக் கூறி, இனவாதம் என்ற சொல் அந்த புத்தகத்தின் விவரிப்பில் எங்கும் இடம் பெறவில்லை என்பதை அங்கிருந்த பார்வையாளர்களிடம் தெரிவித்தேன். அந்த தலைப்பில் பதினைந்து ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டு, அந்தக் காலத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் சாட்சியங்களைக் கேட்டபிறகு, அந்த சொல் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்று அவர்களிடம் கூறினேன். சாதி என்பதே மிகத் துல்லியமான சொல் என்று கூறி அதற்கான காரணங்களை அவர்களிடம் விளக்கினேன். திகைத்துப் போன அவர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்தடுத்து வந்த கேள்விகளால் இரவு முழுவதும் நீண்டு போன உரையாடல் காரணமாக, வரவேற்பறையில் என் முன்பாக அமைக்கப்பட்டிருந்த இந்திய உணவு பரிமாறப்பட்டிருந்த தட்டுகள் குளிர்ந்து போயின. அந்த மாநாட்டின் நிறைவு விழாவில், அந்த விருந்தினர்கள் இந்தியாவில் கீழ்சாதியில் பிறந்தவர்களின் காவலராக இருந்த, பல ஆண்டுகளுக்கு முன்னராக டு பாய்ஸுக்கு கடிதம் எழுதிய தலித் தலைவரான பீம்ராவ் அம்பேத்கரின் வெண்கல நிறத்திலான மார்பளவுச் சிலையை எனக்கு நினைவுப் பரிசாக வழங்கினர்.
எப்போதும் நான் சார்ந்திருக்கின்ற சாதியுடன்
இணைந்திருப்பதைப் போலவே, நான் அப்போது உணர்ந்தேன். தாங்கள் எதிர்கொண்ட கதைகளை
அவர்கள் தொடர்ந்து என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, தனிப்பட்ட முறையில், சில
குறிப்பிட்ட திருப்பம் அல்லது விளைவை எதிர்பார்ப்பது போலவே நான் அவர்களுக்குப் பதிலளித்தேன்.
அவர்களே ஆச்சரியமடையும் வகையில், அங்கிருந்த இந்தியர்களிடையே யார் உயர்ந்தவர்கள்,
தாழ்ந்தவர்கள் என்று நான் சொல்ல ஆரம்பித்தேன். அமெரிக்காவில் உள்ளதைப் போல,
அவர்கள் எவ்வாறு தோற்றமளித்தார்கள் என்பதிலிருந்து நான் அதைச் சொல்லவில்லை.
அதிகாரப்படிநிலை குறித்து உலகளாவி மனிதர்களிடம் இருக்கின்ற எதிர்வினையின் - உயர்சாதி
நபரைப் பொறுத்தவரை, தவிர்க்க இயலாத நடையுடைத் தோற்றம், நடத்தை,
முக்கியத்துவத்திற்கான எதிர்பார்ப்பு – அடிப்படையிலேயே நான் அதைக் கூறினேன்.
வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எனது சூட்கேஸை சோதனை செய்வதற்காக குறியிட்ட போது, எனது சொந்த உலகிற்குள் நான் மீண்டும் நுழைந்தேன். அங்கே ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒருவர் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகப் பணியாளராக இருந்தார். தனது இருபதுகளின் முற்பகுதியில் இருந்த அவர், தன்னுடைய வேலையைத் தொடங்குவதற்காக ரப்பர் கையுறைகளை இட்டுக் கொண்டார். என்னுடைய சூட்கேஸைத் துழாவி, அகழ்வாராய்ச்சி செய்து அதிலிருந்த சிறிய பெட்டியை வெளியே எடுத்தார். அதனைச் சுற்றியிருந்த காகிதத்தை அகற்றிய அவரின் உள்ளங்கையில் எனக்கு வழங்கப்பட்ட அம்பேத்கரின் மார்பளவு சிலை இருந்தது.
‘இதுதான் எக்ஸ்ரேயில் தெரிந்தது’ என்று அவர் கூறினார். பேப்பர்வெயிட்
போல கனமாக இருந்த அதை தலைகீழாகக் கவிழ்த்து எல்லா பக்கங்களிலிருந்தும்
பரிசோதித்தார். அவரது பார்வை அந்தச் சிலையின் அடிப்பகுதியில் நீடித்து நின்றது.
உள்ளே ஏதோ இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்ட
அவர் ‘இதை
நான் உடைத்துப் பார்க்க வேண்டியிருக்கும்’ என்று என்னை எச்சரித்தார். சிறிது
நேரம் கழித்து திரும்பி வந்து ‘சரி. அதனுடன்
நீங்கள் பயணத்தைத் தொடரலாம்’ என்றார். அந்தச் சிலையின் கண்ணாடி அணிந்த முகத்தையும், முன்வழுக்கை இருந்த தலையையும், உறுதியான
வெளிப்பாட்டையும் ஒருமுறை நன்கு பார்த்தார். வேறொரு கலாச்சாரத்தின் மரபுச் சின்னம் போன்று தோற்றமளிக்கும் ஒன்றை நான் ஏன் சுமந்து செல்கிறேன் என்ற ஆச்சரியம் அவரிடம்
தெரிந்தது.
அவர் ‘இது யார்?’ எனக் கேட்டார்.
‘இந்தியாவின் மார்ட்டின் லூதர் கிங்’ என்று சொன்னேன்.
‘மிக அருமையாக இருக்கிறது’ என்று கூறிய அவரிடம் இப்போது திருப்தி காணப்பட்டது. அவர் முகத்தில் கொஞ்சம் பெருமையும் தோன்றியிருந்தது. பின்னர் அவர் அரசரைப் போல மீண்டும் காகிதத்தில் சுற்றி அந்த அம்பேத்கரை மெதுவாக என்னுடைய சூட்கேஸிற்குள் வைத்தார்.
இசபெல் வில்கர்சன்
‘சாதி: நம்மைப் பிரிக்கும் பொய்கள்’
என்ற நூலின் ஆசிரியர்
Comments